அணு இயற்பியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2008-ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு 2 ஜப்பானியர், ஒரு அமெரிக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானியின் பெயர் யாசிரோ நாம்பு. சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். அணு இயற்பியல் சார்ந்த கண்டுபிடிப்பு தொடர்பாக பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரிசுத் தொகையான 14 லட்சம் டாலரில் பாதியை இவர் பெறுவார். பரிசுத் தொகையின் அடுத்த பாதியை ஜப்பானின் மகோடா கோபயாஷியும் மஸ்காவா தோஷிஹைடும் பகிர்ந்துகொள்வர்.
பரிசளிப்பு விழா ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும்.
யாசிரோ நாம்பு
இவர் ஜப்பானில் 1921ல் பிறந்தார். ஜப்பானிய வம்சாவளி அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான இவர் உல்ப் பரிசு, திராக் பதக்கம், சகுராய் பரிசு என பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். உபஅணு இயற்பியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காக 2008ம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1950ல் ஒசாகா சிட்டி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியர் பணியில் அமர்ந்தார். தற்போது ஓய்வுபெற்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் கெ?2;வ பேராசிரியராக உள்ளார்.
மஸ்காவா
தோஷிஹைடு மஸ்காவா 1940ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்தார். ஐஷி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நகோயா பல்கலைக்கழகத்தில் 1962ல் பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தில் 1967ல் பிஎச்டி பட்டம் பெற்றார்.
தற்போது கியாடோ சாங்யோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
கோபயாஷி
ஜப்பானில் உள்ள நகோயா பகுதியில் 1944ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி பிறந்தார் மகோடா கோபயாஷி. இவருக்கு மிகவும் பிடித்தமான துறை உயர் ஆற்றல் இயற்பியல். இவர் படித்தது நகோயா பல்கலைக்கழகம். சகுராய் பரிசு (1985), ஜப்பான் அகாதெமி பரிசு (1985), அசாகி பரிசு (1995) என பல்வேறு பரிசுகளை வென்றவர்.
நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு விஞ்ஞானியான தோஷிஹைடு மஸ்காவாவும் இவரும் சேர்ந்து எழுதிய ஆய்வுக் கட்டுரை வெகுவாக பாராட்டப்படுகிறது. துணைஅணு நுண்பொருள்களின் 3 குடும்பங்கள் இயற்கையில் இருப்பதை கணிக்க உதவும் கண்டுபிடிப்புக்காக இந்த இருவருக்கும் நோபல் பரிசு தரப்படுகிறது.
அமெரிக்கர்,2 ஜப்பானியருக்கு இயற்பியல் நோபல் பரிசு
Posted by
தமிழ்க்குமரன்
Friday, October 10, 2008
Labels: செய்திகள்

0 comments:
Post a Comment