
வாயில் கூட வைக்க முடியாது இப்போதைய ரேஷன் அரிசியை. எதற்குத் தான் இப்படி நாற்றம் வீசும், மட்டமான, மோசமான அரிசியைத் தருகிறார்களோ ? இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை. மனுஷன் சாப்பிட முடியாது. இப்லப்பாம் எவனுமே ரேஷன் அரிசியைச் சாப்பிடறதே இல்லை. பிச்சைக்காரனுக்குக் கொடுத்தா கூட துப்பிடுவான்.
இப்படியெல்லாம் இரண்டு ரூபாய், ஒரு ரூபாய் ரேஷன் அரிசியைக் குறித்து திகட்டத் திகட்ட, கிண்டல்களும், நக்கல்களும், திட்டுகளும் இணையத்திலும் வெகுஜன இதழ்களிலும் மலிந்து கிடப்பதைப் படித்துப் படித்து ரேஷன் அரிசியைக் குறித்த ஒரு மதிப்பீட்டை உள்ளுக்குள் உண்டாக்கி வைத்திருந்தேன்.
தினமும் அலுவலகம் வரும்போது வேளச்சேரி ரேஷன் கடையைத் தாண்டியே வருவேன். ரேஷன் கடை முன்னால் தினமும் காலையில் புதுப்பட ரிலீஸ் கணக்காய் கூட்டம் அலை மோதும். முரண் உறுத்தும். இவ்ளோ மட்டமான அரிசியை வாங்க இப்படிக் கூட்டம் அலைமோதுகிறதே என நினைத்துக் கொண்டே சென்று விடுவேன்.
கடந்த வாரம் மனதில் தோன்றியது, உண்மையிலேயே இந்த ரேஷன் அரிசி மகா மட்டமானது தானா ? அரிசி தருவது அரசியலா ? இல்லை அரிசியை எதிர்ப்பது அரசியலா ?
உய்த்துனர்தலே சிறந்ததென முடிவெடுத்தேன்.
வீட்டில் விண்ணப்பம் வைத்ததால் ரேஷன் அரிசி வாங்கினார்கள். சுடச்சுட சாதம் வைத்து சாம்பார் ஊற்றி சாப்பிட்ட போது தான் புரிந்தது வெறுமனே நக்கல் அடிப்பவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள் என்பது !!!
அளவில் பெரியதான அரிசி (சி.ஓ என்று எங்கள் ஊரில் அழைப்பது போன்ற அரிசி). சாப்பிட்டு எனக்கு ரொம்பவே பழக்கம் என்பதால் ரேஷன் மிகவும் ரசிப்புக்குரியதாகி விட்டது. கொஞ்சமும் குறை சொல்ல முடியாத, எந்த நாற்றமும் வீசாத, சுவையான அரிசி !
ஒரு வேளை சென்னையில் மட்டும் நல்ல அரிசி தந்து விட்டு கிராமங்களின் தலையில் மோசமானதைக் கட்டுகிறார்களோ எனும் சந்தேகத்தில் மாலையில் ஊருக்கு போன் போட்டேன். அம்மா போன் எடுத்தார்கள்.
“அம்மா அங்கே ரேஷன் அரிசி நல்லா இருக்கா ? “
“என்னடா.. எப்போவும் அம்மா நல்லா இருக்கீங்களான்னு கேப்பே… இப்போ ரேஷன் அரிசி நல்லா இருக்கா கேக்கறே ?”
“சும்மா தாம்மா.. சொல்லுங்க “
“ரேஷன் அரிசி ரொம்ப நல்லா இருக்கு. நாங்க அதைத் தானே சாப்பிடுகிறோம்”
கிராமத்திலிருந்து அம்மா சொன்னார்கள்.
எங்களூர் ரேஷன் கடைக்காரர் குஞ்சுகிருஷ்ணனிடம் பேசினேன். எப்படி மக்கள் ரேஷன் அரிசியை வாங்குகிறார்களா ? நல்லா இருக்கா அரிசி ?
பெரும்பாலும் நல்ல அரிசியே கிடைக்கிறது. கேரளாவில் இதே அரிசியை கொஞ்சம் மில்லில் போட்டு பாலீஷ் செய்து சந்தையில் விற்றால் இருபது ரூபாய் தாராளமாய் கிடைக்கும் ! (அனுபவம் பேசியதா தெரியவில்லை ) என்றார்.
உண்மையிலேயே நல்லா இருக்குன்னா ஏன் இதை எதிர்க்கிறாங்க ? இதற்குப் பெயர் தான் அர(சி)சியலா ?
ஒரு காலத்தில் மரவள்ளிக் கிழங்கையே உணவாய் தின்று சாதத்தை கூட்டு போல கொஞ்சமாய் தின்று வாழ்ந்த கிராமம் இன்று மரவள்ளிக் கிழங்கை கூட்டு போல் சாப்பிடுகிறது. காரணம் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிறது, மரவள்ளிக் கிழங்கின் விலை பத்து ரூபாயாகி விட்டது !
ஓருரூபாய் அரிசி எப்படி?
Labels: நாட்டு நடப்பு
அழகிரியை அடக்கி வைக்க முதல்வருக்கு ஜெ. வலியுறுத்தல்
முதல்வர் கருணாநிதி தன் மகன் மு.க. அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் ன்றும், இல்லாவிட்டால் மதுரை நகரில் மக்கள் வசிக்க முடியாமல் போய்விடும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அராஜகத்தை அடக்கக் கோரியும் அதிமுக சார்பில் இன்று மதைரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
தீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் எனது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றது அண்டை மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை புகலிடமாக மாற்றிக் கொண்டன.
காவல் துறை, முதல்வர் கருணாநிதியின் ஏவல் துறையாகிவிட்டது. தங்களது உயிரையம் உடமைகளையும் மக்களே பாதுகாத்துக் கொள்கிற கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 7 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய வன்முறைக்கு கருணாநிதி வித்திடுகிறாரோ என்று தோன்றுகிறது.
சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் பற்றி கவலைப்படால் தான் தோன்றித் தனமாக சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளையும், தனது மகன் அழகிரி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்ட குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.
இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது செயல். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விடுவிக்கப்பட்டவர்களும் வெளியில் உள்ள சதிகாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'அண்ணனுக்கு நன்றி!'
மேலும் மதுரை முழுவதும் அண்ணனுக்கு நன்றி என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அழகிரியின் படையை விரிவாக்குவதற்காக கருணாநிதி இந்த செயலை செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
1405 கைதிகளை விடுதலை செய்து அவர்கள் துணையுடனும் ஏவல் துறையின் முழு ஒத்துழைப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் கைதிகள் விடுதலையை எதிர்க்கிறேன். இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பு கருணாநிதியைத்தான் சேரும்.
அழகிரி அராஜகம்:
அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அழகிரியை முதல்வர் உடனடியாக அடக்கி வைக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளில் அவரது தலையீடு இருக்கவே கூடாது, என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Labels: அரசியல்
வருவதை யாரும் தடுக்க முடியாது: அரசியல் குறித்து ரஜினி
அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது,'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, "சூப்பர் ஸ்டாராக' வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை, அவரது ரசிகர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி: ரஜினியின் நண்பரான நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், "ரஜினி அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என்ற குரல், ரஜினி ரசிகர் களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தியும், வேண்டுகோள் விடுத் தும் ரஜினி ரசிகர்கள் மாநிலம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.கோவையில் ஒரு படி மேலாக ரஜினி பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கிய ரஜினி மன்றத்தினர், தனிக்கொடி, உறுப்பினர் விண்ணப்பம் உள்ளிட்டவற்றையும் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினர்.
இந்த மாதம் முதல் வாரத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது."எந்திரன்' படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருந்ததால், இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கவில்லை. இதனால், எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்படைந்தனர். இரு நாட்களாக, ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை முற்றுகையிடத் தொடங்கினர்.
ரசிகர்கள் உணர்வு குறித்து ரஜினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:
சமீப காலமாக ரசிகர் மன்றங்களின் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற பேச்சு அன்றாடம் நிலவி வருகிறது. அண்டை மாநிலத்திலும், தமிழகத்திலும் நடிகர்களின் அரசியல் பிரவேசத்தால், நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம், எனக்கு நன்றாகப் புரிகிறது.
அனுமதிக்க மாட்டேன்: தற்போது பிரமாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் "எந்திரன்' படப்பிடிப் பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன். அரசியல் ஆர்வமுள்ள எனது ரசிகர்கள், அவரவர்களுக்கு விருப்பமுள்ள கட்சிகளில் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால், எனது பெயரில் ஒரு கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப் படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ரசிகர்களோ, மற்றவர்களோ ஈடுபடுவதை நான் எப்போதும் அனுமதிக்க மாட்டேன். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை, அந்தந்த மாவட்ட தலைவர்கள், தலைமை மன்றத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அவர்களை அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, நான் நடவடிக்கை எடுப்பேன். நீக்கிய பின்னரும் இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். "அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசிலுக்கு வருவேன், வர மாட்டேன் என்று தெளிவாகக் கூறாமல் மீண்டும் குழப்பமான அறிக்கையை ரஜினி வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Labels: அரசியல்
