பசும்பொன்னில் நேற்று நடந்த திடீர் கலவரத்தில், ஜெயலலிதா கார் மீது கல் வீசப்பட்டது. ஜெயலலிதா காயமின்றி தப்பினார். போலீசார் நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் 101வது ஜெயந்தி விழாவும், 46வது குரு பூஜை விழா நடந்தது. தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதா, சென்னையிலிருந்து விமானத்தில் நேற்று பிற்பகல் 2.35 மணிக்கு மதுரை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பசும்பொன் ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு இறங்கினார். அங்கிருந்து காரில் தேவர் நினைவிடம் வந்தார். ஐந்து கார்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மாநில பாதுகாப்பு போலீசாரும் வந்தனர்.
ஜெயலலிதா கார், பசும்பொன் நினைவிடத்தில் முக்கிய பிரமுகர்கள் நுழையும் வாயிலை நெருங்கியதும், சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஜெயலலிதா காரின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பாதுகாப்பு படை போலீசார் கார்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. கற்கள் வீசிய கும்பல் மீது தடியடி நடத்த, ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டார். போலீசார் விரட்டியும் அங்கிருந்து அகலாமல், அதே கும்பல் தொடர்ந்து கற்கள், செருப்புகளை வீசின.
போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை மூன்று முறை வீசினர். இதன் பின், கல் வீசிய கும்பல் சிதறி ஓடியது. கல் வீச்சு தாக்குதலில், பரமக்குடி போக்குவரத்து போலீஸ் முருகேசன், ராமநாதபுரம் ஆயுதப்படை எஸ்.ஐ., அருளானந்தம், திண்டுக்கல் போக்குவரத்து போலீஸ் ராஜேந்திரன் மற்றும் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த லட்சுமி காயமடைந்தனர். இவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால், தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவசர விபத்து மருத்துவச் சிகிச்சை வாகனத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தடியடியில் 20 பேர் காயமடைந்தனர். பசும்பொன் தேவர் நினைவிட நுழைவாயில் வரை எங்கு பார்த்தாலும், செருப்புகளும், கற்களும் சிதறிக் கிடந்தன. இதற்கிடையில், ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன், தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு, அதே பகுதியில் அ.தி.மு.க., ஏற்பாடு செய்திருந்த அன்னதானத்தையும் துவக்கி வைத்தார். பின்னர், மதுரை வழியாக சென்னை புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவத்துக்கு பின், தேவர் சமாதி நுழைவாயில் மற்றும் பிரதான நுழைவாயில் கதவுகள், 30 நிமிடம் மூடப்பட்டன. அமைதி திரும்பிய பின், மீண்டும் அஞ்சலி செலுத்துவதற்காக திறந்து விடப்பட்டன.
மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன் ஜெயலலிதா பேட்டி: "மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது: பசும்பொன்னில் நடந்த தாக்குதல், தி.மு.க.,வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவதைவிட, சட்டம்-ஒழுங்கு சுத்தமாக இல்லை என்று கூறவேண்டும். இந்த தாக்குதல் அற்பத்தனமானது. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி மற்றும் தேசவிரோத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.
எனக்கு நேற்றுதான் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறையினர், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் எனக்கு எந்த பாதுகாப்பும் அளிக்காமல் தாக்குதல் நடத்துவதற்கு போலீசார் வழிவகை செய்து கொடுத்துள்ளனர். இன்று பசும்பொன் கிராமத்தில் கூடியிருப்பவர்கள் அனைவரும் என்னுடைய மக்கள். என்னை பார்ப்பதற்காக வந்தவர்கள்.
இந்த கூட்டத்தை பார்த்து சகித்து கொள்ள முடியாத சிலர், திட்டமிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். எனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில், இன்று நடந்த தாக்குதல் சம்பவத்தையும் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளேன். கடந்த 17 ஆண்டுகளாக நான் மிரட்டல்களை சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.50 மணிக்கு சென்னை திரும்பிய ஜெயலலிதா விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
பசும்பொன் தேவர் குருபூஜையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே என் ஆதரவாளர்கள். என்மீது அக்கறை கொண்டவர்கள். என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக அங்கு உற்சாகமாக கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் இருந்த நான்கு விஷமிகள் கற்களை வீசி வன்முறை செயல்களில் ஈடுபட்டனர். இதில் என் கார் கண்ணாடி உடைந்தது. எனக்கும் காயம் ஏற்பட்டது.
என் காருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கான்வாயில் இருந்த கார்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் நடக்கும் போது போலீசாரும் இருந்தனர். வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவர்கள், கைகளை கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். பெருகிவரும் எனது ஆதரவை, இந்த சம்பவத்தால் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
புறப்பாடு தாமதம்: விமான படிக்கட்டுக்களில் ஏறும் போது கால் தவறியதால் ஜெயலலிதாவின் மதுரை புறப்பாடு தாமதமானது. மாற்று ஏற்பாட்டிற்கு பின், அவர் நேற்று மதியம் தனி விமானம் மூலம் மதுரை சென்றார். ஜெயலலிதா நேற்று காலை 10.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். மதுரை செல்வதற்காக "இன்டர்நேஷனல் ஏர்கிராப்ட் பாம்பே' என்ற தனியார் நிறுவனத்தின் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், விமானத்தில் ஏறுவதற்காக ஜெயலலிதா வந்தார். அவர் உள்ளே ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுக்கள் பொருத்தப்பட்டிருந்தன. படிகளின் அகலம் மிகவும் சிறியதாக இருந்ததால் அதில் ஜெயலலிதா ஏற முயன்ற போது கால் தவறியது. இதையடுத்து அவர் விமானத்தில் ஏறாமல், கார் மூலம் 11.10 மணிக்கு வீடு திரும்பினார். இதற்கிடையில் அகலமான படிக்கட்டுக்கள் விமானத்தில் பொறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு ஜெயலலிதா மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தார். பின், 1.55 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். மாலையில் அதே விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
பசும்பொன்னில் ஜெயலலிதா கார் மீது கல் வீச்சு: போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு
Posted by
தமிழ்க்குமரன்
Thursday, October 30, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment