தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 500 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுதவிர, மேலும் 200 மெகாவாட் மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று டில்லிக்கு வந்திருந்தார். எரிசக்தித் துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டேயையும், நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பகரூடியாவையும் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புகளின் போது தமிழகத் தில் நிலவும் மின் பற்றாக்குறை குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். இந்த சந்திப்புகள் குறித்து நிருபர்களிடம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது:
தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் மூலமாக 200 மெகாவாட் மின்சாரம் உடனடியாகவும், மேலும் 100 மெகாவாட் மின்சாரம் விரைவிலும் வழங்கப்பட உள்ளது. அதேபோல நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மூலமாக 200 மெகாவாட் மின்சாரம் உடனடியாகவும், மேலும், 100 மெகாவாட் மின்சாரம் விரைவிலும் தமிழகத்திற்கு வழங்கப்படவுள்ளது.
இதுதவிர என்.டி.பி.சி., நிறுவனம் மூலமாக 100 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தின் மின்சாரத் தேவை கடந்த ஆண்டைக் காட்டிலும் ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் ஒட்டு மொத்த மின் பற்றாக்குறை ஆயிரத்து 800 மெகாவாட் வரை உள்ளது. இதன்காரணமாக தினந்தோறும் சென்னையில் ஒன்றரை மணி நேரம் மட்டும் மின்தடை உள்ளது.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்தடை உள்ளது. கிராமப்புறங்களில் நாள்தோறும் காலை, மாலை, இரவு என சுழற்சி முறையில் மொத்தம் ஐந்து மணி நேரத்திற்கு மின்தடை செய்யப் படுகிறது. மத்திய அரசால் வழங்கப்படவுள்ள 500 மெகாவாட் மின்சாரத்தால் கிராமப்புறங் களில் நிலவும் மின்தடை ஓரளவுக்கு சரியாகவும் வாய்ப்புள்ளது.மின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில் பருவமழை சரியாக பெய்தாக வேண்டும். வடகிழக்கு பருவமழை பெய்தால், நீர் நிலைகள் நிரம்பி அதன்மூலம் நீர்மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். தவிர கூடங்குளம் அணுமின்திட்டத்தையும் நம்பியுள்ளோம். ஆயிரம் மெகாவாட் மொத்த திறன் கொண்ட இந்த திட்டம் டிசம்பரில் செயல்படத் துவங்கம்போது, தமிழகத்தின் பங்கான 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இதைக் கொண்டு மின்பற்றாக்குறை சமாளிக்கப்படும்.
நெய்வேலி நிறுவனத்தின் மொத்த திறன் இரண்டாயிரத்து 490 மெகாவாட். ஆனால், உற்பத்தி செய்யப்படுவதோ ஆயிரத்து 500 மெகாவாட் மட்டுமே. இதற்கு காரணம் நிலக்கரி தோண்டியெடுப்பதில் நிலவும் பிரச்னை. அங்குள்ள 2,3 மற்றும் 7 ஆகிய யூனிட்டுகள், சரிவர செயல்படவில்லை. இவையும் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சரிசெய்யப்பட்டு முழுவீச்சில் உற்பத்தி துவங்கும். தற்போது உற்பத்தி செய்யப்படும் ஆயிரத்து 500 மெகாவாட்டில் தமிழகத்தின் பங்கான 50 சதவீதம் கிடைத்து வருகிறது. இன்னும் 583 மெகாவாட் விரைவில் அளிக்கும்படி கேட்டுள்ளோம்.
மத்திய அரசு வழங்கப் போகும் மின்சாரத்தின் விலை சற்று அதிகம். யூனிட் ஒன்றுக்கு ரூ.ஏழு வரை விலை நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம் தான் தேவையே தவிர, விலை முக்கியமில்லை. தமிழகத்தில் 18 லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கும், 12 லட்சம் நெசவாளர் களுக்கும் தமிழக அரசால் மின்சாரம் வழங்கப்படுகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து இதுவரை மின்கட்டணத்தை உயர்த்தியும் இல்லை.மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப் படும் தமிழகத்தின் டீசல் அளவின் பங்கை 30 சதவீதத்துக்கு உயர்த்தும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறை தேர்தல் நேரத்து பிரச்னையாக இருக்கும் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. காரணம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி, இலவச "டிவி', காஸ் அடுப்பு உள்ளிட்ட பலவற்றை மக்களுக்கு அளித்துள்ளோம்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.
