தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு அவ்வப்போது தெரிவிக்கும் எச்சரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என முதல்வர் கருணாநிதி கூறினார்.மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர், ஏ.டி.ஜி.பி., (நிர்வாகம்) லத்திகா சரண், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், உளவுத்துறை ஐ.ஜி., ஜாபர் சேட், ஐ.ஜி., (தலைமையிடம்) அசோக் சுக்லா கலந்துகொண்டனர்.இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முக்கிய ஓட்டல்களில் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கையாக, தேசிய பாதுகாப்பு கமாண்டோக்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.பின், முதல்வர் கருணாநிதி, அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் மற்றும் தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பதாக உள்ள திட்டத்தில் மாற்றம் உண்டா?
அதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்னால் முடிந்தவரை, என் நிலைக்கு ஏற்ப, என் நிலையைத் தாழ்த்தி, "இது தனிமனிதர் பிரச்னை அல்ல; தமிழ் சமுதாயத்தின் பிரச்னை; உயிர் பிரச்னை' எனக் கூறி, எல்லா கட்சியினருக்கும் இறுதிவரை இலங்கைப் பிரச்னைக்காக வேண்டுகோள் விடுத்தவாறு உள்ளேன்.
சிதம்பரம் உள்துறை அமைச்சராகி உள்ளதால், தமிழகத்துக்கு பலன் கிடைக்குமா?
அவர் ஏற்கனவே உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். அந்த அனுபவத்தை வைத்து இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, எதிர்காலத்தில் வலிமைமிக்க இந்தியாவை அமைக்க சிதம்பரம் பாடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திருமாவளவன், பிரதமரைச் சந்திக்கும் குழுவில் இடம்பெறக் கூடாது என மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியுள்ளாரே?
அவர் ஆதரித்து செயல்பட்டதாக வெளிவந்த செய்தியை அவரே மறுத்து அறிக்கை கொடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதமரிடம் என்ன கோரிக்கை வைக்கப்போகிறீர்கள்?
இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பது தான் மூல கோரிக்கை.
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதா?
தமிழகத்தின் பாதுகாப்பு குறித்து மாதம் ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தமிழகத்தின் அமைதியைக் காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக நேற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. பாதுகாப்பு குறித்து கலந்து பேசியுள்ளோம்.
தமிழகத்திற்கும், சென்னைக்கும் ஆபத்து இருப்பதாக ஏதாவது தகவல் வந்துள்ளதா?
அப்படிப்பட்ட தகவல் அவ்வப்போது மத்திய அரசால் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு எச்சரிக்கும் போதெல்லாம், அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.நான்கு முக்கிய நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மையம் ஏற்படுத்தப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒன்று சென்னையில் அமையக் கேட்போம்.
தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம் உள்துறை அமைச்சராகி இருப்பதால், தமிழகத்திற்கு ஏதாவது கோரிக்கை வைப்பீர்களா?
தமிழகத்தில் கமாண்டோ மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் கேட்போம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
