ஹாட் கேக்` போல விற்பனையாகியிருக்க வேண்டிய ஓர் அலைவரிசைத் தொகுப்பை மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஏதோ `அவிச்ச கடலை' ரேஞ்சுக்கு விற்றுவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு அலைபாய்கிறது. பொது ஏலம் மூலம் நடந்திருக்க வேண்டிய இந்த விற்பனையை முன்னுரிமை அடிப்படையில் அமைச்சர் ராசா நடத்தியதால் மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ. 25,000 கோடியைத் தாண்டும்' என்கிறார்கள். நாட்டில் இப்போது அனல்பறப்பது இந்தப் பிரச்னைதான். இது தொடர்பாக நம் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாகத் தைத்த சில கேள்விகளுடன் அமைச்சர் ராசாவைச் சந்தித்து அவர்முன் நாம் அந்தக் கேள்விகளை வைத்தோம்.
அலைவரிசைத் தொகுப்பை பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுத்திருக்கிறீர்களே? ஏலம் விட்டிருந்தால் பெரும் தொகை கிடைத்திருக்கும் என்கிறார்களே?
``ஆம்! இப்படி ஒரு பரபரப்பான கேள்வி எழுந்திருப்பதைப் பார்த்து எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஏதோ `ஓர் அரசியலுக்காக` இப்படியொரு குற்றச்சாட்டைக் கிளப்புகிறார்கள். உண்மையை முழுவதும் அறிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் அவர்கள் இருட்டில் எதையோ தேடுகிறார்கள். கற்பனையாகக் குரல் எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் 90 ஆயிரம் கோடிக்கு ஏலம் விடப்பட்டிருப்பது ஜி-3 அலைவரிசை. இந்தியாவிலும் ஜி-3 அலைவரிசை உண்டு. அதை ஏலம் விடத்தான் போகிறோம்.. அதில் மாற்றமில்லை.''
அப்படியானால் இப்போது தனியாருக்கு கமுக்கமாக (!) கொடுக்கப்பட்டிருக்கும் அலை வரிசை எது?
``அது இரண்டாம் தலைமுறைக்கான ஜி-2 அலைவரிசை. இதையும் ஏலம் விடுவதாக இருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. அதை ஏற்கெனவே ஏலம் எடுத்தவர்கள் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை. அதனால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது. அதன்பின்தான் அமைச்சரவை கூடிப்பேசி `வருவாயில் பங்கு' என்ற அடிப்படையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை தந்து விற்க முடிவு செய்தது. இங்கிருக்கும் பலருக்கு ஜி-2-க்கும் ஜி-3-க்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பதுதான் வேதனை.''
இந்த அலைவரிசையைக் கூட மிகக்குறைந்த விலைக்கு (ரூ.1650 கோடிக்கு) விற்றிருப்பதாகச் சொல்கிறார்களே?
``எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் பேசு கிறார்கள். இது அலைவரிசை விற்பனைக்கான தொகை அல்ல. ஒரு நிறுவனம், சேவை வழங்குவதற்கு வசூலிக்கப்படும் உரிமைக் கட்டணம். அலைவரிசைக் கட்டணம் எது? உரிமைக் கட்டணம் எது? என்ற விஷயமே தெரியாமல் சிலர் என்மீது குற்றம் சாட்டுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.''
இது தொடர்பாக மத்திய நிதித்துறை உங்கள் மீது குற்றம் சுமத்தி கடிதம் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்களே?
``அப்படியொரு கடிதம் எங்களுக்கு வரவேயில்லை. பொதுவாகவே ஒரு துறை மீது பத்திரிகைகளில் ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தால் அது பற்றி நிதித்துறை விளக்கம் கேட்கும். அப்படி எங்களிடமும் கேட்டார்கள். அதற்கு நாங்கள் பதிலும் அளித்து விட்டோம். இதை வைத்துக் கொண்டு நிதித்துறை எங்களைக் குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறுவது சுத்த அபத்தம்.''
இதில் பிரதமர் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்கிறார்களே? உண்மை இல்லாமலா அப்படிச் சொல்வார்கள்?
``அப்படியென்றால் பிரதமர் தன்னைத்தானே விசாரித்துக் கொள்ள வேண்டியதுதான். ஏனென்றால் இது தொடர்பாக நான் ஆறு முறைக்கும் குறையாமல் பிரதமருடன் பேசி ஆலோசனை பெற்றுத்தான் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறேன். அதேபோல நிதித்துறை அமைச்சரிடமும் ஆலோசித்திருக்கிறேன்..''
அலைவரிசையைப் பெற்றிருக்கும் நிறுவனங்களின் வருமானத்தில் அரசு பங்கு பெறுவது என்பது சாத்தியமானதா? அந்த நிறுவனங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டி அரசை ஏமாற்ற வாய்ப்புள்ளதே?
``இது வேடிக்கையான குற்றச்சாட்டு. நாம் இன்னும் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே வதந்தியைக் கிளப்புகிறார்கள். நம்மிடம் `டெலிகாம் இன்ஜினீயரிங் சென்டர்' என்ற புலனாய்வு அமைப்பு இருக்கிறது. ஒவ்வொரு தொலைபேசி நிறுவனமும் தினமும் எத்தனை அழைப்புகளைக் கையாள்கிறது என்பதை அந்த அமைப்பு துல்லியமாகக் கண்காணித்து வருகிறது. போதாக்குறைக்கு அந்த நிறுவனங்களைக் கண்காணிக்க டிராய் அமைப்பும் நம்மிடம் இருக்கிறது. அப்படியிருக்க, அந்த நிறுவனங்கள் எந்த விதத்திலும் அரசை ஏமாற்ற முடியாது.''
இப்போது செயல்பாட்டில் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பை விற்காமல், புதியவர்களுக்குக் கொடுத்ததில் உள்நோக்கம் இருக்கிறது என்று ஒரு பத்திரிகை கூறுகிறதே?
``உள்நோக்கமும் கிடையாது. வெளிநோக்கமும் கிடையாது. இது முற்றிலும் தவறானது. இருக்கின்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் அலைவரிசைத் தொகுப்பைத் தர வேண்டும் என்று எந்த ஆணையும் கிடையாது. ஒரு தனியார் கம்பெனியின் சேவைதாரர்களின் எண்ணிக்கை கூடக்கூட அதற்கேற்ப இரண்டு மெகாஹெட்ஸ் வீதம் அலைவரிசையைக் கொடுக்க டிராய் நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. அதன்படி இப்போதும் வழங்கி வருகிறோம். நம்மிடம் இதுவரை பயன்படுத்தப்படாமலேயே இருக்கிற அலை வரிசையைத்தான் புதியவர்களிடம் கொடுத்திருக்கிறோம். பழைய நிறுவனங்களே இதை உபயோகிக்கும் என்று நாம் நினைத்தால் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதுதான். அதுகூட தெரியாமல் அந்த நாளேடு அப்படி கூறுமானால் அதில் உள்நோக்கம் இருப்பதாகத்தான் எல்லோரும் நினைப்பார்கள்.''
தயாநிதிமாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரை 2ஜி, 3ஜி அலைவரிசை எதுவும் இல்லை என்று சொன்னார்களே? உங்களுக்கு மட்டும் இந்த அலைவரிசைகள் எப்படி வந்தன? இவ்வளவு காலமும் இல்லை என்று சொன்ன விலைமதிக்க முடியாத சொத்தினை சேவைக்குக் கொண்டு வராமல் இருந்தது யார் தவறு?
``நல்ல கேள்வி. இந்த விஷயத்தில் பிரதமர் ஒத்துழைப்போடு நான் ஒரு போலீஸ் அதிகாரியைப் போலவே செயல்பட்டேன். இந்தத் துறையில் ஏகபோகம் செய்யும் சில தனியார் நிறுவனங்கள் இப்படிப்பட்ட தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வெற்றியும் கண்டார்கள். இதை விசாரிப்பதற்கு `வேறு யாரும்' முன் வரவில்லை.
நான் பொறுப்பேற்ற பிறகு வெளிநாடு சென்றேன். அங்கு செல்போன் சேவைக்காக குறைந்தபட்சம் 60 மெகாஹெட்ஸ் பயன்படுத்தப்படுவதைத் தெரிந்து கொண்டேன். இந்தியாவில் 35 மொஹெட்ஸ்தான் பயன்பாட்டில் இருந்தது. தொடக்கத்தில் என்னிடத்திலும், அலைவரிசை கையிருப்பு இல்லை என்றுதான் சொன்னர்கள். கண்டுபிடித்தவுடன் நானே தொழில் நுட்பப் புலனாய்வு மற்றும் ஒயர்லெஸ் ஆலோசகர் ஆகியோரோடு விசாரணை மேற்கொண்டேன். முடிவில் நம்மிடம் கையிருப்பு நிறையவே இருப்பதைக் கண்டுபிடித்தேன்.
பிரதமரிடம் முதன்முதலாக இதைச் சொன்னபோது அதிர்ந்து ஆச்சரியப்பட்டார். என் முதுகில் தட்டிப் பாராட்டி `உடனடியாக அதைச் செய்யுங்கள்' என்றார். நிதித்துறையின் ஆலோசனையின் பேரில் புதிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு, இப்போது அவற்றுக்கு அலைவரிசை வழங்கப்பட்டு இருக்கிறது.
`ஜி-3 அலைவரிசையைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகள் ஏற்கெனவே இந்தச் சேவையைத் தொடங்கி விட்ட பிறகும் `என்ன காரணத்தினாலோ' இந்த சேவையைத் தொடங்க, போதுமான முயற்சிகள் எனக்கு முன்பு வரை எடுக்கப்படவில்லை. இந்த முயற்சியையும் நான்தான் எடுத்து இந்த ஆண்டுக்குள் சேவையைத் தொடங்க இருக்கிறேன். அதிலும் பி.எஸ்.என்.எல்.லுக்கு முன்னுரிமை கொடுத்து அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. எனவே உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை என்னால் உணர முடிகிறது. நான் கால தாமதம் செய்வேனே தவிர, மற்றவர்களைப் போல `தயாநிதிமாறானால் பலஆயிரம் கோடி இழப்பு' என்று சொல்லி, பெருமைத் தேடிக் கொள்ள மாட்டேன்.''
சில தனியார் நிறுவனங்கள் ஏகபோகமாக அனுபவித்து வந்த இந்தத்துறையின் வியாபார நுணுக்கத்தையும் அதிக லாபத்தையும் மக்கள் நலன் கருதி நீங்கள் பரவலாக்க முயற்சி செய்தீர்கள் என்றும் அதனால்தான் உங்களுக்கு இத்தனை குடைச்சல்கள் என்றும் பேசப் படுகிறதே?
``இந்த முயற்சியை நான் எடுத்தபோது எனக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தன என்பதைப் பலரும் அறிவார்கள். ஒவ்வொருமுறையும் என்மீது ஊழல் புகார்கள் வந்து கொண்டே இருந்ததும் பின்பு அது பொய்யாகிப் போனதும் தெரிந்ததே. ஆனால் பிரதமரின் முழு நம்பிக்கையையும் கலைஞர் அவர்களின் முழு ஆதரவையும் ஒவ்வொரு கட்டத்திலும் நான் பெற்ற காரணத்தால் இந்தத் துறையில் ஒரு புதிய வரலாற்றை என்னால் படைக்க முடிந்திருக்கிறது. ஒரு நல்லதைச் செய்கிறபோது எதிர்ப்பு வருவதும், அந்த எதிர்ப்பையே எரிபொருளாக்கிக் கொண்டு வேகமாக இயங்குவதும் `கலைஞர் பேச்சைக் கேட்கின்ற' தம்பிகளுக்குச் சாத்தியமான ஒன்று என்பதற்கு இது உதாரணம்.''
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்
என்னால் 25000 கோடி இழப்பா?
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment