தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அணு சக்தி ஒப்பந்தம்: அவசியமும் சர்‌ச்சையும்

அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், ஒப்பந்தமா? அல்லது ஆட்சியா? என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு.அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் முதல் நடவடிக்கையாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் இந்தியாவிற்கென்று தனித்த (India Specific) கண்காணிப்பு உடன்படிக்கையை இறுதி செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் நேற்று இறுதி முடிவு எடுக்கக் கூடிய ஐ.மு.- இடதுசாரி கூட்டணிகளின் ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுக்காமல் கலைந்தது.அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிகள் அனுமதியளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் ஆட்சியை பணயம் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மத்திய அரசிற்கு ஏற்பட்டுவிட்டதென்றும், ஒப்பந்தத்தை துணிந்து நிறைவேற்றிட பிரதமர் மன்மோகன் சிங் முடிவெடுத்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதனை நேற்று இரவு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசிற்கு இன்னும் ஓராண்டுக் காலம் ஆயுள் உள்ள நிலையில், அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளதை ஒரு அரசியல் பிரச்சனையாக பார்ப்பதைவிட, இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஒரு பிரச்சனையாக அதனை அணுகுவதே சரியாக இருக்கும்.அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியம்தானா?இந்தக் கேள்விக்கு முதலில் பதில் காண வேண்டும். அரசின் நோக்கிலிருந்து அல்ல, மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நமது எரிசக்தித் தேவையை கருத்தில்கொண்டு பதில் காண வேண்டும்.ஆங்காங்கு மின் தடைகள். கோடைக் காலத்தில் அதிகபட்ச மின் தட்டுப்பாடு, அதன் காரணமாக மின்
தடை. இப்படிப்பட்ட சூழல்தான் இந்தியா முழுவதும் நிலவுகிறது. நமது அன்றாடத் தேவைக்கும், தொழில் உற்பத்திக்கும் ஏற்ற அளவிற்கு நமது மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம். இந்தியா தற்பொழுது ஆண்டிற்கு 1,30,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது நமது வளர்ந்துவரும் தேவையை ஈடுசெய்யவில்லை. நாளுக்கு நாள் தொழில் வளர்ச்சியும், வீட்டு மின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் நமது தேவை அதிகரித்துக் கொண்டே சென்றால் 2020ஆம் ஆண்டில் நமது மின் தேவை 2,50,000 மெகா வாட்டாக அதிகரிக்கும். அதாவது நமது மின் உற்பத்தி இந்த அளவிற்கு எட்டினால் மட்டுமே சமாளிக்க முடியும். இதில் மாற்றுப் பேச்சிற்கு இடமில்லை. நமது மின் தேவையை தற்பொழுது நீர் மின் நிலையங்களும், நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களும், எரிவாயுவைக் கொண்டு மின் தயாரிக்கும் நிலையங்களுமேபெருவாரியாக ஈடுசெய்கின்றன. நமது ஒட்டுமொத்தத் தேவையில் 3 விழுக்காடு அளவிற்கு அணு மின் நிலையங்கள் அளிக்கின்றன. அதாவது சற்றேறக் குறைய 4,800 மெகா வாட் அளவிற்கு அணு மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்கின்றன. நமது நாட்டின் நீர் மின் உற்பத்தித் திறன் குறைந்துவரும் நிலையில், நமது நாட்டிலுள்ள நிலக்கரி வளம் சுருங்கிவரும் நிலையில்- இப்பொழுதே பெரும் அளவிற்கு அயல் நாடுகளில் இருந்து நிலக்கரியைப் பெற்றுத்தான் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அளிக்கின்றோம். இந்த நிலையில் அணு சக்தித் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாகத் திகழும் நமது நாட்டிற்கு அணு மின் சக்தித் திறனை பன்மடங்கு அதிகரித்துக் கொள்ளும் திறன் உள்ளது. தற்பொழுது நமது நாட்டில் 17 அணு மின் நிலையங்கள் (Pressurized Heavy Water Reactors - PHWR) இயங்கி வருகின்றன. இவைகள் சில மாதங்களுக்கு முன் வரை அவைகளின் அதிகபட்ச உற்பத்தித் திறனில் 90 விழுக்காடு அளவிற்கு மின் உற்பத்தி செய்து வந்தன. ஆனால், இந்த மின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தொடர்ச்சியாக்க் கிட்டாததால் தற்பொழுது 50 விழுக்காடு திறனளவிற்கே இவைகள் மின் உற்பத்தி செய்கின்றன. இதுதான் அணு மின் சக்தி தொடர்பாக நமது நாடு எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனையாகும். அணு மின் உலைகளை வடிவமைத்து உருவாக்கிடும் தொழில் நுட்பத்திறன் நம்மிடம் உள்ளது. நமது அணு மின் உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எரிபொருள் கழிவை மறு சுழற்சி செய்து, கழிவிலிருந்து கிட்டும் புளுடோனியத்துடன் யுரேனியத்தைக் கலந்து அதனை Fast Breeder Reactor (FBR) என்றழைக்கப்படும் அதி வேக ஈனுலையில் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ளோம். அதன் அத்தாட்சியே கல்பாக்கத்தில் நாம் நிறுவிவரும் மாதிரி அதிவேக ஈனுலையாகும். இது 2010 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்குகிறது.இதற்கு அடுத்த கட்டமாக - நமது நாட்டில் மிக அதிகமாக்க் கிடைக்கும் தோரியம் எனும் அணுப்பொருளை யுரேனியமாக உருமாற்றி அதனை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திறன் சோதனையில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காமினி என்ற பெயரில் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள சோதனை அணு உலையில் அந்தப் பணி வேகமாக நடந்தேறி வருகிறது.இப்படி அணு சக்தித் தொழில் நுட்பத்தில் துரித கதியில் முன்னேறிவரும் நமது நாட்டிற்கு பெருங்குறையாக உள்ளது குறைவான யுரேனிய வளம். மேகாலயா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் யுரேனிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கம் அமைத்து அந்தக் கனிம வள உற்பத்தியைப் பெருக்குவதில் மத்திய அரசின் யுரேனிய கழகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
நமது நாட்டிலுள்ள யுரேனிய வளம் 90,000 டன்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய அணு மின் உற்பத்திக் கழகத் தலைவர் எஸ்.கே. ஜெயின், இதை வைத்து 10,000 மெகா வாட் அளவிற்கு நம்மால்
webdunia photo
FILEமின் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அதாவது 500 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 20 அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய இருப்பு மட்டுமே நம்மிடம் உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கிடைக்கும் கழிவை மறு சுழற்சி செய்து ஈனுலைகளில் மின் உற்பத்தி செய்யலாம் என்றாலும், நமது நாட்டின் அதிகரித்துவரும் தேவையை ஈடுகட்ட வேண்டுமெனில் நாம் அயல் நாடுகளிலிருந்து யுரேனியத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.ஆனால், வல்லரசுகள் ஆன அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் நமது நாட்டை ஒரு அணு ஆயுத வல்லரசாக ஏற்காத நிலையிலும், NPT என்றழைக்கப்படும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடு என்ற காரணத்தினாலும், 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து நம்மீது விதிக்கப்பட்ட தடையினாலும் ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து யுரேனியம் எரிபொருளை பெற இயலாத ஒரு நிலை உள்ளது.இந்த நிலையில் இருந்து - இதைத்தான் ‘தனிமை‌ப்படுத்தப்பட்ட நிலை’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார் - நம்மை மீட்டுக்கொள்ளவே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியமாகிறது. அதனால்தான், அணுத் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு பெற்றிருந்தாலும், நமது நாட்டில் கிடைக்கும்
webdunia photo
FILEதோரியத்தைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை நாம் உருவாக்கும் வரை - நமக்கு யுரேனியம் எரிபொருள் தேவை. அதற்கு இந்த ஒப்பந்தம் அவசியம் என்று பெங்களுருவில் இன்று நடந்த விழா ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார். “இந்த ஒப்பந்தம் முழுக்க, முழுக்க நமது சமூக ரீதியிலான அணு மின் சக்தி தேவையை நிறைவு செய்வதற்கான ஒப்பந்தமாகும். தற்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 130 கிகாவாட் ஆகும். இதனை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 250 கிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். தற்பொழுது அணு மின் சக்தியின் பங்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 விழுக்காடாக உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி உற்பத்தி 40,000 மெகாவாட்டை எட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்று வருகிறது” என்று நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பல்தேவ் ராஜ் கூறினார். அணு சக்தியின் மூலம் 40,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கை எட்ட இந்த ஒப்பந்தம் தேவை.ஆக, நமது நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்க, அணு மின் சக்தியை அதிகரித்திட இந்த ஒப்பந்தம் அவசியம். அதில் இரு வேறுபட்ட கருத்திருக்க நியாயமில்லை. இதனை உணர்ந்திருந்திருந்தும் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரிகள் எதிர்க்கக் காரணம்?நாளை பார்ப்போம்...

நமது நாட்டின் அதிகரித்துவரும் எரி சக்தித் தேவையை ஈடுசெய்ய நீர் மின், அனல் மின் சக்தி உற்பத்தியைப் பெருக்குவதைப் போல, அணு மின் சக்தி உற்பத்தியைப் பெருக்கவேண்டியது அவசியமாகிறது என்பதைப் பார்த்தோம்.அதற்கு, நமது அணு உலைகளுக்குத் தேவையான அளவிற்கு நம்மிடம் யுரேனியம் எரிபொருள் இருப்பு
webdunia photo
FILEஇல்லாமையும், இதனை அயல் நாடுகளிடமிருந்துப் பெற இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அவசியம் என்பதையும் பார்த்தோம்.ஆனால், இதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு காட்டி வருவது ஏன்? என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், நமது மூத்த அணு விஞ்ஞானிகள் சிலர் காட்டிவரும் எதிர்ப்பை புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகள்!இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த சர்வதேச அணு சக்தி முகமையுடன் (International Atomic Energy Agency - IAEA) இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை (India specific agreement) இறுதிசெய்ய இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருந்த (அது நிறைவேறாத) நிலையில், நமது நாட்டின் மூன்று மூத்த அணு விஞ்ஞானிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.கடந்த செவ்வாய்க் கிழமையன்று, இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐய்யங்கர்,அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபால கிருஷ்ணன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஏ.என். ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அந்த அறிக்கையில், சர்வதேச அணு சக்தி முகமையுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவசர கதியில் நிறைவேற்றிட வேண்டாம் என்று மத்திய அரசிற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் ஹென்றி ஹைட் சட்டத்தை நிறைவேற்றிய போதே அதில் நமது அடிப்படை உரிமைகளில் தலையிடுமாறு இருந்த விதிமுறைகளை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தவர்களில் இந்த மூன்று விஞ்ஞானிகள் முக்கியமானவர்கள் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அடிப்படையானது சர்வதேச அணு சக்தி முகமையுடன் நாம் செய்து கொள்ள வேண்டிய கண்காணிப்பு ஒப்பந்தமாகும். இந்த
ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக இந்திய அணு சக்திக் குழு வியன்னாவில் அணு சக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா எதிர்பார்த்த பல அம்சங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க அணு சக்தி முகமைக் குழு மறுத்ததாகவும், அதனால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன்பிறகு பேச்சுத் தொடர்ந்து, தற்பொழுது அணு சக்தி முகமையின் ஆளுநர்களிடம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அரசின் கோரிக்கையை இடதுசாரிகள் மறுத்துவிட, அதே நேரத்தில் அணு விஞ்ஞானிகளின் எதிர்ப்பும் வெளியாகியுள்ளது.”சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்திவரும் பேச்சு வார்த்தைத் தொடர்பாக நிலவிவரும் ரகசியமும், இந்த ஒப்பந்தம் குறித்து ஊடகங்கில் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் செய்திகளும், சில அமைப்புக்களின் குறுகிய நோக்கங்களும், இப்பிரச்சனை பற்றிய பொது மக்களின் அறியாமையும் நமது நாட்டை ஆபத்தான பாதையில் கொண்டு செல்வதாக” இம்மூன்று விஞ்ஞானிகளும் தாங்கள் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். சர்வதேச அணு சக்தி முகமையுடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி, ஐ.மு. கூட்டணி - இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், சுதந்திரமான அணு சக்தி நிபுணர்களிடமும் விவாதித்தப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மூன்று விஞ்ஞானிகளும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அணு சக்தி முகமையை மத்திய அரசு அணுகிவரும் விடயத்தில் நமது விஞ்ஞானிகளிடையே ஒரு அமைதியற்ற தன்மை நிலவி வருகிறது என்று கூறியுள்ள இவர்கள், சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்திய பேச்சுவார்த்தைத் தொடர்பாக எழுப்பியுள்ள கேள்விகள் இதுதான்:1. இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பை மேற்கொள்ள ஒப்பதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹை‌ட் சட்டமும், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்தமும், சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட ஒப்புக்கொள்ளப்பட்ட நமது அணு மின் உலைகளுக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாகப் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை. அந்த உறுதியை பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ.) நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா பெற்றுள்ளதா? நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற அணு சக்தி முகமை உறுதியளித்துள்ளதா?2. அணு உலைகள் கண்காணிப்பில் ஈடுபடும் அணு சக்தி முகமை, சந்தேகத்தின் அடிப்படையில் நமது ராணுவ மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு தொடர்பான - அதாவது கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட - அணு உலைகளையும், மையங்களையும் ஆராயும் உரிமை (Intrusive inspection) கொண்டதாகும். இதனைத் தடுக்க, அணு சக்தி முகமையுடன் கூடுதல் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.3. இந்த ஒப்பந்தத்தின் கீழ் நாம் பெறப்போகும் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்தியப்பின் மறு சுழற்சி செய்துகொள்ளும் அனுமதியை 123 ஒப்பந்தம் தெளிவாக உறுதி செய்யவில்லை. மாறாக, அதி நவீன மறு சுழற்சி மையம் நிறுவப்பட்டு அங்கு அதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்குப் பல ஆண்டுகளும், பெரும் முதலீடும் தேவைப்படும் என்பது மட்டுமின்றி, இதனை செயல்படுத்த அதற்கென்று தனித்த ஒரு ஒப்பந்தத்தையும் அணு சக்தி முகமையுடன் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதா?ஆகிய அடிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்தோ (Atomic Energy Commission) இதுவரை பதில் தரப்படவில்லை.யுரேனியம் வழங்கலை உறுதி செய்யாத ஒப்பந்தம்!இது மட்டுமல்ல, இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில விவரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.நமது நாட்டின் எரி சக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த ஒப்பந்தம் அவசியம் என்று அரசும், பிரதமரும் கூறிவருவதை இவர்கள் ‘மாயை’ என்று வர்ணித்துள்ளார்கள்.இந்த ஒப்பந்தத்தின் கீழ் அயல் நாடுகளில் இருந்து நாம் வாங்கும் அணு உலைகள் மிகவும் விலையுயர்ந்தவை என்பதால், அவைகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் மின்சாரத்தின் விலை அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், அணு தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளில் இருந்து நாம் பெறுவதை ஹைட் சட்டத்தின் வாயிலாக வாஷிங்டன் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளனர்.அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் நம்மை கட்டுப்படுத்தாது என்று மத்திய அரசு கூறுவது அடிப்படையற்றது என்றும், அதனடிப்படையிலேயே 123 ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டுள்ளது, அதனால்தான், அணு சக்தி தொடர்பான ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் நமது அயலுறவு கொள்கைகள் குறித்த விதிமுறைகள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகிறது, ஆனால் அதில் நமது நாட்டின் அயலுறவு கொள்கை பற்றி குறிப்பிட்டிருப்பது ஏன் என்று இவர்கள் எழுப்பியுள்ள கேள்வி அர்த்தம் பொதிந்ததாகும்.ஒரு நாட்டில் எந்த ஒரு பொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும், அதனை நிவர்த்தி செய்ய அப்பொருள் மிகுதியாக உள்ள அயல் நாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். அதே அடிப்படை கொண்டதுதான் நம்மைப் பொறுத்தவரை இந்த அணு சக்தி ஒப்பந்தமும். நமது யுரேனியம் தேவைக்காக செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்திற்காக அதோடு தொடர்பற்ற விடயங்களை ஒப்பந்தத்தில் சேர்ப்பதேன்? என்பதற்கு அரசு விளக்கமளித்திட வேண்டும்.எனவே விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முழுமையான விளக்கமளித்து அதன் மூலம் நாட்டு
மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.(இடதுசாரிகளின் எதிர்ப்பிற்கு என்ன அடிப்படை என்பதை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு விளக்கி அறிக்கை வெளியிட்டுவிட்டதால் அது குறித்து எதையும் கூற வேண்டிய அவசியம் இல்லை - ஆசிரியர்)

நன்றி வெப் உலகம்.காம்

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive