செஞ்சி அருகே காதலி கர்ப்பமானதை மறைக்க, குழந்தை பிறக்கும் வரை மலைக்குகையில் தங்க வைத்து, காதலனும், அவனது தாயும் சேர்ந்து பிரசவம் பார்த்த கொடுமை அரங்கேறியுள்ளது. பிறந்த பெண் குழந்தையின் நிலை குறித்து தெரியாமல், அப்பாவிப் பெண் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நெகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன்(70). சென்னையில் வசிக்கும் இவரது மகள்களுடன், ஜானகிராமன் கூலி வேலை செய்து வருகிறார். மூன்றாவது மகள் சுமதி(28), மகன் விநாயகமூர்த்தி(24) ஆகியோர், நெகனூர் புதூரில் வசித்து வருகின்றனர்.
செஞ்சியில் கடை ஒன்றில் விநாயகமூர்த்தி வேலை செய்ததால், பல நாட்கள் அங்கேயே தங்கி விடுவார்.சுமதிக்கும், பக்கத்து வீட்டு பெருமாள் மகன் வெங்கடேசன்(33) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. சுமதி கர்ப்பமானார். கர்ப்பத்தைக் கலைக்க, வெங்கடேசன் மாத்திரை வாங்கித் தந்தார். கர்ப்பத்தைக் கலைத்து விட்டால், வெங்கடேசன் திருமணம் செய்யாமல் ஏமாற்றி விடுவார் எனக் கருதிய சுமதி, மாத்திரைகளை சாப்பிடவில்லை. நாட்கள் அதிகமானதால், சுமதியின் வயிறு பெரிதானது. திருமணம் செய்து கொள்ளும்படி வெங்கடேசனை வற்புறுத்தினார். "கர்ப்பமாக இருக்கும் போது, திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள். குழந்தை பிறந்து விட்டால், அதை காண்பித்து எனது பெற்றோரை சம்மதிக்க வைக்கலாம்' என வெங்கடேசன் சமாதானம் செய்தார். அது வரையில், தனியாக குடித்தனம் வைக்க திட்டமிட்ட வெங்கடேசன், சுமதியை அழைத்துச் சென்றார். வெங்கடேசனுக்கு சொந்தமான நிலத்தின் அருகில் இருந்த மலைக் குகையில் பகலிலும், வீட்டிற்கு அருகில் உள்ள சிறிய மாட்டுக் கொட்டகையில் இரவிலும் தங்க வைத்தார்.கொட்டகையில் இருந்து, பொழுது விடிவதற்குள் சுமதி மலைக் குகைக்கு சென்று விடவேண்டும். இருட்டிய பிறகே, மலையில் இருந்து வெளியே வர வேண்டும். "மீறி வெளியே வந்தால், நான் மருந்து குடித்து இறந்து விடுவேன்' என வெங்கடேசன் மிரட்டினார். இந்த நாட்களில் சுமதி சாப்பிடுவதற்கு வெங்கடேசன் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரும், ஒரு பாட்டிலில் ராகி கூழும், சில நாட்களில், குறைந்த அளவில் சாப்பாடும் கொடுத்துள்ளார்.சுமதிக்கும், வெங்கடேசனுக்கும் இருந்த தொடர்பு ஊரில் பலருக்கும் தெரிந்திருந்ததால், சுமதி காணாமல் போன போது, வெங்கடேசனுடன் எங்காவது தனிக்குடித்தனம் இருக்கலாம் எனக் கருதி, சுமதியின் குடும்பத்தினர் தேடாமல் விட்டு விட்டனர். கடந்த 25ம் தேதி பகல் 1 மணியளவில் மலைக் குகையில் தனியாக இருந்த சுமதிக்கு, பிரசவ வலி ஏற்பட்டு சூரியன் மறையும் முன் மாட்டுக் கொட்டகைக்கு வந்தார். சுமதி சத்தம் போட்டால் வெளியே தெரிந்து விடும் என பயந்த வெங்கடேசன், மாட்டுக் கொட்டகைக்கு சற்று தொலைவில் இருந்த பொட்டல் காட்டில் மண் தரையில் சுமதியை படுக்க வைத்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு சென்று விட்டார்.இரவானதும் வந்த வெங்கடேசன், சுமதியின் வயிற்றில் விளக்கெண்ணெய் தடவி, பிரசவம் பார்க்க முயன்றார். குழந்தை பிறக்காமல் சுமதியின் அலறல் அதிகமானதால் பயந்து போன வெங்கடேசன், தனது தாய் எல்லம்மாளை அழைத்து வந்துள்ளார்.வெங்கடேசனை திட்டிய எல்லம்மாள், சுமதியின் வயிற்றில் முரட்டுத்தனமாக அழுத்தி குழந்தை பிறக்க வைத்துள்ளார். சுமதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் கழுத்தில் காலை வைத்து எல்லம்மாள் கொலை செய்ய முயன்றார். இதை பார்த்த சுமதி, "என்னையும், குழந்தையையும் உயிரோடு விட்டு விடுங்கள். இதற்காகத்தான் இத்தனை நாள் மலைக் குகையில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தேன்' என கெஞ்சியுள்ளார்.
"குழந்தையை குளிப்பாட்டி எடுத்து வருகிறோம்' என்று வெங்கடேசனும், எல்லம்மாளும் குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.மறுநாள் 26ம் தேதி காலை 7 மணிக்கு வெங்கடேசன் மட்டும் வந்து டீ கொடுத்துள்ளார். குழந்தை பற்றி சுமதி கேட்டதற்கு, "என்னிடம் தான் இருக்கிறது' என்று வெங்கடேசன் கூறியுள்ளார். அங்கு வந்த எல்லம்மாள், வெங்கடேசனை திட்டி விட்டு, "இனி இவளை பார்க்காதே' என தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.பிரசவம் நடந்த இடத்தில் அதிக ரத்தப்போக்குடன் கிடந்த சுமதியை எறும்புகள் கடித்து துன்புறுத்தின. வலி தாளாமல் துடித்த சுமதி, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்று அவ்வழியாகச் சென்ற சிறுமியிடம் தனது நிலையைக் கூறி, குடும்பத்தினரை அழைத்து வருமாறு கூறினார்.சிறுமி சொன்ன தகவலையடுத்து, மலையடிவாரத்திற்கு சென்று சுமதி உறவினர்கள், அவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செஞ்சி மருத்துவமனை டாக்டர்கள், புதுச்சேரி செல்லுமாறு அனுப்பி விட்டனர். பின்னர், செஞ்சியில் தனியார் டாக்டரிடம் காண்பித்தனர். செஞ்சி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சுமதியின் சித்தி ராஜம் வீட்டில் சுமதியை தங்க வைத்தனர்.சுமதியின் குழந்தையை வெங்கடேசனும், அவனது தாய் எல்லம்மாளும் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வந்ததால், சுமதியின் தந்தை ஜானகிராமன், இரண்டு நாள் முன் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.கொலை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், வளத்தி போலீசில் புகார் தருமாறு மகளிர் காவல் நிலையத்தில் திருப்பி அனுப்பினர்.செஞ்சி பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலர் சீனுவாசன், மா.கம்யூ., நகர செயலர் நெடுஞ்சேரலாதன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் ஜோதிபாசு ஆகியோர், சுமதியை நேற்று செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.சுமதியின் நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால், புதுச்சேரி அல்லது விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, சுமதியை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று சுமதியின் தந்தை ஜானகிராமன், செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். இந்த புகாருக்கு ரசீது கொடுத்துள்ள போலீசார் விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளனர்.

0 comments:
Post a Comment