‘நற்சொல் சொல்லிக் கண்டிப்பதாவது? இது சாத்தியமில்லாத ஒன்று. காரசாரமாகவும் கடுமையாகவும் திட்டினால் அதற்குப் பெயர்தான் கண்டிப்பு’ என்று வாதிடுபவர்கள், இக்கட்டுரையின் இறுதியிலும் விடாப்பிடியாகச் சொல்லமுடியுமா என்று பாருங்கள்.
“ரொம்ப நல்லா இருக்கு நீ பண்றது” என்கிற பாராட்டு வாக்கியத்தை ரொம்ப என்பதை அழுத்தி, குரலில் பாராட்டு - உற்சாகத் தொனி வந்துவிடாமல் சொல்லிப் பாருங்கள். நீ பண்றது ரொம்பத் தப்பு என்கிற அர்த்தம் வந்துவிடும்.
வாக்கியம் என்னவோ ஒன்றுதான். தொனிதான் சுருதிக் குறைவான தொனி.
தேன் கலந்த மருந்தையே இந்த உலகம் விரும்புகிறது. கசப்பை அல்ல!
“நாங்க செஞ்ச நல்லதுக்கு நீ நல்லாவே திரும்ப செஞ்சிட்டே” என்பதில், நல்லாவே என்கிற வார்த்தையை தொனி மாற்றிப் பேசினால், சொல்ல வந்த பொருளே வேறு.
என்ன பேச்சு இது? என்கிற சொல்லில் எதிர்மறையான சொல் ஏதும் இல்லை. இந்த நல்ல வாக்கியத்தின் தொனியை மட்டும் மாற்றி ஒருவரை மென்மையாகக் கண்டிக்க முடியும்.
“மறக்கமுடியாதபடி பண்ணிட்டீங்க!” என்பதைப் பாராட்டாகவும் பயன்படுத்தலாம். குறை சொல்லவும் பயன்படுத்த முடியும்.
“உங்களை மாதிரியான ஆளை நான் இதுவரை பார்த்ததே இல்லை” ரொம்பத்தான் உழைச்சிட்டே!” ஆகிய பாராட்டுகளும் இந்த இரகத்தைச் சேர்ந்ததே!
கண்டிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் கண்டித்தே ஆகவேண்டும். எழுகிற உணர்வைக் கொட்டித்தான் ஆகவேண்டும். ஆனால், அப்படியே கொட்ட முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழலில் நம் உணர்வுகளை வெளிக்காட்ட இந்த நற்சொல்லால் கண்டிப்பது மிக உதவும்.
அது என்ன நற்சொல்லால் கண்டிப்பது? கடுமையாகவே திட்டிவிட்டுப் போகிறேன் என்கிறவர்களுக்கு ஒரு வார்த்தை.
இப்படிச் செய்தால் நமக்கு மேலும் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதைத் தவிர்க்க இது சிறந்த வழி. அது மட்டுமல்ல, அவர் என்ன சொல்லிவிட்டார்? தப்பா ஒண்ணும் சொல்லலியே! உங்களை மாதிரியான ஆளை நான் பார்த்தது இல்லைன்னு தானே சொன்னார்? இதில் என்ன தப்பு இருக்கு என்று நமக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசவும் நான்கு பேர்கள் வேறு கிடைப்பார்கள்!
இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, December 3, 2008

0 comments:
Post a Comment