இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்'(சிமி) என்ற பெயரில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, சிறப்பு தீர்ப்பாயம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை சற்று குறைந்தது. "சிமி' அமைப்பினர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதால், "சட்ட விரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின்' கீழ், 2001ம் ஆண்டு அந்த அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி, "சிமி' அமைப்பு மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்தத் தடை, 2010 வரை அமலில் இருக்கும். இதையடுத்து, தடையை எதிர்த்து, "சிமி' அமைப்பின் சார்பில், இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் டில்லி ஐகோர்ட்டின் சிறப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தாக்கல் செய்த மனுவில், "எங்கள் அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதற்கான புதிய ஆதாரங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. அதனால், முந்தைய ஆதாரங்களின் அடிப்படையில், தடையை நீட்டிக்க முடியாது. எனவே, தடையை நீட்டித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு வந்த போது, "தடை விதித்தது சரிதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை காண்பிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அரசு தரப்பில், புதிதாக ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, "சிமி' அமைப்பிற்கு எதிராக பிறப்பித்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் சிறப்பு தீர்ப்பாய நீதிபதி கீதா மிட்டல் உத்தரவு பிறப்பித்தார். தீர்ப்பாயம் பிறப்பித்த இந்த உத்தரவால், மத்திய அரசுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகியது. ஜெய்ப்பூர், ஆமதாபாத் மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்புகளுக்கு, "சிமி' அமைப்பினரே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தடை நீக்கப்பட்டது பெரிய சர்ச்சையை எழுப்பியது. பா.ஜ., உட்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
அதே நேரத்தில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவும், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கும், "சிமி' அமைப்பு மீதான தடையை நீக்கி, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை வரவேற்றனர். "சிமி அமைப்பு மீது தடை விதிக்கக் கூடாது என நாங்கள் கூறி வந்தோம். அதை மீறி தடை விதிக்கப்பட்டது. இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. "சிமி'யை தடை செய்யும் போது, சிவசேனா, துர்க்கா வாகினி போன்ற அமைப்புகளுக்கும் ஏன் தடை விதிக்கக் கூடாது' என்று கேள்வி எழுப்பினர்."தடையை தீர்ப்பாயம் நீக்கியதால், காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படவில்லை' என விளக்கிய காங்., தகவல் தொடர்பாளர் ஷகீல் அகமது, "சிமி' அமைப்பிற்கு எதிராக தீர்ப்பாயம் புதிய ஆதாரங்களை கேட்டுள்ளது. சமீபத்தில் எங்கெல்லாம் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளனவோ, அந்த மாநில அரசுகள் தான், "சிமி' அமைப்புக்கு எதிராக ஆதாரங்களை மத்திய அரசிடம் தர வேண்டும். ஆனால், தரவில்லை' என்று கூறினார்.
"சிமி' அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சிறப்பு தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில், பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் வக்கீல் கோபால் சுப்ரமணியம், "சீனியர் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட 75 உயரதிகாரிகள், "சிமி'யின் செயல்பாடுகள் தேச விரோதமான செயல்களில் தொடர்புடையன என்ற அறிக்கையை எளிதில் நிராகரிக்க முடியாது' என்றனர்.
"இந்திய தேசியவாதத்துக்கு எதிரானது சிமி இயக்கம். சர்வதேச இஸ்லாமிய கொள்கைகளை இந்தியாவில் புகுத்துவது சிமி இயக்கத்தின் நோக்கம்' என்றும் மத்திய அரசு கூறியது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அத்துடன், "சிமி' அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை மூன்று வாரங்களுக்கு பின் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
சிமி' இயக்கம் மீதான தடை நீடிப்பு! : அரசை காப்பாற்றியது சுப்ரீம் கோர்ட்
பா.ம.க., குருவை சந்திக்க அனுமதி விதிப்படி பரிசீலிக்க கோர்ட் உத்தரவ
"பா.ம.க., பிரமுகர் குருவை சிறையில் சந்திக்கக் கோரி மனு அளித்தால் சிறை விதிகளின்படி அனுமதிக்க வேண்டும்' என, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.பா.ம.க., தலைவர் மணி தாக்கல் செய்த மனு:எங்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், வன்னியர் சங்கத் தலைவருமான குருவை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். தற்போது, திருச்சி சிறையில் உள்ளார்.
கடந்த 1997ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில்,தேசிய பாதுகாப்புச் சட் டத்தின் கீழ் காவலில் வைப்பவர்களை நேரில் சந்திப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி பார்த்தால், காவலில் வைக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமே அவர்களைச் சந்திக்க முடியும். இவ்வாறு உறவினர்களுக்கு மட்டுமே சிறையில் இருப்பவர்களை சந்திப்பதற்கு அனுமதி அளிப்பது நியாயமானதாக இல்லை.தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குருவை காவலில் வைத்த பிறகு, அவரை சந்திக்க நண்பர்கள், பா.ம.க.,வைச் சேர்ந்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோருக்கு அனுமதி அளிக்க சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் தான் காவல் நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே, திருச்சி மத்திய சிறையில் இருக்கும் குருவை சந்திக்க மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள்,எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி அளிக்க வேண் டும்.உறவினர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி குலசேகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராம சாமி ஆஜராகி, "சிறை விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும்.
மனுதாரர் தரப்பில் விண்ணப்பம் அளித்தால், அதை சட்டப்படி பரிசீலிப்போம்' என்றார். இதையடுத்து நீதிபதி குலசேககரன் பிறப்பித்த உத்தரவில்,"மனுவில் குறிப்பிடப்பட் டுள்ள நபர்கள் விண்ணப்பம் அளிக்கும்பட்சத்தில், சிறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப் படையில் குருவை சந்திக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம்' எனக் கூறியுள்ளார். அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார்.
Labels: அரசியல்
ஸ்டாலின் தயாநிதி உறவில் விரிசல்
கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையிலான விரிசலில் தற்போது புதிதாக மேலும் ஒரு விரிசல் வேர்விட்டு கலைஞர் குடும்பத்திற்குள்ளேயே சிலரை சந்தோஷத்திலும், சிலரை வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ``இனி விரிசல் ஒட்டுவதற்கான வாய்ப்பே இல்லை!'' என்று தயாநிதி மாறன் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
அதேபோல அழகிரியும் அவர் பங்குக்கு, ```மாறன் சகோதரர்களுடன் எனக்கு இனிமேல் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது மட்டுமல்ல; அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடனும் எனக்கு உறவு இல்லை'' என்று அறிவித்தார். அது மட்டுமல்ல, அதை பலவகையில் அவர் செயல்படுத்திக் காட்டியும் வருகிறார். கலைஞரின் பிறந்த நாளுக்காக அவரை வாழ்த்த வந்த மாறன் சகோதரர்களைத் திருப்பியனுப்ப வைத்தது தொடங்கி, இன்னமும் மாறன் குடும்பத்தினருடன் நல்ல உறவை வைத்திருக்கும் கலைஞரின் மகள் செல்வியிடம்உறவை முறித்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுவது வரை தனது எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. இந்த விஷயத்தில் கனிமொழியையும் தனது நிலைப்பாட்டை ஏற்கச் செய்வதில் அழகிரி வெற்றி கண்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆக, இந்தப் பிரச்னையில் கலைஞர் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் ஓரணியில் இருக்க, ஸ்டாலின் மட்டும் தனி வழியில் பயணம் தொடர்ந்தார். `தினகரன்' சர்வே வெளியாகி அதன் தொடர்ச்சியாக களேபரங்கள் கட்டவிழ்ந்த நேரத்தில் அழகிரிக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின், மிக விரைவிலேயே மாறன் சகோதரர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு சில மாற்றுக் கணக்குகளே காரணம் எனப்படுகிறது. இதை நேரடியாகவும், மறைமுகமாகவும் அழகிரி கண்டித்தபோதும் ஸ்டாலின் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான உறவு சீர்கெட்டதுடன் இருவரும் இப்போது பேசிக் கொள்வதுகூட இல்லை என்பது லேட்டஸ்ட் தகவல்.
இந்தப் பின்னணியில்தான் விரிசலுக்குள் மற்றுமொரு விரிசலாக, ஒத்த கருத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் மற்றும் தயாநிதி இடையே சில பிணக்குகள் தோன்றியிருப்பதாக உறுதியான தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன..
ஸ்டாலின் மீதான தனது வருத்தத்தை வெளிப்படையாகவே சிலரிடம் தயாநிதி வெளிப்படுத்தினார் என்று தகவல் நம் செவிகளைத் தட்ட, என்ன நடந்தது என்று தயாநிதி வட்டாரத்தில் விசாரிக்க ஆரம்பித்தோம்.
``தனது எதிர்காலத்தை மனதில் வைத்துதான் மாறன் சகோதரர்களுடன் ஸ்டாலின் நட்புக் கொண்டிருக்கிறார் என்று ஒரு கருத்து உள்ளது. அதேபோல பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டாலினை மாறன் சகோதரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும்கூட விமர்சனம் உண்டு. இவற்றைப் பொய்யாக்கும் விதமாக ஸ்டாலின்-மாறன் சகோதரர்கள் இடையே இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டியும், உறவும் நட்பும் நீடித்து வந்தது. மாறன் சகோதரர்களும், ஸ்டாலின் வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டினார்கள். அதே நேரத்தில், `தன் கண் முன்னால் நடக்கும் சில விஷயங்களில் தனது கருத்தை வலியுறுத்தவும், சில தவறுகளைத் தட்டிக் கேட்கவும் ஸ்டாலின் முன்வர வேண்டும்' என்று தயாநிதி விரும்புகிறார். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது'' என்றபடியே அந்த விவகாரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள் தயாநிதி வட்டாரத்தினர்.
``அழகிரியும், அவரைச் சார்ந்த ரத்த உறவுகளும் அரசு நிர்வாகத்தில் மிக வெளிப்படையாகவே தலையிடுவதோடு, சில கணக்கு வழக்குகைளயும் தங்கள் பிடிக்குள் வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்து அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, சக அமைச்சர்கள் பலரும் முகம் சுளிக்கிறார்கள். அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாது. ஆனால், ஸ்டாலின் நினைத்தால் அதை தட்டிக் கேட்க முடியும். குறைந்தபட்சம் இதுபற்றி கலைஞரிடம் விவாதிக்கவாவது முடியும். ஆனால் அவரோ மௌனமாக இருக்கிறார்.
தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் அழகிரி ஒதுங்கியிருக்கிறார். சரி... அதற்காக வேறு யாரையும் மாறன் சகோதரர்களுடன் பேசவிட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவர் செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்? அவரது இந்த நிர்பந்தத்தால் கலைஞரின் மகள் செல்வி தன்னையே வருத்திக் கொண்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. தன் கண் முன்னால் இவை நடந்தும் தனக்குள்ள உரிமையின் அடிப்படையில்கூட இதைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ ஸ்டாலின் முனையவில்லை.
இந்தக் குடும்ப விவகாரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... அரசியல்ரீதியாகவும் தான் தனிமைப்படுத்தப்படுவதை ஸ்டாலின் அறியாமல் இருக்கிறார். அவரது இத்தனை வருட உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் என்பதே இந்த வயதில் அவர் முதல்வர் பதவியில் அமர்வதுதான். கலைஞரின் உடல்நிலை நன்றாக இருக்கும் வரை அவர் முதல்வராகத் தொடர்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சமீபத்தில் வேலூரில் பேசிய கலைஞர், முதல்வர் பதவி பற்றிக் குறிப்பிடும்போது, `யார் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதியைப் பெறுகிறார்களோ, யாருக்கு மக்கள் ஆதரவைத் தருகிறார்களோ அவர்களை ஊக்குவிக்கின்ற தூண்டுகோலாக இருப்பேன்' என்றார். ஆனால் கடைசிவரை ஸ்டாலினை அவர் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் சில கருத்துகளைச் சொன்னபோது, நிஜமாகவே ஸ்டாலின் ஆதரவாளர்கள் நொந்து போனார்கள். தனது இருப்பும், உரிமையும் தன் கண் முன்னால் நழுவிப் போவதைப் பார்த்த பின்னும் ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.
கடலூர் முன்னாள் எம்.பி. ஆதிசங்கர் குங்குமப்பொட்டு வைத்திருந்ததை `ரத்தக்காயம்' என்று கிண்டலடித்தார் கலைஞர். தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அந்தியூர் செல்வராஜ், கோயில் விழாவில் தீ மிதித்ததைக் காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்ததுடன், அதன் காரணமாகவே அவரது இல்லத் திருமண விழாவிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார் கலைஞர். சிலரது மன உணர்வுகளை இது புண்படுத்தியிருந்தாலும் தி.மு.க.வினர் இதை கலைஞரின் கொள்கைப் பற்றாகவே பார்த்தார்கள்.
ஆனால், இன்று கலைஞரின் குடும்பத்தினர் சிலரே ஊரறிய கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும், மொட்டை போட்டும் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார்கள். கலைஞர் இதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில்கூட கண்டித்ததாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தி.மு.க.வினர் மனதிலேயே சில கேள்விகளை எழுப்பும் என்பது ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்திலிருந்தும், எதிலும் தலையிடாமல் அமைதியாகவே இருக்கிறார் ஸ்டாலின்.
முதல்வர் கலந்துகொள்ளும் டி.எம்.சௌந்தரராஜன் பாராட்டு விழா பற்றி ஸ்டாலினுக்கு பெயரளவில்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுபோல் இன்னும் எத்தனை அவமானங்களை அவர் தாங்கப் போகிறாரோ தெரியவில்லை? என்ற கேள்விதான் தயாநிதியை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. இதைத் தொடர்ந்தே, ஸ்டாலின் மீதான தன் அதிருப்தியை நெருக்கமான சிலரிடம் தயாநிதி பகிர்ந்துகொண்டார்'' என்று சொல்லி முடித்தார்கள் அவர்கள்.
தயாநிதி தரப்பின் இந்த வாதங்களும், விமர்சனங்களும் அரசல்புரசலாக ஸ்டாலினின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றன. கூடவே, ஸ்டாலின் பற்றி தயாநிதி தெரிவித்ததாகக் கூறப்படும் கடுமையான சில சொற்களும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. ஆனால், இதற்கும்கூட எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருக்கிறார் ஸ்டாலின்.
இந்தநிலையில் ஸ்டாலினின் நிலைப்பாட்டைப் பற்றி நமக்கு விளக்கினார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
`` `பொதுவாகவே தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ ஒரு விஷயத்தை எடுத்துச் சென்று ஸ்டாலின் வாதம் செய்யமாட்டார்' என்றொரு பொதுவான குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஆனால் உண்மையில் தன்னால் தலைவருக்கோ, கழகத்திற்கோ எந்தப் பிரச்னையும் வரவேண்டாம் என்று நினைப்பவர் ஸ்டாலின். ஆனாலும் கூட அவசியம் ஏற்படும்போதெல்லாம் சில விஷயங்களில் தனது கருத்தை அவர் வலியுறுத்தியும் இருக்கிறார். அண்மையில் லண்டன் சிகிச்சை முடித்துத் திரும்பி வந்த சில நாட்களில் கலைஞரைச் சந்தித்த ஸ்டாலின், அழகிரி குடும்பத்தினரின் தலையீடு பற்றியும், அதனால் எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றியும் தனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு, `அவன் (அழகிரி) அகப்பையில் எதுவும் இல்லை. அவன் அதை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், உன் அகப்பையில் பருப்பு இருக்கிறது. நீதான் கவனமாக இருக்க வேண்டும்' என்று ஸ்டாலினுக்கு அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார் கலைஞர். அதற்குமேல் விவாதம் செய்ய விரும்பாமல் அமைதியாக இருக்கும் ஸ்டாலின், தனது உடல்நிலையிலும், தனது துறை நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்கிறார். மற்ற விஷயங்களைக் காலமே தீர்மானிக்கட்டும் என்பதுதான் அவரது இன்றைய நிலைப்பாடு'' என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
ஆக, காலமே முடிவு செய்யட்டும் என்று ஸ்டாலின் நினைப்பதும், காலத்திற்கு ஏற்ப வேகத்தைக் கூட்டவேண்டும் என்று தயாநிதியும் நினைப்பதுதான் இந்த இருவருக்குள்ளும் ஒரு விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இருதரப்புமே ஒப்புக்கொள்கிறார்கள்.
இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், `தன்னைப் பற்றி தயாநிதி மாறன் சொன்ன சில வார்த்தைகளால் ஸ்டாலின் மிகவும் காயப்பட்டுப் போயிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக, குறிப்பாக வேலூர் மாநகராட்சி விழாவைத் தொடர்ந்து, தயாநிதி மாறனுடன் தொலைபேசியில் பேசுவதையேகூட ஸ்டாலின் தவிர்த்து வருகிறார்' என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
இந்த விரிசலை சரிப்படுத்த ஒரு குழுவும், அதை நிரந்தரமாக்கி ஸ்டாலினை மீண்டும் அழகிரியுடன் இணைய வைக்க ஒரு குழுவும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
எந்த பிரச்சனைதான் முடிந்தாலும் இவங்க பிரச்சனை முடியாது போல
Labels: அரசியல்
