சென்னை: கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் முடிக்கப்பட்டு, வரும் ஜனவரியில் சென்னைக்குக் குடிநீர் வழங்கப்படும், என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், சென்னையில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் நடந்துவரும் பணிகளை நேற்று பார்வையிட்டார். பின், மீஞ்சூரில் நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் பணிகளை ஸ்டாலின் பார்வையிட்டார்.
மீஞ்சூர் காட்டுப்பள்ளி கிராமத்தில், இத்திட்டத்தை வடிவமைத்து, கட்டுமானம் செய்து, இயக்கி மாற்றித் தருதல் முறைப்படி, "சென்னை வாட்டர் டீசாலினேஷன் லிட்.,' என்ற நிறுவனத்துடன் சென்னைக் குடிநீர் வாரியம் 25 ஆண்டுக்கான கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை அமைக்கும் பணிகளில் குறிப்பாக, கடலுக்கடியில் நீரை உள்கொண்டுவரும் குழாய்களைப் பதிக்கும் பணிகளை செப்டம்பர், அக்டோபரில் தான் மேற்கொள்ள இயலும். இப்பணிகள் முடிக்கப்பட்டு, வரும் ஆண்டு ஜனவரி மத்தியில் இந்நிலையத்திலிருந்து குடிநீரை வழங்க இயலும். தற்போது இத்திட்டத்தில் 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் அமைக்கப்படும் இந்நிலையத்திலிருந்து, மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரைக் கொண்டுசெல்லும் குழாயை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்கு ஜவகர்லால் தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், 87.80 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மாதவரம் மற்றும் மணலி நீரேற்று நிலையங்கள் வரை குழாய் பதிக்கும் பணியில், மொத்தம் 23 ஆயிரத்து 350 மீட்டர் நீளத்தில் தற்போது 20 ஆயிரத்து 614 மீட்டர் நீளத்துக்கு ஆயிரம் மி.மீ., விட்டமுள்ள நெகிழ்விரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஸ்டாலின் கூறினார். அமைச்சருடன் நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர் தீனபந்து, சென்னைக் குடிநீர் வாரிய இயக்குனர் சுனில் பாலீவால், செயல் இயக்குனர் தங்கசாமி மற்றும் வாரியத்தின் மூத்த இன்ஜினியர்கள் சென்றிருந்தனர்.
கடல்நீரிலிருந்து குடிநீர் : ஜனவரியில் விநியோகம
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, September 24, 2008

0 comments:
Post a Comment