
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அது நடந்திருக்கிறது. நாளிதழ்களில் எல்லாம் வெளியாகியுள்ள இணைந்த குடும்பத்தினருடன் கலைஞர் சிரித்துக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படத்துக்குப் பின் ஒரு நீண்ட கதையே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் செல்வி அனுமதிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, அழகிரி குடும்பத்துக்கும் செல்வி குடும்பத்துக்கும் முற்றிலுமாகப் பேச்சுவார்த்தை கிடையாதாம். ஆனால், அண்மையில் உடல்நலக் குறைவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கலைஞரின் மகள் செல்வியும் அழகிரியின் மகள் கயல்விழியும்தான் உடனிருந்து கவனித்துக் கொண்டனராம். அப்போது கயல்விழியின் மகன் இதயாதான் செல்வியுடன் பேசி இணக்கமான சூழலை ஏற்படுத்தினாராம். தொடக்கத்தில் இருவர் மட்டுமே பேசத்தொடங்கினாலும் பின்னர் விவரங்களை இருதரப்புக்குமே பாஸ் செய்திருக்கின்றனர். முதலில் தயங்கினாலும் பின்னர் அவர்களும் காது கொடுத்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, கலைஞர் எழுதிய கடிதத்துக்கு கலாநிதி மாறன் பதிலெழுதிய இரண்டு நாட்களில் கலைஞருடன் ஸ்டாலின் - அழகிரி, கலாநிதி - தயாநிதி சகோதரர்கள் சந்தித்துப் பேசியதாகவும்கூட ஒரு தகவல். இந்தச் சந்திப்பின்போது, மனவருத்தத்தில் ஏதோ கடுமையாகச் சொல்லிவிட்டு எழுந்துசென்றுவிட்டாராம் கலாநிதி மாறன். தொடர்ந்த சமாதான முயற்சிகளின் பலனாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணியளவில் சென்னையிலுள்ள செல்வியின் மகள் எழிலரசியின் வீட்டில் ஸ்டாலின், அழகிரி, ஸ்டாலின் மனைவி துர்கா, அழகிரியின் மகள் கயல்விழி, செல்வி - செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேசினராம். சிறிதுநேரம் கழித்து கலா - தயா சகோதரர்கள் வந்து சேர்ந்துகொண்டனராம்.
கரம் பற்றி...
இந்தச் சந்திப்பின்போது, `மாமா, நாங்கள் சின்னவர்கள்தானே' என்று அழகிரியின் கைகளைப் பற்றிக் கொண்டு கலா-தயா சகோதரர்கள் மன்னிப்புக் கேட்டார்களாம். `நம் குடும்பம் மிகவும் முக்கியம். கட்சியைப் பலப்படுத்த வேண்டியது அவசியம். தேர்தலில் வலு இருந்தால்தான் வெல்ல முடியும். இல்லாவிட்டால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்களோ ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் என ஆதரித்துக் கொண்டிருக்கிறீர்கள்...' என்று குறிப்பிட்டாராம் அழகிரி. `உடனே குறைத்தால் நன்றாக இருக்காது. படிப்படியாகக் குறைத்துவிடுகிறோம்' என்றனராம் சகோதரர்கள். `சீக்கிரமாக' என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தினாராம் அழகிரி. இதையடுத்து, `தந்தையிடமும் பேசிவிடுவோம்' என்று ஸ்டாலின் தெரிவித்தாராம்.
தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலையில் கோபாலபுரத்தில் கலைஞரை மகன்களும் பேரன்களும் சந்தித்து விரிவாகப் பேசி, பல விஷயங்களை முடிவு செய்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதியம் எழிலரசி - டாக்டர் ஜோதிமணி தம்பதிக்கு கயல்விழி வீட்டில் விருந்தும் நடைபெற்றதாம். இந்த விருந்தில் வேறு யார் யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் என உறுதியாகத் தெரிய வரவில்லை.
பிற்பகலில் கலாநிதி, தயாநிதி இருவரும் செல்வி வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே அழகிரியும் அங்கே வந்து இருந்திருக்கிறார். பின்னர், அனைவருமாக மாலை 4.40 மணிக்கு கோபாலபுரம் சென்றனர். கீழே தயாளு அம்மாளுடன் பத்து நிமிஷங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர், மாடியில் இருந்த கலைஞரைச் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினராம். இந்தச் சந்திப்பில் கலைஞரின் காலில் விழுந்து கலா-தயா சகோதரர்கள் மன்னிப்புக் கேட்டதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. அதற்குப் பிறகு கலைஞர் இருந்த உற்சாக மனநிலை, தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்ததுதானே!
முதலில் கலைஞர், அனைவருடனும் கோபாலபுரத்தில்தான் நிருபர்களைச் சந்திப்பதாக இருந்தது. இடப்பற்றாக்குறை காரணமாகக் கூறப்பட, அறிவாலயத்தில் பிரஸ்மீட் என்று தெரிவிக்க, செய்தியாளர்கள் அங்கே சென்றபோது, கலைஞர் மட்டுமே பேட்டியளிக்க வந்தார். மாமாக்களும் மருமகன்களும் விரைவில் வருவார்கள் என்று கூறப்பட்டபோதிலும் வரவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் ஒரே காரில் சி.ஐ.டி. காலனியிலுள்ள கனிமொழி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். கோபாலபுரம் சந்திப்பின்போது, டெல்லி செல்வதற்காகப் புறப்பட்டு விமான நிலையம் சென்றுவிட்டிருந்த கனிமொழிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாராம் கனிமொழி. தேநீருக்குப் பின்னர் நால்வரும் போட் கிளப்பிலுள்ள தயாநிதியின் வீட்டுக்கும் கலாநிதியின் வீட்டுக்கும் சென்றுவிட்டு கோபாலபுரத்துக்கே திரும்பியிருக்கின்றனர்.
ஆளுக்கொரு பதிலைச் சொல்லி அநாவசியமாகக் குழப்பிவிடக் கூடாதே என்றுதான் அனைவரையும் அனுப்பிவிட்டு கலைஞர் மட்டும் செய்தியாளர்களைச் சந்திக்க வந்தாராம். பதில்களையும்கூட மிகவும் எச்சரிக்கையாகவும் ஜாலியாகவுமே கூறி முடித்துக் கொண்டார் அவர்.
பின்னணி!
கலா-தயா சகோதரர்கள் நடத்தும் நாளிதழ்கள் மிக அதிகமாக விற்பதாகக் கூறப்பட்டபோதிலும் இழப்பும் அதிகமாம். இதேபோல, மாநிலத்தில் பரவலாக எஸ்.சி.வி. இணைப்புகளுக்குச் சரிவரக் கட்டணங்களையும் வசூலிக்க முடிவதில்லையாம். எப்படியிருந்தாலும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் வரத்தானே போகிறது என்று நினைக்கிறார்களாம் கேபிள்காரர்கள். இந்த வகையில் சில நூறு கோடிகள் பாக்கியிருக்கிறதாம். டி.டி.எச். சேவைக்காகவும் சில நூறு கோடிகள் முடக்கப்பட்டு வருமானமின்றிக் கிடக்கிறதாம். ஏதாவது ஒரே செலவாகச் செய்துவிட்டால், தொழிலில் பாதிப்பின்றி இடைவிடாமல் வருவாய் தொடர்ந்துகொண்டிருக்கும் என்று நினைத்தார்களாம் சகோதரர்கள்.
உடன்பாட்டின் அம்சங்கள்!
சன் டி.வி. பங்கில் மீண்டும் ஒரு தொகையைத் தர சகோதரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனராம்.
- கலைஞர் டி.வி.யை இனி தமிழரசு பார்த்துக்கொள்வாராம்.
- அழகிரியின் மகன் அல்லது மகளுக்குக் கட்சியில் உயர் பதவி வழங்கப்படுமாம்.
- குடும்பம் ஒன்றாக இருந்தால் போதும். தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் ஸ்டாலின். இருந்தாலும் வாசன் துணை முதல்வர் ஆவார் என்கிற செய்தியை முறியடிக்கும் விதமாக விரைவில் ஸ்டாலின் துணை முதல்வராகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
- மதுரையில் தொடங்கப்பட்ட ராயல் கேபிள் விஷன் முடிவு பெறுமாம்.
நாளைய விளைவுகள்!
கலைஞர் டி.வி.யில் உயர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் விரைவில் கழற்றப்படுவாராம். மேலும் பலர் இந்தத் தொல்லைக்கு ஆட்படலாமாம்.
- நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எதுவும் புரியாமல், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என இருதரப்பிலும் பலர் ஆடிப்போயிருக்கிறார்களாம். மதுரையில் தயாநிதி மாறனுக்கு வேண்டியவரான ஒருவருக்கு மாரடைப்பு வராததுதான் மிச்சமாம்.
- சன் டி.வி., கலைஞர் டி.வி. போட்டியால் திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமைக்கு ஏராளமான விலை கிடைத்து வந்தது. இனி அது கிடைக்காதே என்பது திரைத்துறையினர் கவலை.
இனி சன் டி.வி.யில் ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட லைவ் கவரேஜ் படிப்படியாகக் குறைக்கப்படுமாம். பின்னர், ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிறுத்தப்படலாம் என்பதுதான் தகவல்.
சில கேள்விகள்!
சகோதரர்களின் கோபத்துக்குள்ளான அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் என்ன செய்வார்கள்? எவ்வாறு சகோதரர்களை எதிர்கொள்வார்கள்?
- ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியதன் அவசியம் பற்றிய செய்திகள் இனியும் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகுமா?
- ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி மீண்டும் தயாநிதி மாறனுக்கு வழங்கப்படுமா?
நடக்காதென்பார் நடந்துவிடும்!
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, December 4, 2008

0 comments:
Post a Comment