சத்தியமாக நினைக்கவில்லை, அரசியல் கேள்விகளுக்கு இத்தனை அதிரடியாக பதில் சொல்வார் என்று. அண்மையில் அரசியலுக்கு வந்த அழகிரியின் மகள் கயல்விழியின் அதிரடியான பேட்டி இதோ.தீவிர அரசியலில் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். அரசியலில் உங்கள் லட்சியம் என்ன?``சமீபத்தில் சென்னைக்கு அருகிலுள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள சுனாமி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள ஏழை மக்களுக்கு நானும், என் கணவரும் மதிய உணவு கொடுத்தோம். அப்போது இலையில் லட்டும் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து அங்கிருந்த சின்னப்பசங்க இது என்ன பலகாரம்னு கேட்டாங்க. அதைக்கேட்டு எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. `லட்டு'னா என்னன்னுகூட தெரியாத குழந்தைங்க நம்ம நாட்டுல இருக்காங்க. இதே நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு `பீட்ஸா' வரை தெரியும். அந்த இடைவெளியை நீக்க வேண்டும். எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும்.''
சமீபத்தில் நடந்த தி.மு.க. பெண்கள் மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்டு பேசினீர்கள். அந்த மாநாட்டிலிருந்து நீங்கள் கற்றது என்ன?``இதில் நான் கற்றதைவிட, ஒன்றை நன்கு தெரிந்துகொண்டேன். தி.மு.க.வில் பெண்கள் ஈடுபாடே இல்லை என்ற மாயை உடைத்தெறியப்பட்டது. அவ்வளவு கூட்டம். மாநாட்டில் பெண்கள் ரொம்ப ப்ரியமா என்னிடம் பேசினார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்தோம், நம்ம மேல் இவ்வளவு ப்ரியமாக இருக்கிறார்கள் என்று நினைத்தேன். நாம் காரில் போகிறோம். இனிமேல் அந்தப் பெண்கள் பஸ்ஸைப் பிடித்து வீடு போக வேண்டுமே என்று கவலைப்பட்டேன். கழகத்தின் மீதும் கலைஞர் மீதும் அவர்களுக்கிருந்த ஈடுபாட்டைப் பார்த்து நாம் அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன்.'' நீங்களும் அரசியலில் இறங்கியிருப்பதால் `தி.மு.க.வில் வாரிசுச் சண்டை' என்றெல்லாம் செய்திகள் வருகிறது. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?``இது நீங்கள் எப்போதும் கேட்கிற கேள்விதான் (சிரிக்கிறார்). தி.மு.க.வில் வாரிசுச் சண்டையெல்லாம் கிடையாது. உங்களைப் போன்ற மீடியாக்கள் பண்ணுகிற வேலையே தவிர இங்கு ஒன்றும் அப்படி சண்டை இல்லை. இன்றைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும், கலகலப்பாகவும் தான் இருந்து கொண்டு இருக்கிறோம்.''
மாநாட்டில் நீங்களும் கனிமொழியும் நெருக்கமாய் இருந்தீர்கள். கனிமொழியைப் பற்றி உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.
``மாநாட்டில் மட்டும் நாங்கள் நெருக்கம் இல்லை. சின்ன வயதிலிருந்தே எனக்கு கனிமொழி அத்தை என்றால் ஒரு தனி அன்பு, பாசம் எல்லாம் உண்டு. சின்ன வயதில் அத்தை, மருமகள் என்ற உறவை விட நல்லதோழிகள் மாதிரி பேசுவோம். ஏதாவது யோசனை வேண்டும் என்றால் அத்தையிடம்தான் பேசுவேன் உன் நல்லதுக்குத்தான் இதைச் சொல்கிறேன் என்பார். நான் அவர்களுக்குப் போட்டி அது, இது என்று பத்திரிகையில் செய்தி வருகிறது. என்றைக்கும் நான் கனி அத்தைக்குப் போட்டியாக வரமாட்டேன். இரண்டு பேரும் கைகோர்த்து செயல்படும்போது தி.மு.க. இன்னும் பலப்படத்தான் செய்யும்.''
கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேற்றப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் அரசியலில் அடுத்து என்ன நிகழும் என்று நினைக்கிறீர்கள்? ``தி.மு.க. கூட்டணியிலிருந்து அவருடைய கட்சி விலக்கப்படும் என்று அவர் கொஞ்சம் கூட நினைத்திருக்கமாட்டார். கூட்டணியில் இருந்து அரசை விமர்சனம் செய்தால் பரபரப்பாக இருக்கும். பேப்பரில் பெயர் வரும். பாவம், இனி என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கலைஞரின் அரசியல் அனுபவம், வயது என்ன? இவரின் அனுபவம், வயது என்ன? படுத்திருந்த யானை மீது ஒரு ஈ வந்து ரொம்ப நேரம் அமர்ந்திருந்தது. புறப்படும் போது யானையிடம் `நான் புறப்படட்டுமா?' என்று கேட்டதாம். அதற்கு யானை சொன்னதாம். `நீ வந்ததும் தெரியாது, இப்போது போவதும் தெரியாது' என்றதாம். ஈக்களுக்கு அரசியலில் இடமில்லை.'
'வருகின்ற தேர்தலில் பா.ம.க. வின் நிலை எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ``முன்பு பாண்டிச்சேரியில், தனித்து நின்று ஆட்சியைப் பிடிப்போம் என்றார்கள். ஆனால் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றைக் கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அதிலேயே வெற்றி பெறாதவர்கள் தமிழ்நாட்டில் எங்கு ஜெயிக்கப் போகிறார்கள்? தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேற்றிய பிறகு அந்தக் கட்சிக்கு இது வரையில் அ.தி.மு.க.விடமிருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. பா.ம.க. அரசியல் அனாதை ஆகிவிட்டது.''
விஜயகாந்தின் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?``தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், தான்தான் ஏதோ பிரதான எதிர்க்கட்சி என்று கருதிக் கொண்டு ஆளும் கட்சியை தினம்தோறும் விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார். அதன் மூலம் தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அந்த மாயை 2011 தேர்தலில் நிச்சயம் விலகிவிடும்.'
'பெட்ரோல் விலையேற்றத்தைத் தொடர்ந்து மற்ற பொருட்களின் விலைகளும் உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தேர்தல் வந்தால் உங்கள் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா?``இந்த மாதிரி பெட்ரோல் விலை ஏற்றம், விலைவாசி உயர்வு இது எல்லாம் அலைகள். நிலத்தில் ஊன்றப்பட்ட விதைகளல்ல. காற்றில் விழும் இலைகள் போலவும், கலைகின்ற மேகம் போன்றவையும்தான் இவைகள். இந்தச் சூழல் விரைவில் விலகிவிடும். எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தமிழக அரசு மக்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு செய்து இருக்கிறது. இப்ப கூட ஒரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 30 ரூபாய் குறைத்திருக்கிறது. இவையெல்லாம் தேர்தலில் வெற்றிகளாய் எதிரொலிக்கும்.''
மதுரையில் உங்கள் தந்தையின் ராயல் கேபிள் நிறுவனத்தினால் பல பிரச்னைகள் என்று சொல்லப்படுகிறது. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?``மதுரையில் நடைபெறும் கேபிள் பிரச்னைக்குக் காரணம் சன் டி.வி.தான். `மதுரை மக்கள் பீதியில் இருக்கிறார்கள்' என்று இந்த `அம்மா' சொல்கிறாரே! அப்படி இருந்தால் தமிழக அரசிற்கு இந்த நேரம் ஒரு புகாராவது வந்திருக்காதா? மதுரையில் எஸ்.சி.வி. கேபிள் கனெக்ஷன் கொடுக்குது. இப்போ ராயல் கேபிளும் கனெக்ஷன் கொடுக்குது. ராயலுக்கு சன் டி.வி. ஒளிபரப்பைத் தரமாட்டோம்னு சன் டி.வி. சொல்றது எந்த விதத்துல நியாயம்?அவங்களே ஒன்மேன் ஷோ பண்ணணும்னு நினைக்கிறாங்க. தங்களுக்கு போட்டியே இருக்கக்கூடாது என்று நினைத்தால் எப்படி?''