மஞ்சள் சட்டைக்கும் மஞ்சள் துண்டிற்கும் நடக்கும் யுத்தம் இது! மஞ்சள் சட்டை - காடு வெட்டி குரு! மஞ்சள் துண்டு-தமிழக முதல்வர் கலைஞர்!
சி.டி.யில் ஆரம்பித்த பிரச்னை சிறை வரைக்கும் போய்விட்டது. வரம்பு மீறி பேசியது, வன்முறையைத் தூண்டியது என்று குற்றம் சுமத்தி காடுவெட்டி குருவைக் கைது செய்த போலீஸார், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகப்படுத்தி இருக்கிறார்கள். சிறையிலிருக்கும் கைதிகளை சாதா ரணமாக யார் வேண்டுமானாலும் மனு போட்டுப் பார்க்கலாம்! எல் லோருக்கும் பொதுவான சிறை வழக்கம் இது. ஆனால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை நெருங்கிய உறவினர்கள் தவிர்த்து வழக்கறிஞர்கள் மட்டுமே சந்தித்துப் பேச முடியும்.
மாவீரன் ஜெ.குரு! வன்னியர் சிங்கம் குரு! என்ற புகழ்ப் பேச்சுக்கு மத்தி யில் பரபரப்பாக இயங்கிக் கொண் டிருந்த குரு இப்போது சிறையில் சைலண்ட் 'குரு'வாக வலம் வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் `குரு'வின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு! ஆனால் இப்போது சிறையில் பத்திரிகை யாளர் யாருக்கும் தடா! மொத்தத்தில் நோ என்ட்ரி! இந்த நிலையிலும் `குரு' என்னதான் நினைக்கிறார்? அவரது தரப்பு பதில்கள் என்ன என்றறிய பல்வேறு வழிகளில் முயற்சித்தோம். நமது கேள்விகளை அவரின் வழக்கறிஞர் கே.பாலு மூலம் குருவுக்கு அனுப்பி வைத்து பதில்களைப் பெற்றோம். சிறையிலிருந்து குரு நமக்களித்த சிறப்பு பேட்டி
சாதாரணமாக சுறுசுறுப்பாகவும் படுபிஸியாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த நீங்கள், சிறையில் எப்படி பொழுதைக் கழிக்கிறீர்கள்?
``என் உடல்தான் சிறையில். என் உயிரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியாது. மாபெரும் லட்சியப் போருக்கு `உயிரே உணர்வே பொங்கி எழு' என்ற லட்சியத்தோடு எதிர்கால அரசியல் திட்டங்களை சிறையிலிருந்தபடி வகுத்துக்கொண்டிருக்கிறேன். நீண்ட நாள் சிறையிலிருந்த உலகத் தலைவர்கள் மற்றும் போராளிகளின் சுயசரிதை மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்து வருகிறேன். என் செயல்பாடுகளுக்கு ஆளுங்கட்சி கொடுத்திருக்கும் கட்டாய ஆனால் தற்காலிக ஓய்வு இது. அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சிறைவாசத்தை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் பொது வாழ்க்கையில் ஈடுபடும் பக்குவம் அவர்களுக்குக் கிடைக்கும்.''
உங்கள் கைதுக்கான உண்மையான காரணம் என்ன?
தமிழக அரசுக்கே என்னைக் கைது செய்ததற்கான காரணம் தெரியவில்லை. கல்யாண மண்டபத்தில் கட்சிக்காரர்களிடம் பேசியதற்காக என்னைக் கைது செய்துள்ளனர்.
இதற்காக கைது செய்ய வேண்டுமென்றால் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் வெளியில் நடமாட முடியாது. நான் வன்முறையைத் தூண்டும்படி பேசினேனாம். அதுவும் ஆறு மாதம் கழித்து, வன்முறையைத் தூண்டும் பேச்சைக் கண்டறிந்திருப்பது ஆளுங்கட்சிதான். மொத்தத்தில் இது பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறில்லை.
உங்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்திருப்பது பற்றி?
ஆங்கிலேயர் ஆட்சியில் விடுதலை வேட்கையை மக்களிடம் ஊட்ட உண்மையை எடுத்துப் பேசியவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பேச்சு சுதந்திரம் இல்லை. இப்போதும் உண்மையைப் பேசியதற்காக நான் கைது செய்யப்பட்டுள்ளேன். இந்த ஆட்சியிலும் பேச்சு சுதந்திரம் கூட்டணியில் இல்லாதவர்களுக்கு இல்லை. நான் கூட்டணியில் இருக்கும்போது பேசியதற்காக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு கைது செய்யப் பட்டுள்ளேன். ஆனால் உண்மையிலேயே வன்முறையைத் தூண்டி, ஆபாசமாகப் பேசிவரும் தி.மு.க. பேச்சாளர்கள் போலீஸாரின் பாதுகாப்புடன் சுற்றித் திரிகிறார்கள். தலைவர் மருத்துவர் ஐயா சொன்னது போல் நாங்கள் எந்தப் பத்திரிகை அலுவலகத்தையும் தீ வைத்துக் கொளுத்தவில்லை. யாரும் தீயில் எரிந்து இறக்கவுமில்லை.''
உங்கள் கைது பா.ம.க.வை மிரட்டும் வேலை என்று கூறப்படுகிறதே
``உண்மைதான். இந்தக் கைதின் மூலமும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலமும் எங்களை மிரட்டி பேசவிடாமல் செய்யலாம் என்று நினைக்கிறார் கலைஞர். ஆனால் எத்தனையோ போராட்டங்கள், கைதுகள், தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சந்தித்து முறியடித்து வளர்ந்தது வன்னிய சங்கமும் பா.ம.க.வும். எனவே இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். எங்களில் எவ்வளவு பேரை கைது செய்து சிறையிலடைத்தாலும் நேர்மைக்காகப் போராடும் எங்களை ஒடுக்கிவிட முடியாது.''
அடுத்த தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கும்!
அதை பா.ம.க. முடிவு செய்யும்.''
சிறையில் உங்களை எப்படி நடத்துகின்றனர்?
நான் முதல் வகுப்புக் கைதியாக சிறையிலிருக்கிறேன். ஆனால் முதல் வகுப்புக் கைதிக்குத் தரப்படவேண்டிய எதுவும் எனக்கு அளிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியினர் சிறைக் குள்ளும் கையை நீட்டி என்னைச் சீண்டிப் பார்க்கின்றனர்! பார்க்கட்டும்...'' என்று சொல்லும் குருவுக்கு குரல் உயர்கிறது.
பா.ம.க. வழக்கறிஞர் பிரிவுத் தலை வரும் குருவின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளவருமான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.பாலுவை சந்தித்துப் பேசினோம். ``இந்த வழக்கில் அண்ணன் குரு பேசியதால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. அதேபோல் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்தான் அடைத்தாகவேண்டும் என்பதற்கு பிரத்தியேக காரணம் எதுவும் கூறப்படவில்லை. ஆறுமாத கால தாமதத்திற்கு எந்தவித விளக்கமும் இல்லை. அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவரும் அரசின் காலாவதியான அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணன் குருவை தடுப்புக்காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முரண்பாட்டிற்கெல்லாம் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் சொல்லி யாகவேண்டும்'' என்றார்..
கலைஞர் எங்களை மிரட்டி பார்க்கிறார் குருவின் அசத்தல் பேட்டி
Posted by
தமிழ்க்குமரன்
Friday, August 8, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment