"மும்பை படுகொலையை தடுக்க முடியவில்லை. அதற்காக, அரசின் சார்பாக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மும்பை தாக்குதல் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகளை அரசால் தடுக்க முடியவில்லை. அதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. இந்த விஷயத்தில் சர்வதேச சமுதாயம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும். இது பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்கும் நல்லது. பயங்கரவாத விஷயத்தில், இந்தியா இதுவரை கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டுள்ளது. நாகரிகமான அணுகுமுறையை பின்பற்றுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை ஒரு பலவீனமாக கருதிவிடக்கூடாது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, அரசு விரைவில் சில கடுமையான முடிவுகளை எடுக்கும். அடுத்த சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இந்த முடிவு எடுக்கப்படும். இது ஏதோ பழிவாங்கும் உணர்வோடு எடுக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். மிகுந்த துயரத்தோடுதான் இதைச் சொல்கிறேன்' என்றார்.
மும்பை தாக்குதலை தடுக்க தவறியதற்காக மன்னிப்பு கேட்டார் பிரதமர் மன்மோகன்
நாட்டை துண்டாட நினைக்கும் தீவிரவாதிகளை இணைந்து ஒழிப்போம் : லோக்சபாவில் அத்வானி உறுதி
பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் அறிக்கை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து பேசிய பார்லிமென்ட் எதிர் கட்சி தலைவர் அத்வானி, நாட்டை துண்டாட நடக்கும் தீவிரவாதிகளை ஒன்றாக இணைந்து ஒழிப்போம் என தெரிவித்தார். அத்வானி கூறியதாவது : தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியாவுக்கு எதிரானது. எனவே இதை சமாளிக்க மத்திய அரசுடன் எதிர்கட்சியான பா.ஜ., வும் இணைந்து ஒத்துழைக்கும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. இந்திய மக்களை பாதுகாக்க இந்தியா எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க தயாராக இருக்கும் என இந்தியா தெரிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இந்தியா தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிச.16ல் திமுக உயர் மட்டக் குழு கூட்டம்
திமுக உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டம் டிசம்பர் 16ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சித் தலைவரும், முதல்வருமான மு.கருணாநிதி கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த உயர் மட்ட செயல் திட்டக் கூட்டத்தில்தான் பாமகவை திமுக கூட்டணியிலிருந்து விலக்கும் முடிவை திமுக எடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
கடும் விளைவுகள் ஏற்படும் - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கையை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய வானொலிக்கு வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் மண்ணில்தான் இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும்.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.இந்தியாவில் பெரும் கொதிப்பும், கொந்தளிப்பும், கோபமும் காணப்படுகிறது. இது எங்களுக்குக் கவலை அளிக்கிறது. இது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டுள்ள மிரட்டலாகும்.
இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பதால், கண்டிப்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். மேலும், மும்பை சம்பவத்தில் அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.
பாகிஸ்தான் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது (லக்வி, அஸார் கைது). இதை நாங்கள் பாராட்டுகிறோம். அதேசமயம், உண்மையில் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் கிட்டத்தட்ட போர் புரியும் நிலையில் இருந்தன. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வேறு மாதிரியாக உள்ளன.
பாகிஸ்தான் அரசு மக்கள் அரசு, சட்டப்பூர்வமான அரசு. அதேபோலத்தான் இந்தியாவிலும் ஒரு அரசு உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவம் நடந்தபோது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்தியாவில் இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் நிறைய செய்ய வேண்டியுள்ளது. அதுதொடர்பாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது என்றார் ரைஸ்.
ஓபாமா கொதிப்பு:
மும்பையில் கண்டதைப் போன்ற தீவிரவாத தாக்குதலை எனது தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதை உலக நாடுகளுக்கு உறுதிபடத் தெரிவிக்கப் போவதாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஓபாமா கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிகாகோ டிரிபியூன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், உலக நாடுகளுக்கு நான் விடுக்கப் போகும் செய்தி என்னவென்றால், மும்பையில் நடந்ததைப் போன்ற தீவிரவாதத் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதுதான். இதை நான் உறுதிபடத் தெரிவிக்கப் போகிறேன்.
உலக நாடுகளுடனான அமெரிக்காவின் உறவை மேலும் வலுப்படுத்த எனக்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் ஒரு இஸ்லாமிய நாட்டுக்குச் சென்று அங்கு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளேன்.
அந்த நாட்டின் மூலம் அமெரிக்காவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தப் போகிறேன்.
அந்த நாட்டில் நான் நிகழ்த்தப் போகும் உரையின் மூலம், தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் உறுதிபட எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தப் போகிறேன் என்றார் ஓபாமா.
தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே கூட்டணி பேச்சு-விஜய்காந்த்
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது நான் நானாகவே இருக்கிறேன்.
தனது தொகுதியான விருத்தாசலத்திற்கு வருகை தந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மழையால் வீடு இடிந்து விழுந்து பலியானான சத்யா குடும்பத்திற்கு ரூ 50,000 வழங்கினார். பின்னர் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டமும், வாஜ்பாய் கொண்டு வந்த இந்தியாவை இணைக்கக்கூடிய தங்க நாற்கர சாலையும் பெயர் சொல்லும்படியாக இருந்தன. ஆனால், இப்போது மத்திய-மாநில அரசுகளிடம் குறிப்பிடும்படியாக திட்டங்கள் இல்லை.
இந்தியாவில் நதிகளை இணைக்க ஒரு திட்டம் கொண்டுவர வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள சேதம் மிக அதிகமாக உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்திற்கு அரசு வழங்கியுள்ள வெள்ள நிவாரணம் போதாது.
இந்த நிவாரணம் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு கூடுதலாக வெள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும்.
விலைவாசி விண்ணுக்கு உயர்ந்து விட்டது. வெங்காயம் கிலோ 35க்கும், தக்காளி கிலோ 45க்கும் விற்கிறது. இப்படி விலைவாசி உயர்ந்தால் ஏழைகள் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும். விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு அரசு அதிக சலுகைகள் வழங்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியம் நாட்டில் உள்ள வறுமையை எப்படி ஒழிக்க வேண்டும் என்று வழி கண்டுபிடித்து உடனடி தீர்வு காண வேண்டும்.
தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு கொடுத்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசுவோம். தற்போது நான் நானாகவே இருக்கிறேன் என்றார்.
இதன்மூலம் கூட்டணிக்கு அவர் தயாராவதாகவே தெரிகிறது.
பாக்.கை தாக்க மாட்டோம், ஆனால் ... - பிரணாப் எச்சரிக்கை
பாகிஸ்தானை தாக்கும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை. ஆனால் பாகிஸ்தானிடமிருந்து தீவிரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் என்று லோக்சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு உள்ளது. ஆனால் இதற்காக பாகிஸ்தானை தாக்குவது தீர்வாகாது. அந்த எண்ணமும் இந்தியாவிடம் இல்லை. அதேசமயம், தனது மண்ணில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் செயல்பட வேண்டும். இதைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது.
நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் பேசி மிரட்டியதாக அங்கிருந்து வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இது நாட்டை திசை திருப்ப முயலும் செயலாகும். தேவையில்லாமல், அந்நாட்டு ராணுவத்தை உஷார்படுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு
இன்னொரு நாட்டுத் தலைவருடன் போனில் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே நேரம் பெறப்பட வேண்டும். பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி நடைமுறைகள் உள்ளபோது தேவையில்லாமல் நான் சர்தாரியை மிரட்டியதாக பாகிஸ்தான் வதந்தி கிளப்பி விட்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும்.
பாகிஸ்தானைத் தாக்குவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இது சிக்கலான ஒன்று.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ளது.
ஆனால் தடை செய்யப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் சர்வ சுதந்திரமாக தோன்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து பாகிஸ்தான் இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதை உணர முடிகிறது.
தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறது பாகிஸ்தான். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சொர்க்கத்திலிருந்தா வந்தார்களா? அல்லது வேறு கிரகத்திலிருந்து வந்தார்களா?. அவர்கள் அங்கேயேதானே இருக்கிறார்கள்.
தீவிரவாதம் தொடர்பான பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சர்வதேச சமுதாயத்த ஈர்க்கும் வகையில் இந்த விவாதம் இருக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
சமீப காலத்தில் ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர் மற்றும் பெங்களூரில் நடந்த தாக்குதல்களில் ஒரு திட்டமிட்ட நோக்கம் தெரிகிறது. வெளிநாட்டினரைத்தான் குறி வைத்து தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டினரின் மரணத்திற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் விருந்தினர்கள்.
இந்தப் பிரச்சினையில் இந்தியா மீது தவறு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நாட்டினர் புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையின் பரிமாணம் அவர்களுக்குப் புரிந்துள்ளது என்றார் பிரணாப்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் குட்டு
கொல்கத்தா: இப்போது உள்ளதை விட பல மடங்கு நெருக்கடிகள் அடுத்த நிதியாண்டில் காத்திருக்கின்றன என எச்சரித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ்.
மேலும் அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகள் முழுமையாக அடிமட்ட மக்களைச் சென்றடைய வங்கிகள் உதவ வேண்டும். அனைத்து சலுகைகளையும் வங்கியுடனேயே நிறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:
இந்த நிதி ஆண்டு கடுமையாக அமைந்துவிட்டது. ஆனால் வரும் நிதியாண்டு 2009-10 இதை விட கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
இப்போதை விட கடும் சரிவை சந்திக்கவிருக்கிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சி. இதுகுறித்து சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்திய அரசுக்கு விரிவான அறிக்கையும் அனுப்பியுள்ளது. இப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினாலும், வரும் இழப்புகளைத் தடுக்கவே முடியாது. அந்த அளவு பாதிப்புகள் நமக்கும் வரவுள்ளன.
ஆனாலும் அரசுகள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளின் குறுக்கே நிற்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.
மேலும் வட்டி விகிதங்கள் குறையுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதை எப்போது எப்படி குறைப்போம் என்பது உண்மையில் எங்களுக்கே தெரியாது!
இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என கணித்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட இன்னும் குறைவான வளர்ச்சிதான் கிட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த அளவு கூட இருக்காது. 5 சதவிகிதம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.
பொருளாதார நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க, அரசு அறிவித்துள்ள பல ஆயிரம் கோடி சிறப்புச் சலுகைகள் அடிமட்ட மக்களுக்கும் போய் சேரும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் அறிவிப்புக்கு அர்த்தமிருக்காது. அவரவர் தங்கள் பாதுகாப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்?
இன்றைய தேவை ஒருங்கிணைந்த வளர்ச்சி. அதற்கு வங்கிகள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது. பார்க்கலாம்... அடுத்த நிதியாண்டு என்ன நடக்கிறது என்பதை!, என்றார் சுப்பாராவ்.
