அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், ஒப்பந்தமா? அல்லது ஆட்சியா? என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு.அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் முதல் நடவடிக்கையாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் இந்தியாவிற்கென்று தனித்த (India Specific) கண்காணிப்பு உடன்படிக்கையை இறுதி செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் நேற்று இறுதி முடிவு எடுக்கக் கூடிய ஐ.மு.- இடதுசாரி கூட்டணிகளின் ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுக்காமல் கலைந்தது.அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிகள் அனுமதியளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் ஆட்சியை பணயம் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மத்திய அரசிற்கு ஏற்பட்டுவிட்டதென்றும், ஒப்பந்தத்தை துணிந்து நிறைவேற்றிட பிரதமர் மன்மோகன் சிங் முடிவெடுத்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதனை நேற்று இரவு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசிற்கு இன்னும் ஓராண்டுக் காலம் ஆயுள் உள்ள நிலையில், அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளதை ஒரு அரசியல் பிரச்சனையாக பார்ப்பதைவிட, இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஒரு பிரச்சனையாக அதனை அணுகுவதே சரியாக இருக்கும்.அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியம்தானா?இந்தக் கேள்விக்கு முதலில் பதில் காண வேண்டும். அரசின் நோக்கிலிருந்து அல்ல, மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நமது எரிசக்தித் தேவையை கருத்தில்கொண்டு பதில் காண வேண்டும்.ஆங்காங்கு மின் தடைகள். கோடைக் காலத்தில் அதிகபட்ச மின் தட்டுப்பாடு, அதன் காரணமாக மின்
தடை. இப்படிப்பட்ட சூழல்தான் இந்தியா முழுவதும் நிலவுகிறது. நமது அன்றாடத் தேவைக்கும், தொழில் உற்பத்திக்கும் ஏற்ற அளவிற்கு நமது மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம். இந்தியா தற்பொழுது ஆண்டிற்கு 1,30,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது நமது வளர்ந்துவரும் தேவையை ஈடுசெய்யவில்லை. நாளுக்கு நாள் தொழில் வளர்ச்சியும், வீட்டு மின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் நமது தேவை அதிகரித்துக் கொண்டே சென்றால் 2020ஆம் ஆண்டில் நமது மின் தேவை 2,50,000 மெகா வாட்டாக அதிகரிக்கும். அதாவது நமது மின் உற்பத்தி இந்த அளவிற்கு எட்டினால் மட்டுமே சமாளிக்க முடியும். இதில் மாற்றுப் பேச்சிற்கு இடமில்லை. நமது மின் தேவையை தற்பொழுது நீர் மின் நிலையங்களும், நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களும், எரிவாயுவைக் கொண்டு மின் தயாரிக்கும் நிலையங்களுமேபெருவாரியாக ஈடுசெய்கின்றன. நமது ஒட்டுமொத்தத் தேவையில் 3 விழுக்காடு அளவிற்கு அணு மின் நிலையங்கள் அளிக்கின்றன. அதாவது சற்றேறக் குறைய 4,800 மெகா வாட் அளவிற்கு அணு மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்கின்றன. நமது நாட்டின் நீர் மின் உற்பத்தித் திறன் குறைந்துவரும் நிலையில், நமது நாட்டிலுள்ள நிலக்கரி வளம் சுருங்கிவரும் நிலையில்- இப்பொழுதே பெரும் அளவிற்கு அயல் நாடுகளில் இருந்து நிலக்கரியைப் பெற்றுத்தான் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அளிக்கின்றோம். இந்த நிலையில் அணு சக்தித் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாகத் திகழும் நமது நாட்டிற்கு அணு மின் சக்தித் திறனை பன்மடங்கு அதிகரித்துக் கொள்ளும் திறன் உள்ளது. தற்பொழுது நமது நாட்டில் 17 அணு மின் நிலையங்கள் (Pressurized Heavy Water Reactors - PHWR) இயங்கி வருகின்றன. இவைகள் சில மாதங்களுக்கு முன் வரை அவைகளின் அதிகபட்ச உற்பத்தித் திறனில் 90 விழுக்காடு அளவிற்கு மின் உற்பத்தி செய்து வந்தன. ஆனால், இந்த மின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தொடர்ச்சியாக்க் கிட்டாததால் தற்பொழுது 50 விழுக்காடு திறனளவிற்கே இவைகள் மின் உற்பத்தி செய்கின்றன. இதுதான் அணு மின் சக்தி தொடர்பாக நமது நாடு எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனையாகும். அணு மின் உலைகளை வடிவமைத்து உருவாக்கிடும் தொழில் நுட்பத்திறன் நம்மிடம் உள்ளது. நமது அணு மின் உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எரிபொருள் கழிவை மறு சுழற்சி செய்து, கழிவிலிருந்து கிட்டும் புளுடோனியத்துடன் யுரேனியத்தைக் கலந்து அதனை Fast Breeder Reactor (FBR) என்றழைக்கப்படும் அதி வேக ஈனுலையில் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ளோம். அதன் அத்தாட்சியே கல்பாக்கத்தில் நாம் நிறுவிவரும் மாதிரி அதிவேக ஈனுலையாகும். இது 2010 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்குகிறது.இதற்கு அடுத்த கட்டமாக - நமது நாட்டில் மிக அதிகமாக்க் கிடைக்கும் தோரியம் எனும் அணுப்பொருளை யுரேனியமாக உருமாற்றி அதனை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திறன் சோதனையில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காமினி என்ற பெயரில் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள சோதனை அணு உலையில் அந்தப் பணி வேகமாக நடந்தேறி வருகிறது.இப்படி அணு சக்தித் தொழில் நுட்பத்தில் துரித கதியில் முன்னேறிவரும் நமது நாட்டிற்கு பெருங்குறையாக உள்ளது குறைவான யுரேனிய வளம். மேகாலயா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் யுரேனிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கம் அமைத்து அந்தக் கனிம வள உற்பத்தியைப் பெருக்குவதில் மத்திய அரசின் யுரேனிய கழகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
நமது நாட்டிலுள்ள யுரேனிய வளம் 90,000 டன்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய அணு மின் உற்பத்திக் கழகத் தலைவர் எஸ்.கே. ஜெயின், இதை வைத்து 10,000 மெகா வாட் அளவிற்கு நம்மால்
webdunia photo
FILEமின் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அதாவது 500 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 20 அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய இருப்பு மட்டுமே நம்மிடம் உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கிடைக்கும் கழிவை மறு சுழற்சி செய்து ஈனுலைகளில் மின் உற்பத்தி செய்யலாம் என்றாலும், நமது நாட்டின் அதிகரித்துவரும் தேவையை ஈடுகட்ட வேண்டுமெனில் நாம் அயல் நாடுகளிலிருந்து யுரேனியத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.ஆனால், வல்லரசுகள் ஆன அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் நமது நாட்டை ஒரு அணு ஆயுத வல்லரசாக ஏற்காத நிலையிலும், NPT என்றழைக்கப்படும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடு என்ற காரணத்தினாலும், 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து நம்மீது விதிக்கப்பட்ட தடையினாலும் ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து யுரேனியம் எரிபொருளை பெற இயலாத ஒரு நிலை உள்ளது.இந்த நிலையில் இருந்து - இதைத்தான் ‘தனிமைப்படுத்தப்பட்ட நிலை’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார் - நம்மை மீட்டுக்கொள்ளவே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியமாகிறது. அதனால்தான், அணுத் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு பெற்றிருந்தாலும், நமது நாட்டில் கிடைக்கும்
webdunia photo
FILEதோரியத்தைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை நாம் உருவாக்கும் வரை - நமக்கு யுரேனியம் எரிபொருள் தேவை. அதற்கு இந்த ஒப்பந்தம் அவசியம் என்று பெங்களுருவில் இன்று நடந்த விழா ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார். “இந்த ஒப்பந்தம் முழுக்க, முழுக்க நமது சமூக ரீதியிலான அணு மின் சக்தி தேவையை நிறைவு செய்வதற்கான ஒப்பந்தமாகும். தற்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 130 கிகாவாட் ஆகும். இதனை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 250 கிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். தற்பொழுது அணு மின் சக்தியின் பங்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 விழுக்காடாக உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி உற்பத்தி 40,000 மெகாவாட்டை எட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்று வருகிறது” என்று நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பல்தேவ் ராஜ் கூறினார். அணு சக்தியின் மூலம் 40,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கை எட்ட இந்த ஒப்பந்தம் தேவை.ஆக, நமது நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்க, அணு மின் சக்தியை அதிகரித்திட இந்த ஒப்பந்தம் அவசியம். அதில் இரு வேறுபட்ட கருத்திருக்க நியாயமில்லை. இதனை உணர்ந்திருந்திருந்தும் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரிகள் எதிர்க்கக் காரணம்?நாளை பார்ப்போம்...
நமது நாட்டின் அதிகரித்துவரும் எரி சக்தித் தேவையை ஈடுசெய்ய நீர் மின், அனல் மின் சக்தி உற்பத்தியைப் பெருக்குவதைப் போல, அணு மின் சக்தி உற்பத்தியைப் பெருக்கவேண்டியது அவசியமாகிறது என்பதைப் பார்த்தோம்.அதற்கு, நமது அணு உலைகளுக்குத் தேவையான அளவிற்கு நம்மிடம் யுரேனியம் எரிபொருள் இருப்பு
webdunia photo
FILEஇல்லாமையும், இதனை அயல் நாடுகளிடமிருந்துப் பெற இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அவசியம் என்பதையும் பார்த்தோம்.ஆனால், இதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு காட்டி வருவது ஏன்? என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், நமது மூத்த அணு விஞ்ஞானிகள் சிலர் காட்டிவரும் எதிர்ப்பை புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகள்!இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த சர்வதேச அணு சக்தி முகமையுடன் (International Atomic Energy Agency - IAEA) இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை (India specific agreement) இறுதிசெய்ய இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருந்த (அது நிறைவேறாத) நிலையில், நமது நாட்டின் மூன்று மூத்த அணு விஞ்ஞானிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.கடந்த செவ்வாய்க் கிழமையன்று, இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐய்யங்கர்,அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபால கிருஷ்ணன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஏ.என். ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அந்த அறிக்கையில், சர்வதேச அணு சக்தி முகமையுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவசர கதியில் நிறைவேற்றிட வேண்டாம் என்று மத்திய அரசிற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் ஹென்றி ஹைட் சட்டத்தை நிறைவேற்றிய போதே அதில் நமது அடிப்படை உரிமைகளில் தலையிடுமாறு இருந்த விதிமுறைகளை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தவர்களில் இந்த மூன்று விஞ்ஞானிகள் முக்கியமானவர்கள் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அடிப்படையானது சர்வதேச அணு சக்தி முகமையுடன் நாம் செய்து கொள்ள வேண்டிய கண்காணிப்பு ஒப்பந்தமாகும். இந்த
ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக இந்திய அணு சக்திக் குழு வியன்னாவில் அணு சக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா எதிர்பார்த்த பல அம்சங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க அணு சக்தி முகமைக் குழு மறுத்ததாகவும், அதனால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன்பிறகு பேச்சுத் தொடர்ந்து, தற்பொழுது அணு சக்தி முகமையின் ஆளுநர்களிடம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அரசின் கோரிக்கையை இடதுசாரிகள் மறுத்துவிட, அதே நேரத்தில் அணு விஞ்ஞானிகளின் எதிர்ப்பும் வெளியாகியுள்ளது.”சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்திவரும் பேச்சு வார்த்தைத் தொடர்பாக நிலவிவரும் ரகசியமும், இந்த ஒப்பந்தம் குறித்து ஊடகங்கில் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் செய்திகளும், சில அமைப்புக்களின் குறுகிய நோக்கங்களும், இப்பிரச்சனை பற்றிய பொது மக்களின் அறியாமையும் நமது நாட்டை ஆபத்தான பாதையில் கொண்டு செல்வதாக” இம்மூன்று விஞ்ஞானிகளும் தாங்கள் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். சர்வதேச அணு சக்தி முகமையுடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி, ஐ.மு. கூட்டணி - இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், சுதந்திரமான அணு சக்தி நிபுணர்களிடமும் விவாதித்தப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மூன்று விஞ்ஞானிகளும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அணு சக்தி முகமையை மத்திய அரசு அணுகிவரும் விடயத்தில் நமது விஞ்ஞானிகளிடையே ஒரு அமைதியற்ற தன்மை நிலவி வருகிறது என்று கூறியுள்ள இவர்கள், சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்திய பேச்சுவார்த்தைத் தொடர்பாக எழுப்பியுள்ள கேள்விகள் இதுதான்:1. இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பை மேற்கொள்ள ஒப்பதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டமும், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்தமும், சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட ஒப்புக்கொள்ளப்பட்ட நமது அணு மின் உலைகளுக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாகப் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை. அந்த உறுதியை பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ.) நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா பெற்றுள்ளதா? நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற அணு சக்தி முகமை உறுதியளித்துள்ளதா?2. அணு உலைகள் கண்காணிப்பில் ஈடுபடும் அணு சக்தி முகமை, சந்தேகத்தின் அடிப்படையில் நமது ராணுவ மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு தொடர்பான - அதாவது கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட - அணு உலைகளையும், மையங்களையும் ஆராயும் உரிமை (Intrusive inspection) கொண்டதாகும். இதனைத் தடுக்க, அணு சக்தி முகமையுடன் கூடுதல் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.3. இந்த ஒப்பந்தத்தின் கீழ் நாம் பெறப்போகும் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்தியப்பின் மறு சுழற்சி செய்துகொள்ளும் அனுமதியை 123 ஒப்பந்தம் தெளிவாக உறுதி செய்யவில்லை. மாறாக, அதி நவீன மறு சுழற்சி மையம் நிறுவப்பட்டு அங்கு அதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்குப் பல ஆண்டுகளும், பெரும் முதலீடும் தேவைப்படும் என்பது மட்டுமின்றி, இதனை செயல்படுத்த அதற்கென்று தனித்த ஒரு ஒப்பந்தத்தையும் அணு சக்தி முகமையுடன் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதா?ஆகிய அடிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்தோ (Atomic Energy Commission) இதுவரை பதில் தரப்படவில்லை.யுரேனியம் வழங்கலை உறுதி செய்யாத ஒப்பந்தம்!இது மட்டுமல்ல, இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில விவரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.நமது நாட்டின் எரி சக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த ஒப்பந்தம் அவசியம் என்று அரசும், பிரதமரும் கூறிவருவதை இவர்கள் ‘மாயை’ என்று வர்ணித்துள்ளார்கள்.இந்த ஒப்பந்தத்தின் கீழ் அயல் நாடுகளில் இருந்து நாம் வாங்கும் அணு உலைகள் மிகவும் விலையுயர்ந்தவை என்பதால், அவைகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் மின்சாரத்தின் விலை அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், அணு தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளில் இருந்து நாம் பெறுவதை ஹைட் சட்டத்தின் வாயிலாக வாஷிங்டன் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளனர்.அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் நம்மை கட்டுப்படுத்தாது என்று மத்திய அரசு கூறுவது அடிப்படையற்றது என்றும், அதனடிப்படையிலேயே 123 ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டுள்ளது, அதனால்தான், அணு சக்தி தொடர்பான ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் நமது அயலுறவு கொள்கைகள் குறித்த விதிமுறைகள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகிறது, ஆனால் அதில் நமது நாட்டின் அயலுறவு கொள்கை பற்றி குறிப்பிட்டிருப்பது ஏன் என்று இவர்கள் எழுப்பியுள்ள கேள்வி அர்த்தம் பொதிந்ததாகும்.ஒரு நாட்டில் எந்த ஒரு பொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும், அதனை நிவர்த்தி செய்ய அப்பொருள் மிகுதியாக உள்ள அயல் நாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். அதே அடிப்படை கொண்டதுதான் நம்மைப் பொறுத்தவரை இந்த அணு சக்தி ஒப்பந்தமும். நமது யுரேனியம் தேவைக்காக செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்திற்காக அதோடு தொடர்பற்ற விடயங்களை ஒப்பந்தத்தில் சேர்ப்பதேன்? என்பதற்கு அரசு விளக்கமளித்திட வேண்டும்.எனவே விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முழுமையான விளக்கமளித்து அதன் மூலம் நாட்டு
மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.(இடதுசாரிகளின் எதிர்ப்பிற்கு என்ன அடிப்படை என்பதை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு விளக்கி அறிக்கை வெளியிட்டுவிட்டதால் அது குறித்து எதையும் கூற வேண்டிய அவசியம் இல்லை - ஆசிரியர்)
நன்றி வெப் உலகம்.காம்
அணு சக்தி ஒப்பந்தம்: அவசியமும் சர்ச்சையும்
விலையேற்ற விளையாட்டு
நாட்டின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் கனவு கண்டதுண்டா. நல்லது. இதோ, அந்த பதவியில் அமர்ந்து செயல்பட உங்களுக்கு ஓர் வாய்ப்பு. இப்போது நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரண மக்களை பட்ஜெட் பாதிக்காத வகையில் சமாளிப்பதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவாலான பணி. அதை எப்படி சிறப்பாக செய்வது என இந்த விளையாட்டு மூலம் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.பிரதமர் மன்மோகன் சிங் ( அதாவது நீங்கள்) தாங்கி நிற்கும் இந்த பலகை மீது தான் சாதாரண மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது பொருட்கள் மீதான விலையேற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அந்த பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். அதை தாங்கும் சாதாரண மக்கள் கீழே விழுந்து விடக்கூடாது. சாதாரண மக்கள் கீழே விழாமல் சமாளிப்பது உங்கள் சமர்த்து. பலகை மீது நிற்கும் மனிதர் மீது, மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பொருளாக இறங்கும். அப்படி அந்த பொருள் விழும்போது மனிதன் நிலைதடுமாறுவான். ஆனால் அவனை நடுநிலையாக்கிவிட்டு பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். பொருள் கீழே விழுந்தால் உங்களுக்கு புள்ளிகள். ஆனால் மனிதன் விழுந்துவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும்.
நன்றி வெப் உலகம்.காம்
Labels: நாட்டு நடப்பு
ஆண் மலட்டுத்தன்மை போக்க கைகொடுக்குது சுண்டெலி
சுவா பாலோ: பிரேசில் நாட்டில் உள்ள கெர்க்கிஸ் ஆராய்ச்சி மையத் தில் உள்ள நிபுணர்கள் ஆண் மலட்டுத் தன்மை போக்குவது குறித்து ஆராய்ச்சி மேற் கொண்டனர். சுண்டெலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர். ஆய்வு அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: சுண்டெலிகளின் பற்களின் இடையே உள்ள சதைப்பகுதியில் இருந்து முதலில் திசுக்களை எடுத் தோம். எலிகளை பொறுத்தவரை, பற்களில் இந்த பகுதியில் தான் அதிக அளவு ஸ்டெம் செல் கிடைக்கிறது. அந்த வகையில், எங்களின் அடுத்த முயற்சியாக , சுண் டெலியின் பல் பகுதியில் இருந்து ஸ்டெம் செல் எடுத்து, அதை ஆண் எலியின் இன விருத்தி உறுப்பில் செலுத்தினோம். இப்படி செலுத்திய பின், அந்த சுண் டெலியை கண்காணித் தோம். அதில் இருந்து விந்து வை அது உற்பத்தி செய்தது. ஆண்களின் விந்துக்கு ஈடாக இவற்றின் விந்து இருக்கிறது. எலிகளுக்கு உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதிக அளவு ஸ்டெம் செல் பரவி இருக்கிறது. இதயம் முதல் மூளை தசைகள் வரை எங்கும் ஸ்டெம் செல் எடுக்க முடியும். இந்த விந்தை பயன்படுத்தி, கருமுட்டையை உருவாக்க முடியும் என்பதையும் பரிசோதனையில் இருந்து கண்டுபிடித்துள்ளோம். மனிதர்களுக்கும் இதை செலுத்தி செயற்கை கருவூட்டலுக்கு வழி செய்வது பற்றி ஆராய்ந்து வருகிறோம். எலியின் கருப்பையில் இருந்தே விந்தை கருமுட்டையாக மாற்றி, வாடகைத்தாயின் கருவில் பொருத்தவும் முடியும். அதற்கும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆண் மலட்டுத் தன்மையை போக்க மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் முதன் முறையாக சுண்டெலிகளும் இதற்கு உதவும் என்பது இப்போது தான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.
நன்றி தினமலர்
Labels: மருவத்துவ செய்திகள்
வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சாவல் விடும் பா.ம.க எம்.எல்.ஏக்கள்
பா.ம.க.வின் ஊழல் எம்.எல்.ஏ.க்களைச் சாட்டையால் அடிப்பாரா ராமதாஸ்?' என்று கடந்த இதழில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எழுப்பியிருந்த கேள்வி, பா.ம.க. தரப்பை ரொம்பவுமே சூடேற்றி விட்டது. சேலத்து மும்மூர்த்திகளாக இருந்து வீரபாண்டி ஆறுமுகத்தை ஆரம்பம் முதலே மிகவும் கடுமையாக எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் வெளிப்படையான மோதலுக்குக் காரணமாக இருந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்களான ஓமலூர் தமிழரசு, இடைப்பாடி காவேரி (டெல்லி சென்றிருந்ததால் தாரமங்கலம் எம்.எல்.ஏ. கன்னையன் மிஸ்ஸிங்) ஆகியோர் பா.ம.க.வின் பொதுக்குழுக் கூட்டத்துக்காக வந்திருந்தவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை சேலத்தில் நம்மைச் சந்தித்தனர். சேலம் மாவட்டத்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பாக ஓமலூர் எம்.எல்.ஏ. தமிழரசு பேசினார்...
"எங்கள் மீது களங்கம் கற்பிக்க படாதபாடு படும் அமைச்சர் வேண்டுமென்றே எங்கள் மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை இட்டுக்கட்டிக் கூறியிருக்கிறார். நாங்கள் தப்புச் செய்திருந்தால் எங்களைக் கட்சியிலேயே மருத்துவர் அய்யா விட்டு வைத்திருக்க மாட்டார். பொறுப்பான அமைச்சர் பதவியிலிருந்துகொண்டு பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைக் கூறக் கூடாது. மருத்துவர் அய்யாவிடம் கடிதம் எழுதி நாங்கள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களைத் தந்ததாகச் சொல்லும் அமைச்சர், அதைப் பத்திரிகைகளின் மூலமாக வெளியிடத் தயாரா...? எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுவிட்டால் சாட்டையால் மட்டுமல்ல, வேறு எதைக் கொண்டு அடித்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் அதே போலத் தன்னையும் ஆட்படுத்திக் கொள்ள அமைச்சர் தயாரா....?'' என்று ஆவேசமாகத் தொடங்கியவரிடம் நாமும் கேள்விகளை முன் வைத்தோம்.
`1991-ல் இருந்து பதவியில் இருந்த பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரும் லஞ்சமே வாங்கவில்லையா?' என்ற அமைச்சரின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன...?
"எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களாக இருப்பவர்கள் லஞ்சம் வாங்கித்தான் அரசியல் நடத்தியாக வேண்டும் என்ற அமைச்சரின் எண்ணம்தான் அவரது கேள்வியாக வெளிப்பட்டிருக்கிறது. 1991-ல் இருந்து பதவியில் இருந்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பற்றி கேள்வி எழுப்பியிருக்கும் வீரபாண்டியார், 1962-லிருந்தே எம்.எல்.ஏ.வாக இருந்தவர். லஞ்சம் வாங்கித்தான் சட்டமன்ற உறுப்பினராக இத்தனை ஆண்டுகளாக அவர் பணியாற்றி வந்தாரா என்பதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லது.
அமைச்சர் பொறுப்பை இவர் ஏற்ற நாளிலிருந்து அரசு வேலை வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அமைச்சரது மகன் ராஜா, தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ், உதவியாளர்கள் சேகர், கௌசிக பூபதி போன்றவர்கள் வழியாக தினம்தினம் வசூலாகும் கதையெல்லாம் எங்களுக்குத் தெரியாதது அல்ல. அனைத்துத் துறைகளுக்கும் செல்ல வேண்டியதை அமைச்சர் ஒருவரே தனியாக ஒதுக்கிக் கொள்கிறார் என்று அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே அதிருப்தியில் இருக்கிறார்கள்.''
`ஹிட்லர் ராஜாங்கம் நடத்துகிறார் அமைச்சர் வீரபாண்டியார்' என்று உங்களை பேட்டி தரச் சொன்னதே ராமதாஸ்தான் என்று பத்திரிகையாளர்களிடம் நீங்கள் கூறியதாக வீரபாண்டியார் தெரிவித்திருக்கிறாரே....?
"அமைச்சர் சேலம் மாவட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்து கொண்டு அரசு விழாக்களில் எங்களைப் புறக்கணித்து வந்தார். எங்கள் தொகுதிக்கான நலத் திட்டங்கள் தொடர்பே இல்லாத வேறு ஒரு தொகுதியில் வைத்து அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டன. இதையெல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ளமுடியாமல்தான் அதுபோன்ற ஒரு பேட்டியினைக் கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இது கட்சியின் தலைமைக்கோ மருத்துவர் அய்யாவுக்கோ தெரிவித்த பின் தரப்பட்ட பேட்டியே அல்ல. எனவே, பத்திரிகையாளர்களிடம் நாங்கள் சொன்னதாக அமைச்சர் தெரிவித்திருக்கும் தகவல் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். ஆதாரத்துடன் அதை அமைச்சர் நிரூபித்தால் எதற்கும் கட்டுப்பட நாங்கள் தயார்.''
கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சீண்டியபோதும் பொறுமையாக இருந்ததாக அமைச்சர் கூறியிருக்கிறாரே?
"நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலின் போது ஓமலூரில் என்னைத் தாக்கி கொலை செய்ய சேலத்திலிருந்து தி.மு.க.வைச் சேர்ந்த ரவுடிகள் வந்திருந்தார்கள். என்னைக் கொலை செய்ய முயற்சி செய்து அது தோல்வியுற்றதால், தப்பியோட முயன்றவர்களில் ஒருவனை பொதுமக்களே விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அமைச்சர் வீரபாண்டியாரிடம் இதைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கேட்டிருந்தேன். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, நான் கலாட்டா செய்ததாக மூன்று பிரிவுகளில் என் மீதே பொய் வழக்குப் போட்டனர். கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்ட போது பதறி நடவடிக்கை எடுக்காமல் பொய் வழக்குப் போட்டுத் தொல்லை கொடுத்த வீரபாண்டியார், கூட்டணி தர்மத்தைப் பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போல இருக்கிறது.''
மனம் விட்டுச் சொல்லுங்கள்... வன்னியர்களுக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியும், வீரபாண்டி ஆறுமுகமும் பாடுபடவே இல்லையா?
"1972-ம் ஆண்டு வரையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாகத்தான் அரசால் வன்னியர் சமூகம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதை 72-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது நீக்கி பிற்பட்ட இனமாக மற்ற சாதியினருடன் இணைத்து பூரிப்படைந்தவர்தான் கருணாநிதி. அதைப்பற்றி எந்தவிதமான எதிர்ப்பும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர்தான் வீரபாண்டி ஆறுமுகம். அதன் பின்னர், பலவிதமான போராட்டங்களின் முயற்சியாக 1987-ல் தான் மீண்டும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்கள் சேர்க்கப்பட்டனர். இடைப்பட்ட 15 ஆண்டு காலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் வன்னியருக்கு மிகப்பெரிய நிரப்ப முடியாத பின்னடைவு ஏற்பட்டதை வன்னிய மக்கள் இன்னமும் மறக்கவில்லை. 15 ஆண்டு காலம் வன்னியர் சமூகத்தை இருளில் தள்ளிய துரோகம் ஒன்றே இவர்கள் இருவரும் வன்னிய இனத்துக்காகப் பாடுபட்டதற்கான மிகப் பெரிய அத்தாட்சி. தன் கட்சியைச் சேர்ந்த வன்னியர்களையே தலைதூக்க விடாமல் தட்டி ஒடுக்கி வைத்திருந்தவர்தான் வீரபாண்டியார். இதற்கு நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.''
`பா.ம.க.வில் இருந்தவர்களை ஓரம் கட்டிவிட்டு குடும்ப அரசியலை ராமதாஸ் நடத்துகிறார்' என்ற வீரபாண்டியாரின் குற்றச்சாட்டு பற்றி?
"குடும்ப அரசியல் பற்றிப் பேச அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அருகதையே இல்லை. தன்னுடைய மூத்த மகன் செழியனுக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்ற மூன்று பதவிகளை ஒரே சமயத்தில் தந்தவர். சென்ற உள்ளாட்சித் தேர்தலின் போது தனது மனைவி, மருமகள், மகன் என அனைவரையும் தேர்தலில் நிறுத்தி அழகு பார்த்தவர். இன்றைக்கும் தன்னுடைய மகனை எம்.எல்.ஏ.வாக்கி சேலம் மாவட்ட தி.மு.க.வில் தனக்கு அடுத்த வாரிசாக உருவாக்கி வருபவர். தன்னுடைய தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராக்கி பல பொறுப்புகளை கூடுதலாக வாங்கித் தந்தவர் என்ற பெருமைக்குரிய அமைச்சர் வீரபாண்டியாரா குடும்ப அரசியல் பற்றி விமர்சிப்பது? நல்ல வேடிக்கை!'' என்றார் தமிழரசு எம்.எல்.ஏ.
Labels: அரசியல்
குமுதத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் சுர்ர்ர்.....பேட்டி
முன்பைவிட இன்னும் தெம்பாகவும், நம்பிக்கையுடனும் பேசுகிறார், தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த். அவ்வப்போது அவருக்கேயுரிய நமட்டுச் சிரிப்பு!
தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற்றப் பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
``இந்தப் பேச்சு ஏற்கெனவே வந்துவிட்டது என்று ராமதாஸ் சொல்கிறார். பழைய கேஸட் என்கிறார். கலைஞரும் அதை மறுக்கவில்லை. இப்போது ஏன் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கிறது என்று புரியவில்லை. அப்பவே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் அவர்களுக்குள் நடக்கும் சண்டை. அதற்குமேல் அவர்கள் கட்சியைப் பற்றிப் பேச விரும்பவில்லை.''
அரசியலில் எளிமை, தூய்மைபற்றி அதிகம் பேசுகிறீர்கள். நீங்கள் கட்சிக் கூட்டங்களுக்குப் போகும்போது ஒரு கிலோ மீட்டருக்கு ட்யூப் லைட் போட்டு பெரிய பெரிய கட்அவுட்கள் வைக்கிறார்கள். பொதுமக்கள் கரண்டில் கொக்கி போடுகிறார்கள்.மற்ற கட்சிகள் செய்கிற ஆடம்பரத்தைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்?
``பப்ளிக் கரண்ட் எடுக் கிறோம் என்பதை மட்டும் திருத்திக்கொள்ளுங்கள்.ஆளுங்கட்சிக்காரர்கள் வேண்டுமானால் செய்வார்கள். நாங்கள் நிச்சயம் அப்படிச் செய்வதில்லை. பேனர், கட்_அவுட் விஷயத்தில் ஆளுங்கட்சிக்காரர்கள் ஏன் அவ்வளவு செய்கிறார்கள்? அப்புறம் அடுத்தவன் செய்யமாட்டானா?''
ஆளுங்கட்சிக்கு கடிவாளமாக இருக்க வேண்டிய ஓர் எதிர்க்கட்சியின் தலைவி, இரண்டு மாதமாக கொடநாட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பது சரியா?
``ஸ்டாலின் எப்படி பாங்காக், லண்டன் என்று சொல்லிக் கொள்ளாமல் போனாரோ அது மாதிரிதான்! அது என்னவென்று தெரிந்தால்தான் இதைப் பற்றியும் சொல்லமுடியும். டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு மந்திரி போகலாமா? எதற்குப் போனார் என்று அரசாங்கமே சொல்லாதபோது எதற்கு அந்தக் கட்சித் தலைவி பற்றிப் பேசுகிறீர்கள்? புரோட்டோகால் என்று ஒன்று இருக்கிறதே. அதை தரவே இல்லை இந்த அரசு. கேட்டால் சொந்தக் காரணங்களுக்காகப் போனார் என்கிறார்கள். சொந்தக் காரணம் என்றால், அப்புறம் ஏன் டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் போகிறார்? போகக்கூடாது என்கிறார்கள்! டெல்லியிலிருந்து ஒரு கட்சியை இந்தியா முழுக்க நடத்தும்போது, கொட நாட்டுலேர்ந்து நடத்தக்கூடாதா?''
சமீபத்தில் கலைஞர் செய்த பெரிய தவறு என்று எதைச் சொல்வீர்கள்?
``விலைவாசி உயர்வைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறாரே அதுதான் பெரிய தவறு. தேர்தலில் ஜெயிக்கிறதை மட்டும்தான் பேசறார். மக்கள் அவதியைப் பற்றிப் பேசுவதே இல்லை. நான்கு விழாக்களுக்குப் போக வேண்டும், அங்கு போய் அதை நடணும். இங்கு போய் இதை நடணும். உடனே நதிகளை இணைக்கிறேன் என்று பேசுகிறார். டெல்லிக்குப் போகிறேன் என்கிறாரே எதற்கு? கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப் போகிறாரே தவிர, மக்கள் பிரச்னைகளை பேசவா போகிறார்? உடனே இதைப் படித்துவிட்டு மக்கள் பிரச்னைக்குத்தான் போகிறேன் என்று இரண்டாவது நாளே அறிக்கை தருவார்.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை இவர் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் விலையைக் குறைச்சதும் ரொம்பக் குறைவு! சாதாரண டீசல் கிடைக்கவே இல்லை. வேலூர் போறேன்... வழியெல்லாம் நிற்கிறது லாரிகள் டீசல், பெட்ரோல் கிடைக்காமல். அவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்களே என் கிற பொறுப்பு கூட முதல்வருக்கு இல்லை! அவருக்கு சுயநலம்தான் முக்கியம்.''
தே.மு.தி.க.வில் உங்கள் மனைவிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதே... எங்கு பார்த்தாலும் `அண்ணியாரே வருக...' என்று போஸ்டர்கள்?
``என்னால் போக முடியாமல் போகிறபோது அவர் போகிறார். அப்போது முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருக்கும். மனைவி வேண்டாம் என்று சொன்னாலும் கட்சிக்காரர்கள் விடுவதில்லை. பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரச் சொல்லிவிட்டு மனைவியை ஃபோகஸ் செய்வது தப்பு என்றால் எப்படி?''
கூட்டணி இல்லை என்று சொல்லி விட்டாலும், அடுத்தது என்ன என்பதில் ஒருவித குழப்பத்தில் நீங்கள் இருப்பதாகத் தெரிகிறதே?
``எந்தவித குழப்பமும் இல்லை... தெம்பாகத்தான் இருக்கிறேன். மாயாவதியோ, எடியூரப்பாவோ எப்படி ஜெயித்தார்கள்? கூட்டணி பலத்திலா?நாங்கள் என்ன சொல்கிறோமோ,தீர்மானம் நிறைவேற்றுகிறோமோ அதைத்தான் தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது. எங்கள் தீர்மானங்களை இடம் மாற்றி தங்களுடையதாகப் போடுகிறார்கள். `நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்' என்றால் தங்கம் தென்னரசு கிண்டலடிக்கிறார்! அண்ணா சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருது. கட்சி என்றால் அது ஆட்சியைப் பிடிக்கத்தான். பெட்டைக் கோழி என்றால் அது முட்டையிடத்தான்!''.
Labels: அரசியல்
புதுமையை வரவேற்போம்
சுப்ரமணியபுரம்
காதலையும், வீரத்தையும் சொல்லி பழகிய தமிழ்சினிமாவுக்கு இந்த புதியவர்கள் காட்டியிருக்கிற துரோகம் புதுசு. நாம் ஏதோ ஒரு கதையை யூகித்து அமர, 'அரைச்ச மாவு' ஆட்கள் நாங்கள் இல்லையென்று வேறு திசையில் கதையை விரட்டி, ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சசிக்குமார். பாலா, அமீருடைய வளர்ப்பு! அதை சொல்லாமலே புரிந்து கொள்ள வைக்கிறார் படம் நெடுகிலும்.
சுப்ரமணியபுரத்தில் தறுதலையாக திரிகிற ஐந்து நண்பர்களின் கதை. இதில் ஜெய் மட்டும் பெரிய வீட்டு பிள்ளையான ஸ்வாதியை காதலிக்க, ஸ்வாதியின் குடும்பத்தால் ஐந்து நண்பர்களும் என்னாகிறார்கள் என்பது மீதி. முதல் பாதியில் காதலும் கலகலப்புமாக நகர்கிற கதை, இரண்டாம் பாதியில் அரிவாளும் ரத்தமுமாக திசைமாறும் போது கலங்கிப் போகிறார்கள் ரசிகர்கள்.
மனசுக்குள் அப்படியே ஒட்டிக் கொள்கிறார் ஸ்வாதி. அந்த அகலவிழி பார்வையும், அசர வைக்கும் சிரிப்பும் மனதை விட்டு அகலவே நாட்கள் பிடிக்கும். திருட்டுப்பார்வையிலிருந்து பிரமோஷன் ஆகி, நான் உங்ககிட்ட பேசணும் என்று போகிற போக்கில் ஜெய்யை அழைக்கிற காட்சியில் அசரடிக்கிறார். தன் கண்ணெதிரிலியே நடக்கும் அந்த சம்பவமும், அவர் அலறுகிற காட்சியும் மனதை பிசைகிற பயங்கரம்.
படம் முழுக்க இறுகிய முகத்தோடு உலா வரும் சசிக்குமாரை மலர்ந்த முகத்தோடு வரவேற்பார்கள் ரசிகர்கள். இவர்தான் இயக்குனர் என்றாலும், தேவைக்கு மிகாமல் தனது பாத்திரத்திற்கு 'பாத்தி' கட்டியிருப்பதை பாராட்டலாம். நண்பனின் கொலைக்கு காரணமான சமுத்திரக்கனியை வெறித்தனமாக சசிக்குமார் கொலை செய்கிற காட்சியை எப்படி சென்சார் அனுமதித்ததோ? நண்பன் கொலையுண்ட இடத்தில் சமுத்திரக்கனியின் தலையை போட்டுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கையில் சிலிர்த்துப் போகிறது.
சைக்கிள் கடை சித்தனுக்காக கஞ்சா கருப்பு மெனக்கெடும் காட்சிகள் சிரிப்பு தோரணம். சீரியல் செட் ஆர்டர் எதிராளிக்கு போன ரகசியத்தை, கருப்பு கண்டுபிடிக்கையில் தியேட்டரே சிரித்து சின்னாபின்னமாகிறது. இப்படியெல்லாம் சிரிக்க வைக்கிற கருப்பு, கடைசியில் ரசிகர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார். குணச்சித்திர வேடம் தெரியும். கருப்பு இந்த படத்தில் செய்திருப்பது துர்குணச்சித்திர வேடம்.
சமுத்திரக்கனியின் பதட்டமில்லாத வில்லத்தனத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு முறையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு இந்த ஐவர் கோஷ்டியை போட்டுக் கொடுக்கும் இவர், கடைசியில் நைசாக பேசி, ஜெய், சசியை கொலைகாரர்களாக்குவது நரித்தந்திரம். ஆசைப்பட்டால், வில்லனின் நாற்காலியை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம் சமுத்திரக்கனி.
அந்த ஊனமுற்ற இளைஞன் 'ஸ்டடியான' நடிப்புக்கும் ஒரு பலே! குறிப்பாக யுத்தகளத்தில் தானும் எறிந்து நண்பனுக்கும் சோடா பாட்டில் உதவி செய்கிறாரே, நெத்தியடி!
ஒளிப்பதிவில் ஒரு புது பாதை வகுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சுதிர். கஞ்சா கருப்பு நடந்து வரும் அந்த நீண்ண்ண்ட ஷாட்டில் அவரது அறிமுகத்தை துவக்கி வைக்கிற கேமிரா, அதே நீண்ண்ண்ட ஷாட்டில் அவரது முடிவையும் சொல்வது புதுசு.
ஜேம்ஸ் வசந்தன் இசை காதுகளுக்கு சுகம். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதால், பின்னணியில் இளையராஜாவின் பாடல்களை தாலாட்ட விட்டிருக்கிறார்கள். அதுவே நிறைவு. பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஆர்ட் டைரக்டர். இவர் காட்டியிருக்கும் 80-ம் வருடம் காலச் சக்கரம் மட்டுமே செய்யக்கூடிய அற்புதம்.
சில 'வரவு'கள் தமிழ்சினிமாவின் சொத்து! அதில் சசிக்குமாரையும் சேர்க்கலாம்... தாராளமாக!
நன்றி
தமிழ் சினிமா.காம்
Labels: சினிமா
