தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

உளவுத்துறையா?உறங்கும்துறையா?

கடந்த சனிக்கிழமை நடந்த டெல்லி குண்டு வெடிப்புகளில் அதிக பாதிப்பு இருந்த இடம் கரோல் பாக். பதின்மூன்று உயிர்ப்பலிகளையும், நாற்பது பேருக்கு உயிர்ப்பலியைவிடக் கொடுமையான காயங்களையும் ஏற்படுத்திய ஆறு குண்டுகளில் இரண்டு இங்கே வெடித்ததுதான். வெடிக்காத இன்னும் மூன்று குண்டுகளை கன்னாட் ப்ளேஸிலும் இந்தியா கேட் பகுதியிலும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
இறந்து போனவர்கள் மொத்தம் இருபது பேர். இருந்து, பயந்து சாகிறவர்கள் நூறு கோடி.
பெங்களூரு, அகமதாபாத்தைத் தொடர்ந்து எப்படியும் டெல்லிதான் அடுத்த குறி என்று கடந்த மாதமே எதிர்பார்த்தார்கள். சுதந்திர தின விழா சமயத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று எண்ணி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் ஒன்றுமில்லை. மிக சாமர்த்தியமாக, யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு சாதுவான செப்டம்பர் சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து, நடமாட்டம் அதிகமுள்ள மூன்று வர்த்தகப் பிராந்தியங்களில் வெடித்திருக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை மாலை 6.15-க்கு ஆரம்பித்து, அடுத்த முக்கால் மணி நேரத்தில் தலைநகரத்தைத் தலைகீழ் நகரமாகப் புரட்டிப் போட்டுவிட்டது, இந்தத் தொடர் குண்டு வெடிப்பு.
யார் காரணம்?
இந்தியன் முஜாஹிதீன் என்கிற பெயரை சமீபகாலத்தில் அடிக்கடி கேள்விப்படுகிறோம். லஷ்கர் ஈ தொய்பாவின் இந்திய ஏஜெண்ட் அமைப்பான சிமிக்கு ஒரு குட்டித்தம்பியாக அவதரித்திருக்கும் இயக்கம் என்று சொல்லப்படுகிறது. அகமதாபாத், பெங்களூரு, அதற்கு முன்னால் ஜெய்ப்பூர் என்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் தாங்கள்தான் செயல்பட்டோம் என்று சமர்த்தாக இ_மெயில் அனுப்புகிற - இதுவரை யாரென்று தெரியாத அமைப்பு இது. பெரும்பாலும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இயக்கம் என்றும், சிமியின் உத்தரப்பிரதேசக் கிளையில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் ஒரு சில தகவல்கள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன.
அது அவ்வளவு முக்கியமில்லை. குறிப்பாக இந்தத் தருணத்தில். நமது முக்கியக் கவலை, இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு இவர்கள்தான் காரணமா? ஏன் நமது உளவுத்துறையைக் காரணம் சொல்லக்கூடாது?
விஷயம் இருக்கிறது. குஜராத் குண்டுவெடிப்புகளின் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டவர்களுள் அபூ பஷீர் என்கிற ஒருவன் மிக முக்கியமானவன். இந்தியன் முஜாஹிதீன், சிமி இயக்கங்களுடன் சம்பந்தப்பட்டவன், அவர்களுடைய ஆள் என்று சொல்லி போலீஸ் அவனைக் கைது செய்து உள்ளே வைத்திருக்கிறது. விசாரணையில் அபூ பஷீர் வெளியிட்ட சில கருத்துகள் முக்கியமானவை. `அடுத்த குறி தலைநகர் டெல்லிதான். எல்லா ஏற்பாடுகளும் தயார். உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.'
இது அவன் சொன்னது. பத்து நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்னர் டெல்லிக்குச் சென்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, இந்த விசாரணை விவரங்களையும் டெல்லிக்கு வரவிருக்கும் ஆபத்து குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் தெரிவித்திருக்கிறார். அதாவது எச்சரிக்கை செய்திருக்கிறார்.
பிரதமர் இந்தத் தகவலை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வெறுமனே எப்போதும்போல் சோனியா தரிசனத்துக்குப் போயிருப்பார் என்று சொல்லிவிட முடியாது. நிச்சயம் உள்துறை வசமும் உளவுத்துறை வசமும் தெரிவித்திருப்பார்.
பத்து நாட்களுக்கு முன்பாக ஒரு தகவல் கிடைத்தும் பைசா பிரயோஜனமில்லை என்றால், அப்புறம் உளவுத்துறை எதற்கு? உப்புமா கிண்டி சாப்பிடுவதற்கா?
இந்தியாவின் அபாயம் இந்தத் தீவிரவாத இயக்கங்களல்ல. இவர்களை நோக்கி ஓரடிகூட எடுத்து வைக்க முடியாத நமது உளவுத்துறைதான்.இதற்கு முன் நடந்த எந்த ஒரு தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியையும் இதுவரை நாம் முழுமையாக அலசி ஆராய்ந்து தீர்வு கண்டதில்லை. சம்பந்தப்பட்ட இயக்கங்களே தாங்கள் யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டால் உண்டு. அப்படியும் கிட்டே நெருங்கியதில்லை. இவன்தான் செய்தது என்று யாரையும் சந்தேகத்துக்கு இடமின்றிக் கைது செய்ததில்லை. எல்லாம் சந்தேகத்தின் பேரில் நிகழ்த்தப்பட்ட கைதுகள்தாம். டிசம்பர் 13, 2001-ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் காஷ்மீர் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டப்படுகிறதே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.
என்ன செய்கிறது உளவுத்துறை? ஏன் இந்தக் கும்பகர்ணத் தூக்கம்?
விசாரித்தால் டிபார்ட்மெண்டே கட்சிகளையும் எம்.பி.க்களையும் கவனிக்கப் போயிருப்பதாகத் தெரியவருகிறது. மாதக்கணக்காக, வருடக்கணக்காக இதே வேலைதான். உள்நாட்டுப் பாதுகாப்பின் பொருட்டு இயங்கும் ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அத்தனை ஆபீஸர்களும் ஊழியர்களும் மத்திய அரசின் எடுபிடிகளாகத்தான் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தலைநகரில் நிகழ்ந்த குதிரை பேரத் திருவிழா சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி என்கிறார்கள்.
செய்ய வேண்டியதுதான். தப்பில்லை. அதே சமயம் தங்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் எதற்காக என்று எப்போதாவது சற்று யோசிக்கலாம். அதுவும் தப்பில்லை.
ஐ.பி.யின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும். காரணத்தை விளக்க வேண்டியதில்லை அல்லவா? தீவிரவாதப் பிரச்னை.
அடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிட்டி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பி.யின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணிப்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.
அடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. மக்களுக்கு இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.
இதெல்லாம் தவிர, ஒரு நாளைக்கு சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பி.க்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய - சீன யுத்தத்துக்குப் பிறகு ஸிகிகீ என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பி.க்கு இருக்கும் பணி இதுதான்.
மாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீஸுடன் எப்போதும் சுமுக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களை தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களைக் கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.
நமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் அத்தனை தீவிரவாத இயக்கங்களும் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., `ரா'வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது.
இன்றைய தேதியில் `ரா' எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானைக் கவனிப்பது. சமயமிருந்தால் அருணாசலப் பிரதேசத்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கொஞ்சம் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.
ஆனால் இதற்கே மூக்கால் அழுது கொண்டிருக்கிறார்கள். ராவின் இன்றைய மிக முக்கியமான உயர் அதிகாரி என்பவர், அலுவலகத்துக்கே பெரும்பாலும் வராதவர் என்கிறார்கள். அவரைப் பார்க்க வேண்டுமானால் கோல்ஃப் மைதானத்துக்குத்தான் போகவேண்டும். யாராவது இது பற்றிப் புகார் செய்தால் உடனே சோனியா காந்தி வீட்டுக்கு ஓடிப்போய் காலைக் கையைப் பிடித்து கெஞ்சிக் கூத்தாடி, தப்பித்துத் திரும்பிவிடுவார்... இப்படிப் போகிறது கதை. கேட்டால், தனக்கு உடம்பு சரியில்லை என்றும் பணியிலிருந்து விடுவித்துவிடும்படி கேட்டிருப்பதாகவும் அவர் சொல்லிவிடுவாராம்.
இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத முஸ்லிம் இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின்தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ராவின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பி.யால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ (Directorate General of Forces Intelligence) தீர்மானிக்கும். பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும், டி.ஜி.எஃப்.ஐ.யைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் கைக்கூலிகளாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து இங்குள்ள முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.
2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும், அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதும் நினைவிருக்கிறதா? பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.
எதற்கு இதெல்லாம்?
நமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் நமது இன்னொரு உளவு அமைப்பான ராவின் உதவியைக் கோரியிருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ராவே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பி.யால் என்ன செய்ய முடியும்?
அதனால்தான் குண்டு வெடிக்கிறது. ஜெய்ப்பூர், பெங்களூரு, அகமதாபாத், டெல்லி. அடுத்து தமிழ்நாடு என்கிறார்கள்.
குண்டு வெடித்த கொஞ்ச நாளைக்கு சென்ட்ரல் ஸ்டேஷனில் போகிற - வருகிறவர்களையெல்லாம் துண்டை உருவித் தோலுரித்துப் பார்ப்பது, அப்புறம் மறந்துபோய் குதிரை பேர எம்.பிக்களுக்கு கோழி பிரியாணி வாங்கிக்கொண்டு போவது என்று இருந்தால் ஏன் வெடிக்காது?இந்தியன் முஜாஹிதீன் என்கிற அமைப்பைப் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும். டெல்லி குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் இதே அமைப்புதான் முன்னதாக பெங்களூரு, அகமதாபாத், அதற்கும் முன்னால் (நவம்பர் 2007) காசி மற்றும் ஃபைஸாபாத் நகரங்களில் வெடித்த குண்டுகளுக்கும் பொறுப்பேற்றது. அப்போது காவல் துறையினரும் உளவுத்துறையினரும் `இந்தியன் முஜாஹிதீன் என்று யாருமில்லை. போலீஸை திசைதிருப்புவதற்காக சிமியும் ஹர்கத் உல் ஜிஹாத் ஏ இஸ்லாமியும் இப்படிப் பெயர் மாறாட்டம் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். ஹர்கத் உல் ஜிஹாத் ஏ இஸ்லாமி என்கிற பெயர் நமக்கு அறிமுகமானதே அந்த ஆண்டு நிகழ்ந்த ஹைதராபாத் குண்டுவெடிப்பின்போதுதான்.
உண்மையில் இந்த இயக்கங்களின் பெயர்கள் அத்தனை முக்கியமே இல்லை. வெளிநாடுகளிலிருந்து இவர்களை இயக்குபவர்களை நாம் நன்கறிவோம். சிமி என்றாலும் `ஹர்க்கத்' என்றாலும் இந்தியன் முஜாஹிதீன் என்றாலும், வேறு என்ன பெயர் சொன்னாலும் அனைத்தும் கருவிகளின் பெயர்கள்தாம். இயக்குபவர்கள் வேறு. சமீபகாலமாக, இந்தியாவில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களுக்கு ஓர் இந்தியப் பெயர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துத்தான் `இந்தியன் முஜாஹிதீன்' என்று நாமகரணம் செய்திருக்கிறார்கள்.
இதற்கு முக்கியமான காரணம், நாம் தொடர்ந்து இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் அங்கிருந்து செயல்படும் அமைப்புகளையும் இயக்கங்களையும் குற்றம் சாட்டுவதுதான். `அதெல்லாம் இல்லை. இதெல்லாம் உங்கள் உள்ளூர் ஆட்களே செய்துவரும் செயல்கள்தாம், எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை' என்று சொல்வதன் பொருட்டு, ஓர் இந்தியப் பெயர்!
இந்தப் பெயர்களையும் இவற்றின் பின்னணியையும் அலசி ஆராய்ந்துகொண்டிருக்காமல் உளவுத்துறையால் உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமா? என்பதுதான் மிச்சமிருக்கும் ஒரே கேள்வி. ஸீ

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive