கலைஞர் குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையிலான விரிசலில் தற்போது புதிதாக மேலும் ஒரு விரிசல் வேர்விட்டு கலைஞர் குடும்பத்திற்குள்ளேயே சிலரை சந்தோஷத்திலும், சிலரை வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், ``இனி விரிசல் ஒட்டுவதற்கான வாய்ப்பே இல்லை!'' என்று தயாநிதி மாறன் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
அதேபோல அழகிரியும் அவர் பங்குக்கு, ```மாறன் சகோதரர்களுடன் எனக்கு இனிமேல் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது மட்டுமல்ல; அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடனும் எனக்கு உறவு இல்லை'' என்று அறிவித்தார். அது மட்டுமல்ல, அதை பலவகையில் அவர் செயல்படுத்திக் காட்டியும் வருகிறார். கலைஞரின் பிறந்த நாளுக்காக அவரை வாழ்த்த வந்த மாறன் சகோதரர்களைத் திருப்பியனுப்ப வைத்தது தொடங்கி, இன்னமும் மாறன் குடும்பத்தினருடன் நல்ல உறவை வைத்திருக்கும் கலைஞரின் மகள் செல்வியிடம்உறவை முறித்துக் கொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுவது வரை தனது எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் அழகிரி. இந்த விஷயத்தில் கனிமொழியையும் தனது நிலைப்பாட்டை ஏற்கச் செய்வதில் அழகிரி வெற்றி கண்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஆக, இந்தப் பிரச்னையில் கலைஞர் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் ஓரணியில் இருக்க, ஸ்டாலின் மட்டும் தனி வழியில் பயணம் தொடர்ந்தார். `தினகரன்' சர்வே வெளியாகி அதன் தொடர்ச்சியாக களேபரங்கள் கட்டவிழ்ந்த நேரத்தில் அழகிரிக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின், மிக விரைவிலேயே மாறன் சகோதரர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டார். இதற்கு சில மாற்றுக் கணக்குகளே காரணம் எனப்படுகிறது. இதை நேரடியாகவும், மறைமுகமாகவும் அழகிரி கண்டித்தபோதும் ஸ்டாலின் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான உறவு சீர்கெட்டதுடன் இருவரும் இப்போது பேசிக் கொள்வதுகூட இல்லை என்பது லேட்டஸ்ட் தகவல்.
இந்தப் பின்னணியில்தான் விரிசலுக்குள் மற்றுமொரு விரிசலாக, ஒத்த கருத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் மற்றும் தயாநிதி இடையே சில பிணக்குகள் தோன்றியிருப்பதாக உறுதியான தகவல்கள் உலா வரத் தொடங்கியுள்ளன..
ஸ்டாலின் மீதான தனது வருத்தத்தை வெளிப்படையாகவே சிலரிடம் தயாநிதி வெளிப்படுத்தினார் என்று தகவல் நம் செவிகளைத் தட்ட, என்ன நடந்தது என்று தயாநிதி வட்டாரத்தில் விசாரிக்க ஆரம்பித்தோம்.
``தனது எதிர்காலத்தை மனதில் வைத்துதான் மாறன் சகோதரர்களுடன் ஸ்டாலின் நட்புக் கொண்டிருக்கிறார் என்று ஒரு கருத்து உள்ளது. அதேபோல பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகத்தான் ஸ்டாலினை மாறன் சகோதரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும்கூட விமர்சனம் உண்டு. இவற்றைப் பொய்யாக்கும் விதமாக ஸ்டாலின்-மாறன் சகோதரர்கள் இடையே இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டியும், உறவும் நட்பும் நீடித்து வந்தது. மாறன் சகோதரர்களும், ஸ்டாலின் வளர்ச்சியில் அதீத அக்கறை காட்டினார்கள். அதே நேரத்தில், `தன் கண் முன்னால் நடக்கும் சில விஷயங்களில் தனது கருத்தை வலியுறுத்தவும், சில தவறுகளைத் தட்டிக் கேட்கவும் ஸ்டாலின் முன்வர வேண்டும்' என்று தயாநிதி விரும்புகிறார். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது'' என்றபடியே அந்த விவகாரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்கள் தயாநிதி வட்டாரத்தினர்.
``அழகிரியும், அவரைச் சார்ந்த ரத்த உறவுகளும் அரசு நிர்வாகத்தில் மிக வெளிப்படையாகவே தலையிடுவதோடு, சில கணக்கு வழக்குகைளயும் தங்கள் பிடிக்குள் வைத்திருக்கின்றனர். இதைப் பார்த்து அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, சக அமைச்சர்கள் பலரும் முகம் சுளிக்கிறார்கள். அவர்களால் வேறெதுவும் செய்ய முடியாது. ஆனால், ஸ்டாலின் நினைத்தால் அதை தட்டிக் கேட்க முடியும். குறைந்தபட்சம் இதுபற்றி கலைஞரிடம் விவாதிக்கவாவது முடியும். ஆனால் அவரோ மௌனமாக இருக்கிறார்.
தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் அழகிரி ஒதுங்கியிருக்கிறார். சரி... அதற்காக வேறு யாரையும் மாறன் சகோதரர்களுடன் பேசவிட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அவர் செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்? அவரது இந்த நிர்பந்தத்தால் கலைஞரின் மகள் செல்வி தன்னையே வருத்திக் கொண்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. தன் கண் முன்னால் இவை நடந்தும் தனக்குள்ள உரிமையின் அடிப்படையில்கூட இதைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ ஸ்டாலின் முனையவில்லை.
இந்தக் குடும்ப விவகாரங்கள் ஒருபுறம் இருக்கட்டும்... அரசியல்ரீதியாகவும் தான் தனிமைப்படுத்தப்படுவதை ஸ்டாலின் அறியாமல் இருக்கிறார். அவரது இத்தனை வருட உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் என்பதே இந்த வயதில் அவர் முதல்வர் பதவியில் அமர்வதுதான். கலைஞரின் உடல்நிலை நன்றாக இருக்கும் வரை அவர் முதல்வராகத் தொடர்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சமீபத்தில் வேலூரில் பேசிய கலைஞர், முதல்வர் பதவி பற்றிக் குறிப்பிடும்போது, `யார் தமிழகத்தை ஆளக்கூடிய தகுதியைப் பெறுகிறார்களோ, யாருக்கு மக்கள் ஆதரவைத் தருகிறார்களோ அவர்களை ஊக்குவிக்கின்ற தூண்டுகோலாக இருப்பேன்' என்றார். ஆனால் கடைசிவரை ஸ்டாலினை அவர் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் சில கருத்துகளைச் சொன்னபோது, நிஜமாகவே ஸ்டாலின் ஆதரவாளர்கள் நொந்து போனார்கள். தனது இருப்பும், உரிமையும் தன் கண் முன்னால் நழுவிப் போவதைப் பார்த்த பின்னும் ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.
கடலூர் முன்னாள் எம்.பி. ஆதிசங்கர் குங்குமப்பொட்டு வைத்திருந்ததை `ரத்தக்காயம்' என்று கிண்டலடித்தார் கலைஞர். தனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அந்தியூர் செல்வராஜ், கோயில் விழாவில் தீ மிதித்ததைக் காட்டுமிராண்டித்தனம் என்று விமர்சித்ததுடன், அதன் காரணமாகவே அவரது இல்லத் திருமண விழாவிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்தார் கலைஞர். சிலரது மன உணர்வுகளை இது புண்படுத்தியிருந்தாலும் தி.மு.க.வினர் இதை கலைஞரின் கொள்கைப் பற்றாகவே பார்த்தார்கள்.
ஆனால், இன்று கலைஞரின் குடும்பத்தினர் சிலரே ஊரறிய கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும், மொட்டை போட்டும் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார்கள். கலைஞர் இதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட முறையில்கூட கண்டித்ததாகத் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தி.மு.க.வினர் மனதிலேயே சில கேள்விகளை எழுப்பும் என்பது ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்திலிருந்தும், எதிலும் தலையிடாமல் அமைதியாகவே இருக்கிறார் ஸ்டாலின்.
முதல்வர் கலந்துகொள்ளும் டி.எம்.சௌந்தரராஜன் பாராட்டு விழா பற்றி ஸ்டாலினுக்கு பெயரளவில்கூட தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுபோல் இன்னும் எத்தனை அவமானங்களை அவர் தாங்கப் போகிறாரோ தெரியவில்லை? என்ற கேள்விதான் தயாநிதியை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. இதைத் தொடர்ந்தே, ஸ்டாலின் மீதான தன் அதிருப்தியை நெருக்கமான சிலரிடம் தயாநிதி பகிர்ந்துகொண்டார்'' என்று சொல்லி முடித்தார்கள் அவர்கள்.
தயாநிதி தரப்பின் இந்த வாதங்களும், விமர்சனங்களும் அரசல்புரசலாக ஸ்டாலினின் காதுகளுக்கு எட்டியிருக்கின்றன. கூடவே, ஸ்டாலின் பற்றி தயாநிதி தெரிவித்ததாகக் கூறப்படும் கடுமையான சில சொற்களும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. ஆனால், இதற்கும்கூட எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருக்கிறார் ஸ்டாலின்.
இந்தநிலையில் ஸ்டாலினின் நிலைப்பாட்டைப் பற்றி நமக்கு விளக்கினார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.
`` `பொதுவாகவே தனக்காகவோ, தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ ஒரு விஷயத்தை எடுத்துச் சென்று ஸ்டாலின் வாதம் செய்யமாட்டார்' என்றொரு பொதுவான குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஆனால் உண்மையில் தன்னால் தலைவருக்கோ, கழகத்திற்கோ எந்தப் பிரச்னையும் வரவேண்டாம் என்று நினைப்பவர் ஸ்டாலின். ஆனாலும் கூட அவசியம் ஏற்படும்போதெல்லாம் சில விஷயங்களில் தனது கருத்தை அவர் வலியுறுத்தியும் இருக்கிறார். அண்மையில் லண்டன் சிகிச்சை முடித்துத் திரும்பி வந்த சில நாட்களில் கலைஞரைச் சந்தித்த ஸ்டாலின், அழகிரி குடும்பத்தினரின் தலையீடு பற்றியும், அதனால் எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றியும் தனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு, `அவன் (அழகிரி) அகப்பையில் எதுவும் இல்லை. அவன் அதை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், உன் அகப்பையில் பருப்பு இருக்கிறது. நீதான் கவனமாக இருக்க வேண்டும்' என்று ஸ்டாலினுக்கு அறிவுரை கூறி அனுப்பியிருக்கிறார் கலைஞர். அதற்குமேல் விவாதம் செய்ய விரும்பாமல் அமைதியாக இருக்கும் ஸ்டாலின், தனது உடல்நிலையிலும், தனது துறை நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்கிறார். மற்ற விஷயங்களைக் காலமே தீர்மானிக்கட்டும் என்பதுதான் அவரது இன்றைய நிலைப்பாடு'' என்கிறார்கள் ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள்.
ஆக, காலமே முடிவு செய்யட்டும் என்று ஸ்டாலின் நினைப்பதும், காலத்திற்கு ஏற்ப வேகத்தைக் கூட்டவேண்டும் என்று தயாநிதியும் நினைப்பதுதான் இந்த இருவருக்குள்ளும் ஒரு விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இருதரப்புமே ஒப்புக்கொள்கிறார்கள்.
இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், `தன்னைப் பற்றி தயாநிதி மாறன் சொன்ன சில வார்த்தைகளால் ஸ்டாலின் மிகவும் காயப்பட்டுப் போயிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக, குறிப்பாக வேலூர் மாநகராட்சி விழாவைத் தொடர்ந்து, தயாநிதி மாறனுடன் தொலைபேசியில் பேசுவதையேகூட ஸ்டாலின் தவிர்த்து வருகிறார்' என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
இந்த விரிசலை சரிப்படுத்த ஒரு குழுவும், அதை நிரந்தரமாக்கி ஸ்டாலினை மீண்டும் அழகிரியுடன் இணைய வைக்க ஒரு குழுவும் தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
எந்த பிரச்சனைதான் முடிந்தாலும் இவங்க பிரச்சனை முடியாது போல
ஸ்டாலின் தயாநிதி உறவில் விரிசல்
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, August 6, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment