
வட சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெய்த மழைநீர் இன்னும் வடியவே இல்லை. கொசுத் தொல்லை, சாக்கடை பொத்துக் கொண்டு நடுத்தெருவில் ஓடுகிறது. காலரா, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் என்று தினமும் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கிறார்கள். உண்மையில் இந்த மழை தமிழ்நாட்டுக்குத் தேவையான நீர்ப் பிரச்னையை சரிக்கட்டி விட்டதா?
``இல்லை'' என்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி இந்த வருடம் ஜூன் முதல் அக்டோபர் வரை 167.17 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் நமக்குத் தந்திருக்க வேண்டும். வழக்கம்போல் தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதால் 110 அடி இருக்கவேண்டிய மேட்டூர் நீர்மட்டம் 87 அடியாக குறைந்துவிட்டது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடிக்குத் தயாராக வேண்டிய ஒண்ணரை லட்சம் ஏக்கர் விளைநிலம் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிறது. வருடம் தவறாமல் அரங்கேறும் தொடர்கதையாகிவிட்ட இந்த காவிரி பிரச்னைக்கு ஒரு முடிவே கிடையாதா?
இது ஒரு பக்கம் இருக்க, "தமிழகம் எதிர்நோக்கியுள்ள தண்ணீர்ப் பிரச்னை பூதாகரமானது'' என்கிறார் முன்னாள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சி.எஸ். குப்புராஜ்.
எப்படி?
"தாமிரபரணி தவிர்த்து காவிரி, தென்பெண்ணை, பாலாறு, கொரட்டலையாறு என தமிழகத்தின் எல்லாப் பெரிய நதிகளும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகித்தான் தமிழ்நாட்டுக்குள் வருகின்றன. வைகை தமிழகத்திலேயே உற்பத்தியாகிறது என்றாலும், தண்ணீருக்கு கேரளாவின் பெரியாற்றைத்தான் நம்பி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து வரும் இந்த ஆற்றுத் தண்ணீரையே பெருமளவில் நம்பி இருக்கிறது தமிழகம். இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா என எல்லாப் பக்கத்து மாநிலங்களும் பிரச்னை செய்வதால் எதிர்காலத்தில் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக்கும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் தமிழகத்தில் பெரிய தட்டுப்பாடு வரும். `ஒரு நீர் ஆதாரத்தை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பின்னர் அதன் பயன்பாட்டு உரிமை அவர்களுக்குத்தான் சொந்தம்' என்கிறது சர்வதேச நதிநீர் ஒப்பந்தம். அதன்படி காவிரி தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். ஆனால், இன்று நமக்குச் சொந்தமான நதியையே மற்றவர்களிடம் பிச்சை கேட்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். இப்பொழுது, புதிதாக ஒக்கேனக்கல் பிரச்னை வேறு சேர்ந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் வற்றாத ஜீவநதியான பாலாற்றின் பாதையில் கர்நாடகம் புதிய பல ஏரிகளை உருவாக்கியதன் விளைவு, பாலாறு வறண்டுவிட்டது. இப்போது, மழைக் காலங்களில் பாலாற்றில் ஓடும் மூன்று நாள் தண்ணீருக்கும், பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திராவின் முயற்சியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் முயற்சி வெற்றிபெற்றால் பாலாறு செத்த ஆறாக ஆகிவிடும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலும் ஆந்திரா சிக்கல் செய்கிறது. 1996-ல் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வேலைகள் முடிந்த பிறகு தொடங்கி, இன்றைக்கு வரைக்கும் ஒப்பந்தப்படி ஒரு வருடம்கூட 15 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரா வழங்கியதில்லை. வேண்டா வெறுப்பாக மிகக் குறைவான அளவு தண்ணீரையே திறந்துவிட்டிருக்கிறது. இதில் இடையில் விவசாயிகள் பைப் போட்டுத் திருடுவதை, கட்டுப்படுத்தவும் ஆந்திரா அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்கிறார் குப்புராஜ்.
கர்நாடகம், ஆந்திராவுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் _ஆழியாறு, பவானி, புதிதாக நெய்யாறு என கேரளா உருவாக்கும் பிரச்னைகள் பல.
"முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பேச்சிப்பாறை அணையும் கட்டப்பட்டது. இந்த அணை இப்போது பலமாகத்தானே இருக்கிறது? 2000 வருடம் பழமையான கல்லணையும் ஏரிகளும் பலமாக உள்ளன. இவை உடைந்துவிடும் என யாரும் சொன்னதில்லையே? முல்லைப் பெரியாறில் கேரளா பிரச்னை செய்வதன் உண்மையான நோக்கம் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் இடுக்கி அணைதான். முல்லைப் பெரியாறு அணையைவிட 34 மடங்கு பெரியதாக இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு தண்ணீர் கொண்டு வரத்தான் முல்லைப்பெரியாற்றில் அவர்கள் பிரச்னை செய்கிறார்கள்'' என்கிறார் நீரியல் வல்லுநர் கோமதிநாயகம்.
சிக்கலிலுள்ள இன்னொரு திட்டம் நெய்யாற்றுத் திட்டம். இத்திட்டத்தின்படி நெய்யாற்றில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு விநாடிக்கு 150 கன அடி நீரை கேரளம் தரவேண்டும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த பிறகு தொடங்கி இன்று வரைக்கும் இந்தத் தண்ணீரை தர மறுத்து வருகிறது கேரளம். இத்தனைக்கும் இந்த அணைக்கு தண்ணீர் தமிழகப் பரப்பில் இருந்துதான் செல்கிறது.
சரி, இதற்கு என்னதான் தீர்வு?
"நீதிமன்றங்கள் மூலமும் மத்திய அரசு அதிகாரத்தின் மூலமும் இதற்கு தீர்வுகாண முடியாது என்பது ஏற்கெனவே தெளிவாகிவிட்டது'' எனக் கூறும் குப்புராஜ், இதற்கு முன்வைக்கும் ஒரே தீர்வு... "இந்திய நதிகள் இணைப்பு. இவற்றைச் செயல்படுத்துவது இயலாத ஒன்றல்ல. பெரியாறு - வைகை இணைப்பும் காவிரி - வெள்ளாறு - வீராணம் இணைப்பும் ஏற்கெனவே சாத்தியமாகியிருக்கிறது'' என்கிறார் அவர்.
"ஒரு மனிதனின் வளமான வாழ்வுக்கு 1700 - 2000 கனமீட்டர் தண்ணீர் தேவை. 1000 கனமீட்டருக்கும் கிழே சென்றால் அங்கு பற்றாக்குறை என அர்த்தம்.
தமிழகத்தில் இப்பொழுது நிலத்தடி நீராதாரத்தையும் சேர்த்துப் பார்த்தாலும் சராசரியாக ஒரு மனிதனுக்கு 1000 கனமீட்டர் தண்ணீர்தான் கிடைக்கிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்றுநீர் தடைபட்டால் இது 600 கனமீட்டராகக் குறையும்.
ஆக, மிக மோசமான ஒரு அபாயக் கட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம். நாம் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் கோமதிநாயகம்.
பிரச்னை முற்றுவது வரைக்கும் காத்திருக்காமல் இப்பொழுதாவது சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக்கொள்வார்களா?.

இணையதளத்தில் பல விஷயங்களை சுதந்திரமாக உடைத்து எழுதும் வசதி இன் னும் பத்திரிகையுலகுக்கு வந்து சேரவில்லை. அப்படிப்பட்ட விஷயங் களில் ஒன்று, சட்டக் கல்லூரி வன்முறை.
* மாணவர் மனங்களில் இப்படிப் பட்ட துவேஷம் எங்கிருந்து உருவாகிறது?
இது அவர்கள் கண்டுபிடித்த புதிய துவேஷம் அல்ல. பல தலை முறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் ஜாதி உணர்ச்சியின் விளைவே இந்த மோதல்.
* அப்படியானால் இவ்வளவு துவேஷமுள்ள மாணவர்கள் மோதிக்கொண்டு சாகட்டும் என்று சொல்வீர்களா?
ஒருபோதும் இல்லை. எல்லா வன்முறையும் அருவருக்கத்தக்கதுதான். யார் யாரை அடிக்கிறார்கள் என்ற வேறுபாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் அர்த்த மற்றவை. துளியும் மனிதத் தன்மை அற்ற மனநிலையில்தான் இப்படிப்பட்ட வன்முறை சாத்தியம். அந்த மனநிலைக்கு இளம் உள்ளங்கள் தள்ளப்பட்டுவிட்டது பெரும் வேதனையாக எனக்குப் படுகிறது. இன்னொரு மனிதனை கம்பாலும் இரும்புக் குழாயாலும் நையப் புடைத்த கைகளை விட, கத்தியால் வெட்டித் தள்ளத் துடித்த கைகளை விட அதிகம் ஆபத்தானவை அந்தக் கைகளை இயக்கிய மனங்கள்தான்.
* அந்த மனங்களை உருவாக்கியது யார் ?
நாம்தான். நம் சமூகத்தின் மிக முக்கிய சக்திகளான நான்கு சக்திகளும் இதற்குப் பொறுப்பு. ஒன்று அரசியல். இரண்டாவது சினிமா. மூன்றாவது ஜாதி. நான்காவது குடும்பம்.
* நான்கும் எப்படிப் பொறுப்பு என்று விளக்க முடியுமா?
ஜாதி அமைப்பு, அடுக்கு முறையில் மேலிருந்து கீழ் வரை ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரை நசுக்கும் அமைப்பு. மிகச் சிறிய வயதிலேயே இந்த ஜாதி வேறுபாட்டையும் ஒடுக்குவதையும் ஒடுக்கப்படுவதையும் தம் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள, பிஞ்சு மனங்களை நம் குடும்பம் பயிற்றுவிக்கிறது.
நீ இன்ன ஜாதியில் பிறந்திருக்கிறாய். அதன் விதிகளுக்கேற்ப நடந்துகொள் என்று குழந்தையிலிருந்தே மௌனமாகவும் பிராக்டிகலாகவும் குடும்பம் நமக்கு போதிக்கிறது. எந்த ஜாதி என்பதைப் பொறுத்துத் தனக்குக் கிடைக்கும் மரியாதைகளையோ அவமானங்களையோ சகஜமாக கேள்வியேதும் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் இயல்பைக் குடும்பம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி விடுகிறது. அவரவர் ஜாதி `அந்தஸ்து'க்குரிய திமிரோ, பெருமிதமோ, கூச்சமோ, அடிமைத்தனமோ இயல்பாக்கப்படுகிறது.
* இதிலிருந்தெல்லாம் நம்மை விடுவிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது ?
அந்தப் பொறுப்பு அரசியலுக்கும் கல்விக்கும் கலைக்கும் உரியது. கல்வி முதல் காவல் துறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது அரசியல்தான். ஆனால் இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள், தலைமைகள் எல்லாம், ஒரு சில விதி விலக்குகள் தவிர, கேவலமானவை. பதவிசுகம், சுயநலம், இதற்குத் தேவைப்படும் ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவை. நமக்கு உழைப்பதற்காகவே பதவிக்கு வருவதாக நம்மை சாமர்த்தியமாக ஏமாற்றும் தந்திரசாலிகள். முழுப் பொய்களைச் சொல்லவே மாட்டார்கள். எப்போதும் அரை உண்மைகளையே பேசுவார்கள்.
* ஜாதி வெறி உணர்ச்சியை வளர்ப்பதில் கட்சிகளின் பங்கு என்ன ?
ஓட்டுக்காக ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு ஜாதியின் அபிமானத்தைப் பெறுவதற்காக பல வேலைகளைச் செய்கிறார்கள். வெவ்வேறு ஜாதிச் சங்கங்கள் தங்களை அரசியல் கட்சிகளாகவே மாற்றிக் கொள்கின்றன. ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஆதரவைத் திரட்டும் வலிமையை இழந்து வரும் பெரிய கட்சிகள், ஓட்டுக்காக ஜாதிக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அவற்றை வளர்த்துவிடுகின்றன.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தனி விடுதிகள், தலித் மாணவர்களுக்குத் தனி விடுதிகள் என்று அரசு ஏற்படுத்தியதே மிகப் பெரிய வரலாற்றுப் பிழை. கிராமத்தில் ஊர், சேரி (காலனி) என்று பிரித்ததன் தொடர்ச்சியே இது. சேரன்மாதேவி குருகுலத்தின் தீண்டாமையை எதிர்த்த பெரியாரின் பாரம்பரியத்துக்கு, திராவிட இயக்க ஆட்சி துரோகம் செய்துவிட்டது என்றே சொல்லலாம். ( இந்த விடுதிகளின் படு அவலமான நிலை தனிக்கதை. மனித ஜீவிதத்தையே கேவலப்படுத்தும் விதத்தில் இவற்றை நடத்திவரும் அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கெல்லாம் அந்தமான் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கலாம்.)
பொது விடுதிகளில்தான் எல்லா மாணவர்களும் இருக்க வேண்டும். அங்கேதான் எல்லாருக்கும் சமத்துவம் கற்பிக்கப்படவேண்டும். தனியார் கல்லூரிகளில் பெருமளவு சாத்தியமாகும் இதனை, அரசுத் துறையில் செய்யத் தவறிவிட்டதற்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* பொறுப்பு தவறியதில், கலையின் பங்கு என்ன ?
இங்கே பெருமளவு ஆதிக்கம் செலுத்தும் கலை சினிமா. நிலப் பிரபுத்துவ காலத்து ஜாதிப் பெருமைகளை தமிழ் சினிமா கடந்த 20 வருடங்களில் அதிகமாகப் பேசியிருக்கிறது. இன்னொரு பக்கம் கண் மூடித்தனமான வன்முறைக் காட்சிகள். இந்தப் படங்களை மண்ணின் மணம் கமழ்பவை, தமிழ்ப் பண்பாட்டை சித்திரிப்பவை என்று பொய்யாகப் புகழ்வது, வன்முறைக் கலாசாரத்தை கௌரவப்படுத்தியிருக்கிறது. புதிதாக வரும் ஒவ்வொரு இளம் நடிகனும் மென்மையாக நடித்துப் பெயரெடுத்த அடுத்த நொடியே ரவுடி, பொறுக்கியாக மட்டுமே நடிக்க விரும்புகிறான். அதுதான் அவன் ரேட்டை லட்சத்திலிருந்து கோடிகளுக்கு உயர்த்துமாம்.
* இதெல்லாம் பொழுதுபோக்குதானே? படத்தைப் பார்த்து வன்முறை பெருகிவிடாது; வாழ்க்கையில் இருக்கும் வன்முறையைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே ?
அருவருக்கத்தக்க வன்முறையை ரசிக்கத்தக்கதாக மாற்றுவதுதான் இவர்களுடைய கலை செய்யும் ஆபத்து. பொறுக்கியை கண்டிப்பதற்கு பதிலாக ரசிப்பது சீரழிவுக்கே வழி. மிகக் கொடூரமான வன்முறையை விவரமாகக் காட்டும்போது, இளம் மனங்கள் அதற்குப் பழகிப் போகின்றன. நிறையப் பார்க்கப் பார்க்க, மரத்துப் போகின்றன. இதனால் நேரில் ரத்தம் கொட்டுவதைப் பார்க்கும்போது பதற்ற உணர்ச்சி இல்லாமற் போய்விடுகிறது. வன்முறை பற்றி மனம் மரத்துப் போவது தான் மிக ஆபத்தானது.
* சட்டக்கல்லூரியில் போலீஸ் வாய்மூடியிருந்ததும் அப்படிப்பட்ட வன்முறைதானே ?
ஆம். எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அநீதி அது. மேலிருந்து அரசியல் உத்தரவு வந்திருந்தால், அதை போலீசார் விசாரணைக் கமிஷன் முன்பு பகிரங் கப்படுத்த வேண்டும். கல்லூரிக்குள் நுழைய பிரின்சிபால் அனுமதியோ அழைப்போ வேண்டும் என்பது சட்ட விதியே அல்ல. காவல் அதிகாரிகள் பிரின்சிபாலிடம் போய் `இப்போது எங்களை உள்ளே வரும்படி அழை; இல்லாவிட்டால் வன்முறைக்கு உடந்தை என்று உங்களையும் கைது செய்வோம்' என்று சொல்லியிருக்கலாம். மோதல் பற்றி உளவுத் தகவல் முன்கூட்டி கிடைத்தபோதும் செயல்படாதது பெருந்தவறு.
* ஜாதி மோதல்களிலிருந்து விடிவே வராதா?
வரும். வந்தே தீரும். பல காலமாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரிடம் இப்போது விழிப்பு ஏற்படும்போது, அது பூமிப் பந்தின் உள்தகடுகள் அசைந்தால் நில நடுக்கம் ஏற்படுவது போல சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அரசியல் தலைமைகள் செய்யத் தவறுகிற `எல்லாருக்கும் சமமான கட்டாயக் கல்வி` என்பது முதல் தேவை. ஜாதி, மதம் முதலியவற்றின் அடிப்படையில் யார் எங்கே எந்த மனித உரிமையை மீறினாலும், பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் அரசியல் உறுதி வேண்டும். எந்த ஜாதி அமைப்பு தொடர்பான நிகழ்ச்சியிலும் எந்த அரசியல், கலை, கல்வித்துறைப் பிரமுகர்கள் பங்கேற்கக்கூடாது. ஜாதி மறுத்து நடக்கும் கலப்புத் திருமணத் தம்பதியினருக்கு வேலையில் இட ஒதுக்கீடு, பொருள் உதவி முதலியன தரப்படவேண்டும். தேர்தல் ஆணையம் போல காவல் துறை சுயாட்சி அமைப்பாக்கப்பட வேண்டும். இப்படி நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் சமூக மாற்றம், சமத்துவம் ஏற்படமுடியும்.
* கடைசியாக ?
கத்தியைத் தூக்கிய பாரதி கண்ணன்களுக்கும் கம்புகளைத் தூக்கிய சித்திரைச் செல்வன்களுக்கும் ஒரு ஸ்வீகாரத் தந்தையாக சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு வாருங்கள். ஆனால் சரியான கொள்கைகளையும் லட்சியங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லகண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை. கத்திக்கும் கம்புக்கும் பதிலாக பேனாவையும் கம்ப்யூட்டரையும் உங்கள் கைகளில் தரக்கூடிய தலைமைகளைத் தேடுங்கள்.
ஒரு நிமிடம் யோசியுங்கள். நீங்கள் எந்த ஜாதியில், எந்த வீட்டில், எந்த நாட்டில் பிறந்தீர்கள் என்பதெல்லாம் தற்செயலாக இயற்கையில் நடந்த ஒரு விபத்து. வீடு மாறிப் பிறந்திருந்தால், உங்களில் யார் எந்தத் தலைவருக்காக ஆயுதம் தூக்கியிருப்பீர்கள் என்று யோசித்துப் பார்த்தால், இதன் அபத்தம் புரியும். ஜாதிப் பெருமையோ சிறுமையோ உங்கள் மீது பிறப்பால் திணிக்கப்பட்டது. நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. அதைத் தூக்கி எறியுங்கள். ஒரு புல்லாக, ஒரு பூச்சி யாக, ஒரு புழுவாகப் பிறக்காமல், ஒரு மனிதக் குழந்தையாகப் பிறந்திருப்பதன் பயனை முழுமையாக அனுபவிக்க உங்களுக்குத் தேவை அன்பு; ஆயுதம் அல்ல..
வேதனைக்கு நடுவே இந்த வாரச் சிரிப்பு
அ.இ.அ.தி.மு.க நடத்தும் பொதுக் கூட்டங்களில் இனி தனி நபர்களைப் பாராட்டிப் பேசக்கூடாது என்று கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
2025ல் இந்தியா எப்படி? : அமெரிக்கா நடத்திய ஆய்வில் தகவல்
எதிர்காலத்தில், இந்தியாவும், சீனாவும் உலகின் மிகப்பெரும் சக்தியாக வளர்ச்சி பெறும் என்றும், 2025ம் ஆண்டுக்குள் உலகின் முக்கிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்றும், அமெரிக்க புலனாய்வுத் துறை கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக ஒபாமா பதவியேற்க சில நாட்களே இருக்கும் நிலையில், "உலகளாவிய சூழ்நிலைகள்-2025' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை பல்வேறு கோணத்தில் இந்தியாவையும் சீனாவையும் அலசுகிறது.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரகத்தின் அறிக் கையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் நன்றாக உள்ளன. ஆனால், இந்த வளர்ச்சியை எளிதில் அடைந்துவிட முடியாது. பொ ருளாதார, சமூக தடங்கல்களைக் கடந்து வெளிவர வேண்டியிருக்கும். தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், 2025ம் ஆண்டில், உலகிலேயே சீனா தான் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்; ராணுவ பலத்தில் முன்னணி வகிக்கும் நாடாக இருக் கும். வரும் 2025ம் ஆண்டில், அமெரிக்காவே தொடர்ந்து தனிமுக்கியத்துவ நாடாக நீடிக்கும். இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி பெரிதும் அதிகரிக்கும். ஆனால், சுதந்திரத்துக்குப் பின் தற் போது இந்தியாவில் அதிகரித் துள்ள பிராந்திய, இனவாத தீவிரவாதம் நீடித்தால், வளர்ச்சியில் தடை ஏற்படும். ஆனால், இந்தியாவின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படாது. பயங்கரவாதத்தையும், இனவாதத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத இயக் கத்தையும் இந்தியா கட்டுப்படுத்திவிடும். இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவில் வன்முறைகள் மற்றும் ஸ்திரமின்மையை இந்தியா சந்திக்க நேரிடும். குறிப்பாக மாவோயிச பயங்கரவாதம் அதிகரித்து வருவதால், நாட்டின் பல பகுதிகளிலும் பெரியளவில் வன்முறைகள் ஏற்படும்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சிறப்பாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்ப மாற்றம், வர்த்தகம் போன்றவை அதிகரித்துள்ளன. இந்த உறவுகளை வேறு சில நட்பு நாடுகளுக்கு மாற்றிக் கொள்வதை, இந்தியாவின் அரசியல் தலைமை தவிர்க்கும். அமெரிக்காவை ராணுவ ரீதியாகவோ, பொருளாதார அடிப்படையிலோ இந்தியா பார்க்கவில்லை. ஆனால், சர்வதேச சூழ்நிலை அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சீனா - அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் கலாசாரப் பாலமாக விளங்கும் வகையில் இந்தியா திகழும். பல்வேறு நாடுகளுடன் நட்புறவு இந்தியாவுக்கு அதிகரிக்குமே தவிர, அது எந்த நாட்டுடனும் ஓட்டுநாடாக இருக்காது. ஜனநாயகம் தழைத்திருக்கும். அரசியல் கூட்டணிகள் வெற்றிகரமாக இருக்கும். ஆனால், இந்தியாவில் 150 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை அன்று இருக்கும். எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இருப்பினும், எரிசக்தி, மின் சார தேவை, உணவு, நீர்வளம் பற் றாக்குறை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவைக்கு ஏற்ப, இவற்றின் சப்ளையை உருவாக்க வேண்டியிருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் இருந்து கிழக்கத்திய நாடுகளுக்கு வளமும், பொருளாதார சக்தியும் மாறும் வகையில், உலகமய பொருளாதாரம், மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கீழை நாடுகளுக்கு பொருளாதாரம் இடம் பெயர்வது இனி அதிகரிக்கும். இரண்டாவது உலகப் போருக் குப் பின், ஏற்படுத்தப்பட்டு பின்பற்றப்படும் சர்வதேச நடைமுறைகள் அனைத்திலும், புரட்சி ஏற்படுத்தப்படும். சர்வதேச அளவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா போன்ற புதிய நாடுகள் முக்கியத்துவம் பெறும். அத்துடன், இந்நாடுகள் சர்வதேச அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கும். அதே சமயம் இந்தோனேஷியா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகள் வளரும் நாடுகள் பட்டியலில் இடம் பெறும். குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும்.
Labels: உலக செய்திகள்
