தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை எனப் புதிதாக வெளியாகி உள்ள கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.சென்னை லயோலா கல்லூரியின் ஊடக கலைகள் துறை, 2008 ஆகஸ்டு மாதம் தமிழகம் முழுவதும் 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 2709 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என விரும்புவர்களின் எண்ணிக்கை, மிகக் குறைவாகவே உள்ளது. அவர் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என 4.3 சதவிகிதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். முழு நேர நடிப்பை மேற்கொள்ளலாம் என 45.8 சதவிகிதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அவர் ஓய்வு எடுப்பது நல்லது என்ற ஏமாற்றம் தோய்ந்த பதிலை 32.5 சதவிகிதம் பேர் தெரிவித்திருப்பது, அவர் அரசியலுக்கு வருவதை மிகப் பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.முழு நேர ஆன்மீகத்தில் ரஜினி ஈடுபடலாம் என 10.7 சதவிகிதம் பேரும், முழு நேர சமூக சேவையில் ஈடுபடலாம் என 5.2 சதவிகிதம் பேரும் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர்களில் விஜயகாந்தின் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.இந்தக் கருத்துக் கணிப்பில் ஆண்கள் 54 சதவிகிதம் பேரும், பெண்கள் 46 சதவிகிதம் பேரும் கலந்து கொண்டனர். இதில் 15.6 சதவிகிதம் பேர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்கச் செல்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர்கள் தொடங்கியுள்ள கட்சிகளில் விஜயகாந்தின் தேமுதிக தவிர பிற கட்சிகளால் பெரிதாக எந்தத் தாக்கமும் இராது என்று பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.வரும் தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 43.4 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கட்சி ஓரிரு இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 32.8 சதவிகிதம் பேரும், தாக்கமே இருக்காது என 23.8 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஓரிரு இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 14.8 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என 2.5 சதவிகிதம் பேரும் தாக்கமே இருக்காது என 82.7 சதவிகிதம் பேரும் கூறுகின்றனர்.விஜய டி.ராஜேந்தின் லட்சிய திமுக, கார்த்தின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றால் எந்தத் தாக்கமும் இருக்காது என முறையே 94.7 சதவிகிதம் பேரும், 96.2 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்

0 comments:
Post a Comment