மும்பை தாக்கதலுக்கு பாகிஸ்தான் கடற்படை உதவியதாக பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் அமீர் இமான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். நவம்பர் 20ம் தேதி அல் ஹீசைன் கப்பல் மூலம் கிளம்பிய தீவிரவாதிகள் பாகிஸ்தான் கடல் எல்லையில் குபேர் படகை கடத்தியுள்ளனர். பின்னர் இந்திய படகு குபேரை பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் கடத்தி செல்ல பாகிஸ்தான் கடற்படை உதவியதாகவும், இதன் காரணமாகத்தான் தாங்கள் ஆயுதங்களுடன் கராச்சி வழியாக இரண்டு தினங்களில் இந்தியா வர முடிந்ததாகவும் அமீர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். மேலும் தான் ஒரு பாகிஸ்தானி என்று அமீர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறான்.
அமெரிக்கா வலியுறுத்தல் :
இதற்கிடையில் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா , மும்பை தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் மும்பை தாக்குதல் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முஷாரப் மறுப்பு :
இது ஒரு புறம் இருக்க, பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை தூண்டியது இல்லை என அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷராப் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது : பாகிஸ்தான் உலகில் எந்த பகுதியிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது கிடையாது ஆனால் எப்போதும் பாகிஸ்தான் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தீவிரவாதத்தையோ, தீவிரவாதிகளையோ பாகிஸ்தான் ஆதரிரத்ததில்லை. தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் எப்படி தீவிரவாதத்தை தூண்டி விடும். இவ்வாறு முஷாரப் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
