என் பதவிக் காலத்தில் மின்வெட்டு வந்துள்ளது. அடுத்த தேர்தலில் தி.மு.க., தோல்வியடைய, மின்வெட்டு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது' என, அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். அண்ணாதுரை நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை முத்துக் கடையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது: முதல்வர் கருணாநிதி போன்ற கடின உழைப்பாளி இல்லை. காலையில் எழுந்து முதல் வேலையாக பேப்பரை பார்ப்பவர், "ராணிப்பேட்டையில் கரன்ட் இல்லை' என செய்தி வந்திருந்தால் உடனே எனக்கு போன் போட்டு, "என்ன, ராணிப்பேட்டையில் கரன்ட் இல்லையே, என்ன காரணம்' என்று கேட்பார். இதுபோல, பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கு விளக்கம் கேட்கும் ஒரே முதல்வர் கருணாநிதி தான். நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களைக் கொடுத்து நல்ல பெயர் வாங்கி இருக்கிறோம். வரும் தேர்தலில் மின்சாரப் பிரச்னை ஒரு பெரிய பிரச்னையாக இருக்கக் கூடாது என்று பயப்படுகிறேன். தேர்தலில் மின்பிரச்னை தலையெடுக்குமோ? என்று பயப்படுகிறேன். மின்பிரச்னையால் இரவில் எனக்கு தூக்கம் வருவதில்லை. மின் பிரச்னைக்காக வருந்துகிறேன். என் ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு வந்துள்ளது. அதனால், தி.மு.க.,வினர் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். அடுத்த தேர்தலில் தி.மு.க., தோல்வியடைய, மின்வெட்டு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மின்வெட்டு வராமல் இருக்க இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி பேசினார்.
