தண்ணி பார்ட்டி !!
உலகில் என்னை மாதிரி தண்ணியடிக்காத தறுதலைகளுக்கெல்லாம் கஷ்டமான காரியங்களில் ஒன்று தண்ணிப் பார்டிக்குப் போவது. இதில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் இன்னும் விசேஷம். தீர்த்தம் சாப்பிடும் மஹானுபாவர்களின் குஷியை இந்த மாதிரி பார்ட்டிக்குப் போகும் போது பார்க்கவேண்டுமே. சும்மா தேமேன்னு இருந்தாலும் விடமாட்டார்கள். "சும்மா வாடா, அங்க அவனவன் வாயில ஃபனல வச்சு ஊத்திக்கிறத பாரு கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்" என்று சும்மா இருக்க விடமாட்டான். முதலில் ரெண்டு மூனு தரம் இப்படி ஏமாந்து போயிருக்கிறேன். வாயில் ஃபனலை வைத்து கொண்டு ஊத்திக் கொள்வதெல்லாம் உண்மை தான். ஆனால் அன்ட்ராயர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் ஊத்திக் கொள்ளுவதெல்லாம் எனக்கு என்னமோ கண்கொள்ளாக் காட்சியாகப் படவில்லை. ஒழுங்காய் பேசிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ரெண்டு ரவுண்டு உள்ளே போனவுடன் கார்ல் மார்க்ஸாகி விடுவார்கள். வாழ்க்கை என்றால் என்ன, இன்பம் என்றால் என்ன துன்பம் என்றால் என்ன என்று தத்துவங்கள் எடுத்து விடுவார்கள் பாருங்கள்...காதில் ரத்தம் வந்துவிடும். சிலர் வள்ளலார் மாதிரி கருணைக் கடலாகி விடுவார்கள். உலகில் ஏழைகளே இருக்கக் கூடாதுடா என்று ஆரம்பித்து கருணை உணர்ச்சி பொங்கும். ஒரு நண்பன் தண்ணியடித்துவிட்டு சிக்கனை மென்று கொண்டே எறும்புகள் வாழ்கையில் எப்பிடி கஷ்டப்படுகின்றன, மழை பெய்தால் எவ்வளவு கஷ்டம் அதற்கு உடம்பு சரியில்லாமல் போனாலும் யார் உதவுவார்கள் என்றெல்லாம் ஃபீல் பண்ணி குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறான். நமக்கு சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாது. மற்ற தண்ணியடித்த தொண்டரடிப் பொடியாழ்வார்கள் கோவித்துக் கொண்டுவிடுவார்கள். அதற்கப்புறம் அடுத்த நாள் இதைப் பற்றி சொல்லிச் சொல்லி நான் ஓட்டின ஓட்டில் அவன் ஓடியே போய்விட்டான்.
கூட்டமாய் போனாலும் பரவாயில்லை. தண்ணியடிக்கும் நண்பனுக்கு கம்பெனி குடுக்க தனியாய் போய் மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். அதிலும் லவுஸ் விடும் நண்பனாய் இருந்தால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. விட்டத்தைப் பார்த்துக் கொண்டு சிகிரெட் புகையை ஊதிக்கொண்டு "அன்னிக்கு அவ என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு" என்று ஃபீலிங் காட்டுவார்கள் பாருங்கள், சினிமாவில் ஒரு தாடி வைத்த தாத்தா கம்பளி போர்வையை போர்ர்திக் கொண்டு பின்னால் புகை வர கைய்யில் ஒரு வட்டமான கொட்டைத் தட்டிக் கொண்டு ஒருத்தருமே இல்லாத ஊரில் தெருத் தெருவாக ஒரு நாயைக் கூட்டிக் கொண்டு போய் யாருக்காகவோ பாடுவாரே அதெல்லாம் தோத்துவிடும். பீலிங் படலத்திற்கு பிறகு வாயிலெடுத்து வழித்துக் கொட்டும் வைபவமும் இருக்கும். என்னைப் பொறுத்த வரை தண்ணியடிப்பவர்களுக்கு கோபம், தாபம், பாசம்,சுயமரியாதை, உலக அக்கறை என்று எல்லா உணர்ச்சிகளுமே மேலோங்கி இருக்கும். சொந்தக்கார வட்டத்தில் இரண்டு பேர் தண்ணியடித்து விட்டு ராத்திரி டி.வி.யெஸ் 50ல் வந்துகொண்டிருக்க, ஒரு (உண்மையான) கழுதை குறுக்கே ஓடி வந்து வண்டியிலிருந்து விழுந்துவிட்டார்கள். ஒரு நண்பனுக்கு கொஞ்சம் அடிபட்டு முட்டியில் ரத்தம் வந்து விட்டது. அதைப் பார்த்த இன்னொரு நண்பனுக்கு கோபம் தலைக்கேறி பழிவாங்கும் உணர்ச்சி மேலோங்க கழுதையை அடிக்க ரோடு முழுக்க துரத்திய கதை இன்னமும் குடும்பத்தில் பிரசித்தம். " அது எதுக்குடா கழுதைய அந்த துரத்து துரத்தின" என்று ஒவ்வொரு தரமும் என் வீட்டுக்காரி என்முன்னால் அவர் மானத்தை வாங்குவார்.சில கேஸ்கள் நேர் உல்டா. ரெண்டு ரவுண்டுக்கு அப்புறம் வாயே திறக்க மாட்டார்கள். கடப்பாறையை போட்டு நிமிண்டினால் தான் ஒரு வார்த்தை சாஸ்திரத்துக்குப் பேசுவார்கள்.
ஒருதரம் சென்னையில் ராம்கோவில் சிஸ்டம்ஸில் இருந்த போது நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தைக் காரணம் காட்டி அவருக்கு மொட்டை போட நண்பர் குழாம் முடிவு செய்தது. வழக்கமாக அடையாறில் வெட்டுகிற இடங்களை எல்லாம் விட்டு விட்டு தரமணி டாக்கீஸ் என்று தண்ணியடிக்கும் தர்மவான்கள் முடிவு செய்தார்கள். அங்கே தண்ணியும் உண்டு நல்ல சப்பாடும் உண்டு என்று சதிவலை பின்னப்பட்டதில், நானும் இன்னொரு அப்பாவியும், சாப்பாடு கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு போனோம். தியேட்டர் மாதிரி திரையெல்லாம் வைத்து நல்ல ஜோராகத் தான் இருந்தது. "என்ன வேண்டும்" என்று கேட்டு பேரர் விருந்தோம்பாமல் பாருக்குப் போனால் தான் சைட் டிஷ் இலவசம் இங்கே தீர்த்தம் சப்பிட்டால் சைட் டிஷ்க்கும் படியளக்கவேண்டும் என்று சொல்ல, கும்பல் பாருக்கு குடிபெயர்ந்தது. ஜூஸெல்லாம் குடித்தால் சாப்பிட சாப்பாடு அளவு குறைந்துவிடும் என்று நான் ஜூஸை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏழு மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி, பத்து மணி வரை தண்ணியிலேயே மிதந்து கொண்டிருந்தது. நானும் அந்த அப்பாவியும் வந்து கொண்டிருந்த சுண்டலை மட்டும் நொசுக்கிக் கொண்டிருந்தோம். திடிரென்று பத்து மணிக்கு பார்ட்டி கொடுப்பவர் "தம்பிகளா...இந்தப் பார்டிக்கு என்னோட பட்ஜெட் இவ்வளவு தான் " என்று கையை விரித்து விட்டார்.முன்னாடியே சொல்லியிருந்தால் வந்த சுண்டலையாவது கூடக் கொஞ்சம் நொசுக்கி இருப்பேன் என்று எனக்கு ஒரே வருத்தம். பார்ட்டிக்குப் போய் வெற்று வயிற்றுடன் வந்ததற்கப்புறம் இந்தியாவில் இனி தண்ணிப் பார்டிக்கே போகக் கூடாதென்று முடிவு செய்திருந்தேன்.
இங்கே வெள்ளைக்கார தண்ணிப் பார்ட்டியில் இம்சை வேறு மாதிரி. எதிராளி கைய்யில் க்ளாஸ் வைத்திக்கொண்டிருக்கும் போது நாம் வைத்துக் கொள்ளாவிட்டால் மரியாதை குறைச்சல். இதற்காக ஆரஞ்சு ஜூஸாவது வைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் துரை ஒரு க்ளாஸ் பியரையோ, காக்டெயிலையோ ஒருமணி நேரமாய் வைத்துக் கொண்டிருப்பார். நானெல்லாம் ஊரில் ஆரஞ்சு ஜூஸ் குடுத்தால் 2 H.P மோட்டார் போட்டு உறிகிற மாதிரி ஒரே உறிஞ்சாக உறிஞ்சி காலியாக்கி விட்டுத்தான் க்ளாஸை கீழே வைப்பேன். மருந்து குடிக்கிற மாதிரி சின்னச் சின்ன சீப்பியாக குடிப்பதற்கு ரொம்பவே முதலில் கஷ்டப் பட்டேன். இப்பொழுது கொஞ்சம் பழகிவிட்டது. இதோடு இன்னொரு கஷ்டம் வேறு இங்கே உண்டு. வந்த புதிதில் துரைமார் பேசுவது வழவழ கொழகொழவென்று ஏற்கனவே ஒரு இழவும் புரியாது, இதில் தண்ணியடித்து விட்டுப் பேசச் சொன்னால் சுத்தம். அத்தோடு இங்கே இருக்கிற பப்புகளில் மாரியம்மன் கோவில் கொடை விழா மாதிரி பாட்டை வேறு அலறவிட்டு விடுவார்கள். குத்து மதிப்பாக "யா யா", "அப்கோர்ஸ்", "கிரேட்", "ஈஸிட்?" "ஓ ரியலி" என்று வரிசைகிரமம் வைத்து சிரித்துக் கொண்டே சொல்லிவிடுவேன். இந்த லட்சணத்தில் துரை நான் பேசுவது புரியவில்லை என்பார். எல்லாம் நேரக் கொடுமைடா...என்று நினைத்துக் கொண்டு "சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்" என்று கம்பி நீட்டிவிடுவேன்.
இந்த மாதிரி கொடுமைக்காவது தண்ணியடிக்க கத்துக்கனும் என்று ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். புது வருஷ கொள்கைகள் மாதிரி அதற்கும் இன்னும் வேளை வரவில்லை.
21 நாட்கள் !!!!
வருடத்திற்கு 365 நாட்கள்! இதில் தொடர்ந்து 21 நாட்களை நீங்கள் ஒதுக்கி வைக்கத் தயாரா?
எனக்காக இல்லை...உங்களுக்காகத்தான்!
உங்களை விட்டு ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் குணத்தை ஒழித்துக் கட்ட, புதிதாய் ஒரு நல்ல விசயத்தை பழக்கமாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை திண்ணமாக்க உங்களுக்கு விருப்பம்தானே ?
ம்ம்ம்.. என்ன மௌனம் ?
சொல்லுங்கள் ...உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள ஆசையில்லையா...?
கருதிய காரியம் கைகூட இறுதி வரை உறுதியாய் இருக்க வேண்டும் அல்லவா!
நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஒருசில வழிகளை நம் அன்றாட வாழ்வின் பழக்கமாக்கிட வேண்டாமா!
அதற்குத்தான் 21 நாட்களை ஒதுக்கச் சொல்கிறேன்..
அதற்கு முன்னால் சில விசயங்களை அலசுவோம் :)
வீட்டில் திடீரென்று இரவு 9 மணி அளவில் மின்சாரம் ரத்தாகி விடுகிறது ? என்ன செய்வீர்கள்?
பதில்கள்...
1. மின்சாரத்துறையை திட்டோ திட்டென்று திட்டுவேன் :)
2. அய்யோ பார்க்க வேண்டிய டி.வி சீரியல் போய்ச்சுதே என்று அலறுவேன் :)
3. பக்கத்து வீட்டாரிடம் கதைக்கப் போயிடுவேன் :)
இப்படியெல்லாம் செய்யாமல் உடனே தீப்பெட்டி/மெழுகுவர்த்தி தேடிப் போவீங்க.. :)
அப்படித்தானே!
உங்களைச் சொல்லி அதை எடுக்க சொன்னோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. மின்சாரம் வந்த பின்னர் பார்த்தா வீடே ரணகளப்பட்டு இருக்கும். அதற்குள் போன மின்சாரம் திரும்பவும் வந்திருக்கும் :)
ஆனா! நம்ம வீட்டில் இருக்கிற ஹோம் மினிஸ்டர் அந்த கும்மிருட்டிலேயும் தட்டு தடுமாறி விழாமல் அலேக்கா அடுப்பறை போய் தீப்பெட்டியை கொண்டு வந்து ஒரு பத்து பத்த வச்சிடுவாங்க(மெழுகு வர்த்தியைத்தான்)!
அது எப்படி சார் முடியுது? இருட்டுல கூட அவங்களுக்கு கண்ணு தெரியுது..
ஆங்க்!..அங்கதானே விசயமே இருக்குது..
சரி, ஒரு டெக்னிகல் உதாராணம் சொல்றேன்.
உங்களோட மின்னஞ்சல் அல்லது கணிணி யோட பாஸ்வேர்டை இப்போ மாற்றுங்க. உங்க Screen Saver ருக்கான நேரம் சில மணித்துளியாக இருக்கட்டும். இருக்கையை விட்டு எழுந்து சென்று விடுங்கள். இப்போது கணிணி உள் நுழைய முயற்சியுங்கள்.
பாஸ்வேர்ட் தட்டச்ச தடுமாறுகிறீர்களா :)
இதை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்திருக்க வேண்டும்.. ஏன் இந்த தடுமாற்றம்.. உம் யோசனை பண்ணுங்க..
சரி ஒரு வழக்கமான உதாரணம் பார்ப்போம்..
சைக்கிள் ஓட்டக் கற்றுக்கும் போது ஊருக்கு பெரிய சர்க்கஸே நடத்திக் காட்டியிருப்போம்.
நமக்கு கற்றுத் தந்தவர் படு பீலா விட்டுருப்பாரு.. அங்கே பார்க்காதே இங்கே பார்க்காதே நேரா பாரு, கீழே பார்க்காதே, மேலே பார்க்காதே, இடுப்பை ஒடிக்காதே இன்னும் ஏகப்பட்ட கட்டளைகள்..
கொஞ்சம் நினைச்சிப் பாருங்க இதெல்லாம் செய்யாம நம்மளால எதைத்தான் ஓட்ட முடியும் ?
மோட்டார் வாகனம் பழகும் போதும் இதே கதைதான். ஆனா இப்போ பாருங்க , சென்னை போன்ற பெரிய நகரங்களில் விட்டா கூட நாம வண்டியை சும்மா தில்லா ஓட்டிட்டு போறோம் இல்லையா?.
எல்லாம் ஆட்டோமெட்டிக கண்ட்ரோல் போல நடக்குது இல்லையா?
ஆரம்பத்தில் சிரமமாய் இருந்த விசயம் பழக்கத்தில் எளிதாய் ஆகிவிடுகிறது. தினசரி நாம் ஒரு செயலை தொடர்ந்து செய்யும் போது அது நம் வழக்கமாகி பின் பழக்கமாகி அதுவே நம் குணமாகி விடுகிறது.
குணம் என்பது நமது அன்றாடப் பழக்கத்தின் பிரதிபலிப்பே! நல்ல குணம் படைத்தவன் என்ற பெயர், நமது பழக்கத்தினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
அதனால் நாம் என்ன செய்ய வேண்டும்? நம்மிடையே இருக்கும் கெட்டப் பழக்கங்களை விட வேண்டும்; நல்ல பழக்கங்களை பழகுதல் வேண்டும்.
அதற்காகத்தான் உங்களிடம் இருந்து 21 நாட்களை ஒதுக்கிவைக்க முடியுமா என்று கேட்டேன். "அது என்ன 21 நாள் ?" என்று நீங்கள் கேட்பீர்கள்.
எல்லாம் நம்ம முன்னோர்கள் சொன்ன விசயம்தான். 41 நாள் விரதம், 11 நாள் விரதம், 30 நாள் நோன்பு இதெல்லாம் நமக்கு பழக்கமானதுதானே. அதே போன்றுதான் 21 நாட்களும்.
நம்ம பெரியோர்கள் சொல்ற விசயத்தை காதுல போட்டுக்க மாட்டோம். ஆனா அதே விசயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியானால், ஆஹா ஓஹோன்னு கொண்டாடுவோம்(என்ன பண்ணுறது நம்ம பழக்கம் அப்படி :) )
அதாவது ஒரு பழக்கத்தை ஒருவன் கைவிட/கைக்கொள்ள வேண்டும் என்றால் 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் போதும் என்று உலகப்புகழ் ஹார்வர்ட் பலகலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் வெளியிட்டு இருக்கிறது.
ஆங்கில சுயமுன்னேற்ற அறிஞர்கள் இதை " 21 Days Habit" என்பார்கள்.
முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், எந்த பழக்கத்தையெல்லாம் விட வேண்டும் என்று பட்டியல் இடுங்கள்!
1. புகை
2. மது
3. மாது
4. சூது
5. புறங்கூறல்
6. அச்சம்
7. மேடை நடுக்கம்
..
..
..
இன்னும் பல...
எந்த விசயத்தை பழக்கமாக்கிட வேண்டும்
1. அதிகாலை எழுவது
2. புத்தக வாசிப்பு
3. உடற்பயிற்சி
4. மொழிப்பயிற்சி
5. யோகா
6. ஆன்மீகம்
7. விளையாட்டு
..
..
..
இன்னும் பல.
பட்டியலைத் தயாரித்துக் கொண்டபின்,
உங்கள் இலக்கிற்கு உறுதுணையாய் இருக்கும் பழக்கத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்.
உதாரணமாக "அதிகாலை எழுதல்" என்பதைக் கொண்டால். அதை 21 நாட்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் கடைபிடிக்க வேண்டும்(கடிகாரத்தின் உதவியோடு). 21 நாட்கள் நீங்கள் தொடர்ந்து செய்து விட்டால் 22 ஆம் நாள் நீங்கள் தானாகவே அதிகாலையில் கடிகார அழைப்பு இன்றி எழுந்து விடுவீர்கள். கடிகாரமே உங்களிடம் கேட்டுக் கொண்டுதான் மணி எழுப்பும்!
உங்களுக்கு அந்த திறன் 21 நாட்களுக்கு முன்னதாகக் கூட வரலாம். அது அவரவர் கட்டுப்பாட்டை/திறமையைப் பொறுத்தது.
இம்முறையில் நாம் ஒரு பழக்கத்தை நம் வழக்கம் ஆக்கிக் கொள்ள முடியும். இதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்கும் போது நன்கு அறிவீர்கள்.
முதல் வாரத்தில் கண்டிப்பாய் ஒரு தடங்கல் வரும். அதையும் மீறி நீங்கள் செயல் பட வேண்டும். அதை வெற்றி கண்டால் இரண்டாவது வாரத்தில் தடங்கல் வரும். அதையும் தாண்டி, 3 வது வாரம் வருகின்ற தடங்கலையும் தாண்டிவிட்டால் நீங்கள் கைக்கொள்ள நினைத்த பழக்கம், உங்கள் குணம் ஆகி இருக்கும்.
ஒரு முக்கிய விதி.. 21 நாட்களில் தடங்கல் ஏற்பட்டு விட்டால் நீங்கள் மறுபடியும் ஒன்றில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
எப்படி இருக்கிறது இந்த விளையாட்டு ? என்ன நீங்கள் விளையாடத் தயாரா?
நல்ல பழக்க வழக்கங்களே ஒருவனின் நிலையான வெற்றியை தீர்மானிக்கிறது. குணவான் ஆக்கிறது. சமுதாயதில் "சொக்க தங்கம்" என்ற பாராட்டைப் பெறச் செய்கிறது. மனதில் மகிழ்ச்சியைப் பெருக்குகிறது.
ஆகவேதான் இந்த 21 நாட்கள் பற்றி எழுதினேன்.
எனது சொந்த அனுபவத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஊர்வன பறப்பன, நடப்பன என்று ஒன்றும் விடாமல் தின்று தீர்ப்பவன் நான்(மாமிசம் சாப்பிடுவதை நான் ஒரு குறையாய் சொல்லவரவில்லை. அதை குறை கூறுவது எனது நோக்கமும் அல்ல).
என் வாழ்வில் குருநாதர் என்று ஒருவர் வந்த பின் என் பாதைகள்/பார்வைகள் மாறியது. (8 வருடங்களுக்கு முன்) அனுமன் ஜெயந்திக்காக ஒரு நாற்பது நாள் விரதம் இருந்தேன். சற்றுக் கடுமையான விரதம்தான். டீ, காபி தவிர்த்தல், காலில் செருப்பின்றி இருத்தல், காவி உடை தரித்தல், வெறுந்தரையில் படுத்தல், இரு வேலை குளித்தல், அதிகாலையில் எழல், மாமிசம் உண்ணாதிருத்தல், இலைச்சோறு சாப்பிடுதல், டி.வி நிகழ்ச்சி, சினிமா செய்திகள் பாராதிருத்தல் என்று கடுமையான விரதம்தான்.
விரத நிறைவுநாள் அனுமன் ஜெயந்தி! மகிழ்ச்சியான தரிசனம் அமைந்தது.
மறுநாள் என் அன்னை எனக்கு காபி கொண்டு வந்து தந்த போது.. "வேண்டாம்மா பால் போதும் " என்றேன்.
கருவாட்டு குழம்பு என்றால் சாப்பாட்டு ராமனாகி விடும் யான், ஞாயிறன்று அவர்கள் கருவாடு சமைத்த போது அதை உண்ண வேண்டும் என்ற எண்ணமே எழுவில்லை. (பின் எனக்கென்று தனியே ரசம் வைத்தார்கள் அது வேறு கதை). அன்று மாறியவன் இன்று வரை அப்படியே இருக்கிறேன். விரத்தில் நான் கடைப்பிடித்த ஒருசில விசயங்கள் தவிர உண்ணும் விசயத்தில் எனக்கு ஏற்பட்ட மாற்றம் இந்த "21 நாட்கள்" தலைப்பிற்கு நல்ல உதாரணமாய் பட்டதால் உரிமையோடு இங்கு சொன்னேன்.
இது எப்படி சாத்தியம் என்றால், எந்த ஒரு விசயத்தை தொடர்ந்து செய்கிறோமோ அது நமது ஆழ்மனதில் பதிந்து பின்னர் தானே செயல்பட ஆரம்பிக்கிறது. நமது கட்டளை இன்றி தானாகவே செயல்படுகிறது.
உங்கள் அலுவலகத்திற்கு செல்ல இரண்டுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும் குறிப்பிட்ட வழியிலேயேதானே தொடர்ந்து செல்கிறீர்கள்.
அந்த வழியை விடுத்து மாற்றுப்பாதையில் செல்லும் போது நீங்கள் வித்தியாசமாய் உணருவீர்கள். வழக்கமான வழியில் செல்லும் போது இலகுவாக இருப்பதை அறிவீர்கள். இதற்கெல்லாம் அடிப்படை நமது ஆழ்மனமே!
ஆழ்மனம் பற்றி ஏற்கனவே "ஜெயமே ஜெயத்தில் " எழுதிவிட்டேன்.
நாம் இங்கே சொல்ல வந்தது 21 நாட்கள் பற்றியது.
என்ன அன்பர்களே! உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் இலட்சியத்திற்கு உதவிடச் செய்யும் பண்பை வளர்க்க இப்போது நீங்கள் 21 நாட்களை ஒதுக்கி வைக்க சம்மதம்தானே
