தடை செய்யப்பட்ட, "சிமி' அமைப்பு, கேரளா மற்றும் குஜராத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் பயிற்சி முகாம்கள் நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு ஆபத்து காத்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆமதாபாத் குண்டுவெடிப்பில் முக்கிய பங்காற்றிய முப்தி அபு பஷிர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் "சிமி'யின் பயங்கரத்தால் ஏற்படும் ஆபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு முன் இந்த முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ம.பி., மாநிலம் கந்த்வா மாவட்டம், கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்திலும் இந்த முகாம்கள் செயல்பட்டு வந்துள்ளன.
கேரளாவில், 2007ம் ஆண்டு டிசம்பரில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமைப் போலவே இவையும் செயல்பட்டுள்ன. "சிமி' அமைப்பைச் சேர்ந்த, பல்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் இந்த முகாம்களில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு கைத்துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், நகரின் வரைபடத்தை அறிதல் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணரான தவுபிக் பிலாயின் உண்மையான பெயர் அப்துல் சுபான். இவன் தான், குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டு இருப்பதாகக் கருதப்படுகிறது. டில்லியில் இருந்து வெளியாகும் "இஸ்லாமிய இயக்கம்' என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இவன் இருந்து வந்துள்ளான். சுபன் என்ற தவுபிக் மீது, பல்வேறு மாநிலங்களில் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மும்பை குண்டுவெடிப்பு வழக்கிலும், சூரத்தில், "சிமி' அமைப்புக்கு எதிரான வழக்கிலும், இவன் தேடப்பட்டு வந்தான். இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பின் பெயரில் இவன் தான் இ-மெயில் அனுப்பியதாக நம்பப்படுகிறது. குஜராத் மற்றும் இதர மாநிலங்களில், மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில், மதவெறி பிரசாரத்தில் ஈடுபட்டதற்காகவும் இவன் தேடப்பட்டு வந்தான்.
போலீஸ் சீல்: சுபானும், வதோதராவைச் சேர்ந்த முகமது கயாமுதீனும் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். வதோதராவில் உள்ள முகமது கயாமுதீனுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டு படுக்கை அறை வீட்டுக்கு போலீசார் நேற்று சீல் வைத்தனர். ஆமதாபாத் குண்டுவெடிப்புக்கு முன் அப்துல் சுபான் என்ற தவுபீக், இங்கு அடிக்கடி வந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. வதோதராவில், நான்கு மாடிகளைக் கொண்ட அக்மல் வளாகத்தில் மூன்றாவது தளத்தில் இந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் வெடிகுண்டுகள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த வீட்டின் முன் குஜராத் மாநில ரிசர்வ் போலீசார், காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆமதாபாத் போலீஸ் குழுவினர் இங்கு வந்த பின், இந்த வீடு திறக்கப்பட்டு சோதனையிடப்பட உள்ளது. இந்த வீடு, "சிமி' அமைப்பினரால், பல்வேறு சதித்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவனான இம்ரான் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தானும், தனது கூட்டாளியும் ஆமதாபாத் மருத்துவமனையில் தங்கியிருந்த படி, சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளான். இம்ரானின் தந்தை இதய நோயாளி. ஏப்ரல் முதல் ஜூலை வரை அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவார். அவரது தந்தை மருத்துவமனைக்கு வரும் போதெல்லாம், ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யூனுஸ் மன்சூரி, உஸ்மான் அகர்பத்திவாலா, ஜாகித் ஷேக், சம்சுதீன் ஷேக் ஆகிய ஐந்து பேரும் அவரைப் பார்க்க ஒன்றாக வருவது வழக்கம். இம்ரானின் தந்தையைப் பார்த்துவிட்டு, மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளிலும் உலவிக் கொண்டே சர்வே எடுப்பர். இங்கு அவர்கள் வைத்த வெடிகுண்டு அதிகளவில் உயிர்ப்பலி ஏற்படுத்தியிருக்கிறது.
ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டு வந்த முப்தி அபு பஷிர் உள்ளிட்ட, "சிமி' அமைப்பைச் சேர்ந்த 10 பேர், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. விசாரணையில், ஆமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் தனக்கு தொடர்பு இருப்பதாக முப்தி அபு பஷிர் ஒப்புக் கொண்டுள்ளான். ஆனால், பல கேள்விகளுக்கு மழுப்பல் பதிலளித்தான். இதற்கிடையே ஜெய்ப்பூரில் 68 உயிர்களைப் பலிகொண்ட மார்ச் 13ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியமான, வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாக, ராஜஸ்தான் முதல்வர் வசுந்திரா ராஜே கூறியுள்ளார். இவ்வழக்கில் இரண்டு டாக்டர்கள் மற்றும் தனியாக மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இன்னொருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
தவிரவும் கேரளாவில், "சிமி' அமைப்புடன் தொடர்பு கொண்டிருப்பதாக உளியனூரைச் சேர்ந்த ரகுமான் மற்றும் வெடிமரா என்ற இடத்தைச் சேர்ந்த அஷ்ரப் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
குஜராத், உ.பி., கர்நாடகம், தற்போது கேரளா என்று மாநிலங்கள் தனித்தனியாக குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்து, அதன் பின்னணியில் "சிமி'முக்கிய பங்கு வகித்திருப்பதை வெளிக்கொண
