ஆந்திர அரசியலில் புது அவதாரம் எடுத்துள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, திருப்பதி நகரில் நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தனது புதியக் கட்சிக்கு, "பிரஜா ராஜ்யம்' என பெயர் சூட்டினார். 10 லட்சம் ரசிகர்கள் திரண்டதால் திருப்பதி நகரமே திக்குமுக்காடியது. தெலுங்கு சினிமாவில் 148 படங்களில் நடித்து ஆந்திர மக்கள் மத்தியில் மெகா நடிகர் என்று அழைக்கப்பட்ட சிரஞ்சீவி, அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தனது புதிய கட்சிக்கான பெயரை புனிதத் தலமான திருப்பதியில் நேற்று மாலை அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கென, திருப்பதியில் அவிலாலா பகுதியில் 123 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பல நாட்களாக தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்தன. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஆந்திரா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். சிறப்பு ரயில்கள், ஆயிரக்கணக்கில் பஸ்கள் என ஆந்திராவே திருப்பதியை நோக்கி தான் என்று சொல்லுமளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்று காலை முதலே தொண்டர்கள் மைதானத்தில் குவியத் தொடங்கினர். ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவவும், திரளான மக்கள் கூட்டத்தை ஹெலிகாப்டரில் இருந்து படமாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராகு காலம் முடிந்து, மாலை 5:30 மணிக்கு சிரஞ்சீவி மேடைக்கு வந்தார். மேடையில் தொண்டர்களைப் பார்த்து கையசைத்ததும் ஆரவாரம் எழுந்தது. தெலுங்கு சினிமா பாணியில் அவரது அறிவிப்புகள் இருந்தன. புதிய கட்சி என்பதால் சிரஞ்சீவி மட்டுமே நேற்று பிரதானமாக இருந்தவர்.
வழக்கமாக அரசியல் கட்சிகளின் மேடை என்றால் இரண்டாம் கட்ட தலைவர்கள் முழங்குவார்கள். கடைசியாக கட்சியின் தலைவர் பேசுவது வழக்கம். ஆனால், சிரஞ்சீவி தனது கட்சி துவக்க விழாவில் வேறு யாரையும் பேச அனுமதிக்கவில்லை. சிரஞ்சீவி ஒருவர் மட்டுமே சினிமா பாணியில் பேசினார். கட்சியின் பெயர் அறிவிப்பை வெளியிடும் போது தொண்டர்களோடு சேர்ந்து அறிவிக்கும் வகையில் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து தொண்டர்களுடன் இணைந்து வெளியிட்டார். சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மேடை அருகே அமர்ந்திருந்தனர்.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலரும் கூட்டத்தில் பங்கேற்றனர். குடும்பத்தினரின் படங்களுடன் கூடிய பேனர்களை ஆங்காங்கே வைத்திருந்தனர். போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை. தனியார் பாதுகாப்பு படையினர் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்டுக்கடங்காத தொண்டர்கள் இருந்ததால் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தொண்டர்கள் காயமடைந்தனர். மின் விளக்குகள் பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்டிருந்ததால் மின்கசிவு ஏற்பட்டு தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர். தொண்டர்கள் வந்த வாகனங்கள் நெடுந்தொலைவில் நிறுத்தப்பட்டு விட்டதால் தொண்டர்கள் பல கிலோ மீட்டர் நடந்தே வந்து மேடையை அடைந்தனர். நரசாபுரம் எம்.பி., பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் பிரமுகர் ஹரிராம ஜோகையா, தொண்டர்களோடு தொண்டராக கூட்டத்தில் கலந்து கொண்டார். விழா துவங்கும் முன் நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சிரஞ்சீவி நடித்த பிரபல படங்களின் காட்சிகள் சில, டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டன. கட்சி அறிவிப்பு விழா முடிந்ததும் சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் திருமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
"8' ஐ விரும்பும் சிரஞ்சீவி: நடிகர் சிரஞ்சீவி எல்லா விஷயங்களில் தனது ராசி எண் "8' வரும்படி பார்த்துக் கொள்கிறார். நேற்று 26ம் தேதி கட்சி துவக்கினார். அதன் கூட்டுத் தொகை எட்டு. மாலை 5:30 மணிக்கு மேடை ஏறினார். அதன் கூட்டுத் தொகை "8'. கட்சியின் பெயரை 6:20 மணிக்கு அறிவித்தார். "ப்ரஜா ராஜ்ஜியம்' என்ற கட்சிப் பெயரின் கூட்டுத் தொகையும் "8' வருகிறது. கட்சியின் பெயர் அறிவித்ததும் தொண்டர்களின் கரகோஷமும் எட்டு நிமிடங்கள் நீடித்து கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு விசுவாசம் காட்டினர். சிரஞ்சீவி 80 நிமிடங்கள் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கமிஷனில் பதிவு: திருப்பதியில் சிரஞ்சீவி புதுக்கட்சியைத் துவக்கும் அதே சமயத்தில், அவரது சார்பில் பிரதிநிதிகள் டில்லியில் நேற்று மாலை தேர்தல் ஆணையத்தில் புதுக்கட்சியைப் பதிவு செய்ய மனு செய்தனர். இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "ஆந்திராவில் புதுக்கட்சியைத் துவக்கியுள்ள நடிகர் சிரஞ்சீவியின் பிரதிநிதிகள், கட்சியைப் பதிவு செய்வதற்காக மனு கொடுத்துள்ளனர்' என்றனர். மனுவில் கட்சியின் பெயரை "பிரஜா ராஜ்யம்' என குறிப்பிட்டு உள்ளனர்.
சிரஞ்சீவி கூட்டத்தில் பெண் பலி : திருப்பதியில் சிரஞ்சீவியின் பொதுக்கூட்டத்தைக் காண வந்த ஒரு பெண் நெரிசலில் சிக்கி பலியானார்; மேலும், 35 பேருக்கு காயம் ஏற்பட்டது. இறந்த பெண் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை.
கட்சியைத் துவக்கி சிரஞ்சீவி ஆவேசம் * பத்து லட்சம் ரசிகர்கள் திரண்டனர் * 'பிரஜா ராஜ்யம்' என பெயர் சூட்டினார
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, August 26, 2008

0 comments:
Post a Comment