தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

600 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணம் 50 சதவீதம்! அதிகரிப்பு: மின்சார சிக்கனத்துக்கு அரசு அதிரடி கட்டுப்பாட

மின்சாரம் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வீட்டு உபயோகத்துக்கு இரு மாதங்களுக்கு, 600 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால், 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.தமிழகத்தில் தற்போது மின்சாரப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க, குறிப்பாக வீடுகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கவும், விவசாயிகளது தேவைக்கேற்ப மின்சாரம் வழங்கவும், தமிழக அரசு மின் பகிர்மான மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.நவம்பர் 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் இந்தக் கட்டுப்பாடுகள் வருமாறு:


* கிராமங்களில் தினமும் 10 மணி நேரம் மும்முனை மின்சாரமும், 14 மணி நேரம் ஒரு முனை மின்சாரமும் வழங்கப்படும். இதனால், விவசாயிகள் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் ஆக மொத்தம் 10 மணி நேரம் அவர்களது பம்புசெட்டுகளை இயக்கலாம். ஒரு முனை மின்சாரம் வழங்கும்போது விவசாயத்துக்கு அதைப் பயன்படுத்தக் கூடாது.


* நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினமும் குறைந்தபட்சம், 20 மணி நேரம் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்.


* வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர், அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.


* உயர் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு கேட்பு (டிமாண்ட்) மற்றும் பயனீட்டில் 40 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். கேட்புக் கட்டணம் அதற்கேற்ப குறைக்கப்படும்.


* எல்.டி., - சி.டி., இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பயனீட்டில் 20 சதவீதம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


* தாழ்வழுத்த (எல்.டி.,) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில், 2,000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள், மின் தேவையை 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்.


* மாலை நேரங்களில் (6 முதல் 10 மணி வரை) அனைத்து உயரழுத்த மற்றும் எல்.டி.,- சி.டி., மின் இணைப்பு உள்ள தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் மின் வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெறக்கூடாது. மீறினால் இணைப்பு துண்டிக்கப்படும்.


* கோவில் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும்போது மின் வாரியம் மின்சாரம் வழங்காது.


* அனைத்து மருத்துவமனைகள், மத்திய மற்றும் மாநில அரசு கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், ரயில்வே இணைப்புகள், செய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு இணைப்பகங்கள், கல்வி நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், பால் குளிர்படுத்தும் நிறுவனங்கள் ஆகிய அத்தியாவசிய மின் இணைப்புகளுக்கு, மின் வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.


இந்தக் கட்டுப்பாட்டு முறை டிசம்பர் இறுதியில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, தேவை இருப்பின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.


புதிய மின் கட்டண விகிதம் எப்படி?: மின் வினியோகத்தில் புதிய கட்டுப்பாட்டு முறை குறித்து தமிழக அரசின் அறிவிப்பு நேற்று வெளியானது. "வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், "தாழ்வழுத்த (எல்.டி.,) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில், 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் அவர்களது மின் தேவையில் 20 சதவீதம் அளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, கூடுதலாக 50 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.


குழப்பம் ஏற்பட்டது: தமிழக அரசின் அறிவிப்பில், வீட்டு இணைப்பில் இரு மாதங்களுக்கு, 600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள், 50 சதவீத கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது 20 சதவீதம் கழித்த பின் வரும் 480 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.இதேபோல், தொழிற்சாலைகளுக்கான கூடுதல் கட்டண அறிவிப்பிலும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழக அரசின் அறிவிப்பு குறித்து எங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை. அரசின் அறிவிப்பு எங்களுக்கு முறையாக வந்தவுடன் அதை ஆணையம் பரிசீலித்து, அதன் பின் எத்தனை யூனிட்டுக்கு மேல் போனால் அதிக கட்டணம் வசூலிப்போம் என்பது குறித்து முடிவு செய்து அறிவிப்போம்.


அதிர்ச்சி அளிக்கிறது: "தற்போதைய நிலையில் அரசு அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அப்படியே போட்டுவிடுங்கள். நவம்பர் 1ம் தேதி தான் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்பதால், அடுத்து வரும் 10 நாட்களுக்குள் நாங்கள் பேசி முடிவு எடுத்துவிடுவோம்' என்ற குழப்பமான பதிலைத் தெரிவித்தனர்.மின் வினியோகம் தான் முறையாக இல்லையென்றால், கட்டணம் குறித்த அறிவிப்பைக் கூட தெளிவாக வெளியிடாமல் மக்களைக் குழப்பும் வகையில் அதிகாரிகள் பதில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.


அரசின் அறிக்கை குறித்து மின்துறை அமைச்சக வட்டாரங்களிடம் கேட்டபோது, "வீட்டு இணைப்புகளில் இரு மாதங்களுக்கு, 480 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களிடம் இருந்து 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதே போல், தொழிற்சாலைகள், 1,600 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் போது 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என்று உறுதிப்படுத்தினர்.

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive