இந்தியா தாக்குதல் நடத்தினால், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் படைகளும் தக்கப் பதிலடி கொடுக்கும் என, அந் நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானி திமிர்த்தனமாகப் பேசியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் எதிரொலியாக இந்திய - பாக்., எல்லையில் போர் பதட்டம் நிலவுகிறது. இந்தியப் படைகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தான் அரசு வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.இதனால், நேற்று முன்தினம் பாகிஸ்தான் போர் விமானங்கள் அந் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது வலம் வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டன.
இந்நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை நேற்று முன்தினம் இரவு ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கியானி சந்தித்துப் பேசினார். அதிபர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.அப்போது, ராணுவத்தினரின் தயார் நிலை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக் கப்பட்டுள்ளன. சந்திப்புக்குப் பின் பத்திரிகை ஒன்றுக் குப் பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி கூறியதாவது:
எந்த நிலைமையையும் சந்திக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. நாட்டுக்காக தங்களைத் தியாகம் செய்ய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாகிஸ்தான் பகுதியில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தினால், அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் படைகளும் தக்கப் பதிலடி கொடுக்கும்.
இவ்வாறு கயானி கூறியுள் ளார்.
இதுதொடர்பாகப் பேட்டியளித்த அதிபர் சர்தாரி கூறியதாவது:
பாகிஸ்தான் தன் அண்டை நாடுகள் அனைத்துடனும் சுமுகமான மற்றும் இணக்கமான உறவு வைத்துக் கொள் ளவே விரும்புகிறது. ஆனால், எங்களை அச்சுறுத்தும் வகையில் இந்தியத் தலைவர்கள் விடுக்கும் அறிக் கைகள், போர் சூழ்நிலையை உருவாக்குகின்றன; பிராந்திய அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்கப்பட்டால், அதை ஒன்றுபட்டு எதிர்கொள்வது என, பாகிஸ் தான் பாதுகாப்பு நிறுவனங்களும், ராணுவமும், அரசியல் தலைவர்களும் மற்றும் பொதுமக்களும் விரும்புகின்றனர். போர் தொடுக்கப்பட்டால், எல்லையைக் காப்பாற்றிக் கொள்ள பாகிஸ்தானுக்கு உரிமையுள்ளது.இவ்வாறு அதிபர் சர்தாரி கூறினார்.
பயங்கரவாத முகாம்கள் : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் உருவாகியுள்ள இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் முப்படைகளின் கூட்டுத் தளபதி அட்மிரல் மைக் முல்லன் நேற்று முன் தினம் திடீரென பாகிஸ்தான் வந்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், அவர் பாக்., வருவது இது இரண்டாவது முறை. இஸ்லாமாபாத் வந்த அவர், பாக்., ராணுவ அதிகாரிகளைச் சந்தித் துப் பேசினார்.அப்போது, பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. அந்தக் கோரிக்கையை பாக்., அரசு நிறைவேற்ற வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட் டுள்ள பதட்டத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை கைது செய்ய வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக் கும் விஷயத் தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
மும்பை துயர சம்பவம் நடந்துள்ள இந்த நேரத்தில், பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழித்துக் கட்ட இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் முல்லன் வலியுறுத்தினார்.இதற்கிடையில், இந்தப் பிரச்னை தொடர்பாக வாஷிங்டனில் பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவு அமைச் சக தகவல் தொடர்பாளர் சீன் மெக்கர் மாக், ""மும்பைத் தாக்குதலுக்குக் காரண மானவர்களைக் கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, ஒவ்வொரு நாளும் பாகிஸ் தானை வலியுறுத்தி வருகிறோம். யாரைப் பிடிக்க வேண்டும். யார் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதை எல்லாம் பாகிஸ்தான் அரசு தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
பாகிஸ்தானுடன் போரா? மன்மோகன் சிங் மறுப்பு: ""பாகிஸ்தானுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்த வேண் டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மற்றும் ஐ-கமிஷனர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் நிலைத் தன்மையை பேணிக்காக்க வேண்டும் என, இந்திய அரசு விரும்புகிறது. ஆனால், நிலைமை யோ கவலை அளிப்பதாக உள்ளது. ஒரு பொரு ளாதார சக்தியாக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த குறிக்கோளை சீர்குலைக்கும் வகையில், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நினைப்பதை நாம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. யாரும் போரை விரும்பவில்லை. அதேநேரத்தில், அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அழிக்கப்பட வேண்டும். இதைச் செய்யும்படி பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் வலியுறுத்த வேண்டும். பிரச்னை போர் அல்ல. பயங்கரவாதமே பிரச்னை. பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்த பாகிஸ்தான் மண் பயன்படுத்தப்படுகிறது.
அந்துலே விவகாரம் முடிந்து போன விவகாரம். அந்தப் பிரச்னை இனியும் இழுக்காமல் முடிவடைய அனுமதிக்க வேண்டும். போலீஸ் அதிகாரி கர்காரே மரணம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரத்தில் அரசின் நிலையை சிதம்பரம் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார். அதில், அமைச்சர் அந்துலே திருப்தி அடைந்து விட்டார். எனவே, அந்துலே எழுப்பிய சர்ச்சை முடிந்து விட்டது.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இந்தியாவுக்கு தலிபான்கள் மிரட்டல்: இந்தியா போர் தொடுத்தால், பாகிஸ் தானுக்கு ஆதரவாக நூற்றுக்கணக் கான தற்கொலைப் படையினருடன் களம் இறங்குவோம் என்று அறிவித் துள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கமான தேரிக் - இ- தலிபான் அமைப்பின் தலைவன் பைதுல்லா மெக்சூத் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் மீது போர் திணிக்கப் பட்டால், அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்களும் இறங்குவர். இதற்காக நன்கு பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் தயார் நிலையில் உள்ளனர்.அத்துடன் நூற்றுக்கணக்கான தற் கொலைப் படையினரும், வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயாராக உள்ளனர்.பாகிஸ்தான் எல்லையைக் காக்க போராடும்
பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இவர்கள் துணையாக இருப்பர். உண்மையான புனிதப் போர் நடத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. இதற்காகத்தான் தலிபான்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அணு ஆயுத பலம் படைத்த ஒரே இஸ்லாமிய நாடான பாகிஸ்தானை பலவீனப் படுத்த, கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதை நாங்கள் நன்கு அறிவோம். அந்த எதிரிகளின் திட்டங்களை எல்லாம் நாங்கள் முறியடிப்போம். பாகிஸ்தான் படைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக போரிட்டு வரும் தலிபான்கள், எப்படி அவர் களுக்கு துணையாக நிற்பர் என, மக்கள் கேள்வி எழுப்பலாம். அதனால், நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.எங்களுக்கு எதிராக பாக்., ராணுவத்தினர் செயல்பட்டது எல்லாம் முடிந்து போன விஷயம். ஆனால், இப்போது, நாட்டைக் காப்பாற்றவும், அது நிலைத்து நிற்கவும் பாக்., ராணுவம் போரிட உள்ளது. அதற்கு நாங்கள் துணை நிற்போம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிகழ்ந்தால், ஆப்கானிஸ்தான் உடனான பாக்., எல்லையையும் நாங்கள் பாதுகாப்போம். பாகிஸ்தான் மேற்குப் பகுதி எல்லையைப் பற்றி, அந்நாட்டு அரசும், மக்களும், அரசியல் தலைவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை.அந்த எல்லையைக் காக்கும் பணியில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான எங்களின் போராளிகள் ஈடுபட்டுள்ளனர். பாக்., ராணுவத்தின் தலைமையில், அவர்களின் உத்தரவை ஏற்று செயல் பட தலிபான்கள் தயாராக உள்ளனர்.இருந்தாலும், எங்களுக்கென தனி பகுதியை ஒதுக்கி சண்டையிட அனுமதிக்க வேண்டும்.
இந்தியா தாக்கினால் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ தளபதி திமிர் பேச்சு
இரவு 10 மணிக்கு மேல், 'சரக்கு!' நோ!' : விற்பனை நேரத்தை குறைத்தது அரசு
டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைக்கப்படுகிறது. மேலும், "புதிய கடைகள் இனி திறக்கப்படாது' என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழக அரசின், "டாஸ்மாக்' நிறுவனம், 2003ம் ஆண்டு, நவம்பர் 29ம் தேதிமுதல் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 41 மதுபானக் கிடங்குகள் மற்றும் 6,700 சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன.இதன்மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது. ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை அதிகரித்து வந்துள்ளது. தனது வருவாயில் இருந்து ஆயத்தீர்வை, அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் திருப்பித் தர வேண்டிய விற்பனைக் கட்டணம், இறக்குமதி அனுமதி உரிமக் கட்டணம், விற்பனை வரி, சிறப்பு உரிமைக் கட்டணம் ஆகிய வகைகளில் அரசுக்கு, "டாஸ்மாக்' நிறுவனம் 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், "டாஸ்மாக்' கடைகளை மூட வேண்டுமென பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்தபோது, ராமதாசின் கோரிக்கையை ஏற்று, காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்பட்டு வந்த மதுக்கடைகளின் நேரத்தை முதல்வர் கருணாநிதி குறைத்தார்.இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை மதுக்கடைகள் திறந்திருந்தன. இந்நிலையில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரி, ராமதாஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் முதல்வரைச் சந்தித்தனர்.அவர்களிடம் முதல்வர் கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதியளித்தார். இதன் முதல்கட்டமாக, கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைத்து, முதல்வர் நேற்று உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அரசு கூறியிருப்பதாவது:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமென முதல்வர் தெரிவித்தார்.கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 1,300 பார்கள் மூடப்பட்டுள்ளன. 128 சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், படிப்படியாக முழு மதுவிலக்கை அடையும் வகையில், முதல் கட்டமாக, இனி புதிய மதுக்கடைகளை தமிழகத்தில் திறப்பதில்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.
தற்போது மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்பதை, ஒரு மணி நேரம் குறைத்து, வரும் ஜனவரி 1ம் தேதியிலிருந்து காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படுமென முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இனி அடுத்தடுத்த கட்டங்கள் பற்றி அவ்வப்போது அறிவிக்கப்படும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஜனவரி 9, திருமங்கலம் இடைத்தேர்தல், ஐந்து மாதங்களில் லோக்சபா பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் நடவடிக்கைகள் நிறைவை அளிக்கிறது : ஐ.நா அந்தர் பல்டி
மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் மனபிறைவை அளிப்பதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜமாயத்-உத்-தாவா அமைப்பை ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. தொடர்ந்து அந்த அமைப்பின் செயலாக்கங்களை முடக்குமாறும் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானும் ஜமாயத்-உத்-தாவா அமைப்பின் தலைவர்கள் சிலரை கைது செய்ததுடன், அந்த அமைப்பின் வங்கி கணக்கையும் முடக்கியுள்ளதாக அறிவித்தது. விஷயம் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, வீட்டுக்காவலில் எடுத்த தலைவர்களையும், கைது செய்த தலைவர்களையும் விடுவித்தது. வழக்கம் போல் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது பாகிஸ்தான். முடக்கப்பட்டதாக கூறப்படும் ஜமாயத் - உத் - தாவாவின் வங்கி கணக்குகளும் வழக்கம் போல இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் பேரட் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், பாக்., அரசின் நடவடிக்கைகள் மனநிறைவை தருவதாக கூறியிருப்பது, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேரட் கூறியிருப்பாவது : ஒரு அமைப்பின் மீது உடனடியாக தடை விதிப்பது என்பது அவ்வளவு எளிதில்லை , ஆனால் பாகிஸ்தான் ஐ.நா., உத்தரவின் பேரில் பயங்கரவாதிகளை ஒடுக்க நல்ல வகையில் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் பாகிஸஅதானிலிருந்து தான் வந்தார்கள் என பாகிஸ்தான் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரிப் முதல் பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் வரை அனைவரும் அடித்துச் சொல்லியும் கூட பாகிஸ்தான் இன்னும் இந்தியாவிடம் ஆதாரம் கேட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் இந்த கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இல்லை: மீண்டும் கொக்கரிக்கிறார் சர்தாரி
மும்பையில் தாக்குதல் நடத் திய பயங்கரவாதிகள் பாகிஸ் தானை சேர்ந்தவர்கள் தான் என்பதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை' என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மும்பையில் கடந்த மாதம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவல் பரப்பப்படுகிறது. இதுவரை அதை நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு தரப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் தரப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம். மும்பை தாக்குதலின் போது உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும், அதை அவனது தந்தையே ஒப்புக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த சம்பவத்தையும் நிரூபிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
ஜமாயத்-உத்-தாவா அமைப் பின் தலைவர் ஹபீஸ் சயீது, தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள் ளார். இவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத் தால், சட்டப்படி கைது செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக் கப்படும். பயங்கரவாதம் தொடர் பான பிரச்னையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு சர்தாரி கூறினார்.
இதற்கிடையே, ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மவுலானா மசூத் அசார் கைது குறித்து பாகிஸ்தான் நேற்று திடீர் பல்டி அடித்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச் சர்கள், மசூத் அசார் கைது செய்யப்பட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். பாகிஸ்தான் மீடியாக்களும் மசூத் அசார் கைது செய்யப்பட்டது குறித்து செய்திகள் வெளியிட்டன. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி இதுகுறித்து முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மவுலான மசூத் அசார் கைது செய்யப்படவில்லை. அவர் பாகிஸ்தான் போலீசாரல் தேடப்பட்டு வருகிறார். பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும்' என்றார். இதையடுத்து, மசூத் அசார் கைது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்திய தூதருக்கு அழைப்பு: இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி மன்பிரித் போராவுக்கு, பாகிஸ்தான் அரசு சார்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்கு சென்ற போராவிடம், இம்மாதம் 12 மற்றும் 13ம் தேதிகளில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் வான் பகுதிக்குள் அத்துமீறிப் பறந்தது தொடர்பாக கவலை தெரிவிக்கப்பட்டது.
ராணுவ நடவடிக்கை இல்லை: பாகிஸ்தானில் உள்ள அவாமி தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எங்கள் கட்சி தலைவர் அஸ்பந்தயர் வாலி கான், இந்திய தூதரக அதிகாரி சத்யபிரதா பாலை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடாது என்றும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்படவில்லை என்றும், இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுவதும் தவறான தகவல் என்றும் அவர் கூறினார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலில், அப்பாவி மக்களின் மரணங்களை சகிப்பது தான் பெரும் தவறு. வி.ஐ.பி.,க்களின் உயிர் மட்டுமல்ல, சாதாரண மக்களின் உயிரும் விலை மதிப்பானது தான். இதை கவனத்தில் கொண்டு, வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பை குறைக்கலாம்!'- இப்படி விளாசி இருப்பவர் வேறு யாருமல்ல, காங்கிரஸ் கட்சியின் இளம் பொதுச்செயலர் ராகுல். அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் எண்ணற்ற உயிர்கள் பலியாகி இருப்பது தொடர்பாக மிகுந்த நெகிழ்ச்சியுடன் பேசினார்; அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு போலீசையும் "அரசியலாக்கி' விளையாடும் வி.ஐ.பி.,க்களை சூடான வார்த்தைகளால் கண்டித்தார்.
பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடித்து மக்களை காப்பது தொடர்பாக அவர் பேசியதாவது:
ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது தான். ஒவ் வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். பயங்கரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகும் போது, அதை சகித்து பழகி வருகிறோம். நாம் செய்யும் பெரிய தவறு இது தான்.
அப்பாவி மக்களில் ஒருவரின் உயிர் பறித்தாலே நாங்கள் சகிக்க மாட்டோம் என்பதை பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிர் ஒவ்வொன்றும் விலை மதிப்பில்லாதது தான். அப்படி பார்க்கும் போது, வி.ஐ.பி.,க்கள் மட்டும் மிக அதிக பாதுகாப்புடன், கருப்புப்பூனைகளுடன் வலம் வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதை நாம் உணர வேண்டும்.
வி.ஐ.பி.,க்கள் தலையீடு கூடாது: மும்பையில் நடந்த பயங்கரம், இதுவரை இல்லாத அளவுக்கு நடந்துள்ள கொடூரம். பல நாளாக நடந்துவரும் பயங்கரவாத வன்முறையின் தொடர்ச்சிதான் இது.இந்திய மக்களுக்கு , ஜனநாயகத்தில் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளும் கிடைத்துள்ளது. பேச்சு சுதந்திரம் உட்பட எல்லா உரிமைகளையும் அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள உரிமை உண்டு. இதையும் மும்பை சம்பவத்துக்கு பின் நிரூபித்துவிட்டனர். அதில் தவறே இல்லை.மக்களின் பாதுகாப்புக்கு தான் போலீஸ் , பாதுகாப்புப்படையினர் அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் விஷயத்தில் அரசியல்வாதிகள் தலையீடு இருக்கக் கூடாது. அவர்களின் பணி மாற்றம், பதவி உயர்வு உட்பட எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் வி.ஐ.பி.,க்கள் தலையீடு இருக் கக்கூடாது. இதை காங்கிரஸ் எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.,க்கள் பின்பற்றுவர் என்று நம்புகிறேன்.மும்பையில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ஓம்பாலே என்பவர், பயங்கரவாதியை எதிர்த்து உயிர்நீத்தார்.
அவரிடம் துப்பாக்கி இல்லாததால், அவரால் அவனை திருப்பி சுடமுடியவில்லை; அவரை காத்துக் கொள்ள முடியவில்லை. நம் நாட்டில் உள்ள ஒரு உயிரை கூட கொல்ல, நாம் அனுமதிக்க மாட்டோம் என்ற அறைகூவலை நாம் பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியராகிய நம் எல்லாரையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கின்றனர் பயங்கரவாதிகள். "நாம் எல்லாரும் ஒருவர் தான்' என்பதை நம் ஒற்றுமையின் மூலம் காட்டினால்,பயங்கரவாதிகள் கொட்டத்தை அடக்கிவிடலாம்.இவ்வாறு ராகுல் பேசினார்.
பயங்கரவாதிக்கு ஆஜராக மூத்த வக்கீல் மறுப்பு: 'தொழிலே போனாலும் பரவாயில்லை'
மும்பை பயங்கரத்தில் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் அமீருக்கு கோர்ட்டில் ஆஜராக, இலவச சட்ட உதவிக்குழு மூத்த வக்கீல் தினேஷ் மோட்டா, நீதிபதி முன் பகிரங்கமாக மறுத்து விட்டார்.மும்பை பந்தப் பகுதியில் வசிப்பவர் வக்கீல் மோட்டா. இலவச சட்ட உதவிக்குழுவில் 10 ஆண்டாக இருக்கிறார். கடந்த புதன் கிழமை அன்று இவருக்கு குழுவில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. "மும்பை பயங்கரத்தில் சிக்கிய பயங்கரவாதி அஜ்மல் அமீருக்கு நீங்கள் ஆஜராக வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.கடிதத்தைக் கண்டதில் இருந்து மோட்டாவுக்கு பெரும் பதட்டம். மும்பை பயங்கரத்தில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூரத்தைச் செய்த பயங்கரவாதிக்காக ஆஜராக தயாரில்லை அவர். ஆனால், எந்த ஒரு குற்றவாளிக் கும் ஆஜராக வக்கீல் இல்லாவிட்டால், சட்ட உதவிக் குழு வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.
வக்கீல் பெயரை நீதிபதி தான் முடிவு செய்வார்.கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட எந்த ஒரு குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கும், இலவச சட்ட உதவிக் குழு வக்கீல் ஆஜராகத்தான் வேண்டும். சுழற்சி முறையில் அளிக்கப்படும். அஜ்மலுக்கு ஆஜராகும் பொறுப்பு மோட்டாவுக்கு தான் தரப்பட்டது.இலவச சட்ட உதவிக்குழு வக்கீல் ஏற்காவிட் டால், அவர் வக்கீல் தொழில் செய்ய முடியாது; நீதிபதி நினைத்தால், அவர் உரிமம் ரத்து செய்ய முடியும்.இதையெல்லாம் கருத்தில் கொண்ட மோட்டா, பெரிதும் புழுங்கினார். கடந்த வியாழன், எஸ்பிளனேட் பகுதி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஸ்ரீமங்கல் முன்னிலையில் ஆஜராக வேண்டும்."வக்கீல் தொழில் போனாலும் பரவாயில்லை; கொடூரத்தை நிகழ்த்திய பயங்கரவாதிக்கு ஆஜராகாதீர்கள்' என்று அவரிடம் மனைவி நினாவும் சொல்லி விட்டார்.வியாழன் அன்று கோர்ட்டுக்கே போகாமல் விட்டு விடலாமா என்று நினைத்தார் மோட்டா. ஆனால், அவர் மனைவியோ, "கோர்ட்டுக்கு போங்கள்; நீதிபதியிடம் போய், என்னால் ஆஜராக முடியாது' என்று சொல்லி விடுங்கள் என்று தைரியமூட்டினார்.
"நான் மும்பையைச் சேர்ந்தவன்: இதையடுத்து, அஜ்மல், அவன் கூட்டாளி நடத்திய கொடூர தாக் குதலில் பலர் கொல்லப்பட்ட சி.எஸ்.டி., ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி, கோர்ட்டுக்கு போனார் மோட்டா. போகும் போதே, ஆயிரம் யோசனைகள்; குழப்பங்கள்.கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜராகி தயங்கியபடி,"என்னை மன்னித்து விடுங்கள்; என்னால் ஆஜராக முடியாது' என்று குரல் தழுதழுக்கக் கூறினார்.மோட்டாவையே உற்றுப் பார்த்த நீதிபதி, "பரவாயில்லை; அவரை வற்புறுத்த வேண்டாம்' என்று பெரிய மனதுடன் கூறி, அவரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தார். பெருமூச்சு விட்டபடி, கோர்ட்டை விட்டு வீட்டுக்கு நிம்மதியாக திரும்பினார்.மோட்டா கூறுகையில், "நான் மும்பையைச் சேர்ந்தவன். இங்கு கொல்லப்பட்ட ஒவ்வொருவரும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் கருதுகிறேன்.
அப்படியிருக்கும் போது, கொடூரத்தை நிகழ்த்திய பயங்கரவாதிக்கு ஆஜராக என் மனது இடம் கொடுக்குமா? இதற்கு முன், பல குற்றவாளிகளுக்கு ஆஜராகி உள்ளேன். ஆனால், இந்த பயங்கரவாதிக்கு ஆஜராக நான் விரும்பவில்லை. என் தொழிலே போனாலும் ஆஜராவதில்லை என்று முடிவு செய்தேன்' என்று தெரிவித்தார்.
கிளிநொச்சி அருகே கடும் சண்டை : புலிகளுக்கு பலத்த சேதம்
இலங்கையில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிவரும் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தை எதிர்த்து புலிகள் கடும் சண்டையிட்டு வருவதால், அவர்கள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இலங்கை ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாவது:கிளிநொச்சியை நோக்கி இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். அத்துடன் முல்லைத் தீவுப் பகுதியிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி அருகே அடம்பன் பகுதியில் நேற்று முன்தினம் ஆறு இடங்களில் நடந்த கடும் சண்டையில் புலிகள் தரப்பில் அதிகம் பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில், ராணுவ தரப்பில் சிறிதளவு இழப்பு ஏற்பட்டது.இதேபோல், முல்லைத் தீவு பகுதியிலும் ராணுவத்தின் 59வது படைப் பிரிவினர் தொடர்ந்து சண்டையிட்டு முன்னேறி வருகின்றனர். அவர்களுடன், புலிகளும் தீவிரமாக சண்டையிடுகின்றனர்.
இந்தச் சண்டையில், புலிகள் வசமிருந்த சில பகுதிகளை ராணுவத்தினர் பிடித்தனர். முல்லைத் தீவில் உள்ள மல்லவராயன் காடு முறிப்பு, குமுளமுனை மற்றும் ஒலுமாடுவிலும் நேற்று முன்தினம் சண்டை நடந்தது. இந்தப் பகுதிகளில் புலிகளின் நிலைகள் பலவற்றை ராணுவத்தினர் கைப்பற்றினர்.இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையில், "இலங்கையின் வடபகுதியில் நடக்கும் ராணுவ நடவடிக்கை ஈடுஇணையற்றது; உலகின் எந்தப் பகுதியிலும் நிகழாதது' என, அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.
"கடந்த 2006 ஆகஸ்டில் முல்லைத் தீவில் ராணுவத்தினர் சண்டையை துவக்கினர். அதன்பின், ராணுவத்திற்கு எந்தப் பின்னடையும் ஏற்படவில்லை. எங்களின் ராணுவத்தினர் நடத்தும் சண்டையைப் போல, உலகின் எந்தப் பகுதியிலும் நடந்திருக்காது. ஒரு சிறு பின்னடைவை கூட சந்திக்காமல், அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்' என, அவர் மேலும் கூறியுள்ளார்.
லக்வியை குறி வைத்து விட்டது அமெரிக்கா : மும்பை பகீர்
மும்பையில் நடந்த பாகிஸ் தான் பயங்கரவாதிகளின் அதிபயங்கர தாக்குதல் பின்னணியில் முழுமையாக பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., உள்ளது என்பதை 100 சதவீதத்துக்கு மேல் நிரூபித்ததால் தான் பாகிஸ்தான் பணிந்துள்ளது.ஈராக் மற்றும் இந்தியாவில் பயங்கரவாத சதி திட்டங்களை நிறைவேற்றி வரும் லஷ்கர்- இ-தொய்பாவின் பின்னணியில் பாக்., ராணுவ முன்னாள் கமாண்டர் சகி உர் ரகுமான் லக்வி இருப்பதை இந்தியா, ஆதாரங்களுடன் கூறியுள்ள நிலையில், அமெரிக்கா விழித்துக் கொண்டுள்ளது.
கண்டிப்பான அறிக்கை : லக்வி தான், லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு ராணுவ பயிற்சி மற்றும் அமைப்புக்கு உலக அளவில் நிதி வசூலித்து தரும் முக்கிய வேலைகளை செய்து வருவதாக ஏற்கனவே, கடந்த மே மாதம் அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், லஷ்கர் -இ -தொய்பா உட்பட சில பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி பரிமாற்றங்களை தடை செய்யவும், லக்வி மற்றும் லஷ்கர் -இ -தொய்பா நிறுவனர் முகமது சயீது ஆகிய இருவரின் நிதி நடவடிக்கைகளை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இது தொடர்பாக பாகிஸ்தானுக்கும் கண்டிப்பான அறிக்கை அனுப்பிய அமெரிக்கா, லஷ்கர் -இ தொய்பா- உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதையோ, அடைக்கலம் தருவதையோ தடுத்து நிறுத்திட கடும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியது.
"புரூடா' விட்டார் முஷாரப்: கடந்த 2002ம் ஆண்டு, அப்போது அதிபராக இருந்த முஷாரப், பாகிஸ்தானில் லஷ்கர் -இ -தொய்பா உட்பட எல்லா அமைப்பும் தடை செய்யப் பட்டுள்ளது; அதன் தலைவர்கள் முடக்கப்பட்டுள்ளனர்' என்றார். மேலும், அதற்கு முன், 2001 செப்டம்பர் தாக்குதலுக்கு பின், அமெரிக்க ராணுவம் எடுத்த ராணுவ நடவடிக்கையில் பாகிஸ் தான் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிந்து விட்டதாகவும், அதில் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் "புரூடா' விட்டார் முஷாரப். ஆனால், உண்மையில் அவர்கள் சாகவில்லை. அவர்கள் தான் ஈராக், இந்தியாவில் பல சதி திட்டங்களை தீட்டி நிறைவேற்றியுள்ளனர் என்பது இப்போது மீண்டும் இந்தியாவில் நடந்த தாக்குதல் மூலம் உறுதியாகி உள்ளது.இதனால் தான் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தானை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை விடுத்துள்ளார் ரைஸ் : இந்தியாவில் பேச்சை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம் அமைதியாகவே பேசினார். கண்டிப்புடன் அவர் நடந்துகொள்ளவில்லை என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ரைஸ், கடுமையாக பேசியுள்ளார். பிரதமர் கிலானியுடன் பேசும் போது, எதிர்காலத்தில் பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ரீதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.லக்வி தொடர்பாக பல தகவல் களை அளித்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையும் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஈராக், இந்தியாவில் நடந்த அத்தனை சதி சம்பவங்களுக்கும் லக்வி தான், பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார்.
அமெரிக்கா நம்பத் தயாரில்லை: மும்பையில் நாரிமன் கட்டடத்தில் இருந்த ஒரு பயங்கரவாதி சரண் அடைய தயாரானபோது, சேட்டிலைட் போன் மூலம் அவனுடன் பேசி, "இந்த போர் நம் தனிப்பட்ட போரல்ல; நம் மக்களின் போர்' என்று அவன் மூளையை சலவை செய்து சரண் அடையாமல் தடுத்தார் என்ற விவரமும் இப்போது தெரியவந்துள்ளது.
கடந்த பத்தாண்டாக நடந்த பல தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், லக்வி முக்கிய பங்கு கொண்டுள்ளதை இந்தியாவும் உறுதி செய்துள்ளது. இவருக்கு பாக்., ராணுவமும், ஐ.எஸ்.ஐ.,யும் உடந்தையாக இருந்துள்ளதையும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவுக்கும் இந்த முறை கடும் எரிச்சல் வந்துள்ளது.
லஷ்கர் பயங்கரவாத தலைவர் களை கைது செய்து அமெரிக்காவுக்கு "நல்ல பிள்ளை' போல பாகிஸ்தான் நடந்து கொண்டாலும், இந்த முறை அமெரிக்கா நம்பத் தயாரில்லை. அதனால், அடுத்து அதிரடி நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்று தெரிகிறது.
மும்பை தாக்குதலை தடுக்க தவறியதற்காக மன்னிப்பு கேட்டார் பிரதமர் மன்மோகன்
"மும்பை படுகொலையை தடுக்க முடியவில்லை. அதற்காக, அரசின் சார்பாக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மும்பை தாக்குதல் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகளை அரசால் தடுக்க முடியவில்லை. அதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. இந்த விஷயத்தில் சர்வதேச சமுதாயம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும். இது பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்கும் நல்லது. பயங்கரவாத விஷயத்தில், இந்தியா இதுவரை கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டுள்ளது. நாகரிகமான அணுகுமுறையை பின்பற்றுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை ஒரு பலவீனமாக கருதிவிடக்கூடாது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, அரசு விரைவில் சில கடுமையான முடிவுகளை எடுக்கும். அடுத்த சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இந்த முடிவு எடுக்கப்படும். இது ஏதோ பழிவாங்கும் உணர்வோடு எடுக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். மிகுந்த துயரத்தோடுதான் இதைச் சொல்கிறேன்' என்றார்.
நாட்டை துண்டாட நினைக்கும் தீவிரவாதிகளை இணைந்து ஒழிப்போம் : லோக்சபாவில் அத்வானி உறுதி
பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் அறிக்கை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து பேசிய பார்லிமென்ட் எதிர் கட்சி தலைவர் அத்வானி, நாட்டை துண்டாட நடக்கும் தீவிரவாதிகளை ஒன்றாக இணைந்து ஒழிப்போம் என தெரிவித்தார். அத்வானி கூறியதாவது : தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியாவுக்கு எதிரானது. எனவே இதை சமாளிக்க மத்திய அரசுடன் எதிர்கட்சியான பா.ஜ., வும் இணைந்து ஒத்துழைக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. இந்திய மக்களை பாதுகாக்க இந்தியா எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்தியா தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிச.16ல் திமுக உயர் மட்டக் குழு கூட்டம்
திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த உயர் மட்ட செயல் திட்டக் கூட்டத்தில்தான் பாமகவை திமுக கூட்டணியிலிருந்து விலக்கும் முடிவை திமுக எடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
கடும் விளைவுகள் ஏற்படும் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய வானொலிக்கு வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் மண்ணில்தான் இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும்.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.இந்தியாவில் பெரும் கொதிப்பும், கொந்தளிப்பும், கோபமும் காணப்படுகிறது. இது எங்களுக்குக் கவலை அளிக்கிறது. இது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள மிரட்டலாகும்.
இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பதால், கண்டிப்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். மேலும், மும்பை சம்பவத்தில் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.
பாகிஸ்தான் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது (லக்வி, அஸார் கைது). இதை நாங்கள் பாராட்டுகிறோம். அதேசமயம், உண்மையில் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் கிட்டத்தட்ட போர் புரியும் நிலையில் இருந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வேறு மாதிரியாக உள்ளன.
பாகிஸ்தான் அரசு மக்கள் அரசு, சட்டப்பூர்வமான அரசு. அதேபோலத்தான் இந்தியாவிலும் ஒரு அரசு உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தபோது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதுதொடர்பாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது என்றார் ரைஸ்.
ஓபாமா கொதிப்பு:
மும்பையில் கண்டதைப் போன்ற தீவிரவாத தாக்குதலை எனது தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உலக நாடுகளுக்கு உறுதிபடத் தெரிவிக்கப் போவதாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிகாகோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், உலக நாடுகளுக்கு நான் விடுக்கப் போகும் செய்தி என்னவென்றால், மும்பையில் நடந்ததைப் போன்ற தீவிரவாதத் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதுதான். இதை நான் உறுதிபடத் தெரிவிக்கப் போகிறேன்.
உலக நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை மேலும் வலுப்படுத்த எனக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் ஒரு இஸ்லாமிய நாட்டுக்குச் சென்று அங்கு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளேன்.
அந்த நாட்டின் மூலம் அமெரிக்காவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தப் போகிறேன்.
அந்த நாட்டில் நான் நிகழ்த்தப் போகும் உரையின் மூலம், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் உறுதிபட எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தப் போகிறேன் என்றார் ஓபாமா.
தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே கூட்டணி பேச்சு-விஜய்காந்த்
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது நான் நானாகவே இருக்கிறேன்.
தனது தொகுதியான விருத்தாசலத்திற்கு வருகை தந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மழையால் வீடு இடிந்து விழுந்து பலியானான சத்யா குடும்பத்திற்கு ரூ 50,000 வழங்கினார். பின்னர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டமும், வாஜ்பாய் கொண்டு வந்த இந்தியாவை இணைக்கக்கூடிய தங்க நாற்கர சாலையும் பெயர் சொல்லும்படியாக இருந்தன. ஆனால், இப்போது மத்திய-மாநில அரசுகளிடம் குறிப்பிடும்படியாக திட்டங்கள் இல்லை.
இந்தியாவில் நதிகளை இணைக்க ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதம் மிக அதிகமாக உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்திற்கு அரசு வழங்கியுள்ள வெள்ள நிவாரணம் போதாது.
இந்த நிவாரணம் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கூடுதலாக வெள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும்.
விலைவாசி விண்ணுக்கு உயர்ந்து விட்டது. வெங்காயம் கிலோ 35க்கும், தக்காளி கிலோ 45க்கும் விற்கிறது. இப்படி விலைவாசி உயர்ந்தால் ஏழைகள் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு அரசு அதிக சலுகைகள் வழங்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியம் நாட்டில் உள்ள வறுமையை எப்படி ஒழிக்க வேண்டும் என்று வழி கண்டுபிடித்து உடனடி தீர்வு காண வேண்டும்.
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது நான் நானாகவே இருக்கிறேன் என்றார்.
இதன்மூலம் கூட்டணிக்கு அவர் தயாராவதாகவே தெரிகிறது.
பாக்.கை தாக்க மாட்டோம், ஆனால் ... - பிரணாப் எச்சரிக்கை
பாகிஸ்தானை தாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை. ஆனால் பாகிஸ்தானிடமிருந்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் என்று லோக்சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு உள்ளது. ஆனால் இதற்காக பாகிஸ்தானை தாக்குவது தீர்வாகாது. அந்த எண்ணமும் இந்தியாவிடம் இல்லை. அதேசமயம், தனது மண்ணில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் செயல்பட வேண்டும். இதைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது.
நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் பேசி மிரட்டியதாக அங்கிருந்து வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இது நாட்டை திசை திருப்ப முயலும் செயலாகும். தேவையில்லாமல், அந்நாட்டு ராணுவத்தை உஷார்படுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு
இன்னொரு நாட்டுத் தலைவருடன் போனில் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே நேரம் பெறப்பட வேண்டும். பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி நடைமுறைகள் உள்ளபோது தேவையில்லாமல் நான் சர்தாரியை மிரட்டியதாக பாகிஸ்தான் வதந்தி கிளப்பி விட்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும்.
பாகிஸ்தானைத் தாக்குவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இது சிக்கலான ஒன்று.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ளது.
ஆனால் தடை செய்யப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் சர்வ சுதந்திரமாக தோன்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து பாகிஸ்தான் இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதை உணர முடிகிறது.
தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறது பாகிஸ்தான். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சொர்க்கத்திலிருந்தா வந்தார்களா? அல்லது வேறு கிரகத்திலிருந்து வந்தார்களா?. அவர்கள் அங்கேயேதானே இருக்கிறார்கள்.
தீவிரவாதம் தொடர்பான பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சர்வதேச சமுதாயத்த ஈர்க்கும் வகையில் இந்த விவாதம் இருக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
சமீப காலத்தில் ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர் மற்றும் பெங்களூரில் நடந்த தாக்குதல்களில் ஒரு திட்டமிட்ட நோக்கம் தெரிகிறது. வெளிநாட்டினரைத்தான் குறி வைத்து தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டினரின் மரணத்திற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் விருந்தினர்கள்.
இந்தப் பிரச்சினையில் இந்தியா மீது தவறு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நாட்டினர் புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையின் பரிமாணம் அவர்களுக்குப் புரிந்துள்ளது என்றார் பிரணாப்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் குட்டு
கொல்கத்தா: இப்போது உள்ளதை விட பல மடங்கு நெருக்கடிகள் அடுத்த நிதியாண்டில் காத்திருக்கின்றன என எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ்.
மேலும் அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகள் முழுமையாக அடிமட்ட மக்களைச் சென்றடைய வங்கிகள் உதவ வேண்டும். அனைத்து சலுகைகளையும் வங்கியுடனேயே நிறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:
இந்த நிதி ஆண்டு கடுமையாக அமைந்துவிட்டது. ஆனால் வரும் நிதியாண்டு 2009-10 இதை விட கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
இப்போதை விட கடும் சரிவை சந்திக்கவிருக்கிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சி. இதுகுறித்து சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்திய அரசுக்கு விரிவான அறிக்கையும் அனுப்பியுள்ளது. இப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினாலும், வரும் இழப்புகளைத் தடுக்கவே முடியாது. அந்த அளவு பாதிப்புகள் நமக்கும் வரவுள்ளன.
ஆனாலும் அரசுகள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளின் குறுக்கே நிற்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.
மேலும் வட்டி விகிதங்கள் குறையுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதை எப்போது எப்படி குறைப்போம் என்பது உண்மையில் எங்களுக்கே தெரியாது!
இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என கணித்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட இன்னும் குறைவான வளர்ச்சிதான் கிட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த அளவு கூட இருக்காது. 5 சதவிகிதம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.
பொருளாதார நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க, அரசு அறிவித்துள்ள பல ஆயிரம் கோடி சிறப்புச் சலுகைகள் அடிமட்ட மக்களுக்கும் போய் சேரும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் அறிவிப்புக்கு அர்த்தமிருக்காது. அவரவர் தங்கள் பாதுகாப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்?
இன்றைய தேவை ஒருங்கிணைந்த வளர்ச்சி. அதற்கு வங்கிகள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது. பார்க்கலாம்... அடுத்த நிதியாண்டு என்ன நடக்கிறது என்பதை!, என்றார் சுப்பாராவ்.
ஜமாத் உத் தவாவுக்கு ஐ.நா. தடை-சயீத், லக்வி சர்வதேச தீவிரவாதிகள்!
ஐ.நா.: லஷ்கர் இ தொய்பாவின் மறு முகமான ஜமாத் உத் தவாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. லஷ்கர் நிறுவனர் ஹபீஸ் சயீத், ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட நான்கு லஷ்கர் நிர்வாகிகள் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜமாத் உத் தவா அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சயீத், லக்வி தவிர ஹாஜி முகம்மது அஷ்ரப், ஜாகி உர் பாஷிக் ஆகியோரும் சர்வதேச பயங்கரவாதிகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜமாத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அப்படி விதிக்கப்பட்டால், ஜமாத் அமைப்பின் நிறுவனரான சயீத் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவர். அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று பாகிஸ்தானும் உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுத்த முடிவில், அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதையும் தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் விவரம் வெளியீடு

மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தகவல்களை மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
யார், யார்?
இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்கள் வருமாறு
படா அப்துல் ரஹ்மான் (முல்தான்), சோட்டா அப்துல் ரஹ்மான் (முல்தான்), பஹாதுல்லா என்கிற அபு பாஹத் (ஓகாரா), இஸ்மாயில் கான் என்கிற அபு இஸ்மாயில் (தேரா), ஜாவேத் என்கிற அபு அலி (ஓகாரா), நஸீர் என்கிற அபு உமர் (பைசலாபாத்), பாபர் இம்ரான் என்கிற அபு அகாஷா (முல்தான்), இன்னொரு நசீர் என்கிற அபு உமர் (பைசாலாபாத்), அஜ்மல் அமீன் கஸாப் (ஓகாரா), சோயீப் என்கிற சொயப் (நரோவால் சியால்கோட்).
இவர்களில் சிலரின் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், சிலரது அடையாள அட்டைகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் கஸாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்றவர்கள் கமாண்டோக்களால் கொல்லப்பட்டவர்கள்.
எங்கெங்கு யார் யார் தாக்கியது?
இவர்களில் இஸ்மாயில் கான் மற்றும் கஸாப் சத்ரபதி ஆகியோர் சிவாஜி ரயில் நிலையம் மற்றும் காமா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தினர்.
படா அப்துல் ரஹ்மான், ஜாவேத், சோயப், நஸீர் என்கிற அபு உமர் ஆகியோர் தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.
இன்னொரு நஸீர் என்கிற அபு உமர், பாபர் இம்ரான் ஆகிய இருவரும் நாரிமன் ஹவுஸில் தாக்குதல் நடத்தினர்.
சோட்டா அப்துல் ரஹ்மான், பஹாதுல்லா ஆகியோர் டிரைடன்ட் ஓபராய் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினர்.
இவர்களில் சோயப்புக்கு வயது 20 தான். தீவிரவாதிகளிலேயே இவன்தான் மிகவும் சிறியவன். நஸீர் தான் அதிக வயதானவன். இவனுக்கு வயது 28.
நஸீர் மட்டுமே இந்தக் கும்பலில் திருமணமானவன். ஆனால் இவனது மனைவி, இவனுடன் இல்லை. ஒன்று விவாகரத்து செய்திருக்க வேண்டும் அல்லது இறந்திருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
தீவிரவாதிகளின் சராசரி வயது 23 முதல் 25 வயதுக்குள்தான்.
இஸ்மாயில்கான், நசீர், நஸீர் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே பல தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்.
கும்பலின் தலைவன் இஸ்மாயில்
இந்தக் கும்பலின் தலைவனாக இஸ்மாயில்கான் செயல்பட்டுள்ளான்.
பயிற்சியின்போது இவர்கள் அனைவருக்கும் வேறு பெயர்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் அடையாளம் காண்பதில் குழ்பம் ஏற்படும் என்பதற்காக இந்த புனை பெயர்கள் தரப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்குள்ளாகவே உண்மையான பெயர்கள் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த புதுப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள நான்கு இடங்களில் இந்தக் கும்பலுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கராச்சியிலிருந்து கிளம்பி மும்பைக்கு வரும் வழியில் கிடைத்த 3 நாட்களில்தான் இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து விரிவாகப் பேசிக் கொண்டுள்ளனர். அப்போதுதான் அவர்களுடைய உண்மையான பெயர்களையும் முதல் முறையாக அறிந்து கொண்டுள்ளனர். தாங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அஜ்மலுக்கு மட்டும் மூளைச்சலவை
அஜ்மல் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் மூளைச் சலவை தனியாக தரப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளைக் கையாளும் பயிற்சி தரப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் சாதனங்களில் உள்ளவை குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. ஜிபிஎஸ் தவிர ஒரு சாட்டிலைட் போன், 9 செல்போன்களும் தீவிரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் ஒரு சிம் கார்டு கொல்கத்தாவில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை தீவிரவாதிகள் மும்பையில் பயன்படுத்தியுள்ளனர். மற்ற சிம் கார்டுகள் குறித்த தகவல்களை இப்போது வெளியிடுவதற்கில்லை.
சிம் கார்டுகளை வாங்கிக் கொடுத்தது தொடர்பாக 2 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்துள்ளனர்.
சபாவுதீனையும் விசாரிக்க முடிவு
இவர்கள் தவிர இந்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த சபாவுதீன் என்ற தீவிரவாதியையும் போலீஸ் கஸ்டடியில் எடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார் மரியா.
இலங்கை தளபதி கருத்து: அரசு தெரிவித்தது வருத்தம்
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி, இலங்கை ராணுவ தலைமை தளபதி தெரிவித்த கருத்துகளுக்கு, இலங்கை பாதுகாப்பு செயலர் வருத்தம் தெரிவித்துள்ளார். இத்தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான ராணுவ தாக்குதல்களை, இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என, "தமிழக அரசியல் கோமாளிகள் கூறிவரும் கருத்துக்களை, காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்காது. போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை, இந்திய அரசு வற்புறுத்தாது என இலங்கை ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா காட்டமாக பேட்டியளித்திருந்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கறைபடிந்த அரசியல்வாதிகள், விடுதலைப் புலிகளால் விலைக்கு வாங்கப் பட்டவர்கள், விடுதலைப் புலிகள் அழிந்தால் அவர்களது வருமானம் போய்விடும் என்பதற்காக இப்படி அவர்கள் கூறியுள்ளனர்' என்றும் குற்றம் சாட்டினார்.
ராணுவ தலைமை தளபதியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றதுடன், சரத்பொன்சேகாவின் உருவ பொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலகம், ராணுவ தலைமை தளபதி பேசியது குறித்து, அதிருப்திதெரிவித்து கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
இதையொட்டி, இந்த விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், ராணுவ தலைமை தளபதி பேசிய பேச்சுக்கள், தமிழக அரசியல் தலைவர்களை புண்படுத்தியிருக்கும் பட்சத்தில், அதற்காக, தாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் இலங்கை பாதுகாப்பு செயலர் தெரிவித்ததாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில், தமிழர்கள் மீதான தாக்குதலை, இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ள காலகட்டத்தில், இலங்கை அரசு, வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாருக்கு வீட்டுக் காவல்!
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அவனின் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என, நம்பப்படும் 20 பேரை பிடித்துத் தரும் படி, பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பட்டியல் அளித்தது. ஆனால், அவர்களை பிடித்துத் தர பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. இருப்பினும், அமெரிக்காவின் நிர்பந்தத்தின் பேரில், தங்கள் நாட்டில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட, லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் ஜாகிர் ரகுமான் லக்வி உள்ளிட்ட 20 பேரை கைது செய்தது. முசாபர்பாத்தில் பாகிஸ்தான் அதிரடிப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் இவர்கள் சிக்கினர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப் பின் நிறுவனர் மவுலானா மசூத் அசாரை வீட்டுக் காவலில் வைக்க பாகிஸ்தான் நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர். அவன் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது, அதிலிருந்த பயணிகளை விடுவிப்பதற்காக, இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டவன் அசார். இவனுடன் வேறு இரண்டு பயங்கரவாதிகளும் அப்போது விடுவிக்கப்பட் டனர். அந்த அசார் தான் தற்போது பகவல்பூர் என்ற இடத்தில் உள்ள மாதிரி நகர பகுதியில் பல அடுக்குமாடி கட்டடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளான்.
"பாகிஸ்தானில் பதுங்கியுள்ள 20 பயங்கரவாதிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, இந்திய அரசு அளித்த பட்டியலில் இவனின் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், அரசு வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை. இதற்கு முன்னரும், அசாரை பிடித்துத் தர வேண்டும் என, இந்தியா கோரிக்கை விடுத்த போது, அவனின் நடமாட்டத் திற்கும் பாக்., அரசு தடை விதித் தது. அதன்பின், அந்த தடை கோர்ட் உத்தரவின் பேரில், விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு நிதி திரட்டுவது, அதற்கு ஆதரவாக பேரணிகளை நடத்துவது போன்ற வேலைகளில் அசார் ஈடுபட்டு வந்தான். இந்திய சிறையிலிருந்து 1999ம் ஆண்டு விடுவிக்கப்பட்ட பின்னர் தான், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை அசார் நிறுவினான். 2001ம் ஆண்டு இந்திய பார்லிமென்ட் மீது நடந்த தாக்குதலுக்கும், 2003ம் ஆண்டு பாக்., அதிபராக இருந்த முஷாரப் மீது நடந்த தாக்குதலுக்கும் இவனின் அமைப்பே காரணம்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப் புக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அந்த அமைப்பின் பெயரை குதாம்-உல்-இஸ்லாம் என, பெயர் மாற்றினான். அந்த அமைப்பு அசாரின் தம்பி முப்தி அப்துல் ரவூப் தலைமையில் செயல்பட்டு வந்தது. பாகிஸ்தானில் பணிபுரிந்த அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பியர்ல், 2002ம் ஆண்டு கடத்தி கொலை செய் யப்பட்டார். அவரின் படுகொலைக்கு அசாரின் நெருங்கிய உதவியாளரான ஷேக் அகமது சயீது ஒமரே காரணம்.
அமெரிக்க பயணி பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியதற்காக, அசார் மீது வழக்கு தொடர அமெரிக்க போலீசார் ஆர்வமாக உள்ளனர். அவனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாக்., அரசிடம் கோரினர். ஆனால், அசார் கடத்தல்காரன் அல்ல எனக் கூறி அமெரிக்காவின் கோரிக்கையை பாக்., அரசு நிராகரித்து விட்டது.
இதற்கிடையில், லஷ்கர்-இ-தொய்பா உட்பட தடை செய் யப்பட்ட பயங்கரவாத அமைப் புகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடரும். "எதிர்பார்க்கும் முடிவு' எட்டப்படும் வரை, பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவர் என, பாக்., ராணுவம் அறிவித்துள்ளது. "நாடு முழுவதும் இந்த வேட்டை தொடரும். எவ்வளவு நாட்களுக்கு இந்த வேட்டை தொடரும்' என, உறுதியாகக் கூற முடியாது என, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தியா வருகிறது பாகிஸ்தான் குழு: மும்பை தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி தலைமையிலான உயர்மட்டக் குழு இந்தியாவுக்கு வருகிறது. ஆதாரங்களை திரட்டுவது மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதில், இந்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இக்குழுவினர் வருகின்றனர். பாக்., பிரதமரின் ஆலோசகர் முகமது அலி துரானியும் குழுவில் இடம் பெறுகிறார். குழுவினர் இந்தியா வரும் தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியது : அஜ்மல் அமீர் இமான் ஒப்புதல்
மும்பை தாக்கதலுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியதாக பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் இமான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். நவம்பர் 20ம் தேதி அல் ஹீசைன் கப்பல் மூலம் கிளம்பிய தீவிரவாதிகள் பாகிஸ்தான் கடல் எல்லையில் குபேர் படகை கடத்தியுள்ளனர். பின்னர் இந்திய படகு குபேரை பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் கடத்தி செல்ல பாகிஸ்தான் கடற்படை உதவியதாகவும், இதன் காரணமாகத்தான் தாங்கள் ஆயுதங்களுடன் கராச்சி வழியாக இரண்டு தினங்களில் இந்தியா வர முடிந்ததாகவும் அமீர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் தான் ஒரு பாகிஸ்தானி என்று அமீர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறான்.
அமெரிக்கா வலியுறுத்தல் :
இதற்கிடையில் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா , மும்பை தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் மும்பை தாக்குதல் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முஷாரப் மறுப்பு :
இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை தூண்டியது இல்லை என அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷராப் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : பாகிஸ்தான் உலகில் எந்த பகுதியிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது கிடையாது ஆனால் எப்போதும் பாகிஸ்தான் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தீவிரவாதத்தையோ, தீவிரவாதிகளையோ பாகிஸ்தான் ஆதரிரத்ததில்லை. தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எப்படி தீவிரவாதத்தை தூண்டி விடும். இவ்வாறு முஷாரப் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
மொபைல் போனுக்கு செலவிடும் பணத்தால் 10 சந்திரயான் தயாரிக்கலாம் * விஞ்ஞானி அண்ணாதுரை பேச்சு
இந்தியாவிலுள்ள 50 கோடி மக்கள், மொபைல் போனுக்கு மாதம் செலவிடும் பணத்தைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலம் தயாரிக்க முடியும்,'' என விஞ்ஞானி அண்ணாதுரை பேசினார்.கோவை பாரதியார் பல்கலையில், "சந்திரயான் -1' திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:நிலவில் உள்ள தட்ப வெப்பநிலை மாற்றம், விண்கலங்களை பாதிக்கவே செய்யும். தற்போது சந்திரயான் - 1 விண்கலம், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலத்தை பயன்படுத்தி நிலவில் ஆய்வு நடத்தப்படுகிறது. "சந்திரயான் - 2' விண்கலம், நிலவில் உள்ள நீர் வளம், கனிம வளத்தைக் கண்டறிவதற்கான ஆய்வை நடத்தும்.நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலத்தை செலுத்தியுள்ளதால், இந்தியாவிலேயே, செயற்கைகோளை தயாரித்து, விண்வெளியில் செலுத்தி தரும்படி, பல நாடுகள் கோரி வருகின்றன. இனி, வணிக ரீதியாகவும் அதிக நன்மைகளை விண்வெளி ஆய்வு மையம் பெறும்.இந்தியாவில், 30 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.
அடுத்த இரு ஆண்டுகளில், இதன் எண்ணிக்கை 50 கோடியாக உயரும். இவர்கள், மொபைல் போனுக்கு மாதம் சராசரியாக 200 ரூபாய் செலவழிப்பர். இந்த மக்கள், ஒரு மாதத்துக்கு மொபைல் போனுக்கு செலவழிக்கும் தொகையைக் கொண்டு 10 சந்திரயான் விண்கலங்களை உருவாக்க முடியும்.விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டில் மீத்தேன் வாயு, மிகக்குறைந்த அளவே எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயுவை முழுமையாக பயன்படுத்த முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.
கூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
கூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது.மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், "இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது:வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்கபலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
உடனிருந்த அதிபர் மெட்வேதவ், "இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார்.இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.
Labels: அரசியல்
அ.தி.மு.க,வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி : பிரகாஷ்காரத் - ஜெயலலிதா சந்திப்பில் முடிவு.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து கொள்வது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில், பிரகாஷ் காரத் ஜெயலலிதாவுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரகாஷ் காரத் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பியூரா உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் பரதன் , மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாண்டியன் ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நேற்று அ.தி.மு.க., வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. லோக்சபா தேர்தலுக்கு அ.தி.மு.க., சுறுசுறுப்பாக ஆயத்தமாகி வருகிறது.
Labels: அரசியல்
மும்பை சம்பவத்துக்கு பாக்., பின்னணிக்கு ஆதாரம் சிக்கியது! * உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., தொடர்பு அம்பலம்
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான் இது என்பதும் அம்பலமாகியுள்ளது.கடந்த புதனன்று, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 183 பேர் பலியாகினர். 60 மணி நேரம் வரை சண்டையிட்டு, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரே ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையில் தினமும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
பயிற்சி அளித்தவர்கள் யார்: இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான், இந்த பயங்கர தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், எந்த இடத்தில் பயிற்சி நடைபெற்றது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளன.இதே போல், அமெரிக்க அரசும் மேலும் பல ஆதாரங்களை திரட்டியுள்ளது. அவை விரைவில் இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:
அமெரிக்க படைகளின் தலைமை தளபதி மைக் முல்லன் நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள், தங்களிடம் நிறையவே உள்ளன என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த பாக்., ராணுவ அதிகாரிகள், "மும்பை தாக்குதலில் ராணுவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. அது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் வேலையாக இருக்கலாம்' என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளனர்.மும்பை தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும், மற்றவகை உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், லஷ்கர் -இ- தொய்பா அமைப்பு தற்போது, ஜமாயத் -உத் -தவா என்ற பெயரில் செயல்படுகிறது. அந்த அமைப்புக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதால், அதன் தலைவரான ஹபீஸ் முகமது சயீதுவை கைது செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்கா நம்பிக்கை : இதற்கிடையில், அதிபர் புஷ்ஷின் உத்தரவின் பேரில், இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ், நேற்று பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோரை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடர்வது என, பாகிஸ்தான் உறுதி மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதனால், மும்பை தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் நிச்சயம் விசாரணை நடத்தும். அதைச் செய்யும் என அமெரிக்கா நம்புகிறது.மும்பை தாக்குதல் விவகாரத்தை கையாள்வதில் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பு குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் நான் பேசினேன். மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை ஒரு களமாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
பயங்கரவாத விஷயத்தில், பாகிஸ்தான் தன் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்துள்ளது. எனவே, தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்கும்.மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பாக, இந்தியாவுக்கு எந்த விதமான உதவியையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. மும்பையில் நடந்தது போன்ற தாக்குதலை, இதற்கு முன் இந்த துணைக் கண்டம் கண்டதில்லை.இவ்வாறு காண்டலிசா ரைஸ் கூறினார்.அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களுக்கு "விசா ' தரும் நடைமுறையில் புதிய விண்ணப்பம், மற்றும் அணுகுமுறைகளை மத்திய அரசு நேற்று மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இதனால், "விசா' பெறுவது இனி சுலபமாக இருக்காது.
Labels: அரசியல்
நடிகர் பிரபுதேவா மகன் விஷால் மரணம்
நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் மகன் விஷால் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 13.
காதலன், இந்து, லவ்பேர்ட்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ள பிரபுதேவா, லதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பிரபுதேவா-லதா தம்பதியினருக்கு விஷால், ரிஷி, ராகவேந்திரா, ஆதித்தேவா என 4 மகன்கள் உள்ளனர்.
இதில் விஷாலுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த விஷால், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபுதேவா வீட்டில், விஷாலின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விஜய், பிரகாஷ் ராஜ், ஆனந்த்ராஜ், ஸ்ரீமன், அருண்பாண்டியன், ராதாரவி, நடிகை குஷ்பு மற்றும் திரையுலகை சேர்ந்த நட்சத்திரஙகள் விஷாலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த விஷாலின் உடல் இன்று மாலை ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு., பெசன்ட் நகரில் அடக்கம் செய்யப்படுகிறது
மும்பை பற்றி எரிந்தபோது பார்ட்டிக்குப் போன ராகுல் காந்தி
மும்பையில் தீவிரவாதிகளுடன் கமாண்டோப் படையினர் போராடிக் கொண்டிருந்தபோது, நாடே பதைபதைப்புடன் அந்தப் போராட்டத்தை டிவிகள் மூலம் பார்த்துக் கொண்டிருந்தபோது, டெல்லி புறநகர்ப் பகுதியில் தனது நண்பர் கொடுத்த ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டு ஜாலியாக இருந்திருக்கிறார் ராகுல் காந்தி.
நாடே அதிர்ந்து போயிருந்த நேரத்தில் ராகுல்காந்தி இப்படி பார்ட்டிக்குப் போனது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு தொடங்கிய இந்த விருந்து அதிகாலை வரை நீடித்துள்ளது. இரவு முழுக்க பார்ட்டியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. ராஜீவ் காந்தியின் தோழரும், குடும்ப நண்பருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் மகன் சமீர் சர்மா.
சமீரும், ராகுலும் சிறு வயது முதலே தோழர்கள். சமீருக்குக் கல்யாணம் ஆகப் போகிறது. இதையொட்டி, அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணிந் சகோதரி லீனா முசாபிர் கொடுத்த விருந்துதான் இது.
டெல்லி அருகே உள்ள ராதே மோகன் செளக் என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான பண்ணை இல்லத்தில் இந்த பார்ட்டி நடந்தது. கிட்டத்தட்ட 800 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். மிக மிக ஆடம்பரமாக பார்ட்டி நடந்துள்ளது.
மும்பையில் அப்பாவி மக்களைக் காப்பாற்ற தீவிரவாதிகளுடன் கமாண்டோக்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த நிலையில், ராகுல் காந்தி ஆடம்பர விருந்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராகுல் காந்தி பார்ட்டிக்குப் போனது குறித்து அஜய் பால் என்பவர் இப்படிக் கூறுகிறார் - மும்பை முழுவதும் ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகளில் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விட்டனர். மற்ற இடங்களில் ஆடம்பரமின்றி எளிமையான முறையில் நிகழ்ச்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன
ஆனால் ராகுல்காந்தி பார்ட்டியில் கலந்து கொண்டு சந்தோஷமாக இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் எதிர்காலத் தலைவர்கள் மீதான எங்களது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் அமைந்து விட்டது என்கிறார் பால். பால், ஓபராய் ஹோட்டலில் சிக்கி, ஹோட்டல் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டு உயிர் மீண்ட அப்பாவிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
Labels: அரசியல்
நடக்காதென்பார் நடந்துவிடும்!

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அது நடந்திருக்கிறது. நாளிதழ்களில் எல்லாம் வெளியாகியுள்ள இணைந்த குடும்பத்தினருடன் கலைஞர் சிரித்துக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்துக்குப் பின் ஒரு நீண்ட கதையே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் செல்வி அனுமதிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, அழகிரி குடும்பத்துக்கும் செல்வி குடும்பத்துக்கும் முற்றிலுமாகப் பேச்சுவார்த்தை கிடையாதாம். ஆனால், அண்மையில் உடல்நலக் குறைவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கலைஞரின் மகள் செல்வியும் அழகிரியின் மகள் கயல்விழியும்தான் உடனிருந்து கவனித்துக் கொண்டனராம். அப்போது கயல்விழியின் மகன் இதயாதான் செல்வியுடன் பேசி இணக்கமான சூழலை ஏற்படுத்தினாராம். தொடக்கத்தில் இருவர் மட்டுமே பேசத்தொடங்கினாலும் பின்னர் விவரங்களை இருதரப்புக்குமே பாஸ் செய்திருக்கின்றனர். முதலில் தயங்கினாலும் பின்னர் அவர்களும் காது கொடுத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, கலைஞர் எழுதிய கடிதத்துக்கு கலாநிதி மாறன் பதிலெழுதிய இரண்டு நாட்களில் கலைஞருடன் ஸ்டாலின் - அழகிரி, கலாநிதி - தயாநிதி சகோதரர்கள் சந்தித்துப் பேசியதாகவும்கூட ஒரு தகவல். இந்தச் சந்திப்பின்போது, மனவருத்தத்தில் ஏதோ கடுமையாகச் சொல்லிவிட்டு எழுந்துசென்றுவிட்டாராம் கலாநிதி மாறன். தொடர்ந்த சமாதான முயற்சிகளின் பலனாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியளவில் சென்னையிலுள்ள செல்வியின் மகள் எழிலரசியின் வீட்டில் ஸ்டாலின், அழகிரி, ஸ்டாலின் மனைவி துர்கா, அழகிரியின் மகள் கயல்விழி, செல்வி - செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினராம். சிறிதுநேரம் கழித்து கலா - தயா சகோதரர்கள் வந்து சேர்ந்துகொண்டனராம்.
கரம் பற்றி...
இந்தச் சந்திப்பின்போது, `மாமா, நாங்கள் சின்னவர்கள்தானே' என்று அழகிரியின் கைகளைப் பற்றிக் கொண்டு கலா-தயா சகோதரர்கள் மன்னிப்புக் கேட்டார்களாம். `நம் குடும்பம் மிகவும் முக்கியம். கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். தேர்தலில் வலு இருந்தால்தான் வெல்ல முடியும். இல்லாவிட்டால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்களோ ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் என ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள்...' என்று குறிப்பிட்டாராம் அழகிரி. `உடனே குறைத்தால் நன்றாக இருக்காது. படிப்படியாகக் குறைத்துவிடுகிறோம்' என்றனராம் சகோதரர்கள். `சீக்கிரமாக' என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினாராம் அழகிரி. இதையடுத்து, `தந்தையிடமும் பேசிவிடுவோம்' என்று ஸ்டாலின் தெரிவித்தாராம்.
தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலையில் கோபாலபுரத்தில் கலைஞரை மகன்களும் பேரன்களும் சந்தித்து விரிவாகப் பேசி, பல விஷயங்களை முடிவு செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதியம் எழிலரசி - டாக்டர் ஜோதிமணி தம்பதிக்கு கயல்விழி வீட்டில் விருந்தும் நடைபெற்றதாம். இந்த விருந்தில் வேறு யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என உறுதியாகத் தெரிய வரவில்லை.
பிற்பகலில் கலாநிதி, தயாநிதி இருவரும் செல்வி வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே அழகிரியும் அங்கே வந்து இருந்திருக்கிறார். பின்னர், அனைவருமாக மாலை 4.40 மணிக்கு கோபாலபுரம் சென்றனர். கீழே தயாளு அம்மாளுடன் பத்து நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர், மாடியில் இருந்த கலைஞரைச் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினராம். இந்தச் சந்திப்பில் கலைஞரின் காலில் விழுந்து கலா-தயா சகோதரர்கள் மன்னிப்புக் கேட்டதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதற்குப் பிறகு கலைஞர் இருந்த உற்சாக மனநிலை, தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்ததுதானே!
முதலில் கலைஞர், அனைவருடனும் கோபாலபுரத்தில்தான் நிருபர்களைச் சந்திப்பதாக இருந்தது. இடப்பற்றாக்குறை காரணமாகக் கூறப்பட, அறிவாலயத்தில் பிரஸ்மீட் என்று தெரிவிக்க, செய்தியாளர்கள் அங்கே சென்றபோது, கலைஞர் மட்டுமே பேட்டியளிக்க வந்தார். மாமாக்களும் மருமகன்களும் விரைவில் வருவார்கள் என்று கூறப்பட்டபோதிலும் வரவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் ஒரே காரில் சி.ஐ.டி. காலனியிலுள்ள கனிமொழி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். கோபாலபுரம் சந்திப்பின்போது, டெல்லி செல்வதற்காகப் புறப்பட்டு விமான நிலையம் சென்றுவிட்டிருந்த கனிமொழிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாராம் கனிமொழி. தேநீருக்குப் பின்னர் நால்வரும் போட் கிளப்பிலுள்ள தயாநிதியின் வீட்டுக்கும் கலாநிதியின் வீட்டுக்கும் சென்றுவிட்டு கோபாலபுரத்துக்கே திரும்பியிருக்கின்றனர்.
ஆளுக்கொரு பதிலைச் சொல்லி அநாவசியமாகக் குழப்பிவிடக் கூடாதே என்றுதான் அனைவரையும் அனுப்பிவிட்டு கலைஞர் மட்டும் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தாராம். பதில்களையும்கூட மிகவும் எச்சரிக்கையாகவும் ஜாலியாகவுமே கூறி முடித்துக் கொண்டார் அவர்.
பின்னணி!
கலா-தயா சகோதரர்கள் நடத்தும் நாளிதழ்கள் மிக அதிகமாக விற்பதாகக் கூறப்பட்டபோதிலும் இழப்பும் அதிகமாம். இதேபோல, மாநிலத்தில் பரவலாக எஸ்.சி.வி. இணைப்புகளுக்குச் சரிவரக் கட்டணங்களையும் வசூலிக்க முடிவதில்லையாம். எப்படியிருந்தாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் வரத்தானே போகிறது என்று நினைக்கிறார்களாம் கேபிள்காரர்கள். இந்த வகையில் சில நூறு கோடிகள் பாக்கியிருக்கிறதாம். டி.டி.எச். சேவைக்காகவும் சில நூறு கோடிகள் முடக்கப்பட்டு வருமானமின்றிக் கிடக்கிறதாம். ஏதாவது ஒரே செலவாகச் செய்துவிட்டால், தொழிலில் பாதிப்பின்றி இடைவிடாமல் வருவாய் தொடர்ந்துகொண்டிருக்கும் என்று நினைத்தார்களாம் சகோதரர்கள்.
உடன்பாட்டின் அம்சங்கள்!
சன் டி.வி. பங்கில் மீண்டும் ஒரு தொகையைத் தர சகோதரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனராம்.
- கலைஞர் டி.வி.யை இனி தமிழரசு பார்த்துக்கொள்வாராம்.
- அழகிரியின் மகன் அல்லது மகளுக்குக் கட்சியில் உயர் பதவி வழங்கப்படுமாம்.
- குடும்பம் ஒன்றாக இருந்தால் போதும். தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஸ்டாலின். இருந்தாலும் வாசன் துணை முதல்வர் ஆவார் என்கிற செய்தியை முறியடிக்கும் விதமாக விரைவில் ஸ்டாலின் துணை முதல்வராகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
- மதுரையில் தொடங்கப்பட்ட ராயல் கேபிள் விஷன் முடிவு பெறுமாம்.
நாளைய விளைவுகள்!
கலைஞர் டி.வி.யில் உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் விரைவில் கழற்றப்படுவாராம். மேலும் பலர் இந்தத் தொல்லைக்கு ஆட்படலாமாம்.
- நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எதுவும் புரியாமல், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என இருதரப்பிலும் பலர் ஆடிப்போயிருக்கிறார்களாம். மதுரையில் தயாநிதி மாறனுக்கு வேண்டியவரான ஒருவருக்கு மாரடைப்பு வராததுதான் மிச்சமாம்.
- சன் டி.வி., கலைஞர் டி.வி. போட்டியால் திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமைக்கு ஏராளமான விலை கிடைத்து வந்தது. இனி அது கிடைக்காதே என்பது திரைத்துறையினர் கவலை.
இனி சன் டி.வி.யில் ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட லைவ் கவரேஜ் படிப்படியாகக் குறைக்கப்படுமாம். பின்னர், ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிறுத்தப்படலாம் என்பதுதான் தகவல்.
சில கேள்விகள்!
சகோதரர்களின் கோபத்துக்குள்ளான அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் என்ன செய்வார்கள்? எவ்வாறு சகோதரர்களை எதிர்கொள்வார்கள்?
- ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றிய செய்திகள் இனியும் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகுமா?
- ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி மீண்டும் தயாநிதி மாறனுக்கு வழங்கப்படுமா?
உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
என் பர்சை நீ பார்த்தாயா?”
”என் செல்போனை நீ எடுத்தாயா?” ஆகிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்டவர்களின் பதில்கள் இல்லை என்பதே. ஆனால், தொனி மற்றும் தோரணையை வைத்தே இல்லைகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆம்களை வெளியே கொண்டு வந்துவிடலாம்.
”நான் பெத்த பிள்ளையே இல்லை நீ; உனக்கு நான் அப்பனுமில்லை, நீ எனக்கு மகனுமில்லை” என்று மனம் வெறுத்துக் கத்துகிறார் ஓர் அப்பா. அவசரப்பட்டு இது ‘இல்லை’ இரகத்தைச் சேர்ந்தது என்கிற முடிவிற்கு எவரும் வந்துவிடவேண்டாம். இதற்குள் ஓர் ஆம் ஒளிந்து கிடக்கிறது.
தம் மகன் நன்றாக வரவேண்டும் என்கிற அக்கறையின் முரண்பாடான வெளிப்பாடே இது. நாம் விண்ணப்பம் விடுத்த எவ்வளவோ இடத்தில், தீர்மானமாக நமக்கு ‘இல்லை’கள் சொல்லப்பட்டு அவை ‘ஆம்’களாகியிருக்கின்றன.
கல்லூரியில் படிக்கும் மகன் செலவுக்குப் பணம் கேட்கிறான். ஆரம்பத்தில் அம்மாவிடமிருந்து இல்லைதான் பதிலாக வருகிறது. புறப்படும்போது, ”உன் தொந்தரவு தாங்கலை! இந்தா வச்சுக்கோ! நல்ல செலவாப் பண்ணு!” என்று அதுவே ஆமாக அரைமணி நேரத்திற்குள் உருமாறுகிறது.
”மாப்பிள்ளை மோட்டார் சைக்கிள் கேக்கிறார்ப்பா. பஸ் ஸ்டாண்ட்ல காத்துக் கிடந்தே நேரம் வீணாப் போகுதப்பா. சீக்கிரமே போயிடறார். ராத்திரி லேட்டா வர்றார். புள்ளைங்க ரெண்டு நேரமும் தூங்கிடுதுங்க. எங்களோட அவர் இருக்கிற நேரமே குறைச்சல்தாம்பா” என்று சிணுங்கும் மகளுக்கு அப்பா முதலில் சொல்வது இல்லைதான்.
”எப்படிம்மா முடியும்? நான் எங்கம்மா போவேன்? கல்யாணத்துக்கு முன்ன வாங்கின கடனே கழுத்தை அழுத்துது” என்ற அதே அப்பா எப்படியோ மாப்பிள்ளைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்து விடுகிறாரே!
ஆம்! பாசத்திற்கு இல்லைகளை ஆம்களாக மாற்றும் ஆற்றல் உண்டு. ஆனால், தொடர்ந்து ‘இல்லை’தான் என்பது பதிலாக இருப்பின் அந்த இல்லைகள் ஆராயப்பட வேண்டும்.
இந்த வழியில் நீ வந்ததால் இல்லை. இந்நபர் மூலம் அணுகியதால் இல்லை. நேரமற்ற நேரத்தில் சூழ்நிலை புரியாமல் கேட்டதால் இல்லை போன்ற பதில்கள் வெளிவரும்.
‘இல்லை’களை எப்போதுமே நிரந்தரமாக அடைக்கப்பட்ட கதவுகளாகக் கருதக்கூடாது. தட்டும் நேரம்; தட்டப்பயன்படுத்தும் கருவி; தட்டப்படும் சூழல் ஆகியவை சாதகமாக இருக்கின்றனவா என உன்னிப்பாகக் கவனித்து அனைத்தையும் சாதகமாக்கிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டுமே தவிர, ஒப்புக்குத் தட்டிவிட்டு ‘இல்லை’களை வாங்கிக்கொண்டு வெளியேறி விடக்கூடாது
இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
‘நற்சொல் சொல்லிக் கண்டிப்பதாவது? இது சாத்தியமில்லாத ஒன்று. காரசாரமாகவும் கடுமையாகவும் திட்டினால் அதற்குப் பெயர்தான் கண்டிப்பு’ என்று வாதிடுபவர்கள், இக்கட்டுரையின் இறுதியிலும் விடாப்பிடியாகச் சொல்லமுடியுமா என்று பாருங்கள்.
“ரொம்ப நல்லா இருக்கு நீ பண்றது” என்கிற பாராட்டு வாக்கியத்தை ரொம்ப என்பதை அழுத்தி, குரலில் பாராட்டு - உற்சாகத் தொனி வந்துவிடாமல் சொல்லிப் பாருங்கள். நீ பண்றது ரொம்பத் தப்பு என்கிற அர்த்தம் வந்துவிடும்.
வாக்கியம் என்னவோ ஒன்றுதான். தொனிதான் சுருதிக் குறைவான தொனி.
தேன் கலந்த மருந்தையே இந்த உலகம் விரும்புகிறது. கசப்பை அல்ல!
“நாங்க செஞ்ச நல்லதுக்கு நீ நல்லாவே திரும்ப செஞ்சிட்டே” என்பதில், நல்லாவே என்கிற வார்த்தையை தொனி மாற்றிப் பேசினால், சொல்ல வந்த பொருளே வேறு.
என்ன பேச்சு இது? என்கிற சொல்லில் எதிர்மறையான சொல் ஏதும் இல்லை. இந்த நல்ல வாக்கியத்தின் தொனியை மட்டும் மாற்றி ஒருவரை மென்மையாகக் கண்டிக்க முடியும்.
“மறக்கமுடியாதபடி பண்ணிட்டீங்க!” என்பதைப் பாராட்டாகவும் பயன்படுத்தலாம். குறை சொல்லவும் பயன்படுத்த முடியும்.
“உங்களை மாதிரியான ஆளை நான் இதுவரை பார்த்ததே இல்லை” ரொம்பத்தான் உழைச்சிட்டே!” ஆகிய பாராட்டுகளும் இந்த இரகத்தைச் சேர்ந்ததே!
கண்டிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் கண்டித்தே ஆகவேண்டும். எழுகிற உணர்வைக் கொட்டித்தான் ஆகவேண்டும். ஆனால், அப்படியே கொட்ட முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழலில் நம் உணர்வுகளை வெளிக்காட்ட இந்த நற்சொல்லால் கண்டிப்பது மிக உதவும்.
அது என்ன நற்சொல்லால் கண்டிப்பது? கடுமையாகவே திட்டிவிட்டுப் போகிறேன் என்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை.
இப்படிச் செய்தால் நமக்கு மேலும் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க இது சிறந்த வழி. அது மட்டுமல்ல, அவர் என்ன சொல்லிவிட்டார்? தப்பா ஒண்ணும் சொல்லலியே! உங்களை மாதிரியான ஆளை நான் பார்த்தது இல்லைன்னு தானே சொன்னார்? இதில் என்ன தப்பு இருக்கு என்று நமக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசவும் நான்கு பேர்கள் வேறு கிடைப்பார்கள்!
குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
“நல்லாத்தனர் பேசினீங்க. ஆனால் இரண்டு இடத்தில் பேச்சுக் குறிப்பை விட்டுட்டு, தேடிக் கண்டுபிடிக்க அதிகநேரம் எடுத்துகிட்டீங்க. கூட்டம் அதுக்குள்ள சலசலத்துவிட்டது” என்றார். மேடையிலிருந்து பேசிவிட்டு இறங்கியவரிடம் அவரது நண்பர்.
பாராட்டத்தான் நெருங்கி வருகிறார் என எதிர்பார்த்த பேச்சாளருக்கு ஏமாற்றம். “மேடையில் ஏறி நின்னு பேசிப் பாரு. அதில் உள்ள கஷ்டம் புரியும்” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு வேகமாக ன நகர்ந்துவிட்டார் அந்தச் பேச்சாளர். விமரிசித்த நண்பருக்கு ஏமாற்றம். நல்லதுக்குத்தானே சொன்னோம். இப்படித் தப்பா புரிஞ்சுக்கிட்டுப் பேசுறாரே! என்று ஒரு வழி ஆகிவிட்டார்.
‘நீங்க சொல்றது சரி, சரியாக் கண்டுபிடிச்சீங்க இனித் தவிர்க்கிறேன்’ என்று பதில் சொல்லியிருந்தால், முதலிலே சொன்னாரே. நல்லாத்தான் பேசினீங்க என்கிற பாராட்டைத் தலைப்புச் செய்தியாக இவர் எடுத்துக் கொண்டு மகிழ்ந்திருக்கலாம்.
நம் செயல்களில் உள்ள தவறுகளை ஏற்றக்கொள்கிறபோது அத்தவறின் வீரியத்தை நாம் அழகுறக் குறைத்துவிடுகிறோம் என்பதை ஏனோ பலர் உணர மறுக்கிறோம்.
குறை சொல்லவும் ஒரு தகுதி வேண்டும் என்பதும் பலரிடம் இருக்கும் தவறான எதிர்பார்ப்பு. ‘இவனிடம் ஆயிரம் ஓட்டைகள். இவன் எப்படி என்னைச் சொல்லலாம்’ என்று கோபப்படுவது வாதத்தின் அடிப்படையில் சரிதான். ஆனால் பலனின் அடிப்படையில் தவறு.
தோட்டத்துக் கத்தரிக்காயை எவரும் விமரிசிக்கமாட்டார்கள். கடைக்கு, விற்பனைக்கு வந்துவிட்டால் சொத்தை, பூச்சி என்று சொல்லத்தான் செய்வார்கள்.
குறைகளை ஒப்புக்கொண்டால் உலகம் அதைப் பெரிதுபடுத்தாது. மறுத்தாலோ, சாக்குப்போக்குச் சொன்னாலோ அதைக் கெளரவப் பிரச்னையாக்கிவிடும்.
நம் முத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதே என்பதும் பலரது கோபத்திற்குக் காரணம், யானைக்கும் அடிசறுக்கும் என்கிற விதியை ஏற்கவேண்டியதுதான்.
பிறர் நகைக்க இடமாகிவிட்டதே என்பதும் சிலரது கோபம். திருஷ்டி கழியும் என்று நம்ப ஆரம்பித்து நல்ல ஆறுதல்.
100 சதவிகித முழுமையை இவ்வுலகம் எப்படி எதிர்பார்க்கலாம் என்பதும் சிலரது கோபம். அதில் நமக்கு நன்மை இருக்கிறதே!
குறை சொல்பவர்கள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டுகிறார்கள். காட்டிவிட்டுப் போகட்டுமே! இதற்குச் சலுகை கொடுங்கள். கோபப்படாதீர்கள்
சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
நமக்காகப் பிறர் செலவு செய்தால் நமக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ‘ஆஹா எவ்வளவு நல்ல மனசு!’ என்று பாராட்டத் தோன்றுகிறது.
ஆனால், செலவழித்தவருக்கோ ‘இவ்வளவு செலவழித்தோமே, நானும் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சொல்ல மனம் இல்லையே என்று வருத்தமடைகிறது.
செலவு செய்பவருக்கு அதில் மகிழ்ச்சிதானா என்று நாம் உறுதிப்படுத்திக் கொண்டால்தான் நம் மகிழ்ச்சியில் முழுமையோ பொருளோ இருக்க முடியும்.
நமக்கு அதைப் பகிர்ந்து கொள்ள மனம் இல்லையாதலால், நாம் அதுபற்றிக் கேட்டால் அவர் ரொம்ப வருத்தப்படுவார். அப்செட் ஆகிவிடுவார் என்று நமக்குச் சாதகமாகக் கற்பனை செய்து கொண்டு விடுகிறோம்.
கேட்டால் தவறாகிவிடும் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு வார்த்தை நாம் கேட்கும் விதமாகக் கேட்க வேண்டும்.
”உங்களுக்கு நிறையச் செலவு வைத்து விட்டேனோ என்று குற்ற உணர்வு இருக்கிறது. நீங்க தவறா எடுத்துகலைன்னா” என்று மெல்ல ஆரம்பித்து அவர்கள் உள்ளத்தில் இருப்பதை வெளிக் கொணர வேண்டும்.
”உங்க சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடாதுன்னு நீங்க செலவழிக்கிறபோது நானும் சும்மா இருந்துட்டேன். எனக்கு இந்த மாதிரியான சந்தோஷத்தை, வாயப்பைக் கொடுங்க” என்றும் அசத்தலாம். இதற்கு அவரால் சரிவரப் பதில் பேச முடியாது.
மாறாக, நாம் செலவழிப்போம்; அவராகக் கேட்கட்டும், பிறகு அவரிடம் வாங்கிக் கொள்வோம் என்று பெருந்தன்மையாக முன்வந்து செலவழித்தவரை நம் சுயநலத்திற்காகத் தண்டிப்பது சற்றும் நியாயமல்ல!
ஒரு வேளை எப்படி நீங்க அப்படிச் சொல்லப் போச்சு? என்று பொய்க் கோபம் காட்டினாலும், பின்னால் வேறிடமாவது சொல்வார். ”தர்றேன்னு மனப்பூர்வமாகச் சொன்னார். நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று.
நல்லுறவு தொடர இதுவே வழி!
பாதிப்புகளைப் பாதியாக்கலாம்!
தமிழகச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை ஒன்று தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு மட்டும் 11,000 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளது.
2007 ஆம் ஆண்டு இதைவிட 10 சதவிகிதம் அதிகம் இருந்திருக்கும் என்கிறது.
இந்த உயிரிழப்புகள் குறைய வேண்டுமானால் இவ்விபத்துகளை ஆய்வுக் கோணத்தில் அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனலாம்.
ஒவ்வொரு சாலை உயிரிழப்பும் காரணம் அறியப்பட்டு அந்தந்தக் காவல்துறை அதிகாரிகளால் இதைத் தவிர்க்கவோ குறைக்கவோ என்ன செய்யலாம் என்று அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லலாம்.
மேலைநாடுகளில் அனைத்து விபத்துகளையும் கவனக் குறைவுகளின் கீழ் அடக்கி கோப்பைக் கட்டிப் பரணில் போட்டுவிடாமல் நன்கு ஆராய்கிறார்கள்.
வருங்காலத்தில் நடக்காதிருக்க என்ன செய்யலாம் என்று தொடர்புடைய துறை அதிகாரிகளை அழைத்து விவாதிக்கிறார்கள்.
தீர்வுகளை, ஆலோசனைகளைச் சமர்ப்பித்து, உயிரிழப்புகளைத் தடுக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.
இங்கோ உயிர்களின் விலை மிக மலிவு. ஓட்டுநர் உரிமங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. போதுமான காவல்துறை அதிகாரிகள் இல்லாமை; பழுதடைந்த சாலைகள்; போக்குவரத்துக் காவல்துறையில் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை உள்ள கையூட்டுகள்; குடிப்பழக்கத்திற்கு இங்கு விதிக்கப்படும் எளிமையான தண்டனைகள் என இன்னும் பல காரணங்களால் சாலை விபத்துகளின் எண்ணிக்கைகள், வாகனங்களின் எண்ணிக்கைகளைப் போலவே கட்டுபாடு இல்லாமல் பெருகி வருகின்றன.
சென்னைப் புறநகரில் மட்டும் நாள் ஒன்றிற்கு 2000 வாகனங்கள் சாலையில் இறங்குகின்றனவாம்.
இவையெல்லாம் எங்கு போய் முடியும்?
பாகிஸ்தானியச் சிறையில் சிக்கிக் கொண்ட ஓர் இந்தியருக்காகப் பிரதமர் உட்பட மெனக்கெடுகிறார். இவராவது தீவிரவாதக் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருப்பவர்.
ஆனால் தமிழகத்தில் இறக்கும் ஆயிரமாயிரம் உயிர்கள் என்ன பாவம் செய்தன?
சம்பந்தப்பட்ட பல்துறைகளும் கைகோர்த்தால் வரும் வருடமே, குறைந்தபட்சம் உயிரிழப்புகளைப் பாதியாக்கிவிட முடியும்.
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
நமது வயது, தோற்றம் முதலியவற்றிற்கு ஏற்ப உடை அணிகிறோம். சிலர் ராசி, எண் கணிதம், முதலியவற்றிற்கு ஏற்ப உடையணிகிறார்கள்.
ஆனால், புதிதாக எழுந்துள்ள ஒரு வாதமே நோய்களுக்கு ஏற்ப உடையணிந்தால், ஆரோக்கியம் நீடிக்கும் என்பதுதான். நோய்கள் குணமாகும். பிரச்னைகள் தீர்ந்து எழுச்சி பெற்று உழைத்து வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இதனால்தான் வண்ண சிகிச்சை முறையும், கிரிஸ்டல் சிகிச்சை முறையும் பலரது நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன.
நவரத்தினக் கற்கள் உள்ள மோதிரங்கள் அணிவது, இந்த நிறங்கள் உடலில் செல்ல எளிதாக இருக்கிறது என்பதால்தான்.
இதேபோல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை, டர்க்யூஸ் (Turcuoise) நீலம், கருநீலம், வைலட் (செந்நீலம்), பர்ப்பிள் (கருஞ்சிவப்பு), ஸ்கார்லெட் (இளஞ்சிவப்பு) இந்த நிறங்களில் உங்களுக்குரிய நிறத்தில் உடைகளைத் தேர்வு செய்து அணியலாம்.
வயலட் நிறம் உள்ள அறையில் ஒருவர் இருந்தால், அவரது இதயம் சீராகத் துடிக்கும். இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு வேகவேகமாக இருந்தால் இதைச் சரி செய்யும். இந்த நிறச்சட்டை அணிந்தால், உடலில் இந்த ஒலி அலைகள் படுவதால், இதயம் சீராக இயங்கும். ஒவ்வோர் வண்ணத்திற்கும் ஒலி அதிர்வுகள் உள்ளன. இவை உடலில் மாறுபாட்டை உண்டாக்குகின்றன.
ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.
சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.
ஆரஞ்சு நிற உடைகள் நுரையீரல்களையும், மூச்சுக் குழாய்களையும் வலுப்படுத்தும். கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி, வயிறு முதலியன சீராகச் செயல்படவும், சுளுக்கு, தசைபிடிப்பு போன்றவை அகலவும் எலும்புகள் பலமுடன் இருக்கவும் உதவும்.
பச்சை நிறம் நோய் நுண்மக்கொல்லி மருந்து போல் செயல்படுகிறது. இந்த நிற உடையணிந்தால் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்கும். பெருமூளையை உடல் நலனுக்கு ஏற்பச் சமன் செய்து வைத்திருக்கும். பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக இயங்க இந்தப் பச்சை நிறம் உதவும். அறிவுத் தெளிவு உண்டாகும்.
காய்ச்சலைக் குறைப்பதில் நீல நிற உடை வேகமாகச் செயல்படும். எரிச்சல், கோபம், உடலில் சொறி, சிரங்கு, நமைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நிறம் உதவும். ஞாபக சக்தியை அதகரிக்கும். ஒற்றுமையை அதிகரிக்கும். மருந்தைப் போல மனதிற்கும் உடலுக்கும் அமைதியும் நலமும் தரும் நிறம் இது.
தசைவலி, காய்ச்சல் முதலியவை குறையவும், முதுகுத் தண்டும், வெள்ளை இரத்த அணுக்கள் செயல் துடிப்புடன் இயங்கவும் வயலட் (செந்நீலம்) நிற உடை உதவும். கடும் காய்ச்சல், முதுகு வலி முதலியவை குணமாக இந்த நிற உடை நல்லது.
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவும், இதயம் சீராக இயங்கவும், சிறு நீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் விரைந்து குணமாகவும் கருஞ்சிவப்பு (Purple) நிற உடைகள் உதவும். தியானம் செய்பவர்கள் இந்த நிறத்தை மனதில் கற்பனை செய்து கொண்டால், வேறு எந்த ஒரு எண்ணமும் குறுக்கிடாது.
கோபத்தை மிகச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தம் உயராமல் இருக்கவும், அடரீனல் சுரப்பி, சிறு நீரகங்கள், உயிரணுக்களின் உற்பத்தி முதலியவை சிறப்பாக இயங்கவும் இளஞ்சிவப்பு நிறத்தைச் சேர்ந்த உடைகள் நல்லது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை பிறக்கும் வரை, மற்ற சிகிச்சை முறைகளுடன் மேற்கண்ட இளஞ்சிவப்பு ரோஸ் நிற உடைகள் சீருடைபோல் தினமும் அணிய நல்ல பலனைத் தரும்.
கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவத
விஜயகாந்திற்குச் சொந்தமான மதுராந்தக நிலத்தைப் பொறுத்த வரை, இதனை ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கருத முடியவில்லை.
விஜயகாந்த், ஹேமலதாவிற்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் அரசுக்குச் சொந்தமானது என்பது ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிடுகிறது.
நில ஆக்கிரமிப்பைத் தெளிவுபடுத்தி, அதைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு வேண்டுகோள் செவி சாய்க்கபடவில்லை என்பது அடுத்தகட்ட ஏமாற்றமிகு செய்தி.
மாறாக அப்படி ஏதும் தவறு நிகழவில்லை என்கிற பதிலும் விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான தகவலாக இருந்திருந்தால் இந்நேரம் நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு வாங்கியிருக்க வேண்டும்.
இது சாத்தியமாகாமல் போனதால் பொக்லைன்களும், கடப்பாரைகளும் கேப்டன் நிலத்திற்குள் நுழைய ஏதுவாகிவிட்டது.
மின்வேலி அமைப்பது என்பது காட்டு மிருகங்கள் நடமாடும் பகுதிக்குப் பொருந்தலாம். ஆனால் மதுராந்தகம் பகுதிக்கு இது அவசியமற்றது. அதிலும் ஒரு கட்டாந்தரைபோல் காட்சியளிக்கும் வெட்டவெளிக்கு நிச்சயம் தேவையில்லை. இந்த மின்வேலியில் பட்டு ஆடு மாடுகள் இறந்துவிட்டன என்கிற குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதை ஆபத்தில்லாத 110 வோல்ட் மின்சாரமாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அதிகாரிகள் பண்ணைக்குள் நுழைய முயன்றபோது பண்ணை மேலாளர் இதற்கு மறுப்புத் தெரிவித்து வாயிலைத் திறக்க மறுத்திருக்கிறார். அரசு உத்தரவுக்கு விஜயகாந்த் நிர்வாகம் கட்டுப்படாதது ஏன் என்பது கேள்வி.
நினைத்ததை முடிப்போம் என்று உள்ளே நுழைந்த அரசு அதிகாரிகள் எல்லைகளை அளந்து புதிய எல்லைகளை வரையறுத்தார்கள்.
முள்ளி ஓடைப் புறம்போக்கில் விஜயகாந்த் கட்டியிருந்த பல இலட்சம் மதிப்புள்ள பாலம் இடிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாழ்வில் ஈடுபடுகிறவர்களின் புகழை, இத்தகைய செயல்பாடுகள் நிச்சயம் குறைக்கும்.
‘அரசு இடத்தை ஆக்கிரமிக்கிறவர் வேறு என்ன செய்யத் துணிய மாட்டார்’ என்கிற பேச்சிற்கும் இச்செயல் இடம் தந்துவிடும்.
ரஜினியின் திருவள்ளூர் இடம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டது என்று புகார் எழுந்தது. ஆனால் இல்லை என்பது தெளிவுபட நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டும் உண்மையாக இருந்திருந்தால், ரஜினியின் புகழ் நிச்சயம் சரிந்திருக்கும். இவ்வளவு நியாயம் பேசுகிறவர் இப்படிச் செய்துவிட்டாரே என்கிற பேச்சிற்கு இடமாகியிருக்கும். ஆனால் எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது என்கிறார் அமைச்சர் சுரேஷ்ராஜன்.
உண்மையை நோக்கி நெருங்கி வரும் வேளையில் விஜயகாந்த் தவறு நடந்துவிட்டதை ஏற்று இது உள்நோக்கமுடையதல்ல என்று பெருந்தன்மையாக ஒப்புக் கொண்டிருந்தால்,
அரசுத் தரப்பிற்குத் தான் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும்.
தராசு முள் வேறு பக்கம் திரும்பியிருக்கும்.
விஜயகாந்த் ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டார் என்றே இப்போதைக்குத் தோன்றுகிறது
விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழக அரசியலின் புதிய விடிவெள்ளியான விஜயகாந்த் மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது.
இவரது பேச்சின் சில பகுதிகளை உங்களுக்கு அப்படியே தந்திருக்கிறேன்.
”கலைஞர் இன்றைக்குத் தன்னோட டி.வி.யில் என்ன சொல்றாரு? ‘தமிழர்களே… தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்துவிட மாட்டேன்’னு பேசறாரு… யோவ் நீ கவிழமாட்டே… மக்கள்தான் கவுந்து போவாங்க. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் தமிழ், தமிழர்கள்னு சொல்லி மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கப்போறே? நான்கு முறை முதல்வரா இருந்து கொள்ளையடிச்சது போதாதா? வயசான காலத்துலேயும் இன்னும் பதவிவெறி, பணவெறியோடு ஏன் அலையிறே? போகும்போது எல்லாத்தையும் கொண்டா போகப்போறே? செத்துட்டா இடுப்புல கட்டியிருக்கிற அரணாகயிறு கூட மிஞ்சாது.
‘மதுரை தினகரன் அலுவலகத்தில் நடந்த மூன்று கொலைக்குக் காரணம் உன் மகன் தானாமே?’ என்று டெல்லியில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட போது அவர் மீது கோபப்பட்டு எழுந்து போனே. ஏன்யா, உன் பிள்ளை உயிருன்னா உனக்கு அவ்வளவு முக்கியம். இங்கே நடுக்கடல்ல சாகுற மீனவர்கள்னா அவ்வளவு இளப்பமா?”- தம் ஆதரவாளர்களையே நெளிய வைக்கும் பேச்சு இது.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மத்தியில் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் பேசியிருந்தால் அதை யாரும் குறை சொல்லிவிட முடியாது.
ஆனால் இந்தப் பேச்சோ இரத்த நாளங்களைச் சூடேற்றுகிற பேச்சு.
இப்பேச்சு இவரது அரசியல் வெண்சட்டையில் வீசப்பட்ட அப்பட்டமான கறை என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
இந்தப் பேச்சினை ஆதாரமாகக் கொண்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இயலும். ஆனால் ஆட்சியில் இருப்பவர் கெட்டிக்காரர். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறது என்றால் அந்தப் பாதிப்பே போதும்; நாம் வேறு ஏன் கைது செய்து இவரை மேலும் பிரபலமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய புத்திசாலி.
அரசியலில் முதன்மை பெற எத்துணையோ வழிமுறைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது மேடைக் கண்ணியம்.
எம்.ஜி.ஆரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் விஜயகாந்த் எம்.ஜி.ஆரால் பேசப்பட்ட இப்படிப்பட்ட கண்ணியக் குறைவான பேச்சிற்கு ஒரு முனனுதாரணத்தையாவது காட்ட முடியுமா?
ஒரு 86 வயதுப் பெரியவரை ‘நீ’ ‘வா’ ‘போ’ என்று பேசுவது எந்த வகையில் சரி? அவரது மறைவைப் பற்றி விமரிசிப்பதையும் எப்படி நியாயப்படுத்த இயலும்.
மேலும் ”நடுக்கடலுக்குச் சென்று கடல் உள்ளிருப்புப் போராட்டம் ஒன்றைத் தொடங்குங்கள். உங்களோடு நானும் ஒரு படகில் ஏறி சாகும்வரை நடுக்கடலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தத் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசை மட்டும் அல்ல… இலங்கையை ஆளும் அராஜக ராஜபக்சே அரசையும் நம் போராட்டத்தால் ஸ்தம்பிக்க வைப்போம்” என்றும் விஜயகாந்த் பேசியுள்ளார்.
அது சரி, இலங்கை அரசை எப்படி ஸ்தம்பிக்கச் செய்யப் போகிறாராம்? நடுக்கடலில் முகாமிட்டுப் போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு ஸ்தம்பித்துவிடுமா? எப்படி?
விஜயகாந்த் அரசியலில் வெற்றி பெறவும், பக்குவப்படவும் இன்னும் வெகுகாலம் ஆகும் போலிருக்கிறது!
ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
தமிழுக்கு, தமிழருக்கு ஓர் ஊறு என்றால் அதுபற்றி முதல் குரல் கொடுப்பவர் நம் தமிழக முதல்வர் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
ஆனால் இலங்கைத் தமிழர் விஷயத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு விவாதத்திற்குரியது.
“யாருக்குப் பாதிப்பு வரும் யாருக்குப் பாதிப்பு வராது என்று நான் சிந்திக்கவில்லை” என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் தந்துள்ள வாக்கு மூலம் கூர்ந்து ஆராயத்தக்க ஒன்று. தம்மையறியாமல் கூறிய உண்மை இது எனலாம்.
இந்திய இறையான்மை என்பது இந்திய எல்லையோடு முடிந்துவிடக்கூடிய விஷயம். இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உள்ள வட்ட எல்லைக்குள் இந்தியா அவ்வளவு சுலபத்தில் தலையிட்டுவிட முடியாது.
இதை உணர்ந்துதான் நம் பிரதமர் மன்மோகன்சிங், தமிழகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா அறிவிப்பிற்கு, எதிர்பார்த்த அளவிற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் நிதானமாகவே செயல்பட்டு, “இலங்கை நிலவரம் எனக்குக் கவலை தருவதாக உள்ளது” என்று மட்டும் தம் அக்கறையைத் தெரிவித்திருக்கிறார்.
தங்கள் அறிவிப்பைக் கேட்டு மத்திய அரசு அலறும் என்று எதிர்பார்த்த தி.மு.க. கூடாரத்திற்கு இது பெரும் ஏமாற்றமளித்திருக்கும். இலங்கை அரசு நிகழ்த்துவது புலிகளுக்கு எதிரான யுத்தமே தவிர, அப்பாவித் தமிழர்களுக்கு எதிரதானதல்ல. அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்பு வளையமாகப் பயன்படுத்துபவர்கள் புலிகளே என்கிற ஜெயலலிதாவின் கருத்தும் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்கத்தக்கது.
தமிழகத்தின் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து, மத்திய அரசைக் கவிழ்ப்பதன் மூலமாக தி.மு.க. என்ன சாதிக்க நினைக்கிறது? அடுத்த தேர்தல் வருமுன் இலங்கைத் தமிழர் நலனைத் தட்டிக் கேட்க யார் பதவியில் இருப்பார்களாம்? குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபாபட்டீல் நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்ன அரசியல் கண்க்கீடு இது?
ஓர் அரசியல் சாணக்கியர் எடுத்த சறுக்கலான முடிவல்லவா இது! அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் இந்தியா எப்படித் தலையிட முடியும் என்கிற பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்குத் தமிழக முதல்வர், “பின் பங்களாதேஷ் எப்படித் தோன்றியதாம் என்று பதிலளித்திருப்பது சற்றும் பொருத்தமில்லை.”
கிழக்குப் பாகிஸ்தானின் (பங்களாதேஷ்) நிலைமைகள் முற்றிலும் வேறு. கிழக்கு பாகிஸ்தானை ஆண்ட முஜிபுர் ரகுமானே இந்தியாவைத் தலையிடுமாறு கேட்டுக் கொண்டதை உலகமே அறியும்.
இந்நிலையை எப்படி இலங்கை நிலையோடு ஒப்பிட முடியும்?
இதனால்தான் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகாமல் இந்தியா தப்பிப் பிழைத்தது. இது அந்நியத் தலையீடல்ல என்பதால்தான் இந்திராவும் உலக அளவில் சிறந்த தலைவியாக ஏற்றக் கொள்ளப்பட்டார்.
இலங்கைத் தமிழர் நலன் காக்கத் தமிழக முதல்வர் மத்திய அரசிடம் முன்வைக்கும் எந்த ஒரு கோரிக்கையும் அக்கறையுடன் கூடிய நல்ல நடவடிக்கையாகவே பாராட்டப் பெறும். ஆனால் இராஜினாமா என்கிற அச்சுறுத்தல் ஒட்டுமொத்த இந்திய நலன்களையே பாதித்துவிடக்கூடியது.
எந்த நோக்கத்திற்காக இதில் தி.மு.க. இறங்கியதோ அதுவும் நிறைவேறாமல் போய், இந்திய நலன்களும் பாதிக்கப்படுகிற ஒரு செயலை ஒரு தோழமைக் கட்சியா செய்வது? ஜீரணிக்கத்தான் முடியவில்லை.
புகையும் அடங்க வேண்டும்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கும் பிரிதொரு பிரிவினருக்கும் ஏற்பட இருந்த மோதல் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருப்பது ஆறுதலை அளிக்கிறது.
ஒரு சுவர் விஷயம்கூட முதல்வர்வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
1989 ஆம் ஆண்டில் இத்தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு 100 அடி நீளமுள்ள சுவர் ஒன்று எழுப்பப்பட்டது.
இதை ‘விலக்கி வைத்த’ குற்றச்சாட்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் முன்வைக்க பாதுகாப்புக் காரணங்களுக்காகவே சுவர் எழுப்பப்பட்டதாக மாற்றுத் தரப்பினர் கூற, பிரச்னை பெரிதானது. ஆட்சியர் ஜவஹர் கவனத்திற்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட, முதல்வரும் தலையிட்டு, சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு சிறு வழி அமைக்கப்பட்டுள்ளது.
இதைச் சுவர் எழுப்பிய தரப்பினர் எதிர்த்து ஊரைக் காலி செய்துவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தாழையூத்துப் பகுதிக்கு நகர்ந்துவிட்டனர்.
ஆனால், முதல்வர் சட்டசபையில் ஆண்கள் மட்டுமே புலம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தினமணியில் வெளியாகிவுள்ள ஒரு புகைப்படம் முதல்வர் தந்துள்ள தகவல் தவறானது என்று நிரூபிக்கும் வகையில் பெண்கள் சிறுபிள்ளைகளுடன் வெளியாகிவுள்ளது.
பிரச்னை தீர்ந்துவிட்டது போல் அரசுத் தரப்பு நினைத்தாலும் இதனை முழுமையாக ஏற்பதற்கில்லை.
இந்த நூற்றாண்டிலும் தீண்டாமை எனும் தீக்கரங்கள் பலரது மனத்தில் எவ்வளவு ஆழமான இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை இச்சம்பவம் சொல்லாமல் சொல்கிறது.
மீண்டும் சுவர் எழுப்பப்படும் வரை நாங்கள் ஊர் திரும்புவதாக இல்லை என்று இவர்கள் காட்டும் உறுதி அரசுக் கோப்பின் முடிச்சை மறுபடி அவிழ்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. நெருப்பு அடங்கிவிட்டது. புகை இன்னும் இருக்கிறதே? காட்டில் குடியேறியவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை உருவாக்குவதும் மனங்களில் ஊடுருவியுள்ள அழுக்கை அகற்றுவதும் இப்போது அரசுக்குள்ள இரு மாற்று வழிகள் என்று சொல்லலாம்.
அரசியல் கட்சிகளுக்கு ஆயிரம் கவனஈர்ப்புகள். என்னென்னவோ பேசி எதிலெதிலோ கட்சிகள் இப்பிரச்னையைப் பேசித் தீர்க்க முன்வரலாம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இங்கு முகாமிட்டு தங்களுக்கு ஆபத்து என்பது வீண் அச்சம் என்பதை விளக்கலாம். கசப்புணர்வுகளை வெளியேற்றிப் பழங்காயங்களுக்கு மருந்திடலாம்.
எதிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கும் கட்சிகளுக்கு ஒரு நற்காரியம் செய்ய நல்வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது
ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
இவர் மனத்தில் என்னதான் இருக்கிறது என்று ரஜினியைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் ஒரு நினைப்பு ஏற்பட்டபடி இருந்தது. இதற்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.
தம் இரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை இராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தையே இப்படிக் குறிப்பிடுகிறேன். ரஜினி பாணியிலேயே சொல்வது என்றால் லேட்டானாலும் லேட்டஸ்டாக வந்துவிட்டார்.
மனிதர் திருவாய் மட்டுமா மலர்ந்தருளினார்? உள்ளத்தையல்லவா திறந்து கொட்டிவிட்டார்.
இரசிகர்களைச் சந்திக்காமல் தவிர்த்து வந்த ரஜினி, இனி அவர்களுக்கு அடிக்கடி தரிசனம் தருவார் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இரசிகர்களின் ஒரு சிறு விருப்பத்தைக்கூட நிறைவேற்றாமல் ஒரு நாயகர் நடந்துகொண்டது முறை அல்ல.
ரஜினியிடம் அவரது ரசிகர்கள் இரசிக்கும் விஷயங்கள் பல. இவரது ஒவ்வோர் அசைவையும் இரசிப்பார்கள். ஆனால் வெளிமனிதர்கள் பலரும் இரசிப்பது, ரஜினியின் போலித்தனமில்லாத வெளிப்படையான பேச்சு.
இதுதான் ராகவேந்திரா மண்டபத்திலும் நிகழ்ந்திருக்கிறது. எவரும் கண்டதையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்பே கேள்விகளை எழுதி வாங்கி அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இந்தச் சந்திப்பு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தன் பிறந்தநாளின்போது ஏன் இரசிகர்களைச் சந்திப்பதில்லை என்பதற்கான விளக்கம் அவ்வளவாக ஏற்கும்படி இல்லாவிட்டாலும் இது ஒரு தனி மனித விருப்பம் என்ற வகையில் இதனை நாம் அதிகம் விமர்சிப்பதற்கில்லை.
அரசியலைப் பொறுத்தவரை விடை கிடைத்துவிட்டது. ரஜினிக்கு நாட்டை ஆளும் ஆசை இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் கைகட்டிக் கொண்டு காத்திருக்கிறார். தமிழகத்தில் அரசியலில் பெரிய வெற்றிடம் ஒன்று வரப்போகிறது. அப்போது அந்த இடத்தை நிரப்ப முன்வருவார் என்பது அவர் பதிலுக்குள் அடங்கியிருக்கும் விளக்கமாகப் படுகிறது.
பண உதவிகளை எதிர்பார்த்த இரசிகர்களுக்கு ரஜினி நன்கு குட்டு வைத்திருக்கிறார். தியாக உணர்வும் தன்னலமற்ற போக்கும் தம் இரசிகர்களுக்கு வேண்டும் என்கிற மறைமுகச் செய்தியைப் பதித்து இந்தச் செய்தியை அழகுறச் சொல்லியிருக்கிறார். ரஜினி இரசிகர்களின் சந்திப்பிலேயே அடிக்கோடிட வேண்டிய இரண்டு செய்திகள், என்னைப் பொறுத்த அளவில் மிகப் பிடித்திருக்கின்றன.
கேள்வி நேரத்தின்போதும் சரி, கேள்வி நேரத்திற்குப் பிறகு ரஜினி ஆற்றிய உரையின்போதும் சரி, ரஜினி வலியுறுத்தியும் வற்புறுத்தியும் சொல்லியிருக்கும் கனமான இரு விஷயங்கள், ‘கடமையைப் பாருங்கள். உங்கள் தாய் தந்தை குடும்பத்தைக் கவனியுங்கள்’ என்பதுதான்.
தமிழக இரசிக மன்றங்கள் எப்போதுமே ரொம்ப ஓவர். நடிகைக்குக் கோயில், கட்-அவுட்டுக்குப் பால் அது இது என்று ரொம்பத்தான் அலட்டிக் கொள்வார்கள்.
தேவையற்ற நடவடிக்கைகளுக்குத் தடை போட்டு, அவசியமான விஷயங்களை வலியுறுத்தியிருக்கும் இந்தச் சந்திப்பு, ரஜினி போட்டுக்கொடுத்திருக்கும் தங்கத் தடம் என்பேன்!
மின் துறையின் முனைப்பின் அவசியம்!
தமிழக நலன்களை வேரோடு அசைத்துப் பார்க்கவல்ல கொடிய அரக்கனாம் மின்வெட்டைச் சீர் செய்ய முதல்வரும், மின்துறை அமைச்சரும் உயர் அதிகாரிகளும் சேர்ந்து எடுத்துள்ள சில நல்ல முடிவுகள் வரவேற்கத்தக்கனவாகவும் ஆறுதல் அளிப்பனவாகவும் இருக்கின்றன.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட இருக்கும் மின் திட்டங்களுக்கு நன்கு ஊக்கமளிப்பது என்கிற தமிழக அரசின் முடிவு நெடுநாள்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய முடிவு. Better late than never என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
இல்லாமல் போனைதைவிடக் கால தாமதம் பரவாயில்லை என்கிற இந்தக் கருத்தின் அடிப்படையில் மின்துறையின் பார்வை இப்போதாவது கடைக்கண் திறந்திருக்கிறது.
ஜுரோஸ் இன்ஜினீயரிங் என்ற நிறுவனம் தமிழகத்தின் ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுக்க நிறையத் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்க இறங்கியது.
நம் அரசுகளின் சிவப்பு நாடா முறைகளால் இம்முயற்சிகள் முடங்கிப் போயின.
இப்போது தனியார் வடகொரிய நிறுவனம் ஒன்று ஓர் அணுமின் நிலையத்தை உருவாக்க முன்வந்திருக்கிறது. உலக அளவில் ஏற்கெனவே 12 அணுமின் நிலையங்களை நிர்மாணித்த மிகுந்த முன்னனுபவம் கொண்ட நிறுவனம் இது.
தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழக அரசு ஒரு நற்செய்தியைத் தந்துள்ளது. நீங்கள் உற்பத்தி செய்யும் உபரி மின்சாரத்தைத் தொழில் நிறுவனங்களுக்கு நேரிடையாக விற்பனை செய்யலாம் என்பதே இந்த நற்செய்தி.
ஒரு யூனிட்டுக்கு அரசு கொடுக்கும் விலை வேறு, தனியார் நிறுவனங்கள் தர முன்வரும் விலை வேறு.
இந்த அணுகுமுறை பல தனியார் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் நிறுவனங்கள் இனி ஜெனரேட்டர்கள் வாங்க 25 சதவிகித மானியம் வழங்குவது என்பது அற்புதமான முடிவு.
ஜெனரேட்டர்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் நல்ல முயற்சி இது. ஆனால் டீசல் தட்டுப்பாடு நிலவுவதும், டீசலை வாகனத்தில் ஊற்றுவதைத் தவிர கைகளில் தனியே கேன்களில் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எண்ணெய் விநியோக நிறுவனங்கள் பிடிவாதம் பிடிப்பதும் கவனிக்கப்படட வேண்டிய விஷயங்கள்.
மின் உற்பத்தியைப் பற்றிப் பல சிறுதொழில் அதிபர்கள் தெளிவான பார்வைகளோடும், ஏராளமான அரிய யோசனைகளோடும் காத்திருக்கிறார்கள். இவர்களைத் துறைச் செயலர்கள் அளவில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியது இன்றையச் சூழலில் அவசியம்.
இயற்கை பொய்க்கிறபோது செயற்கை தலைதூக்க வேண்டிய அவசியம் இருக்கிறது
தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
உடன்பயிலும், நண்பர்களை உடன்பிறந்தவர்களுக்கும் மேலாக நேசிப்பதுதான் உலகம் எங்கும் வழக்கமாக இருக்கிறது.
ஆனால், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், சகமாணவர்களை, மரக்கட்டைகளால் அடித்துத் துவைத்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டபோது மனம் பதைக்காதவர்கள் குறைவு.
அதுவும், இந்தக் காட்சிகளை வடஇந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் காட்டியபோது தமிழகத்தின் மானமே காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சியே ஏற்பட்டது.
காவல்துறை இந்த விஷயத்தில் கையாலாகாத துறையாகச் செயல்பட்டதைப் பற்றிய விவகாரத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிற கோணமே வேறு.
மீண்டும் ‘சட்டக் கல்லூரி திறக்கப்படும்போது பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிப்பை ஏற்படுத்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ”என்ன மச்சி! எப்படி இருக்கே?” என்று பேசிக் கொள்கிற அளவுக்கு நேசம் காட்டாவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாக வெறுப்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாதிருக்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதில்தான் என் அக்கறை நீள்கிறது.
ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்னமும் கூட இவர்களது கைத்தொலைபேசி வழியே மிரட்டலான குறுஞ்செய்திகள் வருகின்றன என்பதுதான் சற்றுக் கலக்கம் தரும் செய்தியாக இருக்கிறது. அடித்தவர்கள்மீது நடவடிக்கை; அடித்தவர்களைப் பார்த்துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை என்பவையெல்லாம் சட்டச் சம்பிரதாயங்கள்.
ஆனால், இனிச் சட்டக் கல்லூரி வளாகத்தில் நல்லுணர்வும், புரிந்துணர்வும், இனிய சூழலும் ஏற்படுத்த சட்டக் கல்லூரி நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட அமைப்புகளும், சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், அரசும் கூட்டாக இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது.
நல்லவேளையாக, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக மாணவச் சமுதாயத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலை இக்கணம் வரை மேற்கொள்ளவில்லை.
ஒரு வேளை இது நீறுபூத்த நெருப்பாக நடக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய வேண்டிய அவசியமும் காவல்துறைக்கு இருக்கிறது.
சட்டக் கல்லூரி திறக்கப்படும் முன் இரு சமூகத்தவரிடையே சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் வீரியத்தையும் ஆழத்தையும் உணராமல் சட்டக் கல்லூரி நடந்துகொண்டால் இதன் தொடர்விளைவுகள் பிற தமிழகக் கல்லூரிகளிலும், ஏன் கல்லூரிக்கு வெளியேயும்கூட நிகழந்துவிடலாம்.
இத்தகைய கலவர வெடிப்புகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இன்று தமிழகத்திற்கு இல்லை.
தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் மெத்தனம் காட்டுவது கூடாது!
மத்திய அரசுக்கு நெருக்குதல் தவற தவறி விட்டார் கருணாநிதி - நெடுமாறன்
இலங்கைத் தமிழர்களைக் காக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் தரத் தவறி விட்டார் முதல்வர் கருணாநிதி. இந்த விஷயத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி வந்த நெடுமாறன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர்களைக் காக்கத் தவறி விட்டார் கருணாநிதி. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, இலங்கைத் தமிழர்களைக் காத்தால்தான், மத்திய அரசுக்கு ஆதரவை தொடருவோம் என அவர் கூறியிருக்க வேண்டும். அதை செய்ய அவர் தவறி விட்டார்.
திமுகவின் ஆதரவு இல்லாமல், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்ற உண்மையை அறிந்தும், அப்படி ஒரு நெருக்குதலைத் தவறி விட்டார் கருணாநிதி.
சோமாலியாவில் இந்திய சரக்குக் கப்பல்கள் தாக்கப்படுவது குறித்துத்தான் மத்திய அரசு அதிகம் கவலைப்படுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது குறித்து கண் மூடிக் கொள்கிறது.
நமது மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கையி்ல உள்ள தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாகவே விநியோகிக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, தமிழர் மறு வாழ்வு மையம் மூலமாக ரூ. 6 கோடி நிதியை வழங்கினார். மேலும், அந்த கழகம் மூலமாக 2 கப்பல்கள் நிறைய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள ஆயுதங்கள், அப்பாவித் தமிழர்களைத் தாக்கவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உறுதியான நடவடிக்கை காரணமாக 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவானது, அந்த நாட்டு மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
ஆனால் அந்த உறுதியும், தைரியமும், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுத்தமாக இல்லை என்றார் நெடுமாறன்.
என்னை கொன்றுவிடுங்கள்.. வாக்குமூலத்தின்போது கதறிய கஸாவ்
மும்பை தாக்குதலி்ல் ஈடுபட்டு பிடிபட்டு, விசாரிக்கப்பட்டு வரும் தீவிரவாதி அஜ்மல் அமீர் கஸாவ் தன்னைக் கொன்றுவிடும்படி இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளான். இல்லாவிட்டால் தனது குடும்பத்தினரை லஷ்கர் ஏ தொய்பா அமைப்பு கூண்டோடு காலி செய்து விடும் என்றும் கூறியுள்ளான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளி்ல் ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளன.
அவர் கூறியுள்ள தகவல்கள்:
நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதன் பின்னர் மதரஸாவில் தான் படித்தேன்.
நான் உள்பட 40 பேர் லஷ்கர் ஏ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டோம். பாகிஸ்தானின் பல இடங்களில் வைத்து இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
துப்பாக்கிளைக் கையாள்வது, நீச்சல், படகுகளை கையாள்வது, ஆர்டிஎக்ஸ் குண்டுகளை வைப்பது உள்பட பல பயிற்சிகள் தரப்பட்டன. இடையே மும்பைக்குச் சென்று டார்கெட்களை பார்த்துவிட்டு வரவும் குழுக் குழுவாக அனுப்பி வைக்கப்பட்டோம்.
இதற்காக இந்திய கல்லூரிகளின் ஐடி கார்டுகள் எங்களுக்குத் தரப்பட்டன. அந்த கார்டுகளைக் காட்டி ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கினோம். எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியின் ஐடி கார்ட் தரப்பட்டது.
இதையடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டோம். எங்கள் குடும்பத்தினருக்கு பணம் தருவதாகவும் கூறினார்கள்.
தாக்குதல் நடத்திய பின்னர் பத்திரமாக கராச்சிக்குத் திரும்பி வந்துவிடலாம், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.
என் குடும்பத்துக்கு வேண்டிய நிதி உதவிகள் செய்யப்படும் என்றனர்.
போலீசாரிடம் மாட்டினால் தற்கொலை செய்யுமாறு கூறியிருந்தனர். ஆனால், நான் உயிரோடு மாட்டிக் கொண்டேன். இதனால் என்னை பேசாமல் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் என் குடும்பத்தை லஷ்கர் ஏ தொய்பா கூண்டோடு காலி செய்துவிடும்.
என்னுடன் மும்பை வந்த தீவிரவாதிகள் 9 பேர். அவர்களது பெயர்கள், அபு அக்சா, அபு உமர், படா அப்துல் ரஹ்மான், சோட்டா அப்துல் ரஹ்மான், அபு அலி, அபாதுல்லா, சோஹய்ப், உமர் ஆகியோர்.
எங்கள் 10 பேரையும் தலா 2 பேர் கொண்ட 5 குழுக்களாகப் பிரித்து தாக்குதல் திட்டத்தைக் கொடுத்தார்கள். ஒரு குழு செய்யும் வேலை இன்னொரு குழுவுக்குத் தெரியாது.
நாங்கள் கராச்சியிலிருந்து 13ம் தேதி ஒரு கப்பலில் அனுப்பப்பட்டோம். ஆனால், கடலிலேயே அந்தக் கப்பல் பல முறை நிறுத்தப்பட்டது. குஜராத் கடல் பகுதி வரை வந்தது.
அங்கு எங்களது இன்னொரு கூட்டாளிகள் குஜராத்தைச் சேர்ந்த ஒரு படகை (குஜராத்தைச் சேர்ந்த மீன்பிடி படகு குபேர்) கடத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். நாங்கள் அந்தப் படகுக்கு ஆயுதங்கள் மற்றும் 2 ரப்பர் படகுகளுடன் மாறினோம்.
அந்தப் படகில் இருந்தவர்கள் எங்களை மும்பை கடல் பகுதி வரை கொண்டு வந்தனர். இதையடுத்து ரப்பர் படகுகளுக்கு மாறி மும்பைக்கு வந்தோம்.
நானும் என்னுடன் வந்தவனும் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு ஓபராய் ஹோட்டலுக்கு வந்தோம். மற்றவர்கள் பந்த்வார் பார்க்கில் உள்ள லியோபோல்ட் கபேவில் தாக்குதல் நடத்திவிட்டு தாஜ் ஹோட்டலுக்குச் சென்றனர்.
என்னுடன் வந்தவர்களில் சிலர் பிரிட்டஷைச் சேர்ந்த பாகிஸ்தானியர்கள். அவர்களுக்கு வேண்டுமானால் அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம். எனக்கு லஷ்கர் மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது.
இந்தத் தாக்குதல் குறித்தோ, கொலைகள் குறித்தோ எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் கவலை எல்லாம் நான் உயிரோடு பிடிபட்டது தான். என்னைக் கொன்றுவிடுங்கள். இல்லாவிட்டால் லஷ்கர் என் குடும்பத்தைக் காலி செய்துவிடும் என்று கூறியுள்ளான் கஸாவ்.
மேலும் குபேர் படகில் இருந்த ஊழியர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்குத் தெரியாது என்றும் இவன் கூறியுள்ளான். இவர்களை ரப்பர் படக்குக்கு மாற்றிவிட்டு குபேரில் திரும்ப பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்த இந்தத் தீவிரவாதிகளின் வழி காட்டிகள் தான் அந்த ஊழியரைக் கொலை செய்துவிட்டு தங்களது கப்பலில் ஏறி கராச்சிக்குத் தப்பியதாகத் தெரிகிறது.
இப்போது இவனிடம் எப்பிஐயும் தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கஸாவை காப்பாற்ற போலீஸ் பட்டபாடு:
முன்னதாக இவனும் இவனது கூட்டாளியும் ஸ்கோடா காரில் தப்பியபோது மும்பை டி.பி. மார்க் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் காதம் தலைமையில் வழிமறித்தனர். அப்போது இவன் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் பலியானர். போலீசார் தி்ருப்பிச் சுட்டதில் இவனது கூட்டாளி பலியானான்.
இதையடுத்து இவனை போலீசார் பிடித்தனர். அப்போது அப் பகுதி பொது மக்கள் பலரும் இவனைப் பிடிக்க உதவியுள்ளனர். பிடிபட்ட இவனை பொது மக்கள் அடித்து உதைத்துள்ளனர். இவனை உயிரோடு அவர்களிடம் இருந்து மீட்டு பத்திரமாகக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரவே படாதபாடு பட்டுள்ளனர் போலீசார்.
