சுப்ரமணியபுரம்
காதலையும், வீரத்தையும் சொல்லி பழகிய தமிழ்சினிமாவுக்கு இந்த புதியவர்கள் காட்டியிருக்கிற துரோகம் புதுசு. நாம் ஏதோ ஒரு கதையை யூகித்து அமர, 'அரைச்ச மாவு' ஆட்கள் நாங்கள் இல்லையென்று வேறு திசையில் கதையை விரட்டி, ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் புதுமுக இயக்குனர் சசிக்குமார். பாலா, அமீருடைய வளர்ப்பு! அதை சொல்லாமலே புரிந்து கொள்ள வைக்கிறார் படம் நெடுகிலும்.
சுப்ரமணியபுரத்தில் தறுதலையாக திரிகிற ஐந்து நண்பர்களின் கதை. இதில் ஜெய் மட்டும் பெரிய வீட்டு பிள்ளையான ஸ்வாதியை காதலிக்க, ஸ்வாதியின் குடும்பத்தால் ஐந்து நண்பர்களும் என்னாகிறார்கள் என்பது மீதி. முதல் பாதியில் காதலும் கலகலப்புமாக நகர்கிற கதை, இரண்டாம் பாதியில் அரிவாளும் ரத்தமுமாக திசைமாறும் போது கலங்கிப் போகிறார்கள் ரசிகர்கள்.
மனசுக்குள் அப்படியே ஒட்டிக் கொள்கிறார் ஸ்வாதி. அந்த அகலவிழி பார்வையும், அசர வைக்கும் சிரிப்பும் மனதை விட்டு அகலவே நாட்கள் பிடிக்கும். திருட்டுப்பார்வையிலிருந்து பிரமோஷன் ஆகி, நான் உங்ககிட்ட பேசணும் என்று போகிற போக்கில் ஜெய்யை அழைக்கிற காட்சியில் அசரடிக்கிறார். தன் கண்ணெதிரிலியே நடக்கும் அந்த சம்பவமும், அவர் அலறுகிற காட்சியும் மனதை பிசைகிற பயங்கரம்.
படம் முழுக்க இறுகிய முகத்தோடு உலா வரும் சசிக்குமாரை மலர்ந்த முகத்தோடு வரவேற்பார்கள் ரசிகர்கள். இவர்தான் இயக்குனர் என்றாலும், தேவைக்கு மிகாமல் தனது பாத்திரத்திற்கு 'பாத்தி' கட்டியிருப்பதை பாராட்டலாம். நண்பனின் கொலைக்கு காரணமான சமுத்திரக்கனியை வெறித்தனமாக சசிக்குமார் கொலை செய்கிற காட்சியை எப்படி சென்சார் அனுமதித்ததோ? நண்பன் கொலையுண்ட இடத்தில் சமுத்திரக்கனியின் தலையை போட்டுவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கையில் சிலிர்த்துப் போகிறது.
சைக்கிள் கடை சித்தனுக்காக கஞ்சா கருப்பு மெனக்கெடும் காட்சிகள் சிரிப்பு தோரணம். சீரியல் செட் ஆர்டர் எதிராளிக்கு போன ரகசியத்தை, கருப்பு கண்டுபிடிக்கையில் தியேட்டரே சிரித்து சின்னாபின்னமாகிறது. இப்படியெல்லாம் சிரிக்க வைக்கிற கருப்பு, கடைசியில் ரசிகர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார். குணச்சித்திர வேடம் தெரியும். கருப்பு இந்த படத்தில் செய்திருப்பது துர்குணச்சித்திர வேடம்.
சமுத்திரக்கனியின் பதட்டமில்லாத வில்லத்தனத்தை ரசிக்கலாம். ஒவ்வொரு முறையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு இந்த ஐவர் கோஷ்டியை போட்டுக் கொடுக்கும் இவர், கடைசியில் நைசாக பேசி, ஜெய், சசியை கொலைகாரர்களாக்குவது நரித்தந்திரம். ஆசைப்பட்டால், வில்லனின் நாற்காலியை நிரந்தரமாக்கிக் கொள்ளலாம் சமுத்திரக்கனி.
அந்த ஊனமுற்ற இளைஞன் 'ஸ்டடியான' நடிப்புக்கும் ஒரு பலே! குறிப்பாக யுத்தகளத்தில் தானும் எறிந்து நண்பனுக்கும் சோடா பாட்டில் உதவி செய்கிறாரே, நெத்தியடி!
ஒளிப்பதிவில் ஒரு புது பாதை வகுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சுதிர். கஞ்சா கருப்பு நடந்து வரும் அந்த நீண்ண்ண்ட ஷாட்டில் அவரது அறிமுகத்தை துவக்கி வைக்கிற கேமிரா, அதே நீண்ண்ண்ட ஷாட்டில் அவரது முடிவையும் சொல்வது புதுசு.
ஜேம்ஸ் வசந்தன் இசை காதுகளுக்கு சுகம். எண்பதுகளில் நடக்கிற கதை என்பதால், பின்னணியில் இளையராஜாவின் பாடல்களை தாலாட்ட விட்டிருக்கிறார்கள். அதுவே நிறைவு. பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஆர்ட் டைரக்டர். இவர் காட்டியிருக்கும் 80-ம் வருடம் காலச் சக்கரம் மட்டுமே செய்யக்கூடிய அற்புதம்.
சில 'வரவு'கள் தமிழ்சினிமாவின் சொத்து! அதில் சசிக்குமாரையும் சேர்க்கலாம்... தாராளமாக!
நன்றி
தமிழ் சினிமா.காம்
புதுமையை வரவேற்போம்
Posted by
தமிழ்க்குமரன்
Monday, July 7, 2008
Labels: சினிமா

0 comments:
Post a Comment