திருச்சி: "பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் (பி.ஐ.டி.,) சேர்ந்த எங்களை திருச்சி அண்ணா பல்கலை நிர்வாகம் பாகுபாட்டுடன் நடத்துகிறது' என்று திருச்சி அண்ணா பல்கலை மாணவர்கள் புகார் கூறி வகுப்பு புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது. திருச்சியில் அண்ணா பல்கலை கடந்த கல்வியாண்டு துவக்கப்பட்டது. பாரதிதாசன் பல்கலையால் நடத்தப்பட்டு வந்த பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் வளாகம் முழுவதும் திருச்சி அண்ணா பல்கலையாக மாற்றப்பட்டது. பல்கலை துவக்கப்பட்ட போது பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் படித்த மாணவர்கள் தற்போது அண்ணா பல்கலையில் மூன்று, நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்கலை வளாகத்தில் நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: பாரதிதாசன் தொழில்நுட்ப கல்லூரியில் (பி.ஐ.டி.,) தான் நாங்கள் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தோம். அதுவே கடந்த ஆண்டு அண்ணா பல்கலையாக மாற்றப்பட்டது. தற்போது மூன்று, நான்காம் ஆண்டு படிக்கும் எங்களை அண்ணா பல்கலை நிர்வாகம் பி.ஐ.டி., மாணவர்கள் தானே என்ற பாகுபாட்டுடன் நடத்துகிறது. அண்ணா பல்கலையின் நிர்வாகத்தின் கீழ் வந்த எங்களுக்கு போதுமான வகுப்பறை, லேப் வசதி இல்லை. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு சாப்பாடு சரியாக வழங்குவதில்லை. அறையில் மாணவர்கள் கூட்டமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியில் மாணவர்களுக்கு கட்டில் கூட இல்லாமல் தரையில் படுத்து தூங்குகின்றனர். பல்கலை நூலகத்தில் தேவையான புத்தகங்கள் இல்லை. தகுதியான ஆசிரியர்களும் இல்லை. இதையெல்லாம் கடந்த ஓராண்டாக பொறுத்துக் கொண்டு வந்தோம். தற்போது இன்டர்னல் மதிப்பெண் வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சியுடன் அதிகமான மாணவர்களுக்கு குறைத்து போட்டுள்ளனர். இதுகுறித்து கல்லூரி டீனிடம் கேட்டால் அவர் கண்டபடி பேசுவதால் மாணவர்கள் மனதை பாதித்துள்ளது. இதையடுத்தே நாங்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினோம். மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பதிவாளர் சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, "குறைகள் களைய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். திருச்சி அண்ணா பல்கலை பதிவாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""மாணவர்கள் பாகுபாடாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை. அனைத்து மாணவர்களும் ஒன்றாகவே நடத்தப்படுகின்றனர். மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
பாரபட்சமாக நடத்தும் திருச்சி அண்ணா பல்கலை: மாணவர்கள் குற்றச்சாட்டால் பரபரப்ப
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, September 24, 2008

0 comments:
Post a Comment