மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான் இது என்பதும் அம்பலமாகியுள்ளது.கடந்த புதனன்று, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 183 பேர் பலியாகினர். 60 மணி நேரம் வரை சண்டையிட்டு, பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒரே ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அந்த விசாரணையில் தினமும் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
பயிற்சி அளித்தவர்கள் யார்: இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதும், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., செய்த சதி தான், இந்த பயங்கர தாக்குதல் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களும் மத்திய அரசிடம் சிக்கியுள்ளன. மும்பையை தாக்கிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், எந்த இடத்தில் பயிற்சி நடைபெற்றது போன்ற விவரங்களும் கிடைத்துள்ளன.இதே போல், அமெரிக்க அரசும் மேலும் பல ஆதாரங்களை திரட்டியுள்ளது. அவை விரைவில் இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:
அமெரிக்க படைகளின் தலைமை தளபதி மைக் முல்லன் நேற்று முன்தினம் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். அப்போது, மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள், தங்களிடம் நிறையவே உள்ளன என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த பாக்., ராணுவ அதிகாரிகள், "மும்பை தாக்குதலில் ராணுவத்திற்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை. அது உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் வேலையாக இருக்கலாம்' என்றும் சப்பைகட்டு கட்டியுள்ளனர்.மும்பை தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சியும், மற்றவகை உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், லஷ்கர் -இ- தொய்பா அமைப்பு தற்போது, ஜமாயத் -உத் -தவா என்ற பெயரில் செயல்படுகிறது. அந்த அமைப்புக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதால், அதன் தலைவரான ஹபீஸ் முகமது சயீதுவை கைது செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசை, அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு மத்திய அரசு அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்கா நம்பிக்கை : இதற்கிடையில், அதிபர் புஷ்ஷின் உத்தரவின் பேரில், இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ், நேற்று பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோரை சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடர்வது என, பாகிஸ்தான் உறுதி மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதனால், மும்பை தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தான் நிச்சயம் விசாரணை நடத்தும். அதைச் செய்யும் என அமெரிக்கா நம்புகிறது.மும்பை தாக்குதல் விவகாரத்தை கையாள்வதில் பாகிஸ்தானுக்கு உள்ள பொறுப்பு குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் நான் பேசினேன். மற்ற நாட்டின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானை ஒரு களமாக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
பயங்கரவாத விஷயத்தில், பாகிஸ்தான் தன் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்துள்ளது. எனவே, தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்கும்.மும்பை தாக்குதல் விசாரணை தொடர்பாக, இந்தியாவுக்கு எந்த விதமான உதவியையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. மும்பையில் நடந்தது போன்ற தாக்குதலை, இதற்கு முன் இந்த துணைக் கண்டம் கண்டதில்லை.இவ்வாறு காண்டலிசா ரைஸ் கூறினார்.அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களுக்கு "விசா ' தரும் நடைமுறையில் புதிய விண்ணப்பம், மற்றும் அணுகுமுறைகளை மத்திய அரசு நேற்று மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இதனால், "விசா' பெறுவது இனி சுலபமாக இருக்காது.
மும்பை சம்பவத்துக்கு பாக்., பின்னணிக்கு ஆதாரம் சிக்கியது! * உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., தொடர்பு அம்பலம்
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, December 4, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment