ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் விஜேந்தர் குமாருக்கு பரிசு, வாழ்த்து குவிகிறது. சீன தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த குத்துச்சண்டை 75 கி.கி., "பிரீஸ்டைல்' பிரிவில் 22 வயதான விஜேந்தர், கியூபாவின் எமிலியோ கோரியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆனாலும் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பரிசுகளும் குவிகின்றன.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தனது பாராட்டு செய்தியில்,""விஜேந்தர் தோல்வியடைந்தாலும் அவரது திறமையான ஆட்டம் பாராட்டுக்குரியது. டில்லியில் அவரை நேரில் சந்திக்க ஆர்வத்துடன் இருக்கிறேன்,'' என்றார்.
இளைஞர் எழுச்சி: சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தனது வாழ்த்து செய்தியில்,""விஜேந்தர் மற்றும் சுஷில் குமாரின் அபார திறமை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய கிராமப்புறங்களில் ஒளிந்திருக்கும் விளையாட்டு திறமைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்,'' என்றார்.
உலகமே பார்க்கிறது: விஜேந்தர் வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய ஒலிம்பிக் குத்துச்சண்டை பயிற்சியாளர் குர்பக்ஸ் சிங் சாந்து கூறுகையில், ""ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தடைகளை உடைத்து இந்திய குத்துச்சண்டை முன்னேற்றம் கண்டுள்ளது. முதன் முறையாக பதக்கம் வென்றது மட்டுமில்லாமல் மூன்று இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியதை ஒரு சாதனையாக கருதுகிறேன். எங்களால் சர்வதேச அளவில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்துள் ளோம். குத்துச்சண்டை உலகம் தற்போது இந்தியாவை கவனிக்க துவங்கியுள்ளது,'' என்றார்.
இலவச விமானப்பயணம்: ஒலிம்பிக் பதக்கம் வென்றதை அடுத்து விஜேந்தருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச விமான சேவை வழங்க, தனியார் ஜெட் சர்வீஸ் ஒன்று முன்வந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""பிந்த்ரா, சுஷில் குமார் ஆகியோரை தொடர்ந்து விஜேந்தருக்கு இலவச விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
டி.எஸ்.பி., பதவி: ஒலிம்பிக்கில் இம்முறை சாதித்த அரியானா வீரர்களான விஜேந்தர் குமார், ஜிதேந்தர் குமார், அகில் குமார், யோகேஷ்வர் தத் ஆகிய நால்வருக்கும் டி.எஸ்.பி., பதவி வழங்கப் படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் அகில் குமார், ஜிதேந்தர் குமார் காலிறுதி வரை முன்னேறினர். அரையிறுதியில் தோல்வி அடைந்த விஜேந்தர் குமார் வெண்கலம் வென்று ஆறுதல் தேடினார். இதே போல மல்யுத்த போட்டியின் காலிறுதிக்கு யோகேஷ்வர் தத் தகுதி பெற்றார். இவர் களை கவுரவிக்கும் வகையில் டி.எஸ்.பி., பதவி வழங்குவதாக முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார். தவிர விஜேந்தருக்கு ரூ. 50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.
அடுத்து தங்கம்: பீஜிங் ஒலிம்பிக் குத்துச்சண்டை யில் வெண்கலம் வென்ற விஜேந்தர் 2012, லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று காட்டுவதாக சவால் விடுத் துள்ளார். இவர் கூறுகையில், ""அரையிறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. என்னால் வெற்றி பெற முடியாததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். இம்முடிவில் மிக உறுதியாக இருக்கிறேன்,'' என்றார்.
வெண்கல விஜேந்தருக்கு வாழ்த்து!
முஷாரபை கைகழுவுகிறார் அதிபர் புஷ
அதிபர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் யூசுப் ரசா கிலானியுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் தனது நிர்வாகம் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளார். கிலானியுடன் பேசிய புஷ், பாகிஸ்தானின் புதிய அதிபர் தேர்தல் குறித்தும் பேசினார். அதே போல, அதிபர் அதிகாரத்தையும் பார்லிமென்ட் அதிகாரத்தையும், வகைப்படுத்துவது எப்போது என்பது குறித் தும் அவர் கேட்டார். "அதிபர் தேர்தல் குறித்து அனைத்து விஷயங்களையும், தேர்தல் தேதியையும் முடிவு செய்யும் முழு அதிகாரம் தேர்தல் கமிஷனுக்குத் தான் உண்டு. பார்லிமென்ட் மற்றும் அதிபர் அதிகாரங்களை சமப்படுத்தும் வகையில், மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கிலானி தெரிவித்தார்.
"பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வலுவான உறவு நீடிக்கிறது. பாகிஸ்தானின் ஜனநாயக அரசுக்கு அனைத்து உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்' என்று புஷ் கூறினார். உரையாடலின் போது, ஒலிம்பிக் போட்டி துவக்கவிழாவின் போது, கிலானியுடன் நடந்த சந்திப்பு குறித்து நினைவு கூர்ந்த புஷ், முன்னாள் பிரதமர் பெனசிரின் குழந்தைகளை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தார். அப்போது, பெனசிரின் குழந்தைகளும், புஷ்சை சந்தித்து பேசியதால் பெரிதும் உற்சாகத்தில் இருப்பதாகவும், அவர்களைப் போலவே, பெனசிரின் கணவரும் மகிழ்ச்சியில் இருப் பதாகவும் கிலானி கூறினார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுவடைய தொடர்ந்து அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கிலானி, இதற்காக அரசும், மக்களும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப் பதாகவும் கூறினார். பின்னர், பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தனது இரங்கலை புஷ் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எப். 16 ரக விமானங்களை வழங்கியதற்காகவும், பழைய எப் - 16 விமானங்களை மேம்படுத்த 465 கோடி ரூபாய் நிதி வழங்கியதற்கும் கிலானி நன்றி தெரிவித்தார்.
அதே போல, முஷாரப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புஷ், பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அவர் எடுத்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். அதே போல, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், முஷாரப் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். முடிவு அமெரிக்கா கையில்: இந்த டெலிபோன் பேச்சு, மாறிவரும் பாகிஸ் தான் சூழ்நிலையை புஷ் ஆதரிப்பதாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அது முதலில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் கண்டலீசா ரைசால் அனுமதிக்கப்பட வேண் டும் என்று கூறுகின்றனர். தற்போது பாக்., அதிபர் முஷாரப் பதவி விலக அமெரிக்கா, ராணுவம், சவுதி அரேபியா ஆகிய மூன்று சக்திகள் செயல் பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் நலனைவிட, முஷாரபின் நட்பு அல் லது நெருக்கம் தேவையில்லை என்று ராணுவத் தளபதி கியானி முடிவு செய்துவிட்டார்.
இப்போது கிலானியுடன் டெலிபோனில் பேசியபின் அதிபர் முஷாரபிடம் பேசியிருக்கிறார். அதற்குமுன் கடந்தவாரத்தில் முஷாரப் நெருக்கடிகளைச் சந்தித்த போது அதிபர் புஷ்ஷிடம் பேச முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன் சவுதி நாட்டின் உளவுத் துறைத் தலைவர் இளவரசர் முக்ரீன் பின் அப்துல் அசீஸ் இஸ்லாமாபாத் வந்து நவாஸ், சர்தாரி உட்பட எல்லாத் தலைவர்களுடனும் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எவரும் கேலி செய்து சிரிப் பிற்கு ஆளாகாத வகையில், அதே சமயம் முடிவும் காணப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இவை எல்லாம் பாகிஸ்தானில் அடுத்து வரும் மாற்றம் நிஜமாகவே ஜனநாயகம் வலுப்படுமா, அல்லது புதிய குழப்பத்துடன், அமெரிக்கா சொல்படி நடக்கும் நம்பிக்கை நிர்வாகம் உருவெடுக்குமா என்பது இனித் தெரியும்.
