பெங்களூரு: அமெரிக்காவை நம்புவதை விட்டு, ஐரோப்பிய நாடுகளில் சாப்ட்வேர் பணிகளை செய்வதில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் இன்போசிஸ் தீவிரமாக உள்ளது.அமெரிக்காவில் உள்ள வங்கிகள், இன்சூரன்ஸ், நிதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் சேவைகளை இந்தியாவில் உள்ள டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, சத்யம் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் செய்து தருகின்றன.சமீப காலமாக, அமெரிக்காவின் டாலர் கரன்சிக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு டாலருக்கு 50 ரூபாய் மாற்று மதிப்பு கிடைத்து வந்தது போய், இப்போது 40 ரூபாய் தான் கிடைக்கிறது.
இதனால், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு வருவாயில் கடும் அடி விழுந்தது. நடுத்தர, சிறிய சாப்ட்வேர் நிறுவனங்கள் சில மூடப்பட்டு விட்டன. இன்னும் சில நிறுவனங்கள் தத்தளிக்கின்றன.முன்னணி நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இழப்பு நேர்ந்தாலும் சமாளித்து வருகின்றன. இழப்பை சமாளிக்க, ஊழியர்கள் சம்பளத்தில் கைவைத்துள்ளன; சலுகைகளை ரத்து செய்துள்ளன.சாப்ட்வேர் நிறுவனங்கள் பார்வை இப்போது அமெரிக்க நிறுவனங்களிடம் டாலராக வாங்குவதை விட்டு, ஐரோப்பிய நாடுகளில் பவுண்ட் கரன்சி மூலம் வருவாய் ஈட்டுவதில் திரும்பியுள்ளது.
இந்தியாவிலிருந்து செல்லும் சாப்ட்வேர் ஊழியர்களும், அமெரிக்கா போவதை விட, ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றுவதையே விரும்புகின்றனர். இதற்கு காரணம், ஒரு பவுண்ட் கரன்சிக்கு 80 ரூபாய் கிடைப்பது தான்.சாப்ட்வேர் நிறுவனங்களை பொறுத்தவரை, அதிக வருவாய் கிடைப்பதுடன், ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் வாய்ப்பு உள்ளது தான்.இந்த வகையில் இன்போசிஸ் நிறுவனம், அமெரிக்காவில் கணிசமான அளவில் சாப்ட்வேர் பணிகளை செய்து தந்து கொண்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பணிகளில் 60 சதவீதம், அமெரிக்க நிறுவனங்களை சார்ந்தது.ஆனால், இப்போது இவற்றில் 40 சதவீத சேவைகளை புதுப்பிக்காமல், ஐரோப்பிய நாடுகளில் சேவை செய்ய தீவிர முயற்சி செய்து வருகிறது. "நிறுவனத்துக்கு கிடைத்த வருவாயில் அமெரிக்காவின் பங்கு 63 சதவீதம். ஐரோப்பிய நாடுகளில் இருந்து 27 சதவீத வருவாய் கிடைத்தது. இதை 40 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளின் சாப்ட்வேர் சந்தையில், கூடுதலாக 20 சதவீத சேவைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது' என்று இதன் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
