மும்பையில் நடந்த பாகிஸ் தான் பயங்கரவாதிகளின் அதிபயங்கர தாக்குதல் பின்னணியில் முழுமையாக பாகிஸ்தான் ராணுவம், அதன் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., உள்ளது என்பதை 100 சதவீதத்துக்கு மேல் நிரூபித்ததால் தான் பாகிஸ்தான் பணிந்துள்ளது.ஈராக் மற்றும் இந்தியாவில் பயங்கரவாத சதி திட்டங்களை நிறைவேற்றி வரும் லஷ்கர்- இ-தொய்பாவின் பின்னணியில் பாக்., ராணுவ முன்னாள் கமாண்டர் சகி உர் ரகுமான் லக்வி இருப்பதை இந்தியா, ஆதாரங்களுடன் கூறியுள்ள நிலையில், அமெரிக்கா விழித்துக் கொண்டுள்ளது.
கண்டிப்பான அறிக்கை : லக்வி தான், லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு ராணுவ பயிற்சி மற்றும் அமைப்புக்கு உலக அளவில் நிதி வசூலித்து தரும் முக்கிய வேலைகளை செய்து வருவதாக ஏற்கனவே, கடந்த மே மாதம் அமெரிக்க உளவுத் துறை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிக்கையில், லஷ்கர் -இ -தொய்பா உட்பட சில பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி பரிமாற்றங்களை தடை செய்யவும், லக்வி மற்றும் லஷ்கர் -இ -தொய்பா நிறுவனர் முகமது சயீது ஆகிய இருவரின் நிதி நடவடிக்கைகளை தடை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இது தொடர்பாக பாகிஸ்தானுக்கும் கண்டிப்பான அறிக்கை அனுப்பிய அமெரிக்கா, லஷ்கர் -இ தொய்பா- உட்பட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதையோ, அடைக்கலம் தருவதையோ தடுத்து நிறுத்திட கடும் நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியது.
"புரூடா' விட்டார் முஷாரப்: கடந்த 2002ம் ஆண்டு, அப்போது அதிபராக இருந்த முஷாரப், பாகிஸ்தானில் லஷ்கர் -இ -தொய்பா உட்பட எல்லா அமைப்பும் தடை செய்யப் பட்டுள்ளது; அதன் தலைவர்கள் முடக்கப்பட்டுள்ளனர்' என்றார். மேலும், அதற்கு முன், 2001 செப்டம்பர் தாக்குதலுக்கு பின், அமெரிக்க ராணுவம் எடுத்த ராணுவ நடவடிக்கையில் பாகிஸ் தான் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிந்து விட்டதாகவும், அதில் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் "புரூடா' விட்டார் முஷாரப். ஆனால், உண்மையில் அவர்கள் சாகவில்லை. அவர்கள் தான் ஈராக், இந்தியாவில் பல சதி திட்டங்களை தீட்டி நிறைவேற்றியுள்ளனர் என்பது இப்போது மீண்டும் இந்தியாவில் நடந்த தாக்குதல் மூலம் உறுதியாகி உள்ளது.இதனால் தான் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்து, பாகிஸ்தானை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை விடுத்துள்ளார் ரைஸ் : இந்தியாவில் பேச்சை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம் அமைதியாகவே பேசினார். கண்டிப்புடன் அவர் நடந்துகொள்ளவில்லை என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ரைஸ், கடுமையாக பேசியுள்ளார். பிரதமர் கிலானியுடன் பேசும் போது, எதிர்காலத்தில் பெரும் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற ரீதியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.லக்வி தொடர்பாக பல தகவல் களை அளித்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையும் ரைஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஈராக், இந்தியாவில் நடந்த அத்தனை சதி சம்பவங்களுக்கும் லக்வி தான், பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார்.
அமெரிக்கா நம்பத் தயாரில்லை: மும்பையில் நாரிமன் கட்டடத்தில் இருந்த ஒரு பயங்கரவாதி சரண் அடைய தயாரானபோது, சேட்டிலைட் போன் மூலம் அவனுடன் பேசி, "இந்த போர் நம் தனிப்பட்ட போரல்ல; நம் மக்களின் போர்' என்று அவன் மூளையை சலவை செய்து சரண் அடையாமல் தடுத்தார் என்ற விவரமும் இப்போது தெரியவந்துள்ளது.
கடந்த பத்தாண்டாக நடந்த பல தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், லக்வி முக்கிய பங்கு கொண்டுள்ளதை இந்தியாவும் உறுதி செய்துள்ளது. இவருக்கு பாக்., ராணுவமும், ஐ.எஸ்.ஐ.,யும் உடந்தையாக இருந்துள்ளதையும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவுக்கும் இந்த முறை கடும் எரிச்சல் வந்துள்ளது.
லஷ்கர் பயங்கரவாத தலைவர் களை கைது செய்து அமெரிக்காவுக்கு "நல்ல பிள்ளை' போல பாகிஸ்தான் நடந்து கொண்டாலும், இந்த முறை அமெரிக்கா நம்பத் தயாரில்லை. அதனால், அடுத்து அதிரடி நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்று தெரிகிறது.
