தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கலைஞர் எங்களை மிரட்டி பார்க்கிறார் குருவின் அசத்தல் பேட்டி

மஞ்சள் சட்டைக்கும் மஞ்சள் துண்டிற்கும் நடக்கும் யுத்தம் இது! மஞ்சள் சட்டை - காடு வெட்டி குரு! மஞ்சள் துண்டு-தமிழக முதல்வர் கலைஞர்!
சி.டி.யில் ஆரம்பித்த பிரச்னை சிறை வரைக்கும் போய்விட்டது. வரம்பு மீறி பேசியது, வன்முறையைத் தூண்டியது என்று குற்றம் சுமத்தி காடுவெட்டி குருவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகப்படுத்தி இருக்கிறார்கள். சிறையிலிருக்கும் கைதிகளை சாதா ரணமாக யார் வேண்டுமானாலும் மனு போட்டுப் பார்க்கலாம்! எல் லோருக்கும் பொதுவான சிறை வழக்கம் இது. ஆனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை நெருங்கிய உறவினர்கள் தவிர்த்து வழக்கறிஞர்கள் மட்டுமே சந்தித்துப் பேச முடியும்.
மாவீரன் ஜெ.குரு! வன்னியர் சிங்கம் குரு! என்ற புகழ்ப் பேச்சுக்கு மத்தி யில் பரபரப்பாக இயங்கிக் கொண் டிருந்த குரு இப்போது சிறையில் சைலண்ட் 'குரு'வாக வலம் வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் `குரு'வின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு! ஆனால் இப்போது சிறையில் பத்திரிகை யாளர் யாருக்கும் தடா! மொத்தத்தில் நோ என்ட்ரி! இந்த நிலையிலும் `குரு' என்னதான் நினைக்கிறார்? அவரது தரப்பு பதில்கள் என்ன என்றறிய பல்வேறு வழிகளில் முயற்சித்தோம். நமது கேள்விகளை அவரின் வழக்கறிஞர் கே.பாலு மூலம் குருவுக்கு அனுப்பி வைத்து பதில்களைப் பெற்றோம். சிறையிலிருந்து குரு நமக்களித்த சிறப்பு பேட்டி


சாதாரணமாக சுறுசுறுப்பாகவும் படுபிஸியாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள், சிறையில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?
``என் உடல்தான் சிறையில். என் உயிரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது. மாபெரும் லட்சியப் போருக்கு `உயிரே உணர்வே பொங்கி எழு' என்ற லட்சியத்தோடு எதிர்கால அரசியல் திட்டங்களை சிறையிலிருந்தபடி வகுத்துக்கொண்டிருக்கிறேன். நீண்ட நாள் சிறையிலிருந்த உலகத் தலைவர்கள் மற்றும் போராளிகளின் சுயசரிதை மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்து வருகிறேன். என் செயல்பாடுகளுக்கு ஆளுங்கட்சி கொடுத்திருக்கும் கட்டாய ஆனால் தற்காலிக ஓய்வு இது. அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சிறைவாசத்தை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் பொது வாழ்க்கையில் ஈடுபடும் பக்குவம் அவர்களுக்குக் கிடைக்கும்.''
உங்கள் கைதுக்கான உண்மையான காரணம் என்ன?
தமிழக அரசுக்கே என்னைக் கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை. கல்யாண மண்டபத்தில் கட்சிக்காரர்களிடம் பேசியதற்காக என்னைக் கைது செய்துள்ளனர்.
இதற்காக கைது செய்ய வேண்டுமென்றால் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் வெளியில் நடமாட முடியாது. நான் வன்முறையைத் தூண்டும்படி பேசினேனாம். அதுவும் ஆறு மாதம் கழித்து, வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டறிந்திருப்பது ஆளுங்கட்சிதான். மொத்தத்தில் இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை.

உங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்திருப்பது பற்றி?
ஆங்கிலேயர் ஆட்சியில் விடுதலை வேட்கையை மக்களிடம் ஊட்ட உண்மையை எடுத்துப் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பேச்சு சுதந்திரம் இல்லை. இப்போதும் உண்மையைப் பேசியதற்காக நான் கைது செய்யப்பட்டுள்ளேன். இந்த ஆட்சியிலும் பேச்சு சுதந்திரம் கூட்டணியில் இல்லாதவர்களுக்கு இல்லை. நான் கூட்டணியில் இருக்கும்போது பேசியதற்காக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு கைது செய்யப் பட்டுள்ளேன். ஆனால் உண்மையிலேயே வன்முறையைத் தூண்டி, ஆபாசமாகப் பேசிவரும் தி.மு.க. பேச்சாளர்கள் போலீஸாரின் பாதுகாப்புடன் சுற்றித் திரிகிறார்கள். தலைவர் மருத்துவர் ஐயா சொன்னது போல் நாங்கள் எந்தப் பத்திரிகை அலுவலகத்தையும் தீ வைத்துக் கொளுத்தவில்லை. யாரும் தீயில் எரிந்து இறக்கவுமில்லை.''
உங்கள் கைது பா.ம.க.வை மிரட்டும் வேலை என்று கூறப்படுகிறதே
``உண்மைதான். இந்தக் கைதின் மூலமும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலமும் எங்களை மிரட்டி பேசவிடாமல் செய்யலாம் என்று நினைக்கிறார் கலைஞர். ஆனால் எத்தனையோ போராட்டங்கள், கைதுகள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சந்தித்து முறியடித்து வளர்ந்தது வன்னிய சங்கமும் பா.ம.க.வும். எனவே இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எங்களில் எவ்வளவு பேரை கைது செய்து சிறையிலடைத்தாலும் நேர்மைக்காகப் போராடும் எங்களை ஒடுக்கிவிட முடியாது.''

அடுத்த தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும்!

அதை பா.ம.க. முடிவு செய்யும்.''

சிறையில் உங்களை எப்படி நடத்துகின்றனர்?

நான் முதல் வகுப்புக் கைதியாக சிறையிலிருக்கிறேன். ஆனால் முதல் வகுப்புக் கைதிக்குத் தரப்படவேண்டிய எதுவும் எனக்கு அளிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியினர் சிறைக் குள்ளும் கையை நீட்டி என்னைச் சீண்டிப் பார்க்கின்றனர்! பார்க்கட்டும்...'' என்று சொல்லும் குருவுக்கு குரல் உயர்கிறது.
பா.ம.க. வழக்கறிஞர் பிரிவுத் தலை வரும் குருவின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளவருமான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலுவை சந்தித்துப் பேசினோம். ``இந்த வழக்கில் அண்ணன் குரு பேசியதால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. அதேபோல் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்தான் அடைத்தாகவேண்டும் என்பதற்கு பிரத்தியேக காரணம் எதுவும் கூறப்படவில்லை. ஆறுமாத கால தாமதத்திற்கு எந்தவித விளக்கமும் இல்லை. அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவரும் அரசின் காலாவதியான அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணன் குருவை தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முரண்பாட்டிற்கெல்லாம் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் சொல்லி யாகவேண்டும்'' என்றார்..

ரஜினிக்கு குட்டு வைத்த ஞாநி


அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் படங்களையும் உங்கள் செயல்களையும் இதற்கு முன்பு பலமுறை நான் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். இந்த முறை உங்கள் நிலை, எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. நீங்களேதான். அரசியல் என்பது இருபக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி. எந்தப் பக்கமும் வெட்டும். அரசியலை நீங்கள் உங்கள் சினிமாவுக்குப் பயன்படுத்தப் பார்த்தீர்கள். உங்களை அரசியல்வாதிகள் பயன்படுத்தப் பார்த்தார்கள். கொஞ்ச காலம் இரண்டும் சாத்தியப்பட்டது. இப்போது நீங்கள் கையில் எடுத்த கத்தியே உங்கள் கையைப் பதம் பார்த்துவிட்டது.
அரசியலில் நீங்கள் குரல் கொடுத்தபோதெல்லாம், அதையொட்டி உங்கள் படம் ஒன்று ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருப்பது வழக்கம். படத்திலும் அரசியல் சூழல் சார்ந்து ஓரிரு டயலாக் பேசுவீர்கள். படம் கமர்ஷியல் வெற்றியாகிவிடும். உடனே நீங்கள் இமயமலைக்குப் போய்விடுவீர்கள். மறுபடி அடுத்த பட வேலை ஆரம்பமான பிறகுதான் அரசியல் டயலாகுகள் தொடங்கும். இடையிடையே உங்களை நம்பி தங்கள் அரசியலை நடத்த, அரசியல்வாதிகள் சிலர் கொடுத்த நிர்ப்பந்தங் களில் இன்னும் குழப்பமடைந்து மக்களையும் குழப்பி வந்தீர்கள். இதுதான் உங்கள் அரசியல் வரலாறு.
முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான். ஒகேனக்கல் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பகுதி. அதில் வரும் காவிரி நீர் தமிழகத்துக்கு உரிய பங்கு. அதிலிருந்து குடிநீர்த் திட்டம் நிறைவேற்றுவது முழுக்க முழுக்க தமிழகத்தின் உரிமை. இந்த சரியான கருத்தைத்தான் நீங்கள் பேசினீர்கள்.
அப்போதுதான், `இதை எதிர்ப்பவர்களை உதைக்க வேண்டும்' என்று சொன்னீர்கள். பஸ் எரிப்பது, கலவரம் செய்வது, வன்முறை பற்றியெல்லாம் பேசிவிட்டு, அதைச் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்று நீங்கள் அப்போது பேசவில்லை. எங்களுக்குச் சொந்தமான பகுதியில் நாங்கள் திட்டம் போடுகிறோம். அதை ஆட்சேபித்தால் எப்படி ? ஆட்சேபிக்கிறவர்களை உதைக்க வேண்டாமா என்றுதான் பேசினீர்கள்.ஆனால் இப்போது மாற்றிப் பேசி, அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, இந்த அர்த்தத்தில்தான் சொன்னேன், எல்லா கன்னடர்களையும் உதைக்கச் சொல்ல வில்லை, வன்முறையாளர்களைத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தச் சொல்லவில்லை, என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறீர்கள் - இல்லையில்லை, வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.
உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?
`குசேலன்' பட வெளியீட்டை கர்நாடகத்தில் தடை செய்ய கன்னட வெறியர்கள் முனைந்ததுதான் உங்கள் பல்டிக்குக் காரணம். இதுதான் தொடர்ந்து உங்கள் அரசியல் பார்வை. உங்கள் சினிமாவுக்கு உதவி செய்ய அரசியல் பேசி வந்தீர்கள். அதுவே உங்கள் சினிமாவுக்கு ஆபத்தாகும்போது அரசியலையே மாற்றிக் கொள்கிறீர்கள்.
பத்துப் பேரைத் தனியாளாக அடித்துப் போடுவது, ஒரு முறைப்பிலேயே எதிரியை நடுங்கச் செய்வது, ஒரு பார்வையிலேயே நாயகியை நெளியவைப்பது, `கேட்டாலே அதிருது இல்லே?' முழக்கங்கள் எல்லாம் திரையில்தான் உங்களுக்கு சாத்தியம். திரையில் பாயும் புலி; வெளியில் நடுங்கும் எலி. படத்தை ரிலீசாக விடமாட்டோம் என்று யாராவது சொன்னால், `கேட்டதுமே உதறுது இல்ல ?'
இதுதான் யதார்த்தம். திரையில் காட்டும் அதே ஹீரோதான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பதாக நம்பும் ஒரு ரசிகர்-தொண்டர் கூட்டத்தை நம்பித்தான் பல நடிகர்கள் அரசியல் பிரவேசம் செய்கிறார்கள். உங்கள் அரசியல் டயலாகுகள் அப்படிப்பட்ட ரசிகர்-தொண்டர் கூட்டங்களால்தான் ரசித்து வரவேற்கப்பட்டன.
ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன. கர்நாடகத்தை சமாளிக்கப் பார்த்தால், தமிழகத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. வாங்கிய பவுன் காசுகளுக்காக உடல் பொருள் ஆவியை தமிழுக்குத் தருவேன் என்றால், கர்நாடகத்தில் படத்தைக் காட்டாதே என்கிறார்கள்.
இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான். அர்ஜுன், பிரகாஷ்ராஜ் இருவரும் உங்களைப் போல கர்நாடகத்திலிருந்து இங்கே பிழைக்க வந்தவர்கள்தான். இருவருக்கும் இங்கே கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத அரசியல் துறையில் மூக்கை நுழைத்து லாபம் அடையவோ நஷ்டம் அடையவோ அவர்கள் விரும்பாததால், இப்படிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்பட வில்லை.
உங்களைச் சுற்றி வந்த சினிமா வியாபாரிகளும் அரசியல்வாதி களும் நீங்கள் அரசியலுக்கு வருவதைப் போல ஒரு பொய்யை பிரும்மாண்டமாக்கி ரசிகர்களை ஏமாற்றி தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக் கொண் டார்கள். நீங்கள் அதற்கு உடந்தையாக இருந்தீர்கள். அதன் விைளவுதான் இன்று உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற பரிதாபகரமான நிலை. கடவுளே எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று என்று ஒரு வசனம் சொல்வீர்கள். எவ்வளவு அர்த்தமுள்ளது !
குசேலன் படம், இந்த வலையிலிருந்து உங்களை நீங்களே விடுவித்துக்கொள்ள கிடைத்த சரியான வாய்ப்பு. ஆனால் அதையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள படத்தின் இயக்குநர் உங்களை விடவில்லை. படத்தில் உங்கள் மீது என்னைப் போன்றோர் வைக்கும் விமர்சனங்களில் ஒரு சிலவற்றை ஆர்.சுந்தரராஜன் பாத்திரம் வைக்கிறது. நியாயமான கேள்விகளை எழுப்பும் அந்தப் பாத்திரத்தை வெத்துவேட்டுப் பேர்வழியாக சித்திரித்து கேள்விகளின் நியாயத்தை நீர்க்கச்செய்யும் உத்தியும் இருக்கிறது.
(அரசியலுக்கு) ``எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்''னு பேசிக்கிட்டு நீங்களும் குழம்பி மக்களையும் குழப்பிகிட்டிருக்கீங்களே என்று சுந்தர்ராஜன் பாத்திரம் கேட்கிறது.
இதற்கான உங்கள் பதில்: ``அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது'' என்று சொல்லுகிறீர்கள்.
எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.
அடுத்த பதில் அபத்தமானது. ``நான் வந்தா என்ன வராட்டி என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே'' என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.
சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க' என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.
அதில் ஆச்சரியம் இல்லை.
மலையாளத்தில் துளியும் ஆபாசம் இல்லாமல் எடுத்து வெற்றி பெற்ற `கத பறையும்போள்` படத்தை தமிழில் தயாரிக்கும்போது உங்கள் இயக்குநருக்கு உங்கள் சூப்பர் இமேஜ் மீது கூட நம்பிக்கை இல்லை. வடிவேலுவின் `காமெடி` டிராக்கில் சோனாவையும் நயன்தாராவையும் பயன்படுத்தி ஆபாசத்தைப் புகுத்தியிருக்கிறார். உங்கள் படங்களை ஓடவைக்க எப்போதுமே இப்படிப்பட்ட விஷயங்கள் கூடவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குஷ்புவிடம் நீங்களே சொல்லும் `கடவுளே' முதல் `சந்திரமுகி'யில் வடிவேலு காமெடி வரை....
மலையாளப் படத்தில் மம்முட்டி ஏற்ற ஸ்டார் நடிகர் பாத்திரம் , `நடிகனை ரசியுங்கள்; பின்பற்றுவதற்கான தலைவனாக நினைக்காதீர்கள்; அவன் ஏற்ற பாத்திரங்களைத்தான் ரசித்தீர்கள்; அவனையே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' என்பதை உணர்த்துகிறது. படத்தின் மெசேஜ் நட்பு மட்டுமல்ல. இதுவும்தான். சாமர்த்தியமாக வாசு இதையெல்லாம் வெட்டிக் குறைத்து விட்டார்.
போகட்டும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்றார் அறிஞர் அண்ணா. கர்நாடக வருத்தமும் குசேலனும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலிருந்தும் உங்கள் அடுத்த அடி என்ன என்பதை தீர்மானிக்க இயலும். அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும். நாட் டைப் பற்றி, சமூகத்தைப் பற்றி அக்கறையிருக்கும் மனிதன் நான் என்று நீங்கள் சொல்லலாம். அப்படிப்பட்ட எல்லாருமே அரசியலில் நுழைந்தாக வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரவர் துறையில் நேர்மையாக சிறப்பாக உழைத்தால் போதுமானது.
உங்கள் துறை சினிமா. குசேலன் படத்தில் இருக்கும் காமெடி அபத்தம், ஆபாசம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல படத்தை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கதையை உங்களை முன்னிறுத்தி எடுத்துச் செல்லாமல், பசுபதியின் அபார திறமையைச் சார்ந்து அந்தப் பாத்திரத்தை முன்னிறுத்தியே எடுத்துச் சென்றிருக்கும் வாசுவின் பிடிவாதம், கதை மீது அவருக்கும் உங்களுக்கும் இன்னும் மீதி இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
சூப்பர் ஸ்டார்களின் படத்தில் கதை என்று ஒன்று தேவையில்லை என்று நினைக்கும் விஜய், அஜித் வகையறாக்களுக்கு நீங்கள்தான் முன்னோடி. குசேலனில் அதை மாற்றியிருக்கிறீர்கள். தொடர்ந்து கதையம்சத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடியுங்கள். நயன்தாரா வின் குழந்தையுடன் ஜோடியாக நடிக்கும் காலத்துக்காகக் காத்திராதீர்கள்.
அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை. சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது. கலைஞன் ரஜினிகாந்தாக அடுத்த பத்தாண்டுகள் செயல்படுங்கள். அதுதான் இன்னும் 60 வருடங்களுக்குப் பிறகு கூட உங்களுக்கு வரலாற்றில் இடம் பிடித்துத் தரும்.
சினிமாவிலும் அரசியலிலும் மற்றவர்கள் உங்களுக்கு ஏற்படுத்திய பிம்பத்துக்காக உழைத்தது போதும். உங்கள் குடும்பத்துக்கு இன்னும் ஆறு தலைமுறைகளுக்கு சம்பாதித்துக் கொடுத்துவிட்டீர்கள். இனியேனும், உங்களுக்காக, நீங்கள் தேடும் நிம்மதிக்காக வேலை செய்யுங்கள்.அரசியலிலிருந்து துறவறம், அபூர்வ ராகம் காலத்து சிவாஜிராவின் கலைத் தாகத்தின் மறு உயிர்ப்பு இவை இரண்டும் இருந்தால், இனி நீங்கள் நிம்மதிக்காக இமயமலைக்குப் போக வேண்டியிராது..
அன்புடன்ஞாநி
(குழந்தை யாருக்குச் சொந்தம்... வாசகர் கருத்துக்கள் அடுத்த வாரம்.)
இந்த வாரப் பூச்செண்டுரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக.
இந்த வாரக் குட்டுரஜினிக்கே ஒகேனக்கல் பிரச்சினையில் அடித்த பல்டிக்காக.
இந்த வாரத் அதிர்ச்சிதி.மு.க, கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் எதுவும் இல்லாதது.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive