"மும்பை படுகொலையை தடுக்க முடியவில்லை. அதற்காக, அரசின் சார்பாக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மும்பை தாக்குதல் தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகளை அரசால் தடுக்க முடியவில்லை. அதற்காக நாட்டு மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. இந்த விஷயத்தில் சர்வதேச சமுதாயம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் நிரந்தரமாக அழிக்கப்பட வேண்டும். இது பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்கும் நல்லது. பயங்கரவாத விஷயத்தில், இந்தியா இதுவரை கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டுள்ளது. நாகரிகமான அணுகுமுறையை பின்பற்றுவது என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை ஒரு பலவீனமாக கருதிவிடக்கூடாது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, அரசு விரைவில் சில கடுமையான முடிவுகளை எடுக்கும். அடுத்த சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இந்த முடிவு எடுக்கப்படும். இது ஏதோ பழிவாங்கும் உணர்வோடு எடுக்கப்படுவதாக நினைக்க வேண்டாம். மிகுந்த துயரத்தோடுதான் இதைச் சொல்கிறேன்' என்றார்.
மும்பை தாக்குதலை தடுக்க தவறியதற்காக மன்னிப்பு கேட்டார் பிரதமர் மன்மோகன்
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, December 11, 2008

0 comments:
Post a Comment