காரைக்காலில் நிஷா புயல் இன்று கரையை கடந்தது. இதனிடையே கடலூரில் பெய்த கனத்த மழையால் பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியானார்கள்.
மழை தொடர்பான சம்பவங்களில் தமிழகத்தில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 20ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் வேதாரண் யத்திற்கு தென்கிழக்கே 150 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் சின்னமாக மாறியது. அது படிப்படியாக நகர்ந்து வந்து, நேற்று மதியம் வேதாரண் யம் மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையே 50 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயலுக்கு, "நிசா' என பெயரிடப் பட்டது.
இந்த "நிசா' புயல், வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தை நேற்று நள்ளிரவு தாக்கியது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதே நேரத்தில், மாநிலத்தின் உட்புறப் பகுதிகளிலும் மழை கொட்டியது. சென்னையிலும் கனமழை பெய்தது. "நிசா' புயல் தாக்கிய போது, கடலில் 65 முதல் 75 கி.மீ., வேகத்திற்கு பலத்த காற்று வீசியது. வழக்கத்தை விட ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பின. கடலோரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. அதிகபட்சமாக ஒரத்தநாடு மற்றும் வேதாரண்யத்தில் 33 செ.மீ., மழை பெய்துள்ளது.
கனமழையால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும், ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது. தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப் பட்டு திருமண மண்டபம், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப் பட்டனர். கன மழைக்கு இதுவரை இம்மாவட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; 17 கால்நடைகள் இறந்துள்ளன. மாவட்டத்தில் 34 மையங்களில், 10 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 75 குடிசைகள் சேதமடைந் துள்ளன. கோடியக்கரை பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் கடல் நீர் உட்புகுந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் கோடியக்கரை பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது. வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வெள்ள நீர் உட்புகுந்தது. மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரமும் தடை செய்யப்பட்டிருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட் பட்ட பகுதியில் நேற்று மாலை வரை 2,689.7 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து வீசிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து, சீர்காழி-பூம்புகார், சீர்காழி-காரைக்கால், மயிலாடுதுறை-பொறையார் இடையேயான போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பலத்த காற்றின் காரணமாக, கடலில் நங்கூரமிட்டிருந்த விசைப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. காவிரி, மஞ்சலாறு, அய்யாவு அய்யனாரு, பங்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் ஏற்பட்ட உடைப்பாலும், உப்பனாறு உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், குளம் ஆகியவை நிரம்பி வழிந்ததாலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்களில் குடிசை வீடுகள் இடிந்தும், வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாலும், அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 35 முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மழை காரணமாக சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப் பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. தமிழகத்தில் மழை தொடர்பான சம்பவங்களுக்கு இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று காலை பெய்த மழை அளவு விவரம்: பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரத்தில் 28 செ.மீ., மழை பெய்தது. திருவிடைமருதூர் மற்றும் மயிலாடுதுறையில் 26 செ.மீ., மழை பெய்தது. சீர்காழியில் 23, சேத்தியாதோப்பு மற்றும் கொள்ளிடத்தில் 21, திருத்துறைப்பூண்டியில் 20, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் 19, குடவாசல் மற்றும் நன்னிலத்தில் 17, கும்பகோணம், தஞ்சாவூரில் 16, வலங்கைமான், தரங்கம்பாடியில் 15, நீடாமங்கலத்தில் 14, சென்னை விமான நிலையம் 11, செங்கல்பட்டு, பூந்தமல்லி மற்றும் கொரட்டூரில் 7 செ.மீ., மழை பெய்தது.
வேதாரண்யத்தில் 401 மி.மீ., மழை : இன்று காலை 7 மணி நிலவரப்படி நாகப்பட்டினம், வேதாரண்யத்தில் அதிக பட்சமாக 401 மி.மீ., அளவு மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக, நாகப்பட்டினத்தில் 101 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால், படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளன. நிஷா புயல் காலை 7 மணி முதல், மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில், கடலூர் நோக்கி நகர்ந்து வந்தன. இதனைத்தொடர்ந்து நிஷா புயல் காரைக்காலில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் காரைக்கால் பகுதியில் பலத்த காற்று வீசியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.
இதனிடையே கடலூரில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகியுள்ளனர். கனத்த மழை காரணமாக கடலூர் திருமாணி கோயில் கிராமம் அருகே உள்ள பாலம் உடைந்தது. இதனால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.அந்த பகுதியில் சுமார் 40 கிராமங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்குடி பகுதியில், 200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்த பகுதியில் மட்டும் மழைக்கு 16 பேர் பலியாகியுள்ளனர். சிதம்பரத்தில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. 5000 ஏக்கர் வாழை , 2500 ஏக்கர் உளுந்து, 2500 ஏக்கர் மணிலா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்டு பணிகளை கவனிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
கடலூரில் பாலம் உடைந்து ஊருக்குள் வெள்ளம் : 200 கிராமங்கள் மூழ்கின : 16 பேர் பலி
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, November 26, 2008

0 comments:
Post a Comment