தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

லவ் கிளப்

இத படிக்கிறப்ப நாம இருக்கிறது தமிழ்நாடுதானா என சந்தேகம் வருது

ஜாலி ஃப்ரெண்ட்ஷிப் சர்வீஸா?''

``ஆமா!''
``சார், நான் இதுல சேர்ந்துக்கணும். அதுக்கு என்ன செய்யணும்?''
``நீங்க சென்னையா? உங்க போன் நம்பரைப் பார்த்தாலே தெரியுது. முதல்ல ஐயாயிரம் ரூபா பணம் கட்டுங்க.''
``கட்டுனா என்னாகும் சார்?''
``உங்க ஏரியாவுல இருக்கிற பெண்களோட ஃபோன் நம்பர்களை அனுப்பி வைப்போம். நீங்க அவங்ககூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கலாம்.''``இவங்கள்லாம் வெறும் ஃப்ரெண்ட்ஷிப்புக்குதானா?''
``அது உங்க சாமர்த்தியம். ஃப்ரெண்ட்ஷிப் கிளப்பை நீங்க லவ் கிளப்பா மாத்திக்கலாம். செக்ஸ் கிளப்பா கூட மாத்திக்கலாம்'' எதிர்முனைக் குரலில் சிரிப்பு. நமது தயக்கமும் யோசனையும் எதிர்முனைக்காரருக்குத் தெரிந்துவிட்டது.
``யோசித்துச் சொல்லுங்க. பணத்தை எப்படி கட்டணும்னு உங்க நம்பருக்கு எஸ்.எம்.எஸ். பண்றோம்.''
தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இந்த உரையாடல் நடந்தது ஆங்கிலத்தில். அந்த ஃப்ரெண்ட்ஷிப் சர்வீஸ் இருப்பது டெல்லியில் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புது நண்பர்களை உருவாக்கித் தருவதாகச் சொல்லும் விளம்பரம். இண்டர்நெட்டிலும் பத்திரிகைகளிலும் இதுபோன்ற விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன. அப்படியொரு விளம்பரத்தைப் பார்த்து போன் செய்தபோது பேசியவற்றைத்தான் மேலே படித்தீர்கள்.
ஒரு வருடத்துக்கு முன்னால், சூளைமேட்டைச் சேர்ந்த ஜெயராஜ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது)என்பவருக்கும் ஏதேனும் லவ் கிளப்பில் சேரும் ஆசை இருந்தது. ``ஒருநாள் பேப்பர்ல `லவ் கிளப்' விளம்பரத்தைப் பார்த்து, அதிலிருந்த செல் நம்பருக்கு போன் பண்ணிப் பேசினேன். அது டெல்லி நம்பர். எங்கிட்ட பேசியது ஒரு பொண்ணு. இங்கிலீஷ்ல சரளமா பேசினா. கிளப் சொல்ற பேங்க் அக்கவுண்ட்ல குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செஞ்சா, எக்கச்சக்கமா ஃப்ரெண்ட்ஸை அறிமுகப்படுத்தி வைப்போம்னு அந்தப் பொண்ணு சொன்னா. இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கட்டுனா, மூணு மாசத்துக்கு இளம்பெண்களுடைய டெலிபோன் நம்பர்களைத் தருவோம்னு சொன்னாங்க. `அந்தப் பொண்ணுங்களோட பேசி, நெருக்கத்தை வளர்த்துக்கிறது உங்க சாமர்த்தியம்'னு டெல்லிப் பொண்ணு சொன்னதைக் கேட்டு, எனக்கு ஆசையாயிடுச்சு. அதனால அவங்க சொன்ன பணத்தைக் கட்டினேன். ஆனா அவங்கட்டருந்து எந்தப் பதிலும் வரலை. போன் பண்ணிக் கேட்டா சரியான பதிலும் இல்லை. நாங்க எங்க போய் இந்த மோசடியைச் சொல்ல?'' என்கிறார் ஜெயராஜ்.
``இந்த லவ் கிளப்புகள் முக்கிய நகரங்கள்ல மட்டும் ஆபீஸ் போட்டிருந்தாலும், இந்தியா முழுக்க அவங்களுக்கு நெட்வொர்க் இருக்கு. போனில் கூப்பிடுறவங்களோட செல் நம்பரை வெச்சே அவங்க எந்த ஊர்னு `லவ் கிளப்' கும்பல் கண்டுபிடிச்சுடும். எங்கிட்டே பேசுன மும்பை ஆசாமி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம்னு கொச்சைத் தமிழ்ல லிஸ்ட் போட்டதைக் கேட்டு அசந்துட்டேன்'' என்கிறார், இது போன்ற ஒரு கிளப்புக்கு போன் செய்து பார்த்த ஸ்ரீதர்.
இவர்கள் இருவருக்கும் எந்தப் பெண்கள் நம்பரும் கிடைக்காவிட்டாலும் வேறு சிலருக்கு எஸ்.எம்.எஸ், ஈமெயில் மூலம் சில டெலிபோன் எண்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றில் சில எண்கள் நமக்கும் கிடைத்தன. அந்த எண்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது நமக்குப் பகீரென்றிருந்தது. ஹைடெக்காக நடைபெறும் ஹைலெவல் விபச்சாரம் என்பது பட்டென்று புரிந்தது.
ஒரு நம்பரில் பேசியவர் அனுபவமிக்க புரோக்கர்.
``எந்த ஏரியா சார்? பொண்ணு அங்க வரணுமா, நீங்க வர்றீங்களா?'' என்று கேட்டு நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தார். ``இப்போ பணம் எதுவும் கொடுக்கவேண்டாம். வர்ற பொண்ணுகிட்ட கொடுத்துட்டிங்கனா போதும்'' என்றவர் அத்துடன் நிறுத்தவில்லை.
``ஃப்ரஷ்பீஸா, ஃபேமிலியா எப்படி வேணும்?'' என்றதும் போனை துண்டித்தோம்.
அதிர வைத்த இன்னொரு நம்பர் ஒரு பெண்ணுடையது. உடனடியாகவே விஷயத்துக்கு வந்துவிட்டார்.
``ஓ அவங்க நம்பர் கொடுத்தாங்களா?'' என்று கேட்டு செக் பண்ணிக்கொண்டார். அவர் கேட்ட அடுத்த கேள்வி இன்னும் அதிர வைத்து, ``எங்க வரணும்? எங்க இடம்னா ஆயிரம் ரூபா ஜாஸ்தியாகும்'' தமிழ்நாட்டில் செக்ஸ் எத்தனை எளிதாகப் போய்விட்டது. இது போன்ற தொலைபேசி எண்களுக்காக இப்போது இளைஞர் கூட்டம் அலைந்துகொண்டிருக்கிறது.
ஏதாவது ஒரு லவ் கிளப்புக்கு நேரடியாக விசிட் செய்யும் நோக்கத்துடன், சென்னையில் இயங்கும் ஒரு ஃப்ரெண்ட்ஷிப் கிளப்பைத் தொடர்புகொண்டோம். எதிர்முனையில் நம்மிடம் பேசிய பெண், ஃப்ரெண்ட்ஷிப்புக்கான கட்டண விவரங்களை புரொபஷனலாக அடுக்கியதுடன், அலுவலகத்தின் முகவரியையும் நமக்கு எஸ்.எம்.எஸ். செய்தார். நகரத்தின் மத்தியிலுள்ள சற்று பிரபலமான வணிக வளாகத்தில் அந்த அலுவலகம் இருக்கிறது. நாம் போன போது ஒரு அலுவலகத்துக்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. நம்மிடம் போனில் ஏற்கெனவே பேசிய பெண் மட்டுமே இருந்தார். நம்முடைய வயது, வேலை குறித்த விவரங்களைக் கேட்ட அந்தப் பெண் மாறி மாறி கேட்ட கேள்வி, ``எப்போ பணம் கட்டப் போறீங்க?''
`பணம் செலுத்தியதற்கு ஏதேனும் ரசீது கிடைக்குமா? பெண்கள் போனில் பேசுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?' போன்ற கேள்விகளை நாம் எழுப்ப, அந்தப் பெண் சுதாரித்துக் கொண்ட முக பாவத்துடன் நமக்கு ஆபீஸ் வாசலை நோக்கி கை காட்டினார். `லவ் கிளப்' படு உஷாரான கிளப்தான்!
இதுபோன்ற கிளப்புகள் கொடுக்கும் ஃபோன் நம்பர்களில் பல அப்பாவிப் பெண்களுடையது. எங்கேயோ எப்படியோ கிடைக்கும் எண்களை `பலான' நம்பர் என்று அனுப்பிவிடுகிறார்கள்.
``இண்டர்நெட்டில் இதுபோன்று அப்பாவிகளின் போன் நம்பர்கள் குவிந்து கிடக்கின்றன. பலான பெண்கள் என்று இந்த அப்பாவிப் பெண்களின் எண்களைப் போட்டு வைத்திருக்கிறார்கள்'' என்கிறார், இது போன்ற தப்புகளில் ஆர்வமாய் ஈடுபடும் ஓர் இளைஞர்.
இவரைப் போன்ற பல இளைஞர்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை தங்களின் சின்னத்தனமான சபலங்களைத் தீர்க்க செலவழித்து அதிலேயே சீரழிந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். யார் நடவடிக்கை எடுத்து இந்த இளைஞர்களைக் காப்பாற்றப் போவது என்று தெரியவில்லை..
பையனுக்கு பர்ஸ், பெண்ணுக்கு சைஸ்
இது போன்ற ஃப்ரெண்ட்ஷிப் கிளப்புகளுக்கு ஆண்கள் பேசினால் ஒரு ரியாக்ஷன். பெண்கள் பேசினால் நேர்மாறான ரியாக்ஷன். ஒரு பெண்ணை இந்த கிளப் நபர்களிடம் பேசச்சொன்னோம். ஒரு பெண் பேசியதும் அவர்களுக்கு மகிழ்ச்சி. `நிறைய ஆண் நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் வயசையும் சைஸையும் சொல்லுங்கள்' என்றார்கள். அது போதுமாம். பெண்கள் காசு கட்டவேண்டாமாம். ஆண்களின் பர்ஸைப் பார்க்கும் இந்த கிளப்புகள் பெண்களிடம் பார்ப்பது வேறு! தப்பித் தவறி இதுபோன்ற கிளப்புகளிடம் மாட்டும் பெண்களின் எண்களை எல்லோரிடமும் கொடுத்து வாழ்க்கையை நாசமாக்கி விடுகின்றன இந்த கிளப்புகள்.

நமக்கு அறிவு வருவது எப்போது ஞாநியின் விளாசல்

சீனாவில் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், சீனாவுக்கு எதிராக இந்தியாவின் உதவியுடன் அமெரிக்கா 1960களில் நடத்திய ஆபத்தான உளவு வேலையில் சம்பந்தப்பட்ட அமெரிக்கரின் வாக்குமூலம் வெளியாகியிருக்கிறது.
இமயமலை உச்சியில் நடந்த இந்த உளவு வேலையின் விளைவாக இன்றும் கங்கை ஆற்றில் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படும் ஆபத்து இருக்கிறது.
1964-ல் சீனா அணுகுண்டு சோதனை நடத்தியது. இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து சீனா என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று உளவு பார்க்க ஒரு திட்டம் வகுத்தது. அப்போது அமெரிக்காவின் செயற்கைக் கோள் திட்டங்கள் ஆரம்ப நிலையில் இருந்தன. சீனாவை வானிலிருந்து வேவு பார்க்கும் வசதி இல்லை.
இமயமலை உச்சியிலிருந்து வேவு பார்க்கலாம் என்று அமெரிக்கர்கள் திட்டம் போட்டார்கள். மலை உச்சியிலிருந்து திபெத்தும், சீனாவின் ஏவுகணை சோதனைகள் நடக்கும் சின்சியாங் மாவட்டமும் தெரியும்.
இதற்கு ஏற்ற இடம் இந்தியப் பகுதியில் இருக்கும் இரண்டாவது உயரமான மலையான நந்தாதேவிதான். 25 ஆயிரம் அடி உயரம். உலகத்தின் மிக உயரமான 25 சிகரங்களில் இது ஒன்று. இந்தப் பனிமலையில் இருந்துதான் ரிஷி கங்கை என்ற ஓடை தொடங்குகிறது இது அடுத்த மலையான நந்தாகோட்டில் ஓடும் தவுளிகங்கையில் சேர்ந்து பிரும்மாண்டமான கங்கை நதியாகிறது.
நந்தாதேவி சிகரத்தின் மீது சீனாவை வேவு பார்ப்பதற்கான கருவியைப் பொருத்துவதுதான் அமெரிக்காவின் திட்டம். இமயமலையில் ஏறுவது சாதாரண விஷயம் அல்ல. கடும் பனிப் புயல்கள் வீசும் பனிப் பொட்டல் அது. 1936 வரை யாருமே நந்தாதேவி மீது ஏறியதே இல்லை. இதற்கு இந்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி.யின் உதவியை சி.ஐ.ஏ பெற்றுக் கொண்டது. கடற்படை கேப்டனாக இருந்து ஐ.பி. அதிகாரியாக இருந்த எம்.எஸ்.கோலி என்பவர் மலையேறுவதில் ஆர்வமுடையவர். இமயமலைப் பகுதியில் பல முறை சிகரங்களுக்குச் சென்றவர். 1965-ல் ஒரே சமயத்தில் ஒன்பது பேரை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வைத்த பெருமைக்குரியவர் கோலி.
இவர் தலைமையில் சில உளவு அதிகாரிகளும், சி.ஐ.ஏ. அனுப்பிய சிலருமாகச் சேர்ந்து நந்தாதேவி சிகரத்துக்குச் சென்று உளவுக் கருவியை வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள்.
அந்த அமெரிக்கர்களில் முக்கியமானவர் டாக்டர் ராபர்ட் ஸ்காலர். சியாட்டில் பகுதியில் பிரபலமான குழந்தைகள் சர்ஜன் ராபர்ட். மலையேறுவதில் பெரு விருப்பம் உடையவர். இவரை சி.ஐ.ஏ. ஏஜெண்ட் சந்தித்து தேச நலனுக்காக அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டார். இது தவிர மாதம் ஆயிரம் டாலர்கள் (1965-ல்) பணமும் கிடைக்கும் என்றார்.
ராபர்ட் ஸ்காலர் ஒப்புக் கொண்டார். அவரை அடிக்கடி ரகசியமான இடங்களுக்குக் கண்ணைக் கட்டி அழைத்துப் போய் கடுமையான பயிற்சிகள் தரப்பட்டன. எங்கே போய் வருகிறார் என்று மருத்துவமனைக்கும் மனைவிக்கும் சொல்லக் கூடாது. இதன் விளைவாக ராபர்ட்டின் மனைவி அவருடன் கசப்படைந்து விவாகரத்தே வாங்கிப் போய்விட்டார்.
மலை உச்சியில் வைக்க வேண்டிய உளவு சாதனம் சீனாவில் சோதனைகள் நடந்தால் பதிவு செய்யும். 40 பவுன்ட் எடையுள்ளது. இதை இயக்கும் அணுசக்தி புளுட்டோனியம் 238,239 கொண்ட செல்களிலிருந்து கிடைக்கும். இதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தில், மலையேறுபவர்கள் இரவு நேரங்களில் குளிர் காய்ந்தார்களாம்.
சிகரத்தை அடைவதற்கு முந்தைய ஓய்விடத்தில் எல்லாரும் இருந்தபோது கடுமையான பனிப் புயல் வீசியது. இனி ஒரு அடி கூட மேலே போக முடியாது என்ற நிலை. கீழே திரும்பியாவது போவோமா என்ற கவலையான நிலை. உளவுக் கருவியை அருகே ஒரு பாறைப் பகுதியில் வீசி எறிந்தார்கள். சில மாதங்கள் கழித்து புயல்கள் வீசாத பருவத்தில் வந்து திரும்ப எடுத்துச் சென்று உச்சியில் வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
ஆனால், சில மாதங்கள் கழித்து அதே இடத்துக்கு வந்து பார்த்தபோது கருவியைக் காணோம். தொடர்ந்து வீசிய பனிப்புயல்களில் மலைக்குள் எங்கேயோ போய் புதைந்துவிட்டது.
சி.ஐ.ஏ.வும் ஐ.பி.யுமாக அடுத்த இரண்டு வருடங்களில் பல முறை விமானங்களில் ஹெலிகாப்டர்களில் வந்து தேடித் தேடிப் பார்த்தார்கள். கருவி போன இடம் தெரியவில்லை.
இதற்குள் பக்கத்து மலையான நந்தாகோட்டில் இதே போன்ற அணுசக்தியில் இயங்கும் ஒரு கருவியைப் பொருத்தினார்கள். அது சில வருடங்கள் இயங்கி சீனா பற்றிய தகவல்கள் கிடைத்த பிறகு, அமெரிக்கா அதை அகற்றி விட்டது.
ஆனால் நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனிய சக்தியில் இயங்கும் கருவி என்ன ஆயிற்று? யாருக்கும் தெரியாது. அதிலிருந்த புளுட்டோனியம் கசிந்தால், கங்கைக்கு வரும் ஓடை நீரில் கலந்தால்? மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும், நீரைப் பயன்படுத்துவோருக்கும் பல சிக்கலான விளைவுகள் ஏற்படும்.
புளுட்டோனியத்தின் கதிர் இயக்கம் அடங்குவதற்கு எத்தனை வருடம் ஆகும் தெரியுமா? 24 ஆயிரம் வருடங்கள்!
ராபர்ட் ஸ்கெல்லருக்கு இப்போது 74 வயது. அமெரிக்காவுக்கு அவர் ஆற்றிய தேசத் தொண்டுக்காக அவருக்கு சி.ஐ.ஏ.விலிருந்து வீட்டுக்கே வந்து ஒரு மெடல் அணிவித்துப் பாராட்டிவிட்டு, பிறகு அதைக் கழற்றி எடுத்துக் கொண்டும் போய்விட்டார்கள். இப்படி ஒரு விஷயம் நடந்தது வெளியில் தெரியக்கூடாது என்பதே காரணம்.
நந்தா தேவிக்கு ராபர்ட் சென்றபோது எடுத்த படங்கள், டயரிக்குறிப்புகள் எல்லாம் சி.ஐ.ஏ.விடம் உள்ளன. அவற்றைத் திருப்பித் தரக் கோரி 40 வருடமாக மன்றாடி வருகிறார் ராபர்ட். நந்தாதேவியில் தன்னந்தனியே ஏறிய முதல் அமெரிக்கர் என்ற அவருடைய சாதனைக்கு அவரிடம் எந்த ரிக்கார்டும் இல்லை. எல்லாம் சி.ஐ.ஏ.விடம் உள்ளன. அவர்களோ தர மறுக்கிறார்கள்.
இமயமலைக்கு பல முறை சென்று வந்த பின், புகழ் பெற்ற குழந்தை மருத்துவராக 40 வருடங்கள் செயல்பட்ட ராபர்ட் இப்போது மனக் கசப்புடன் எல்லா உண்மைகளையும் பகிரங்கமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால், அமெரிக்க அரசு இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.
1978-ல் பிரதமர் மொரார்ஜி தேசாய் மக்களவையில் இனி இப்படிப்பட்ட ஆபத்தான சோதனைகளில் இந்தியா ஒத்துழைக்காது என்று அறிவித்தார். எம்.எஸ்.கோலி ஓய்வு பெற்ற பின் எல்லா உண்மைகளையும் தன் சாகச அனுபவப் புத்தகமாக எழுதிவிட்டார்.
இமயமலையில் கங்கை தோன்றும் இடத்தில் காணாமற்போன புளுட்டோனியக் கருவி பற்றி இப்போது மறுபடியும் ஒரு தகவல் வந்திருக்கிறது. மலையேறும் வீரரான தகேதா என்பவர் 2005-ல் நந்தாதேவிக்கு அதே இடத்துக்குச் செல்ல முயற்சித்தார். இப்போது இந்திய அரசு யாரையும் அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. அருகில் உள்ள நந்தாகோட்டுக்குச் சென்ற தகேதா, அங்கே ரிஷி கங்கை நதிக்கருகிலிருந்து மண் சேம்பிளை எடுத்து வந்து பரிசோதனைக்கு அனுப்பினார்.
பாஸ்டனில் ஓர் ஆய்வுக்கூடம், அதைச் சோதித்து முடிவுகளைத் தெரிவித்தது. மண்ணில் புளுட்டோனியம் கலந்திருப்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது! இமயமலையில் மண் எடுக்கப்பட்ட ஆற்றுப் பகுதியில் புளுட்டோனியம் கலப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை, 1965-ல் காணாமல் போன அமெரிக்க உளவுக் கருவி உடைந்து போயிருக்கலாம் என்பதைத் தவிர.
1965-ல் இந்தியா அணி சேரா கொள்கையைப் பின்பற்றியதாக சொல்லிக் கொண்ட காலத்தில், அமெரிக்காவுடன் சீனாவுக்கெதிராக ரகசிய உளவு வேலையில் ஈடுபட்டிருக்கிறது. இப்போது மன்மோகன் ஆட்சியில் அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் பகிரங்கமாகவே கூட்டுப் பயிற்சிகளுக்கு உடன்பாடுகள் போடப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் அணுசக்தி முதல் ராணுவ ஒப்பந்தம் வரை எல்லாமே எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு நந்தாதேவியில் தொலைந்து போன புளுட்டோனியம் மட்டும் சாட்சியம் அல்ல. ஆஸ்திரேலியாவின் சாட்சியமும் இருக்கிறது. 90_களில் ஆஸ்திரேலிய கடற்படைக்கு அமெரிக்கா சில கணினி மென்பொருட்களை அளித்தது. அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் போதெல்லாம் கடற்படையின் தகவல்கள், அமெரிக்காவுக்கும் ஒரு பிரதி போய்ச் சேருவது போல மென்பொருட்களில் திட்டம் எழுதி வைக்கப்பட்டிருந்ததை ஆஸ்திரேலியா கண்டுபிடித்தது. நன்றி என்று சொல்லி மென்பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டது!
நந்தாகோட் சிகரத்தில் வைக்கப்பட்டிருந்த உளவுக் கருவிகள் சீனாவை மட்டுமல்ல, இந்தியாவையும் உளவு பார்த்திருக்கக்கூடியவைதான்!நமக்கு அறிவு வருவது எப்போது?.
இந்த வாரப் பூச்செண்டு
`தாரே ஜமீன் பர்' படத்துக்காக, சிறந்த முதல் பட இயக்குநருக்கான கொல்லப்புடி சீனிவாஸ் விருதைப் பெற்றுள்ள இந்தி நடிகர் அமீர்கான், விருதுத் தொகையை சென்னை அரசு திரைப்படக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்திருப்பதற்காக இ.வா.பூ.
இந்த வாரக் குட்டு
பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.
குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.
தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.
இ.வா.அவமானம்
ஆப்ரிக்க நாடான காங்கோவில் `அமைதி'யை நிலை நிறுத்தச் சென்றிருந்த இந்திய அமைதிப்படை `வீரர்'களில் 100 பேர், அங்கிருந்த ஐந்தாண்டுகளில் தொடர்ந்து காங்கோ நாட்டுச் சிறுமிகளிடமும் சிறுவர்களிடமும் பாலியல் முறைகேடுகள் செய்ததை ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் கண்டித்திருக்கிறார்.
பாலியல் முறைகேடு மட்டுமன்றி, தங்கக் கடத்தல், ஆயுதக் கடத்தல் முதலியவற்றிலும் `வீரர்கள்` ஈடுபட்டார்களாம். இதே போன்ற குற்றச்சாட்டுகள் பாகிஸ்தான் `வீரர்கள்' மீதும் கூறப்பட்டிருக்கிறது.

கம்பிக்குள் உல்லாச உலகம் குமுதத்தின் பகீர் ரிப்போர்ட்

சென்னை புழல் சிறையில் நடந்த குளறுபடிகளும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பத்திரிகைகளில் செய்திகளாய் வந்தன. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சரி, புழல் சிறையில் மட்டும்தான் இந்த ஊழல்களா? தமிழகம் முழுவதிலும் உள்ள முக்கிய சிறைகளின் நிலை என்ன? அங்கு கைதிகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விசாரித்தோம். சிறை அதிகாரிகள், கைதிகளாய் உள்ளே இருந்தவர்கள், பணியாளர்கள் என பல தரப்பினரிடம் பேசினோம். நமக்கு கிடைத்த பதில்...
அதிர்ச்சி!
பீடி முதல் பிரியாணி வரை செல்ஃபோன் முதல் செக்ஸ் வரை எல்லாமே கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.
சென்ற வாரம் சேலம் மத்திய சிறையில் கைதியை பார்க்க மனு போட வந்திருப்பதைப் போல் உட்கார்ந்திருந்தோம்.
மூன்று இளைஞர்களை கொத்தாக பிடித்து இழுத்து வந்தனர் சிறைக் காவலர்கள். அவர்கள் செய்த குற்றம் மிக்சருக்குள் செல்ஃபோனை வைத்து உள்ளே இருக்கும் தங்கள் கைதி நண்பனுக்கு கொடுக்க முயன்றது. நாம் விசாரித்தபோது ``ஜெயில்ல இதெல்லாம் சகஜமப்பா'' என்றனர் அலட்சியமாக.
சிறையில் இப்போது அதிகம் தேவைப்படுவது செல்ஃபோனும் சிம்கார்டும்தானாம். எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் கைதிகள் தயாராய் இருக்கிறார்களாம்.
இந்தச் சிறையின் உள்ளே இருக்கும் ஒரு தாதா தலைவர் எப்பவும் செல்ஃபோனும் கையுமாகத்தான் உள்ளே இருக்கிறாராம். பணம் கொடுத்தால் சிறை ஊழியர்களே செல்ஃபோனுக்கு சார்ஜும் போட்டுக் கொடுத்துவிடுவார்களாம். உள்ளே உட்கார்ந்துகொண்டு ஜாலியாக காதலியுடன் பேசலாம். சதித் திட்டங்களைத் தீட்டலாம்.
சேலம் சிறை மட்டுமல்ல மற்ற சிறைகளிலும் இதே நிலைதான்.
செல்ஃபோனுக்கு அடுத்த படியாக திருச்சி சிறையில் அதிகம் கடத்தப்படும் பொருள் கஞ்சா. உள்ளே ஏக விநியோகம் நடக்கிறது என்கிறார்கள்.இங்கு ஒவ்வொரு ப்ளாக்கிலும் பீடி, சிகரெட், ஷாம்பூ, சோப்பு, டீ வரை வாங்கிக் கொள்ள, சிறைச் சாலைக்குள் திறக்கப்படாத கடைகள் இருப்பதுபோல, கஞ்சா சப்ளை செய்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்களாம். சரியான ஆளைப் பிடித்து சரியான பணத்தைக் கொடுத்தால் எதுவும் கிடைக்குமாம்.
தினமும் காலையில் உள்ளே வரும் `காய்கறி வண்டியில்'தான் சட்டத்திற்கு புறம்பான அனைத்தும் வருகிறது. பணம் கண்களை மறைப்பதால் யாருக்கும் தெரிவதில்லை என்கிறார்கள் உள்ளே சென்று வந்த பழைய குற்றவாளிகள்.
ஜெயிலில் நடக்கும் இன்னொரு மோசடி, கைதிகளுக்கு கொடுக்கும் உணவு.
``நூறு கிலோ காய்கறி போட்டு சமைக்க வேண்டிய இடத்துல முப்பது கிலோ போடுறது. சமையலுக்கு 50 லிட்டர் எண்ணெயைப் பயன்படுத்தணும்னா 10 லிட்டர் எண்ணெயிலயே எல்லாத்தையும் முடிச்சிடுவாங்க. ஆனா கணக்குல மொத்தமா இருக்கும்.
ஒரு கைதிக்கு அரசாங்கம் நாளொன்றுக்கு நூறு கிராம் பருப்பு தருது. 2000 கைதிகளுக்கு 200 கிலோ பருப்பு வருது. 50 கிலோ பருப்பை போட்டுட்டு பாக்கி 150 கிலோவும் பயன்படுத்திட்டோம்னு கணக்கு காட்டுறாங்க.
ஒரு நாளைக்கு பருப்புல மட்டுமே இவ்வளவு சம்பாதிக்கிறாங்கன்னா கொள்ளையடிக்கிற மொத்த கணக்கையும் போட்டா ஹார்ட் அட்டாக்கே வந்துடும்'' என்கிறார் உள்ளே உணவருந்தி இப்போது வெளியில் இருக்கும் ஒருவர்.
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையிலும் இதே கதைதான். இங்கே கூடுதலாக ஒரு விஷயம், சிறைக்குள்ளேயே சதித் திட்டங்கள் தீட்டப்படுவது. தென் மாவட்டத்தில் கொலையுண்ட பலரது முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டது பாளையங்கோட்டை சிறையில்தான்.
கொலைக்குற்றத்திற்காக பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்த ஒருவர் கூறும்போது,
``சார், ஜெயில் என்கிறது வெளில இருந்து பார்க்கத்தான் பயமா தெரியும். உள்ள எல்லாம் கிடைக்குது சார். ஒரு கைதியை பார்க்க வர்றவங்க பீடி அல்லது சிகரெட் மூணுபாக்கெட் கொண்டு வந்து கொடுக்கலாம். அவுங்க அந்த பீடி, சிகரெட்ல உள்ள தூளைக் கொஞ்சம் தட்டிவிட்டு அந்த இடத்தில் கஞ்சாவை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதே மாதிரி ஷாம்பு பாட்டில் உள்ளே சிம்கார்ட் போட்டு மூடிக் கொடுத்துவிடுவார்கள். கஞ்சாவுல இருந்து சோப்பு, சீப்பு, எண்ணெய், துண்டு என எல்லாமே உள்ள கிடைக்கும். விலை மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெளில ஒரு பீடிக்கட்டு விலை இரண்டு ரூபாய்ன்னா உள்ளே இருபது ரூபாய்'' என்கிறார் அந்த கைதி.
மதுரை மத்திய சிறைக்குள் கஞ்சா, சரக்கு அயிட்டங்கள், பீடி, சிகரெட், செல்ஃபோன் சிம்கார்டு, தினமும் வெளியில் இருந்து மூணு வேைளக்கும் வகை வகையான சாப்பாடு பார்சல்கள் கிடைக்கும் என்கிறார்கள், இந்தச் சிறையின் அனுபவசாலிகள். இதைவிட அதிர்ச்சியான தகவல், கைதிகளை ரகசியமாய் வீட்டுக்கு அனுப்பும் விஷயம்.
நம்பிக்கையான நீண்ட நாள் கைதிகளை வீட்டுக்கு அனுப்பி ஒரு இரவு தங்கி வர அனுமதிப்பார்களாம். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் என்ற தகவலை ஒரு கைதி சொல்ல பகீரென்றிருக்கிறது. எத்தனை உண்மை என்று தெரியவில்லை.
சிறையில் கைதிகள் போட்டி போட்டு வாங்கும் இன்னொரு விஷயம், சிறை மருத்துவமனையில் இடம். உங்களிடம் பணமிருந்தால் `உடல் நிலை சரியில்லை' என்ற மருத்துவச் சான்றிதழோடு சிறை மருத்துவமனையில் ஜம்மென்று படுத்துக் கொள்ள முடியும்! இதற்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவு ஆகுமாம். அப்படியென்ன ஜெயில் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்கிறீர்களா?
ஒரு பெரிய ஹாலிலோ, அல்லது தனி அறைகளிலோ மெத்தையில் படுத்துக் கொள்ள முடியும். படிப்பதற்கு நாவல்கள், நினைத்த நேரத்தில் பொழுதைக் கழிப்பதற்கு கேரம் போர்டிலிருந்து, செஸ் ஆட்டம் வரை கிடைக்கும். ஆனால் இதற்கு நேர்மாறாக விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் அறைகள் கொடுமையாக இருக்கும். இங்கு இரவில் ஹோமோ செக்ஸ் வக்கிரம் சகஜமான விஷயம். புதிதாக வரும் கைதிகளைப் பயமுறுத்துவதற்காகவே இந்த ஹோமோ செக்ஸ் அறைகளில் அடைப்பார்கள். இதனால் அரண்டு போகும் புதியவர்கள் அடுத்த நாளே வார்டன்களை நல்ல விதத்தில் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒரு விஷயம், மேலே சொன்ன வசதிகள் எல்லாம் பணம் படைத்த, செல்வாக்கு மிக்க குற்றவாளிகளுக்குத்தான். சாதாரண குற்றவாளிகளுக்கு சிறை வாழ்க்கை கொடுமையானது. கழிப்பறை சுத்தம் செய்வது, பணக்கார ரவுடிகளுக்கு துணி துவைப்பது, தூங்கும்போது கால் அமுக்கிவிடுவது போன்ற வேலைகளையும் செய்ய வேண்டும். சிறையில் கிடைக்கும் உணவு கூட சரியான அளவு கிடைக்காது.
இந்த ஏழைக்கைதிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. பணக்காரன், ஏழை, சாதி, மத வித்தியாசம் எல்லாம் சிறை வாசத்தில் மறந்துபோகும் என்பார்கள். அது அந்தக் காலம் பணமிருந்தால் என்னமும் செய்யலாம். இதுதான் இன்றைய சிறை (அ)நீதி.
தேங்காய் எண்ணெய் பாட்டிலில் விஸ்கி!நெல்லையில் ஒரு முக்கியமான கொலை வழக்கு. அதில் முக்கிய குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் இருக்கிறான். அவனால் `தண்ணி'யடிக்காமல் இருக்க முடியாதாம். இதற்காக அவனுக்கு தேங்காய் எண்ணெய் பாட்டிலில் விஸ்கியை ஊற்றி சிறைக்குள் அனுப்புவது வழக்கமாம். என்னது இவனுக்கு மட்டும் அடிக்கடி தேங்காய் எண்ணெய் பாட்டில் வருகிறது என்று சந்தேகப்பட்ட ஒரு நேர்மையான வார்டன், உள்ளுக்குள் விஸ்கி இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார். கொண்டு வந்து கொடுத்த பெண்ணின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிறை விலைப்பட்டியல் பீடிக்கட்டு ரூ. 30சிகரெட் ரூ. 100கஞ்சா ரூ. 20 (ஒரு சிகரெட்)பிரியாணி ரூ. 200செல்ஃபோன் பேச ரூ.50 (1 நிமிடம் பேச)செல்ஃபோன் வைத்துக்கொள்ள ரூ. 1000 (பத்து நாளுக்கு)மதுபானம் ரூ. 500 (பாட்டிலுக்கு)

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive