பிரிபெய்டு திட்டத்தில் மொபைல் இணைப்பு பெற்றிருப்போர், இனி ரீ சார்ஜ் செய்யும் போது, முழு டாக் டைம் பெறலாம். கையாளும் கட்டணம் எதுவும் பிடிக்கப்படாது. இந்த முறை வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரிபெய்டு இணைப்பு பெற்றுள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்கள், ரீ சார்ஜ் செய்யும் போது அல்லது "டாப் அப்' செய்யும் போது, அவர்கள் எந்த அளவு தொகைக்கு ரீ சார்ஜ் செய்கின்றனரோ, அதில் குறிப்பிட்ட தொகை, கையாளும் கட்டணமாக மொபைல் நிறுவனங்களால் பிடித்தம் செய்யப்படும். 30 முதல் 40 சதவீத தொகை இப்படி கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். மீதமுள்ள தொகைக்கு மட்டுமே, வாடிக்கையாளர்கள் பேச முடியும். ஆனால், தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்), சமீபத்தில் மொபைல் ஆபரேட்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், "கையாளும் கட்டணம் எதையும் வாடிக்கையாளர்களிடம் பிடித்தம் செய்யக் கூடாது. நிர்வாக கட்டணம் மற்றும் வரிகளை மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக கட்டணம் என்பது இரண்டு ரூபாயை தாண்டாது. டிராய் அமைப்பின் இந்த அதிரடி உத்தரவால், மொபைல் போன் வைத்திருப்போர், ரீ சார்ஜ் செய்யும் போது, அதிக அளவிலான, "டாக் டைம்' பெற முடியும். நிறைய நேரம் பேச முடியும். உதாரணமாக, ஏர்டெல் நிறுவனத்தின் பிரிபெய்டு இணைப்பு பெற்றிருப்போர், 345 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால், 177 ரூபாய் அளவுக்கு மட்டுமே "டாக் டைம்' பெற முடியும். மீதமுள்ள தொகை எல்லாம் கையாளும் கட்டணம் மற்றும் சேவை வரியாக பிடித்தம் செய்து கொள்ளப்படும். புதிய முறை அமலுக்கு வந்தால், 345 ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால், 305 ரூபாய் அளவுக்கு, "டாக் டைம்' பெற முடியும். சேவை வரியாக 38 ரூபாயும், நிர்வாக கட்டணமும் ஒரு தொகையும் வசூலிக்கப்படும். பிரிபெய்டு முறையில் ஏற்கனவே மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள், இனி பெறப் போகிறவர்கள் என, அனைவரும் இப்புதிய திட்டத்தினால் பலன் பெற முடியும்.நாடு முழுவதும் 25 கோடி பேர், தற்போது பிரிபெய்டு முறையில் மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். ஆயுட்கால பிரிபெய்டு கார்டு பயன்படுத்துவோர், எந்த விதமான கட்டணமும் செலுத்தாமல், புதிய கட்டண திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.
