கனவுகள் என்ன என்பதைப்பற்றி நூற்றுக்கணக்கான தியரிக்கள் இருக்கின்றன. அவற்றில் மிகப் புகழ்பெற்றது சிக்மண்ட் ஃபிராய்டின் கனவு தியரி. அவருடைய இன்ட்ரபிரடேஷன் ஆஃப் டிரீம்ஸ் புத்தகம் மிகப் பிரபலமானது. நம்முடைய உள்மன ஆசைகளே கனவுகளாக வருகின்றன என்பதைப் பல ஆதாரங்களுடன் அவர் அதில் நிரூபித்தார். கனவுகளின் ஆதாரம் பாலுணர்வு என்பதும் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்று. ஆனால், சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வேறு தியரிக்களைச் சொல்கின்றன. நம்முடைய அரைகுறைத் தூக்கத்தின்போது கண்களில் தோன்றும் `ராப்பிட் ஐ மூவ்மெண்ட்' (ஆர். ஐ. எம்) என்கிற நிலையில் ஏற்படுவதுதான் கனவு. அவை உணர்வுகள், காட்சிகள், எண்ணங்களின் தொகுப்பு. தூங்கும் போது சில நேரங்களில் மனிதனின் மூடிய விழிக்குள் கண்கள் அசைவதாகவும், அந்தச் சமயம் மூளையின் சில பகுதிகளும் விழித்துக் கொள்வதால் அந்தத் தொடர்பில் தோன்றுவதுதான் கனவு என்கிறார்கள் இப்போதைய விஞ்ஞானிகள். ஒவ்வொரு நாள் தூக்கத்தின் போதும் சராசரியாக மனிதன் இரண்டு மணி நேரங்கள் கனவு காண்கிறான். உலகம் முழுவதும் மக்கள் ஒரே மாதிரியான கனவுகளையே காண்கிறார்கள். மெஜாரிட்டி கனவுகள் மனஅழுத்தம் தொடர்பான நெகட்டிவ்வானவையே. பத்து சதவீத கனவுகள் செக்ஸ் சம்பந்தப்பட்டவை. மனிதனுக்கு வரும் பொதுவான கனவுகள் : வாகன விபத்து, உயிரோடு இருப்பவர் இறந்து போவது, ஆபீஸுக்கு லேட்டாகப் போவது, யாரோ துரத்துவது, மெதுவாக ஓடுவது, செக்ஸ் உறவு கொள்வது, பறப்பது, பற்கள் உதிர்ந்து விழுவது, மேலேயிருந்து விழுவது, அங்குமிங்கும் நகரமுடியாமல் இருப்பது, பரீட்சையில் தோற்பது போன்றவை. 12 சதவீத மக்கள் கறுப்பு வெள்ளை நிறத்திலேயே கனவுகளை காண்கிறார்களாம்.

0 comments:
Post a Comment