விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் என இலங்கை ராணுவம் எச்சரித்துள்ளதை அடுத்து, மலேசிய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மலேசியா முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மலேசிய போலீஸ் உயரதிகாரி மூசா ஹசன் கூறியதாவது: விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். மலேசியா அல்லது தாய்லாந்துக்குள் அவர் ஊடுருவக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக மலேசியா முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிற நாடுகளில் இருந்து மலேசியாவுக்குள் வருவதற்கான அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவர் ஏற்கனவே மலேசியாவுக்குள் ஊடுருவி உள்ளாரா என்பது குறித்து விசாரிக்கும்படியும் உளவு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று தடை செய்யப்பட்டிருக்கிறது.இவ்வாறு மூசா ஹசன் கூறினார்.
பிரபாகரன் தமிழகத்தில் ஊடுருவல்? : விடுதலை புலிகள் அமைப்பு தலைவர் பிரபாகரன் மாறுவேடத்தில் தமிழகத்தில் ஊடுருவ வாய்ப்பு உள்ளதால் கடலோர பகுதிகளில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள உச்சகட்ட போரில் முல்லைதீவை கைப்பற்ற ராணுவம் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முல்லைதீவு பகுதியில் உள்ளாரா, தப்பி சென்றுவிட்டாரா என்ற சந்தேகம் ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது.
பிரபாகரன் இந்திய கடலோர பகுதிகள் வழியாக மாறுவேடத்தில் தப்பி வரலாம் என்ற சந்தேகத்தின் படி கியூ பிரிவு போலீசார் கடலோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிரபாகரன் மாறுவேடத்தில் இந்தியாவுக்குள் வந்தாலும் கைது செய்யப்படுவார் என்பதால் இந்தியா வர சாத்தியமில்லை .இருப்பினும் கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகதிகளாக வருபவர்களையும் விசாரணை செய்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.
மலேசியாவில் பிரபாகரன்? : தமிழகத்தில் ஊடுருவலா?கண்காணிப்பு அதிதீவிரம்
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, January 22, 2009

0 comments:
Post a Comment