மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரம் கிராமத்தில் ஆதிதிராவிடர்களுக்கும் பிரிதொரு பிரிவினருக்கும் ஏற்பட இருந்த மோதல் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டிருப்பது ஆறுதலை அளிக்கிறது.
ஒரு சுவர் விஷயம்கூட முதல்வர்வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
1989 ஆம் ஆண்டில் இத்தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு 100 அடி நீளமுள்ள சுவர் ஒன்று எழுப்பப்பட்டது.
இதை ‘விலக்கி வைத்த’ குற்றச்சாட்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் முன்வைக்க பாதுகாப்புக் காரணங்களுக்காகவே சுவர் எழுப்பப்பட்டதாக மாற்றுத் தரப்பினர் கூற, பிரச்னை பெரிதானது. ஆட்சியர் ஜவஹர் கவனத்திற்கு விஷயம் எடுத்துச் செல்லப்பட, முதல்வரும் தலையிட்டு, சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு சிறு வழி அமைக்கப்பட்டுள்ளது.
இதைச் சுவர் எழுப்பிய தரப்பினர் எதிர்த்து ஊரைக் காலி செய்துவிட்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தாழையூத்துப் பகுதிக்கு நகர்ந்துவிட்டனர்.
ஆனால், முதல்வர் சட்டசபையில் ஆண்கள் மட்டுமே புலம்பெயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். தினமணியில் வெளியாகிவுள்ள ஒரு புகைப்படம் முதல்வர் தந்துள்ள தகவல் தவறானது என்று நிரூபிக்கும் வகையில் பெண்கள் சிறுபிள்ளைகளுடன் வெளியாகிவுள்ளது.
பிரச்னை தீர்ந்துவிட்டது போல் அரசுத் தரப்பு நினைத்தாலும் இதனை முழுமையாக ஏற்பதற்கில்லை.
இந்த நூற்றாண்டிலும் தீண்டாமை எனும் தீக்கரங்கள் பலரது மனத்தில் எவ்வளவு ஆழமான இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதை இச்சம்பவம் சொல்லாமல் சொல்கிறது.
மீண்டும் சுவர் எழுப்பப்படும் வரை நாங்கள் ஊர் திரும்புவதாக இல்லை என்று இவர்கள் காட்டும் உறுதி அரசுக் கோப்பின் முடிச்சை மறுபடி அவிழ்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. நெருப்பு அடங்கிவிட்டது. புகை இன்னும் இருக்கிறதே? காட்டில் குடியேறியவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளை உருவாக்குவதும் மனங்களில் ஊடுருவியுள்ள அழுக்கை அகற்றுவதும் இப்போது அரசுக்குள்ள இரு மாற்று வழிகள் என்று சொல்லலாம்.
அரசியல் கட்சிகளுக்கு ஆயிரம் கவனஈர்ப்புகள். என்னென்னவோ பேசி எதிலெதிலோ கட்சிகள் இப்பிரச்னையைப் பேசித் தீர்க்க முன்வரலாம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இங்கு முகாமிட்டு தங்களுக்கு ஆபத்து என்பது வீண் அச்சம் என்பதை விளக்கலாம். கசப்புணர்வுகளை வெளியேற்றிப் பழங்காயங்களுக்கு மருந்திடலாம்.
எதிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கும் கட்சிகளுக்கு ஒரு நற்காரியம் செய்ய நல்வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது
புகையும் அடங்க வேண்டும்!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment