தமிழ் சினிமாவில் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்த காமெடி நடிகர் என்று பெயர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. கலைவாணர் என்று அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் இன்றும் தமிழ் சினிமா நடிகர்களின் முன்னுதாரண கலைஞராக திகழ்கிறார். இவரது நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழிக்க முடியாதவையாக நிலைபெற்றுள்ளன.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவ. 29ம் தேதி கலைவாணர் பிறந்தார். சாதாரண வில்லுப்பாட்டு கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் சினிமா பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தார். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச் சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். அறிவியல் கருத்துகளையும், சீர்திருத்த கருத்துகளையும் பரப்ப வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். காந்திஜி மீது கொண்ட பற்றினால் தனது ஊரான நாகர்கோவிலில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார். அம்பிகாபதி, மதுரைவீரன், நல்லதம்பி போன்ற படங்களில் இவரது வேடம் பரவலாக பாராட்டப்பட்டது. பணம், மணமகள் போன்ற படங்களை இயக்கினார். அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்கு பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது. 1957ம் ஆண்டு ஆக. 30ம் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் மரணமடைந்தார். பிறருக்கு உதவுவதை கடமையாகவே கருதிய கலைவாணர் தனது இறுதி காலத்தை வறுமையில் கழித்தார்.
இன்று கலைவாணர் நூற்றாண்டு விழா!
தேசத்தின் ஹீரோக்கள் என்.எஸ்.ஜி., வீரர்கள்...!
மும்பை பயங்கரவாத சம்பவத்தில் நாட்டின் மானத்தை காப்பாற்ற தங்களது உயிரை பணயம் வைத்து செயல்பட்டு வருகின்றனர் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) கமாண்டோக்கள். தேசிய பாதுகாப்பு படை 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, பயங்கரவாதிகளால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை சமாளிப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநில போலீசாராலோ, மத்திய போலீசாராலோ கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் என்.எஸ்.ஜி.,களமிறங்கும். இதனால் போலீசார், துணை ராணுவம் போன்றவற்றின் பணியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இவர்களின் பணி. கடத்தல் தடுப்பு, மீட்பு பணி போன்றவற்றில் என்.எஸ்.ஜி., ஈடுபடுகிறது. இந்த அமைப்பு உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. என்.எஸ்.ஜி.,யின் பயிற்சி மையமும், வெடிகுண்டு தகவல் மையமும் அரியானாவில் உள்ளது. இதன் தலைமையகம் டில்லியில் உள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்துதான் கமாண்டோக்கள் விமானம் மூலம் அனுப்பப்படுகிறார்கள்.
பிரிட்டனின் "எஸ்.ஏ.எஸ்.,' ஜெர்மனியின் "ஜி.எஸ்.ஜி., 9' போன்ற பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவில் என்.எஸ்.ஜி., உருவாக்கப் பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. எஸ்.ஏ.ஜி., எனப்படும் "ஸ்பெஷல் ஆக்ஷன் குரூப்'. இதற்கு ராணுவத்தில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றொன்று எஸ்.ஆர்.ஜி., எனப்படும் "ஸ்பெஷல் ரேஞ்சர்ஸ் குரூப்'. துணை ராணுவம், மத்திய, மாநில போலீஸ்துறையில் இருந்து இதற்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
என்.எஸ்.ஜி.,யின் பணிகள்
*பயங்கரவாத தாக்குதலில் இருந்து குறிப்பிட்ட இடத்தையோ, கட்டடத்தையோ மீட்பது. *பயங்கரவாதிகளை நேரடியாக எதிர்கொண்டு வீழ்த்துவது.
*விமான கடத்தல் போன்ற சம்பவங்களை கையாள்வது.
*பயங்கரவாதிகளிடம் இருந்து பிணைக்கைதிகளை மீட்பது.
*அச்சுறுத்தலை சந்திக்கும் வி.ஐ.பி.,களுக்கு பாதுகாப்பு வழங்குவது.
*வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் இடங்கள், கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் சோதனை பணிகளை மேற்கொள்வது.
*சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானக் கடத்தலை தடுப்பது.
*வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அகற்றுவது.
*குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தகவல் சேகரிப்பது.
மிக முக்கியமான நடவடிக்கைகள்
1986 ஏப்ரல்: பயங்கரவாதிகளுக்கு எதிராக அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் "ஆபரேஷன் பிளாக் தண்டர்'.
1994 ஏப்ரல்: இந்தியன் ஏர்லைன்சின் "போயிங் 737' விமானத்தை மீட்க மேற்கொண்ட "ஆபரேஷன் அஸ்வமேத்' .
1998 அக்டோபர்: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை.
1999 ஜூலை: காஷ்மீரில் ஒரு காம்ப்ளக்சில் பயங்கரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக இருந்த 12 பேரை மீட்டது.
ஆகஸ்ட்: உ.பி.,யில் ருத்ரபூரில் ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தியது.
1999 டிசம்பர்: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் "ஐ.சி., 814' காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை.
2002 செப்டம்பர்: ஆமதாபாத்தில் அக்ஷர்தாம் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கிக்கொண்ட பக்தர்களை மீட்க "ஆபரேஷன் வஜ்ர சக்தி'.
2008 நவம்பர்: மும்பையில் வெளிநாட்டினர் அதிகம் தங்கும் ஒட்டல்களில் புகுந்து தாக்கிய பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவிகளை மீட்டது.
உயிரியியல், வேதியியல், அணுஆயுதம் தொடர்பான அச்சுறுத்தல்களை சமாளிக்க பாபா அணுசக்தி ஆய்வுமையத்திலும் என்.எஸ்.ஜி., படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
2007ல் வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் உலக கோப்பை நடந்த போது என்.எஸ்.ஜி., குழு அங்கு அழைக்கப்பட்டு, குண்டுவெடிப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது. இது போன்ற பாதுகாப்பு அமைப்புகளிடையே நடத்தப்படும் போட்டிகளில் போது ஜெர்மனி, உக்ரைன் நாடுகளுக்கு சென்று பல பரிசுகளை இந்த அமைப்பு வென்றுள்ளது.
மும்பையை காப்பாற்றிய கார்கில் போர் ஹெலிகாப்டர்
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது நகரவாசிகள் அனைவரையும் உயரே திரும்பி பார்க்க வைத்த இந்திய விமானப்படையை சேர்ந்த எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் கார்கில் போரிலும் முக்கிய பணியாற்றியிருக்கிறது. வானிலிருந்து கடற்படை கமாண்டோக்களை நரிமன் ஹவுசின் மேற்தளத்தில் இறக்கி முக்கிய தருணத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்க இந்த ஹெலிகாப்டர் பயன்பட்டது. இந்திய விமானப்படையில் முன்பு "எம்.ஐ.,- 8' ரக ஹெலிகாப்டர்கள் பயன் படுத்தப்பட்டன. அதன் மேம்படுத்திய "எம்.ஐ.,-17' ரக ஹெலிகாப்டர்களே தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை ரஷ்யாவிலிருந்து வாங்கப் பட்டவை. 60க்கும் மேற்பட்ட நாடுகள் ராணுவ சேவைக்கு இந்த ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகின்றன. சில நாடுகளில் தீயணைப்பு படையினர், மீட்புப்படையினரும் இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துகின்றனர். பைலட் உட்பட 35 பேர் வரை இதில் பயணம் செய்ய முடியும். இதன் இன்ஜின் சக்தி மிக அதிகம். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் இவை செல்லும். வினாடிக்கு 8 மீட்டர் வரை உயரே எழும்பக்கூடியது. 1999ல் நடந்த கார்கில் போரின் போது 15 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறந்து சென்று தாக்குதல் நடந்த இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மும்பையில் வானில் ஒரே இடத்தில் நிலை கொண்டு வீரர்களை களத்தில் இறக்க இந்த ஹெலிகாப்டரே பொருத்தமானது என்று முடிவு செய்யப்பட்டது.
குடும்பத்தினருக்கே தெரியாமல் மும்பை வந்த "மார்கோஸ்'
இந்திய கடற்படையினரின் சிறப்பு நடவடிக்கை பிரிவுதான் "மரைன் கமாண்டோ போர்ஸ்'. சுருக்கமாக "மார்கோஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த படையினர் மிகவும் ரகசியமாக இயங்குவார்கள். இந்த வீரர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கூட இவர்கள் "மார்கோஸ்' படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரியாது. தங்கள் குடும்பத்தினரிடம் எங்கு செல்கிறோம் என்பதையே தெரியப்படுத்தாமலே மும்பை வந்தனர் இவர்கள். 1987ம் ஆண்டு மார்கோஸ் தொடங்கப் பட்டது. தற்போது ஏறத்தாழ 2 ஆயிரம் வீரர்கள் இதில் பணியாற்றுகின்றனர். மும்பை, கொச்சின், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மார்கோசின் முக்கிய மையங்கள் செயல்படுகிறது. மார்கோஸ் பிரிவில் சேர வீரர்கள் ஏறத்தாழ 2 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். படகில் இருந்து கடலுக்குள் குதிப்பது, ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் இறங்குவது போன்ற பயிற்சிகளும் இவர்களுக்கு வழங் கப்படுகின்றன. இவை வழக்கமான ராணுவ பயிற்சியை விட கடுமையாக இருக்கும்.
மார்கோசின் முக்கிய நடவடிக்கைகள்
ஆபரேஷன் பவன்: 1988 அக்டோபரில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற போது, மார்கோசும் நடவடிக்கையில் இறங்கியது. திரிகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய துறைமுகங்களை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க உதவியது.
ஆபரேஷன் காக்டஸ்: 1988 நவம்பரில் மாலத்தீவில் அமைச்சர் உட்பட 25 பேர் ஒரு கப்பலில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டனர். மார்கோஸ் படையினர் அந்த கப்பலில் இறங்கி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். 2008ல் கடற்கொள்ளையர்கள் இந்தியாவின் "ஜக் அமவ்' கப்பலை கைப்பற்ற முயற்சித்த போது இவர்கள் முறியடித்தனர்.
மும்பையை மீட்கும் படையினர்: மும்பையின் மூன்று முக்கியமான இடங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியதால் மகாராஷ்டிரா போலீசுக்கு உதவ 7 படைகளை சேர்ந்த வீரர்கள் வந்தனர். ராணுவம், என்.எஸ்.ஜி., மார்கோஸ், அதிவிரைவு படை, கருப்பு பூனை, மும்பை தீயணைப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ்
ஐந்தறிவு "வீரர்' : கமாண்டோ வீரர்களுடன் கைகோர்த்த மோப்ப நாய்கள் அவர்களுடன் மும்பை பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் போது உறுதுணையாக இருந்தன. மோப்ப நாய் படையில் இடம்பெற்றுள்ள நாய்கள் பிறந்த ஆறு வாரங்களில் பயிற்சியில் ஈடுபடுகின்றன. 32 வாரங்களில் அவை பயிற்சியை முழுமையாக முடித்துவிடுகின்றன. வெடிபொருட்களையும் குற்றவாளிகளையும் மிக எளிதாக கண்டறிய மோப்பநாய்கள் உதவுகின்றன. தற்போது நாடு முழுவதும் மோப்ப நாய்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் களில் மோப்பநாய்களின் தேவை அதிகரித்துள்ளது. கோவை அருகே உள்ள போத்தனூரில் மோப்பநாய்களுக்கான மத்திய பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நாடு முழுவதும் நாய்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

நவம்பர் இருபத்து மூன்றாம் தேதி கம்பம் நகரில் நடந்த 54 ஜோடி இலவசத் திருமண விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தி.மு.க., அ.தி.மு.க. என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வறுத்தெடுத்துவிட்டார்.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட விஜயகாந்த் குருபெயர்ச்சிக்குப் (டிசம்பர்_6) பின்னால் தன் தீவிர அரசியல் நடவடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதேபோல் கம்பத்தில் நடந்த இலவசத் திருமண விழாவிற்கும் ஜோதிட நம்பிக்கைதான் காரணமாம்.
அதாவது, விஜயகாந்தின் ஜாதகம் சிரம திசையில் இருக்கிறதாம். இந்தக் காலகட்டத்தில் ஏழை எளியவர்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தால் தோஷத் தடைகள் நீங்கும் என்று கேரள பகவதி அம்மன் கோயில் நம்பூதிரி ஒருவர் பரிந்துரைத்தாராம். இதையடுத்துத்தான் இந்தத் திருமண ஏற்பாடுகளாம்.
இதையடுத்து விழா ஏற்பாடுகளைக் கவனிக்க தே.மு.தி.க. தலைமைக் கழக நிர்வாகி பார்த்தசாரதி சில வாரங்களுக்கு முன்பே கம்பத்தில் முகாமிட்டுவிட்டார். கிழக்குத் திசையில் மேடை என்பதிலிருந்து அதன் வண்ணம் வரை ஜோதிட அடிப்படையிலே அமைக்கப்பட்டதாம். விஜயகாந்தின் 54 வயதையொட்டி 54 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்க முடிவாகியிருக்கிறது.
விஜயகாந்தும் அவரது மனைவியும் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு விழா மேடை ஏறினர். கேப்டன் தம்பதியர் முல்லைப்பூ மாலை சூடிக்கொண்டு ஜோடிகளுக்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். (அதுவும் ஜாதகத்தின் படிதானாம்) விஜயகாந்த் மேடை ஏறுவதற்கு முன்னால் அவரது கட் அவுட்டிற்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்தார்கள். பிறகு மைக்கைப் பிடித்த விஜயகாந்த் முதல்வர், ஸ்டாலின், ஜெ. என அத்தனைபேரையும் காய்ச்சி எடுத்துவிட்டார்.
"54 ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் என்று குறிப்பிட்டிருந்தோம். ஏழைகளை உருவாக்குவது அரசாங்கம்தான். `புதிதாகக் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்கள்' என்று என் பெயரைச் சொல்லாமல் என்னைச் சாடுகிறார் மு.க. ஸ்டாலின். ஏன் என் பெயரைச் சொல்ல என்ன பயம்? தைரியம் இருந்தால் என் பெயரைச் சொல்லட்டும். நான் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று இந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆசைப்படுகின்றனர்.
நான் மின்சாரத்தைப் பற்றிப் பேசிய பிறகுதான் ஆற்காட்டார் நடவடிக்கை எடுக்கிறார். நான் ராமேஸ்வரம் போன பின்னால்தான்கலெக்டரும், மற்ற அதிகாரிகளும் ஓடிவந்தார்கள். இந்த பயத்தை நான் வரவேற்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. ஆனால் இரண்டு கட்சிக்காரர்களும் கோடிகோடியாக கொள்ளையடித்துவிட்டார்கள். இப்போதிருக்கும் மந்திரிகள் கல்லூரி கட்டுகிறார்கள். அதற்குப் பணம் எங்கிருந்து வந்தது? அவர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து கல்லூரிகளைக் கட்ட முடியுமா? நான் சேலத்தில் 1200 பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்தேன். கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் `ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்பேன்' என்றார். இப்போது எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்திருக்கிறாராம்?
எ.வ. வேலு. அவர் ஒரு ஏமாத்துற வேலு. எந்த ரேஷன் கடையில மோசமான அரிசி இருக்கிறது என்று கேட்கிறார். ஹோட்டலில் இருபது ரூபாய்க்கு சாப்பாடு என்றார்கள். அது எந்த ஊரில் எந்த ஓட்டலில் கிடைக்கிறது என்றே தெரியவில்லை?'' என்று திருமண விழாவிலும் வறுத்தெடுத்து விட்டுத்தான் ஓய்ந்தார் விஜயகாந்த்.
மும்பையில் 14 போலீசார் உட்பட 101 பேர் பலி; தீவிரவாதிகள் பிடியில் இன்னும் 340 பேர்.
மும்பை மாநகரின் பரபரப்பு மிகுந்த மையப்பகுதியில் உள்ள தாஜ் ஓட்டல், டிரிடன்ட் ஓட்டல் மற்றும் காமா ஆஸ்பத்திரி உட்பட 10 இடங்களில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தி்னர். இந்த தாக்குதலில் 14 போலீசார் உட்பட 101 பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்னும் தாஜ் ஓட்டலில் 40 பேரும், டிரிடன்ட் ஓட்டலில் 300 பேரும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளதாக ராணுவத்தினர் கூறுகின்றனர். தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் மட்டுமல்லாது கடும் துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவத்தினர் மட்டுமல்லாது தீவிரவாத எதிர்ப்புப் போலீசார், தேசிய ராணுவப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியே பெரும் கலவரப் பூமி போல் காட்சியளித்தது.
மும்பை தாக்குதல் வீடியோ
http://www.dinamalar.com/mumbaivideo_main.asp
போலீஸ் உயர் அதிகாரிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாத எதிர்ப்புப்படை போலீஸ் தலைமை அதிகாரியான ஹேமந்த் கர்காரே, என்கவுண்டர் போலீஸ் உயர் அதிகாரி விஜய் சர்லாஸ்கர் உள்ளிட்ட 14 போலீசார் பலியாயினர். இந்த தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்ததாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
6 தீவிரவாதிகள் பலி : போலீசாருக்கும் , தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள் பலியானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தீவிரவாதிகள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மர்மப்படகு ? : கடந்த சில நாட்களாக மும்பை துறைமுக பகுதியில் மர்மப்படகு உலவி வந்ததாகவும், அதன் மூலமே தீவிரவாதிகள் மும்பை நகருக்கு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உச்சக்கட்ட பாதுகாப்பு : மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து டில்லி , குஜராத் , கோல்கட்டா , சென்னை , பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர ஒட்டல்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் கண்டனம் : இந்த தாக்குதலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்றும் , அவர்கள் தீவிரமாக தண்டிக்கப்படுவர் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் , தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இதனிடையே கேரள சற்றுப்பயணம் சென்றிருந்த மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், அங்கு நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பியுள்ளார்.
குண்டுகள் செயலிழப்பு : ராணுவத்தினர் போலீசாருடன் நடத்திய தீவிர சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா கண்டனம் : இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தாங்கள் இந்தியாவின் நிலையை கூர்ந்து நோக்கி வருவதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலூரில் பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் : 200 கிராமங்கள் மூழ்கின : 16 பேர் பலி
காரைக்காலில் நிஷா புயல் இன்று கரையை கடந்தது. இதனிடையே கடலூரில் பெய்த கனத்த மழையால் பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியானார்கள்.
மழை தொடர்பான சம்பவங்களில் தமிழகத்தில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 20ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் வேதாரண் யத்திற்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் சின்னமாக மாறியது. அது படிப்படியாக நகர்ந்து வந்து, நேற்று மதியம் வேதாரண் யம் மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையே 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயலுக்கு, "நிசா' என பெயரிடப் பட்டது.
இந்த "நிசா' புயல், வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தை நேற்று நள்ளிரவு தாக்கியது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதே நேரத்தில், மாநிலத்தின் உட்புறப் பகுதிகளிலும் மழை கொட்டியது. சென்னையிலும் கனமழை பெய்தது. "நிசா' புயல் தாக்கிய போது, கடலில் 65 முதல் 75 கி.மீ., வேகத்திற்கு பலத்த காற்று வீசியது. வழக்கத்தை விட ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பின. கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. அதிகபட்சமாக ஒரத்தநாடு மற்றும் வேதாரண்யத்தில் 33 செ.மீ., மழை பெய்துள்ளது.
கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப் பட்டு திருமண மண்டபம், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப் பட்டனர். கன மழைக்கு இதுவரை இம்மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; 17 கால்நடைகள் இறந்துள்ளன. மாவட்டத்தில் 34 மையங்களில், 10 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 75 குடிசைகள் சேதமடைந் துள்ளன. கோடியக்கரை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் கடல் நீர் உட்புகுந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் கோடியக்கரை பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ள நீர் உட்புகுந்தது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரமும் தடை செய்யப்பட்டிருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட் பட்ட பகுதியில் நேற்று மாலை வரை 2,689.7 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து, சீர்காழி-பூம்புகார், சீர்காழி-காரைக்கால், மயிலாடுதுறை-பொறையார் இடையேயான போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பலத்த காற்றின் காரணமாக, கடலில் நங்கூரமிட்டிருந்த விசைப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. காவிரி, மஞ்சலாறு, அய்யாவு அய்யனாரு, பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் ஏற்பட்ட உடைப்பாலும், உப்பனாறு உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், குளம் ஆகியவை நிரம்பி வழிந்ததாலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்களில் குடிசை வீடுகள் இடிந்தும், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும், அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 35 முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மழை காரணமாக சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப் பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று காலை பெய்த மழை அளவு விவரம்: பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரத்தில் 28 செ.மீ., மழை பெய்தது. திருவிடைமருதூர் மற்றும் மயிலாடுதுறையில் 26 செ.மீ., மழை பெய்தது. சீர்காழியில் 23, சேத்தியாதோப்பு மற்றும் கொள்ளிடத்தில் 21, திருத்துறைப்பூண்டியில் 20, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் 19, குடவாசல் மற்றும் நன்னிலத்தில் 17, கும்பகோணம், தஞ்சாவூரில் 16, வலங்கைமான், தரங்கம்பாடியில் 15, நீடாமங்கலத்தில் 14, சென்னை விமான நிலையம் 11, செங்கல்பட்டு, பூந்தமல்லி மற்றும் கொரட்டூரில் 7 செ.மீ., மழை பெய்தது.
வேதாரண்யத்தில் 401 மி.மீ., மழை : இன்று காலை 7 மணி நிலவரப்படி நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 401 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, நாகப்பட்டினத்தில் 101 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. நிஷா புயல் காலை 7 மணி முதல், மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில், கடலூர் நோக்கி நகர்ந்து வந்தன. இதனைத்தொடர்ந்து நிஷா புயல் காரைக்காலில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் காரைக்கால் பகுதியில் பலத்த காற்று வீசியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
இதனிடையே கடலூரில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர். கனத்த மழை காரணமாக கடலூர் திருமாணி கோயில் கிராமம் அருகே உள்ள பாலம் உடைந்தது. இதனால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.அந்த பகுதியில் சுமார் 40 கிராமங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடி பகுதியில், 200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த பகுதியில் மட்டும் மழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர். சிதம்பரத்தில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. 5000 ஏக்கர் வாழை , 2500 ஏக்கர் உளுந்து, 2500 ஏக்கர் மணிலா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்டு பணிகளை கவனிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
காடுவெட்டி குருவுக்கு ஒருநாள் பரோல்
திருச்சி மத் திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள வன்னியர் சங்கத் தலைவர் குரு, உடல்நலமில் லாத தன் தாயை பார்க்க ஒரு நாள் பரோலில் நேற்று காலை விடுவிக் கப்பட்டார்.எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சருக்கு எதிராக பா.ம.க., கூட்டத்தில் காரசாரமாக பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் குரு தாயார் கல்யாணி (73), இதய நோயால் பாதிக்கப்பட்டு, உடல் நலக் குறைவுடன் காடுவெட்டி கிராமத்தில் இருக்கிறார். "அவரை பார்க்க ஒருநாள் பரோலில் விடவேண்டும்' என்று குரு தரப்பில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குருவை ஒருநாள் பரோலில் வீட்டுக்கு சென்று வர அனுமதி அளித்தது.
நேற்று காலை 6 மணிக்கு சிறையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கிளம்பிய குரு, காலை 8.30 மணிக்கு அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை அடைந்தார்.அங்கு உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருக்கும் தன் தாயை பார்த்து நலம் விசாரித்து விட்டு, மாலை 3 மணிக்கு அங்கிருந்து திருச்சி மத்திய சிறைக்கு கிளம்பினா
Labels: அரசியல்

வட சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெய்த மழைநீர் இன்னும் வடியவே இல்லை. கொசுத் தொல்லை, சாக்கடை பொத்துக் கொண்டு நடுத்தெருவில் ஓடுகிறது. காலரா, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் என்று தினமும் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார்கள். உண்மையில் இந்த மழை தமிழ்நாட்டுக்குத் தேவையான நீர்ப் பிரச்னையை சரிக்கட்டி விட்டதா?
``இல்லை'' என்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி இந்த வருடம் ஜூன் முதல் அக்டோபர் வரை 167.17 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் நமக்குத் தந்திருக்க வேண்டும். வழக்கம்போல் தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதால் 110 அடி இருக்கவேண்டிய மேட்டூர் நீர்மட்டம் 87 அடியாக குறைந்துவிட்டது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடிக்குத் தயாராக வேண்டிய ஒண்ணரை லட்சம் ஏக்கர் விளைநிலம் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிறது. வருடம் தவறாமல் அரங்கேறும் தொடர்கதையாகிவிட்ட இந்த காவிரி பிரச்னைக்கு ஒரு முடிவே கிடையாதா?
இது ஒரு பக்கம் இருக்க, "தமிழகம் எதிர்நோக்கியுள்ள தண்ணீர்ப் பிரச்னை பூதாகரமானது'' என்கிறார் முன்னாள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சி.எஸ். குப்புராஜ்.
எப்படி?
"தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகித்தான் தமிழ்நாட்டுக்குள் வருகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தியாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைத்தான் நம்பி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் இந்த ஆற்றுத் தண்ணீரையே பெருமளவில் நம்பி இருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என எல்லாப் பக்கத்து மாநிலங்களும் பிரச்னை செய்வதால் எதிர்காலத்தில் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக்கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் தமிழகத்தில் பெரிய தட்டுப்பாடு வரும். `ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குத்தான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். ஆனால், இன்று நமக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சை கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். இப்பொழுது, புதிதாக ஒக்கேனக்கல் பிரச்னை வேறு சேர்ந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறு வறண்டுவிட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும், பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திராவின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறு செத்த ஆறாக ஆகிவிடும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் ஆந்திரா சிக்கல் செய்கிறது. 1996-ல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தப்படி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கியதில்லை. வேண்டா வெறுப்பாக மிகக் குறைவான அளவு தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் இடையில் விவசாயிகள் பைப் போட்டுத் திருடுவதை, கட்டுப்படுத்தவும் ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்கிறார் குப்புராஜ்.
கர்நாடகம், ஆந்திராவுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் _ஆழியாறு, பவானி, புதிதாக நெய்யாறு என கேரளா உருவாக்கும் பிரச்னைகள் பல.
"முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போது பலமாகத்தானே இருக்கிறது? 2000 வருடம் பழமையான கல்லணையும் ஏரிகளும் பலமாக உள்ளன. இவை உடைந்துவிடும் என யாரும் சொன்னதில்லையே? முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப்பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள்'' என்கிறார் நீரியல் வல்லுநர் கோமதிநாயகம்.
சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற்றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் இந்த அணைக்கு தண்ணீர் தமிழகப் பரப்பில் இருந்துதான் செல்கிறது.
சரி, இதற்கு என்னதான் தீர்வு?
"நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் இதற்கு தீர்வுகாண முடியாது என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது'' எனக் கூறும் குப்புராஜ், இதற்கு முன்வைக்கும் ஒரே தீர்வு... "இந்திய நதிகள் இணைப்பு. இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல. பெரியாறு - வைகை இணைப்பும் காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் ஏற்கெனவே சாத்தியமாகியிருக்கிறது'' என்கிறார் அவர்.
"ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 - 2000 கனமீட்டர் தண்ணீர் தேவை. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம்.
தமிழகத்தில் இப்பொழுது நிலத்தடி நீராதாரத்தையும் சேர்த்துப் பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும்.
ஆக, மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் கோமதிநாயகம்.
பிரச்னை முற்றுவது வரைக்கும் காத்திருக்காமல் இப்பொழுதாவது சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக்கொள்வார்களா?.

இணையதளத்தில் பல விஷயங்களை சுதந்திரமாக உடைத்து எழுதும் வசதி இன் னும் பத்திரிகையுலகுக்கு வந்து சேரவில்லை. அப்படிப்பட்ட விஷயங் களில் ஒன்று, சட்டக் கல்லூரி வன்முறை.
* மாணவர் மனங்களில் இப்படிப் பட்ட துவேஷம் எங்கிருந்து உருவாகிறது?
இது அவர்கள் கண்டுபிடித்த புதிய துவேஷம் அல்ல. பல தலை முறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் ஜாதி உணர்ச்சியின் விளைவே இந்த மோதல்.
* அப்படியானால் இவ்வளவு துவேஷமுள்ள மாணவர்கள் மோதிக்கொண்டு சாகட்டும் என்று சொல்வீர்களா?
ஒருபோதும் இல்லை. எல்லா வன்முறையும் அருவருக்கத்தக்கதுதான். யார் யாரை அடிக்கிறார்கள் என்ற வேறுபாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அர்த்த மற்றவை. துளியும் மனிதத் தன்மை அற்ற மனநிலையில்தான் இப்படிப்பட்ட வன்முறை சாத்தியம். அந்த மனநிலைக்கு இளம் உள்ளங்கள் தள்ளப்பட்டுவிட்டது பெரும் வேதனையாக எனக்குப் படுகிறது. இன்னொரு மனிதனை கம்பாலும் இரும்புக் குழாயாலும் நையப் புடைத்த கைகளை விட, கத்தியால் வெட்டித் தள்ளத் துடித்த கைகளை விட அதிகம் ஆபத்தானவை அந்தக் கைகளை இயக்கிய மனங்கள்தான்.
* அந்த மனங்களை உருவாக்கியது யார் ?
நாம்தான். நம் சமூகத்தின் மிக முக்கிய சக்திகளான நான்கு சக்திகளும் இதற்குப் பொறுப்பு. ஒன்று அரசியல். இரண்டாவது சினிமா. மூன்றாவது ஜாதி. நான்காவது குடும்பம்.
* நான்கும் எப்படிப் பொறுப்பு என்று விளக்க முடியுமா?
ஜாதி அமைப்பு, அடுக்கு முறையில் மேலிருந்து கீழ் வரை ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரை நசுக்கும் அமைப்பு. மிகச் சிறிய வயதிலேயே இந்த ஜாதி வேறுபாட்டையும் ஒடுக்குவதையும் ஒடுக்கப்படுவதையும் தம் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள, பிஞ்சு மனங்களை நம் குடும்பம் பயிற்றுவிக்கிறது.
நீ இன்ன ஜாதியில் பிறந்திருக்கிறாய். அதன் விதிகளுக்கேற்ப நடந்துகொள் என்று குழந்தையிலிருந்தே மௌனமாகவும் பிராக்டிகலாகவும் குடும்பம் நமக்கு போதிக்கிறது. எந்த ஜாதி என்பதைப் பொறுத்துத் தனக்குக் கிடைக்கும் மரியாதைகளையோ அவமானங்களையோ சகஜமாக கேள்வியேதும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இயல்பைக் குடும்பம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவரவர் ஜாதி `அந்தஸ்து'க்குரிய திமிரோ, பெருமிதமோ, கூச்சமோ, அடிமைத்தனமோ இயல்பாக்கப்படுகிறது.
* இதிலிருந்தெல்லாம் நம்மை விடுவிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ?
அந்தப் பொறுப்பு அரசியலுக்கும் கல்விக்கும் கலைக்கும் உரியது. கல்வி முதல் காவல் துறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்தான். ஆனால் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள், தலைமைகள் எல்லாம், ஒரு சில விதி விலக்குகள் தவிர, கேவலமானவை. பதவிசுகம், சுயநலம், இதற்குத் தேவைப்படும் ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவை. நமக்கு உழைப்பதற்காகவே பதவிக்கு வருவதாக நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் தந்திரசாலிகள். முழுப் பொய்களைச் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் அரை உண்மைகளையே பேசுவார்கள்.
* ஜாதி வெறி உணர்ச்சியை வளர்ப்பதில் கட்சிகளின் பங்கு என்ன ?
ஓட்டுக்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஜாதியின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல வேலைகளைச் செய்கிறார்கள். வெவ்வேறு ஜாதிச் சங்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாகவே மாற்றிக் கொள்கின்றன. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டும் வலிமையை இழந்து வரும் பெரிய கட்சிகள், ஓட்டுக்காக ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவற்றை வளர்த்துவிடுகின்றன.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி விடுதிகள், தலித் மாணவர்களுக்குத் தனி விடுதிகள் என்று அரசு ஏற்படுத்தியதே மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. கிராமத்தில் ஊர், சேரி (காலனி) என்று பிரித்ததன் தொடர்ச்சியே இது. சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையை எதிர்த்த பெரியாரின் பாரம்பரியத்துக்கு, திராவிட இயக்க ஆட்சி துரோகம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். ( இந்த விடுதிகளின் படு அவலமான நிலை தனிக்கதை. மனித ஜீவிதத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் இவற்றை நடத்திவரும் அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கெல்லாம் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.)
பொது விடுதிகளில்தான் எல்லா மாணவர்களும் இருக்க வேண்டும். அங்கேதான் எல்லாருக்கும் சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். தனியார் கல்லூரிகளில் பெருமளவு சாத்தியமாகும் இதனை, அரசுத் துறையில் செய்யத் தவறிவிட்டதற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* பொறுப்பு தவறியதில், கலையின் பங்கு என்ன ?
இங்கே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கலை சினிமா. நிலப் பிரபுத்துவ காலத்து ஜாதிப் பெருமைகளை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களில் அதிகமாகப் பேசியிருக்கிறது. இன்னொரு பக்கம் கண் மூடித்தனமான வன்முறைக் காட்சிகள். இந்தப் படங்களை மண்ணின் மணம் கமழ்பவை, தமிழ்ப் பண்பாட்டை சித்திரிப்பவை என்று பொய்யாகப் புகழ்வது, வன்முறைக் கலாசாரத்தை கௌரவப்படுத்தியிருக்கிறது. புதிதாக வரும் ஒவ்வொரு இளம் நடிகனும் மென்மையாக நடித்துப் பெயரெடுத்த அடுத்த நொடியே ரவுடி, பொறுக்கியாக மட்டுமே நடிக்க விரும்புகிறான். அதுதான் அவன் ரேட்டை லட்சத்திலிருந்து கோடிகளுக்கு உயர்த்துமாம்.
* இதெல்லாம் பொழுதுபோக்குதானே? படத்தைப் பார்த்து வன்முறை பெருகிவிடாது; வாழ்க்கையில் இருக்கும் வன்முறையைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே ?
அருவருக்கத்தக்க வன்முறையை ரசிக்கத்தக்கதாக மாற்றுவதுதான் இவர்களுடைய கலை செய்யும் ஆபத்து. பொறுக்கியை கண்டிப்பதற்கு பதிலாக ரசிப்பது சீரழிவுக்கே வழி. மிகக் கொடூரமான வன்முறையை விவரமாகக் காட்டும்போது, இளம் மனங்கள் அதற்குப் பழகிப் போகின்றன. நிறையப் பார்க்கப் பார்க்க, மரத்துப் போகின்றன. இதனால் நேரில் ரத்தம் கொட்டுவதைப் பார்க்கும்போது பதற்ற உணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. வன்முறை பற்றி மனம் மரத்துப் போவது தான் மிக ஆபத்தானது.
* சட்டக்கல்லூரியில் போலீஸ் வாய்மூடியிருந்ததும் அப்படிப்பட்ட வன்முறைதானே ?
ஆம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி அது. மேலிருந்து அரசியல் உத்தரவு வந்திருந்தால், அதை போலீசார் விசாரணைக் கமிஷன் முன்பு பகிரங் கப்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் நுழைய பிரின்சிபால் அனுமதியோ அழைப்போ வேண்டும் என்பது சட்ட விதியே அல்ல. காவல் அதிகாரிகள் பிரின்சிபாலிடம் போய் `இப்போது எங்களை உள்ளே வரும்படி அழை; இல்லாவிட்டால் வன்முறைக்கு உடந்தை என்று உங்களையும் கைது செய்வோம்' என்று சொல்லியிருக்கலாம். மோதல் பற்றி உளவுத் தகவல் முன்கூட்டி கிடைத்தபோதும் செயல்படாதது பெருந்தவறு.
* ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?
வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற `எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி` என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம், சமத்துவம் ஏற்படமுடியும்.
* கடைசியாக ?
கத்தியைத் தூக்கிய பாரதி கண்ணன்களுக்கும் கம்புகளைத் தூக்கிய சித்திரைச் செல்வன்களுக்கும் ஒரு ஸ்வீகாரத் தந்தையாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வாருங்கள். ஆனால் சரியான கொள்கைகளையும் லட்சியங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லகண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை. கத்திக்கும் கம்புக்கும் பதிலாக பேனாவையும் கம்ப்யூட்டரையும் உங்கள் கைகளில் தரக்கூடிய தலைமைகளைத் தேடுங்கள்.
ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சி யாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல..
வேதனைக்கு நடுவே இந்த வாரச் சிரிப்பு
அ.இ.அ.தி.மு.க நடத்தும் பொதுக் கூட்டங்களில் இனி தனி நபர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
2025ல் இந்தியா எப்படி? : அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்
எதிர்காலத்தில், இந்தியாவும், சீனாவும் உலகின் மிகப்பெரும் சக்தியாக வளர்ச்சி பெறும் என்றும், 2025ம் ஆண்டுக்குள் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்றும், அமெரிக்க புலனாய்வுத் துறை கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா பதவியேற்க சில நாட்களே இருக்கும் நிலையில், "உலகளாவிய சூழ்நிலைகள்-2025' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை பல்வேறு கோணத்தில் இந்தியாவையும் சீனாவையும் அலசுகிறது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரகத்தின் அறிக் கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் நன்றாக உள்ளன. ஆனால், இந்த வளர்ச்சியை எளிதில் அடைந்துவிட முடியாது. பொ ருளாதார, சமூக தடங்கல்களைக் கடந்து வெளிவர வேண்டியிருக்கும். தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், 2025ம் ஆண்டில், உலகிலேயே சீனா தான் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்; ராணுவ பலத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருக் கும். வரும் 2025ம் ஆண்டில், அமெரிக்காவே தொடர்ந்து தனிமுக்கியத்துவ நாடாக நீடிக்கும். இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் அதிகரிக்கும். ஆனால், சுதந்திரத்துக்குப் பின் தற் போது இந்தியாவில் அதிகரித் துள்ள பிராந்திய, இனவாத தீவிரவாதம் நீடித்தால், வளர்ச்சியில் தடை ஏற்படும். ஆனால், இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படாது. பயங்கரவாதத்தையும், இனவாதத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத இயக் கத்தையும் இந்தியா கட்டுப்படுத்திவிடும். இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் வன்முறைகள் மற்றும் ஸ்திரமின்மையை இந்தியா சந்திக்க நேரிடும். குறிப்பாக மாவோயிச பயங்கரவாதம் அதிகரித்து வருவதால், நாட்டின் பல பகுதிகளிலும் பெரியளவில் வன்முறைகள் ஏற்படும்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சிறப்பாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்ப மாற்றம், வர்த்தகம் போன்றவை அதிகரித்துள்ளன. இந்த உறவுகளை வேறு சில நட்பு நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதை, இந்தியாவின் அரசியல் தலைமை தவிர்க்கும். அமெரிக்காவை ராணுவ ரீதியாகவோ, பொருளாதார அடிப்படையிலோ இந்தியா பார்க்கவில்லை. ஆனால், சர்வதேச சூழ்நிலை அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சீனா - அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் கலாசாரப் பாலமாக விளங்கும் வகையில் இந்தியா திகழும். பல்வேறு நாடுகளுடன் நட்புறவு இந்தியாவுக்கு அதிகரிக்குமே தவிர, அது எந்த நாட்டுடனும் ஓட்டுநாடாக இருக்காது. ஜனநாயகம் தழைத்திருக்கும். அரசியல் கூட்டணிகள் வெற்றிகரமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் 150 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை அன்று இருக்கும். எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இருப்பினும், எரிசக்தி, மின் சார தேவை, உணவு, நீர்வளம் பற் றாக்குறை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவைக்கு ஏற்ப, இவற்றின் சப்ளையை உருவாக்க வேண்டியிருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் இருந்து கிழக்கத்திய நாடுகளுக்கு வளமும், பொருளாதார சக்தியும் மாறும் வகையில், உலகமய பொருளாதாரம், மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கீழை நாடுகளுக்கு பொருளாதாரம் இடம் பெயர்வது இனி அதிகரிக்கும். இரண்டாவது உலகப் போருக் குப் பின், ஏற்படுத்தப்பட்டு பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறைகள் அனைத்திலும், புரட்சி ஏற்படுத்தப்படும். சர்வதேச அளவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற புதிய நாடுகள் முக்கியத்துவம் பெறும். அத்துடன், இந்நாடுகள் சர்வதேச அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கும். அதே சமயம் இந்தோனேஷியா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகள் வளரும் நாடுகள் பட்டியலில் இடம் பெறும். குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும்.
Labels: உலக செய்திகள்

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை, `சற்றே விலகியிரும் பிள்ளாய்!' என ரஜினி சொல்லிவிட்டார். சத்தியநாராயணாவின் பதவி பறிபோகப் போகிறது'' என்று, கடந்த குமுதம் ரிப்போர்ட்டரிலேயே நாம் கூறியிருந்தோம். ஆம்! நாம் சொன்னபடியே ஆகிவிட்டது.
கடந்த 17-ம்தேதி திங்கட்கிழமை, சத்தி நீக்கப்பட்ட தகவல் கசிய, `அது உண்மையா? வதந்தியா?' என அறிய அத்தனை மாவட்ட நிர்வாகிகளும், அடுத்தடுத்து சென்னை ராகவேந்திரா மண்டபத்திலுள்ள தங்கள் தலைமை மன்ற நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தொல்லை பண்ணியிருக்கிறார்கள். `தகவல் ஒருவகையில் உண்மைதான்' என்று தெரிய வர பாவம், படு அப்செட்டானார்கள். ``கடந்த 3-ம் தேதி நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போது கூட, `சத்தி சத்திதான்!' என்று ரஜினியால் பாராட்டப்பட்டவர் சத்தியநாராயணா. அப்படியிருக்க, அடுத்த ஒரே வாரத்தில் அவருக்கு ஏன் கல்தா?'' என்று மண்டை காய்ந்து போனார்கள் மாவட்ட நிர்வாகிகள்.
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் தற்போதைய மும்மூர்த்திகளான சுதாகர், இளங்கோவன், பாரதி ஆகியோர், ஆரம்பத்தில், ``சத்தியநாராயணா நீக்கப்பட்டது உண்மைதான். இனி அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்'' என்று கூறியிருக்கிறார்கள். பிறகு மீடியாக்கள் விழித்துக் கொண்டதும் உஷாராகி, ``சத்தியநாராயணாவுக்கு கிட்னி ஃபெயிலியர் சார். மன்ற நிகழ்ச்சிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாது என்பதால், அவரை ஓய்வெடுக்கும்படி ரஜினி சொல்லியிருக்கிறார். மற்றபடி அவரைத் தலைவர் பதவியில் இருந்தெல்லாம் நீக்கவில்லை'' என்றிருக்கிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்? என்று புரியாமல் விக்கித்துப் போயிருக்கிறார்கள் ரசிகர்கள்..
ஏறத்தாழ 23 ஆண்டு காலம் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் சத்தியநாராயணா. ரஜினியின் நம்பிக்கைக்குரிய தளபதி என்பதுடன் கூடவே, எளிமையானவர் என்றும் பெயர் பெற்றவர். அதோடு ரஜினியை ஒருமையில் கூப்பிடும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். அதோடு ரஜினி மூலவர் என்றால், ரசிகர்களுக்கு உற்சவராக இருந்தவர் சத்திதான். அப்படிப்பட்டரை ``நீக்கி விட்டார்கள்'' என்றும், ``இல்லை! நீக்கவில்லை. இன்னமும் மன்றப் பொறுப்பில்தான் இருக்கிறார். இது தாற்காலிக முடிவுதான்'' என்றும் மாறிமாறி வந்த தகவல்களால் ரொம்பவுமே குழம்பிப் போனார்கள் ரஜினி ரசிகர்கள்.
அதேநேரத்தில், சத்தியின் மாற்றம் தொடர்பாக, இன்னும் பல்வேறு விதமான பரபரப்புகளும் எகிறத் தொடங்கியுள்ளன. ``ரஜினி தேர்தல் சமயத்தில் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார். இதற்கு ஏற்றவாறு ரசிகர்களை உற்சாகமாக்கி தயார் செய்யத்தான் சத்தியை மாற்றியிருக்கிறார்'' என பூரித்துப்போன மன்ற நிர்வாகிகள் சிலர், திருச்சி, மதுரை, புதுச்சேரியில் பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியதாகவும் கேள்வி.
உண்மையில் என்னதான் நடக்கிறது? மாநில நிர்வாகி ஒருவரிடம் இதைக் கேட்டோம். "கடந்த 3-ம்தேதி மண்டபத்தில் நாங்கள் தலைவரைச் சந்தித்தபோது, `சத்திக்கு உடல்நிலை சரியில்லை. அவரது அம்மா இறந்துவிட்டார். அப்பாவுக்கும் உடல்நலமில்லை' என்று தலைவர் சொன்னார். நாங்கள் அழுத்திக் கேட்டபோது, `இனிமேல் சுதாகர் என்பவர் மண்டபத்தில் இருப்பார். அவரும் எனது நண்பர்தான். நீங்கள் அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம்' என்றார். அப்போதே, சத்தி மாற்றப்படுவார் என்று உறுதியாக நம்பினோம். இப்போது கிட்டத்தட்ட அது உறுதியாகி விட்டது'' என்றார் அவர்.
`இது தாற்காலிகமான மாற்றம்தான். சத்திய நாராயணா மீண்டும் திரும்பி வந்து இந்தப் பொறுப்பில் அமர்வார் என்கிறார்களே?' என்று அவரிடம் கேட்டோம். சிரித்துக் கொண்ட அவர், "சூப்பர் ஸ்டார் பயன்படுத்தும் `தாற்காலிகம்' என்ற வார்த்தைக்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. 1985-ம் வருடம் ரஜினி சார்பில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், `அகில இந்தியத் தலைவராக இருந்த பூக்கடை நடராஜனும், பொதுச்செயலாளர் சம்பத்குமாரும் ஆறு மாதத்திற்கு தாற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். அந்த ஆறுமாதம் க. சத்தியநாராயணா தலைவர் பொறுப்பில் இருப்பார்' என்றிருந்தது. ஆனால் அதன்பின் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியுமே? சத்தியே அந்தப் பதவியில் நீடித்தார்.
அது மட்டுமா? சத்தி பதவிக்கு வந்ததும் அவர் செய்த முதல் வேலை பழைய தலைவரோடு தொடர்பில் இருந்த ஒவ்வொருவரையும் தேடிப் பிடித்து ஒழித்ததுதான். கோவை, திருச்சி, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் தனித்தனி கோஷ்டிகளை அவர் உருவாக்கினார். நிர்வாகிகள் சென்னைக்கு வந்து சத்தியைச் சந்தித்தால் மரியாதைக் குறைவாகப் பேசுவார். ரஜினியிடம் இருந்து ரசிகர்களை ஒதுக்கி வைத்த பெருமை சத்தியைத்தான் சேரும். அதனால்தான் பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் ரஜினி தற்போது ரசிகர்களைச் சந்திக்கும் நிலை'' என அலுத்துக் கொண்டார் அவர்.
அருகிலிருந்த மற்றொரு நிர்வாகியுடன் நாம் பேசினோம்.
"சத்தியை நீக்க வேண்டும் என்று 2002-ம் ஆண்டில் இருந்தே போர்க்கொடி தூக்கி வருகிறோம். தலைவர் ரத்தம் சிந்திச் சம்பாதித்த பணத்தில் மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் முப்பது லட்சத்தை பாடப் புத்தகங்கள் வாங்கக் கொடுத்தார். அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். வருடத்திற்கு 20 ஜோடிகளுக்கு சூப்பர் ஸ்டார் திருமணம் செய்து வைப்பார். அந்தத் திருமணத்திற்கு வரும் மாவட்ட நிர்வாகிகளை வாசலில் நிற்க வைத்து மரியாதைக் குறைவாகத் திட்டுவதுதான் சத்தியின் ஸ்டைல். மன்றத்தின் முக்கியப் பிரச்னைகள் பற்றிச் சொல்ல மாவட்ட நிர்வாகிகள் யாரும் மண்டபத்திற்குச் செல்ல முடியாது. அப்படிச் சென்றால், வாட்ச்மேன்களைக் கூப்பிட்டு சத்தி எங்களை விரட்டச் செய்வார். இதுபற்றி லதா மேடத்தை மூன்று முறை நேரில் சந்தித்துப் புகார் தந்தோம். அவர் தலைவரிடம் இதுபற்றிப் பேசியநிலையில், தலைவர் சத்தியை அழைத்து, `உன்மேல் பல்வேறு புகார்கள் வருகின்றன. இனியாவது திருந்திக்கோ. இல்லாவிட்டால் நடவடிக்கை எடுப்பேன்' என எச்சரித்திருக்கிறார்.
அதன்பின் சில காலம் பிரச்னையில்லாமல் இருந்தது. பிறகு `சந்திரமுகி' படத்திற்கு டிக்கெட் வாங்க நாங்கள் சென்னை வந்தபோது மீண்டும் பிரச்னை ஆரம்பித்து விட்டது. ஒருகட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளின் பட்டியல், தொண்டர்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட மன்றங்கள் குறித்த விவரத்தை தலைவர் சத்தியிடம் கேட்டிருக்கிறார். அதைத் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தராமல் இழுத்தடித்திருக்கிறார் சத்தி. இதுவும் தலைவரை அதிருப்திக்குள்ளாக்கியது. அதுபோல், மன்றத்திற்குக் கட்டுப்படாமல் கோவையில் சிலர் கட்சி ஆரம்பித்ததை தலைவர் ரசிக்கவில்லை. சத்தியின் பிடியில் மன்றம் இல்லை என்பதை தலைவர் நன்றாக உணர்ந்துவிட்டார். அதன் விளைவுதான் இப்போது புதிய தலைவர்!
ரஜினி யாரைக் கைகாட்டுகிறாரோ, அவரது வழியில்தான் நாங்கள் செல்வோம். நான்கு நாள் முன்பு சுதாகரை மண்டபத்தில் சந்தித்தோம். அவர் காட்டிய பரிவு எங்களைப் பரவசப்படுத்தியது. 96-ல் தமிழகத்தில் தலைவருக்கென்று இருந்த ஓர் அரசியல் சக்தி, விரைவில் உருவாகப் போகிறது. சத்தியின் மாற்றத்தின் மூலம் மன்றத்திற்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறார் தலைவர்'' என உற்சாகத்தோடு முடித்தார் அந்த நிர்வாகி.
"மன்றப் பொறுப்பில் நாற்பது நாட்களுக்கு முன்பே சுதாகர் நியமிக்கப்பட்டுவிட்டார். இது சத்திக்கும் தெரியும். ஃபிலிம் சேம்பரில் நடிப்புத் துறைக்கான பட்டயப் படிப்பில் சுதாகரும், ரஜினியும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். சுதாகருக்கு பூர்வீகம் சென்னை, அபிராமபுரம்தான். தலைவரும் அவரும் வகுப்புத் தோழர்கள். இன்றுவரை இருவரும் மாறாத அன்போடு இருக்கிறார்கள். 3-ம்தேதி சென்னையில் ரசிகர்களை ரஜினி சந்திக்கும்போதுதான் முதல்முறையாக சுதாகர் லைம்லைட்டுக்கு வந்தார். ரஜினியிடம் கேள்விகளை வாசித்துக் காட்டியதும் அவர்தான். ரசிகர் சந்திப்பிற்குப் பின் ரஜினியிடம் சில மன்ற நிர்வாகிகள் சத்தியைப் பற்றிப் புகார் கடிதம் தந்திருக்கிறார்கள். அந்தக் கடிதம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதைப் பிரதிபலிப்பது போல் இருந்தது. இந்தக் கடிதப் போக்குவரத்துக்குக் காரணமாக இருந்தவரும் சுதாகர்தான். அந்தக் கடிதம் ஏற்படுத்திய தாக்கம்தான் இப்படியொரு முடிவை எடுக்க தலைவரைத் தூண்டியிருக்கிறது.
தவிர, சத்தியை நீக்கியதன் மூலம் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கான முன்னோட்டத்தை ஆரம்பித்து விட்டார். ஒருமுறை சிரஞ்சீவி ரஜினியிடம் பேசும்போது, `தமிழக மக்கள் உங்கள் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறார்கள். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்' என்றிருக்கிறார். அதற்கு ரஜினி, `கலைஞர் இருக்கும் வரை நான் வந்தால் நன்றாக இருக்காது. தவிர, எதிர்க்கட்சிகளுக்குப் பதில் சொல்லணும். சக நடிகர்களின் அரசியல் கட்சிகளுக்குப் பதில், பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என பல வேலைகள் இருக்கின்றன. தேர்தல் சமயத்தில் நான் வந்தால்தான் மக்கள் என்னைக் கவனிப்பார்கள்' என்றிருக்கிறார். அதனால்தான் சிரஞ்சீவி பேசும்போது, `அறுபது வயதுக்குப் பிறகு ரஜினி அரசியலுக்கு வருவார்' என்றார். இது கலைஞரை மனதில் வைத்துத்தான் சொல்லப்பட்டது'' என்றார் மற்றொரு முக்கிய நிர்வாகி.
``அரசியலுக்கு வருவதில் ரஜினி இப்போது உறுதியாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களின் ஏகோபித்த கோபத்திற்கு ஆளான சத்தியை மாற்றி ரசிகர்களிடம் பழைய உற்சாகத்தை அவர் கொண்டு வந்திருக்கிறார். உறுதியாக, இது அரசியலில் நுழைவதற்கான தொடக்கம்தான்'' என்றனர், இன்னும் சில நிர்வாகிகள் நம்மிடம் பூரிப்புடன்.
இதற்கிடையே, "நான் உடல்நலமில்லாமல் முழு ஓய்வில் இருக்கிறேன். என்னை ஓய்வில் இருக்கும்படி தலைவர் சொல்லியிருக்கிறார். வேறு எதுவும் சொல்வதற்கில்லை'' என்பதே சத்தியநாராயணாவின் பதிலாக இருக்கிறது. தான் நீக்கப்பட்டது குறித்து சத்தி எதுவும் கூறவில்லை.
இதில் எதுதான் உண்மை என்பதை அறிய நாம் ராகவேந்திரா மண்டபத்திற்கு விரைந்தோம். நீண்ட நேரத்திற்குப் பிறகு புதிய தலைவர்(?) சுதாகரைச் சந்தித்தோம். "சத்திக்கு உடல்நிலை சீராக இல்லாததால் அவரை ஓய்வில் இருக்குமாறு ரஜினி கூறியிருக்கிறார். ரசிகர்கள் சந்திப்பிலும் இதைக் கூறினார். நான் தாற்காலிகமாகத்தான் மண்டபத்திற்கு வந்திருக்கிறேன். ரசிகர்களின் குறைகளைக் கேட்டறிந்து ரஜினியிடம் தெரிவிக்கும் `போஸ்ட்மேன்' பொறுப்புதான் எனக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும் ரஜினி மட்டும்தான் ஒரே தலைவர். அவர் மட்டும்தான் தீர்மானிக்கும் சக்தி. எவ்வளவு உயரத்தில் ஏறினாலும் பழையவற்றையும், நண்பர்களையும் மறக்காதவர் அவர். மற்றவர்களுக்கு ஆத்மார்த்தமாக உதவுவதில் அவருக்கு நிகர் அவர்தான். இனி நிர்வாகிகளின் குறைகளை ரஜினியே நேரடியாகத் தலையிட்டுத் தீர்ப்பார். அவரிடம் குறைகளை எடுத்துச் செல்லும் தாற்காலிகப் பொறுப்பு மட்டும்தான் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என்று அவர் நம்மை வழியனுப்பி வைத்தார்.
சுதாகரின் வாக்குமூலம் ஒன்றே சத்திய நாராயணா மாற்றப்பட்டுவிட்டார் என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல் இல்லை? ஸீ
பழம்பெரும் நடிகர் நம்பியார் காலமானார்
பழம்பெரும் நடிகர் நம்பியார், சென்னையில் நேற்று மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 89. இவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் கமல், ரஜினி உட்பட திரையுலகத்தினர் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு, சென்னையில் இன்று மாலை நடக்கிறது.
கேரளாவில் உள்ள கண்ணூரில் பிறந்த மஞ்சேரி நாராயணன் நம்பியார், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே நாடகத்தில் நடிப்பதற்காக, நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் சேர்ந்தார். எம்.என்.நம்பியார் என்று பெயர் வைத்துக்கொண்டார். பல நாடங்களிலும் நடித்துள்ளார். 1935ம் ஆண்டு "பக்த ராமதாஸ்' படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். மந்திரிகுமாரி, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், எங்கள் வீட்டு பிள்ளை, குடியிருந்த கோவில், படகோட்டி, நாளை நமதே, சவாலே சமாளி உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 330 படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
"திகம்பரசாமியார், கல்யாணி, நல்லதங்கை' படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், கல்யாண்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ் என அனைவருடனும் நடித்துள்ளார். "திகம்பர சாமியார்' படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதும், திரையுலக சாதனையாளருக்கான எம்.ஜி.ஆர்., விருதும் பெற்றுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டில், நம்பியாருக்கு நேற்று பகல் 12 மணிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். அதற்குள் 12.30 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார்.
இவரது உடலுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நம்பியாருக்கு ருக்மணி என்ற மனைவியும், சுகுமாரன் நம்பியார், மோகன் நம்பியார் என்ற மகன்களும் சினேகலதா என்ற மகளும் உள்ளனர். மகள் சினேகலதா அமெரிக்காவில் இருப்பதால், அவருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அவர் இன்று மதியம் சென்னை வருவதால், மாலையில் நம்பியாரின் இறுதிச் சடங்கு நடத்தப்படும்.
Labels: அரசியல்
