புகை பிடிப்பவர்கள் இன்று முதல் உஷராக இருக்க வேண்டும். பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடை நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கண்ட கண்ட இடங்களில் சிகரெட் மற்றும் பீடியை பற்ற வைத்தால், 200 ரூபாய் அபராதம் கட்ட நேரிடும். புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை சுவைப்பது போன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிலும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகளை தீர்க்கவும், இளம் தலைமுறையினர் உட்பட பல்வேறு பிரிவினரையும் புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து படிப்படியாக விடுவிக்கவும், பொது இடங்களில் புகை பிடிக்க தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் (வர்த்தகம் மற்றும் வியாபாரம், <உற்பத்தி, சப்ளை, வினியோகம் மற்றும் விளம்பங்களை தடை செய்தல்) சட்டம் 2003ன் கீழ், இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது இந்தத் தடையை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கையை, கடந்த மே 30ம் தேதியே மத்திய அரசு வெளியிட்டது. உடன் இதை எதிர்த்து இந்திய புகையிலை நிறுவனம் மற்றும் இந்திய ஓட்டல்கள் சங்கத்தினர் பல்வேறு ஐகோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய சுகாதார அமைச்சகமும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. "பல்வேறு மாநில ஐகோர்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டது. இந்த மனுவையும், மற்ற சில மனுக்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அக்டோபர் 2ம் தேதி முதல், பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும், பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளில் உள்ள வழக்குகளையும் மாற்ற உத்தரவிட்டது. அதனால், பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடை, மகாத்மா காந்தி பிறந்த தினமான இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே, புகை பிடிப்போர் எந்தெந்த இடங்களில் புகை பிடிக்கலாம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும். இல்லையெனில், 200 ரூபாய் தண்டம் கட்ட நேரிடும்.
