தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மறைந்து விட்ட இசை மேதை

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதனின் (73) உடலுக்கு இசைத் துறையைச் சேர்ந்தவர்கள், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரமுகர் கள் நேற்று மலரஞ்சலி செலுத் தினர். இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்னக்குடியில் ராமசாமி சாஸ்திரி - மீனாட்சி தம்பதிக்கு 1935ம் ஆண்டு குன்னக் குடி வைத்தியநாதன் பிறந்தார். அவரது அப்பாவிடம் கர்நாடக இசை பயின்றார்.

"தோடிராகம்' : அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் இசைக்குழுவில், 12 வயதிலேயே வயலின் வாசிக்கும் அளவுக்கு புலமை பெற்று விளங்கினார்.தனி வாத்தியமான வயலினின் இசையை ஈர்ப்பாக, எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இவரது வயலின், "வசனம் பேசும், பாட்டுப் பாடும், அழும், சிரிக்கும், விளையாடும்' என சக கலைஞர்களால் பாராட்டப்பட்டவர். திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா குழுவின் செயலராகவும், காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வானாகவும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலராகவும் இருந்துள்ளார். பத்மஸ்ரீ விருது உட்பட 200க்கும் மேற் பட்ட விருதுகளைப் பெற்றுள் ளார். "தோடிராகம்' படத்தைத் தயாரித்தார். தற்போது, "எசப்பாட்டுக்காரி' என்ற படத்தை தயாரித்து, இயக்கிவந்தார்.



பின்னணி பாடகிகள் அஞ்சலி: இந்நிலையில் தான் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் இறந்தார். இவரது உடல், மந்தைவெளி கிரீன்வேஸ் சாலையில் உள்ள இவரது வீட்டில் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது.அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா, தமிழக பா.ஜ., தலைவர் இல.கணேசன், திரைப்பட இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், பின்னணி பாடகிகள் பி.சுசிலா, சுதாரகுநாதன், நடிகர் ரவிச்சந்திரன், எஸ்.வி.சேகர், நடிகை கே.ஆர்.விஜயா, சொர்ணமால்யா உட்பட திரையுலக முக்கியஸ்தர்கள் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.



ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "எனக்கு கர்நாடக சங்கீத பயிற்சி அளித்த இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். இசையால் லட்சோப லட்ச மக்களை கவர்ந்துள்ள இவரது இசையமைப்பில் நான்கு பாடல்களை நான் பாடியிருக்கிறேன். நான் இவரின் பரம ரசிகை. எனக்குப் பிடித்த ஆபேரி ராகத்தில் அமைந்த "நகு மோமு' என்ற தியாகராஜ கீர்த்தனையை வயலினில் எனக்காக வாசிப் பார். இவரை போல வயலின் சாகசம் செய்யக் கூடியவர் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை' என தெரிவித்துள்ளார்.



மத்திய இணை அமைச்சர் வாசன், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பா.ஜ., எம்.பி., திருநாவுக்கரசர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் உட்பட பலர் இரங்கல் அனுப்பியிருந்தனர்.குன்னக்குடி வைத்தியநாதனுக்கு மனைவியும், நான்கு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அமெரிக்காவிலிருந்து மகன் ஸ்ரீதர் வரவேண்டியிருப்பதால், வைத்தியநாதனின் இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது.



குன்னக்குடி - வயலின் கேட்கும் அவர் சொன்னபடி:



வயலின் இசையில் தனது தனித்திறமையை நிரூபித்த அவர், 200 விருதுகளுக்கும் மேல் வென்று பெருமை சேர்த்தவர். பக்தி பாடல்களில் அவர் புகுத்திய தனிப்பாணி அவருக்கு வெற்றி மேல் வெற்றி தேடித்தந்தது.1935 சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். 12 வயதிலிருந்தே அவர் இசையில் நாட்டம் கொண்டார். அவரது 13 வயதில், நீண்ட சடை பின்னிய ஒரு சாமியார் அவரை அழைத்து அவரது பெயரை கேட்டார். பின் வயலின் ஆர்வம் உள்ளதா என்பதையும் விசாரித்தார். திருநீறு இடும் போது, குங்கும பொட்டு எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு அவரே விளக்கம் தந்தார். சாமியாரின் உபதேசத்தை, குன்னக்குடி தனது தந்தை ராமசாமி சாஸ்திரியிடம் தெரிவித்தார். சாமியாரை மீண்டும் தேடியபோது, கண்டுபிடிக்க முடியவில்லை.



மாயமாகிவிட்ட இந்த சாமியார் வேறு யாருமல்ல... தான் வணங்கும் முருகப்பெருமான்தான் என்ற குன்னக்குடி அப்போது நினைத்துக் கொண்டார். முருகப்பெருமானின் ஆசி தனக்கு உள்ளது என்றும் அவர் உணர்ந்து கொண்டார். குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அவரது தந்தை, ராமசாமி சாஸ்திரிதான் குரு. புல்லாங்குழல், ஜலதரங்கம், வீணை மற்றும் வாய்ப்பாட்டில் அவர் தேர்ந்தவர். அவரே பல பாடல்களை எழுதியுள்ளார்.



தெரிந்ததை தைரியமாக வாசி' : குன்னக்குடிக்கு அருகே கிருஷ்ணன் கோவிலில் ஒரு திருவிழாவுக்காக அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் கச்சேரிக்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. குன்னக்குடியின் தந்தை அரியக்குடியிடம் பழக்கமானவர், நல்ல நண்பர். இந்த விழாவுக்கு தந்தையுடன் குன்னக்குடி சென்றிருந்தார். வயலின் வாசிக்க வேண்டிய கலைஞர் வராமல் போகவே, குன்னக்குடியின் தந்தையை அரியக்குடி அழைத்து, "உங்கள் மகனையே வாசிக்க சொல்லலாமே' என்றார். சிறு சிறு கச்சேரிகளில் மட்டுமே வாசித்து பழக்கப்பட்ட மகனுக்கு இது சரிப்பட்டு வருமா என்று அவரது தந்தை யோசித்தார்.



ஆனால், அரியக்குடியோ, "உனக்கு எத்தனை கீர்த்தனைகள் தெரியும்' என்றார் குன்னக்குடியிடம். "எனக்கு பத்து கீர்த்தனைகள் தெரியும்' என்றார். "அப்படியானால் வா. உனக்கு தெரிந்ததை தைரியமாக வாசி' என்றார் அரியக்குடி. எல்லா கலைஞர்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு போலவே, குன்னக்குடிக்கும் வாய்ப்பு வந்தது.மேடையில் அரியக்குடி - குன்னக்குடி ஜோடி மிகப்பிரமாதமாக கச்சேரி செய்து - கூட்டத்தினரின் கரகோஷத்தை பெற்றது. இதுதான் குன்னக்குடியின் முதல் வெற்றி.அதன்பின் பெரிய வித்வான்களின் கச்சேரிகளில் தாமாக வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. ஸ்ரீரங்கம் அய்யப்பன், செம்மங்குடி சீனிவாச அய்யர், ஏ.கே.சி.நடராஜன், சங்கர சிவம், சித்தூர் சுப்ரமணியபிள்ளை, கல்யாண கிருஷ்ண பாகவதர், மதுரை மணி, மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்டோருடன் மேடைகளில் வயலினை தன் எண்ணப்படி - சொன்னபடி கேட்க வைத்தார் குன்னக்குடி.



முன்பெல்லாம் வயலினுக்கு தனிக்கச்சேரி நடத்துவது இயலாத காரியமாக இருந்தது. ஆனால் கடும் முயற்சிக்குப் பின், குன்னக்குடி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். முதலில், நண்பர்களும் வித்வான்களும் இது நடக்காத காரியம் என்று அவரை பயமுறுத்தினார்கள். ஆனால், இதுவே அவருக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.குன்னக்குடி தனக்கென வகுத்துக் கொண்ட தனிப்பாணிதான் அவருடைய எண்ணம் இசை மழையாக பொழிய காரணம் ஆனது. முழுவதுமாக கர்நாடக இசையாக அல்லாமல் மக்கள் ரசிக்கும் இசையை தருவதில் தவறில்லை என்பதை உணர்ந்தவர் அவர்.



"பொதுமக்கள் சினிமாவில் புதுமை வேண்டும் என்று கேட்டால், அதை செய்வதில் என்ன தவறு' என்று கேட்டவர். "நான் ஒரு சூப்பர் மார்க்கெட் போல. ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும்' என்றும் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.தவில் வாத்தியத்துடன் இணைந்து வயலின் கச்சேரியை நடத்தும் இவரது பாணி மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது."நாதம்' மற்றும் "லயம்' ஆகிய இரண்டின் ஜோடி அருமையான கூட்டு விருந்து என்பது குன்னக்குடியின் கருத்து.1974 முதல் 1985ம் ஆண்டு வரை 3,462 கச்சேரிகளில் மேடை ஏறியவர். ஏறத்தாழ பிரபல தவில் வித்வான் அனைவருடனும் கச்சேரி செய்தவர். அவரது தந்தை மற்றும் தாய் மீனாட்சி அம்மாளின் ஆசிதான் இவ்வளவு பேற்றுக்கும் காரணம் என்று ஒருமுறை அவரே குறிப்பிட்டுள்ளார்.



குன்னக்குடிக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது பற்று இருந்தது. அந்த காலத்தில் வந்த பாடல்களில் பெரும்பாலானவை கர்நாடக இசையைக் கொண்டிருந்தன. ஏராளமான நாடகங்களையும் பார்த்த அவர் திரைக்கதையும் எழுதினார்.இயக்குனர் ஏ.பி.நாகராஜன் உதவியால் "வா ராஜா வா' எனும் படத்தின் மூலம் 1968ம் ஆண்டில் பட உலகில் காலடி எடுத்து வைத்தார். "திருமலை தென்குமரி (1970)', "மேல்நாட்டு மருமகள்', "நம்ம வீட்டு தெய்வம்' உள்ளிட்ட படங்களை குன்னக்குடி தனது இசையால் மெருகேற்றினார். 42 படங்களுக்கு இசை அமைத்தார். தோடி ராகம் படத்தை தயாரித்து இயக்கினார்.



முதல் சினிமாஸ்கோப் படமான "ராஜராஜ சோழன்' படத்திலும் இசை அமைத்தார். "நவரத்தினம்' படத்தில் மேற்கத்திய இசையுடன் இந்துஸ்தானியை இணைத்து ராகம் தாளத்துக்கு புதுமை சேர்த்தார். 1968ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த இரண்டாண்டுகளிலே அரசு சார்பில் சிறந்த இசை அமைப்பாளர் விருதையும் பெற்றார். சூலமங்கலம் சகோதரிகள் இவரது இசையில் பாடிய முருக பக்தி பாடல்கள் சிறப்பானவை. உஷா உதுப் உடன் "மேல்நாட்டு மருமகள்' படத்தில் இசை சேர்த்திருக்கிறார்.திருவையாறு தியாகபிரமசபை, தமிழக இயல் இசை நாடக மன்றம் ஆகியவற்றில் தலைவராக இருந்த இந்த இசை மேதைக்கு பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி விருதுகள் உள்ளிட்ட விருதுகள் தேடி வந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அவர் மறைந்துவிட்டாலும் - அவரது இசை என்றும் நம்மை விட்டு நீங்காது.



மன அழுத்தத்தை குறைக்கும் ஆனந்தபைரவி : இசையால் மழையை வரவழைத்தவர்: சென்னை மழை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அப்போதைய அரசு குன்னக்குடி வைத்தியநாதனை அழைத்து இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்தது. ரெட்ஹில்ஸ் ஏரியில் இவர் கச்சேரி செய்தார். அமிர்தவர்ஷினி ராகத்தில் இவரது வயலின் இசைக்கு மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது இன்றும் சென்னை மக்களால் மறக்க முடியாதது. சங்கராபரணம் ராகம் மன நலத்தை வளப்படுத்தும், ஆனந்தபைரவி ஹைப்பர்டென்ஷனை - கடுமையான மன அழுத்தத்தை குறைக்கும் என்பது எக்காலத்துக்கும் ஏற்ற குன்னக்குடியின் கருத்து.



குன்னக்குடி 14 வயதாக இருந்த போது, அவரது தந்தை மரண படுக்கையில் இருந்தார். எல்லோரும் அவரிடம், "நீ ஏன் ஒரு ராகம் பாடி அவரை குணப்படுத்தக்கூடாது' என்றார்கள். சிகிச்சை பலனுக்கு இணையான 12 ராகங்களை குன்னக்குடிக்கு அவரது தந்தை சொல்லித் தந்திருந்தார். அவற்றில் பைரவியை அவர் அருகில் அமர்ந்து சில மணி நேரங்கள் வாசித்தார். ஆச்சரியப்படும் வகையில் அவரது தந்தையின் கண்களிலிருந்து கசிந்த நீர் கன்னத்தை நனைத்திருந்தது. மெதுவாக குணமான அவர், உயிர் பிழைத்தார். இதை ஒரு முறை குன்னக்குடியே மனம் உருகி சொன்னார்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive