தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்


கடந்த ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்த நேரம்! அந்தக் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. விறுவிறுவென தலைமைச் செயலகம் வரை போனார் சேகர். அவர் தி.மு.க.வில் சேரப்போவதாக ஒரு பரபரப்பு கபகபவென பற்றிப் பரவிய நிலையில், ``நான் காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கத்தான் போனேன்'' என்று காமெடி செய்தார் அவர்.
அது போன வருடம். இப்போது இந்த வருடமும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வழக்கம்போல எஸ்.வி.சேகருக்கு அழைப்பு இல்லை. இந்த முறையும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் அழைக்கப்படாத நிலையில், அவரது அடுத்த `மூவ்' என்ன? என்ற கேள்வி கிறுகிறுவெனக் கிளம்பியுள்ளது. அண்மைக் காலமாக தி.மு.க. தலைவர்களுடன் எஸ்.வி.சேகருக்கு `நெருக்கம்' இருப்பதைப் போன்ற தோற்றம் நிலவும் நிலையில், அவர் தி.மு.க.வுக்குப் போய்விடுவாரா? என்ற சந்தேகமும் லேசாக சதிராடத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சுவாமிமலைக்குக் கிளம்பத் தயாராக இருந்த எஸ்.வி.சேகரை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் நாம் சந்தித்தோம். `கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களுடன் மணவிழாக்களில் பங்கேற்றிருக்கிறீர்களே?' என்று முதல் கேள்வியை அவர் முன்வைத்தோம். ``நான் கலைத்துறைக்கு வந்து 34 வருடமாகிறது. இயல்பிலேயே நான் யதார்த்தவாதி. என் 53-வது வயதில்தான் ஓர் அரசியல் கட்சியில் இணைந்தேன். ஒரு கலைஞனாக எனக்கு எல்லோரிடமும் பழக்கம் உண்டு. ஆகவே, அடிக்கடி முகமூடியை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
எனது தம்பி ராஜா வைத்தியநாதனின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, என் தம்பி மனைவி கிரிஜா வைத்தியநாதன் அரசுத்துறை செயலர் என்பதால் முதல்வர் அந்த விழாவுக்கு வந்தார். மணமகன் வீட்டார் என்ற முறையில், மேடையிலிருந்த நான் அவரை வரவேற்றேன். இது தவறா?
நடிகர் சத்யராஜ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் அவராகவே என்னை அழைத்துப் பேசினார். தி.மு.க.வினர் வந்து விட்டார்கள் என்பதற்காக நான் என்ன மேடையை விட்டா ஓடமுடியும்? நான் என்ன அரசு விழாக்களிலா கலந்து கொண்டேன்?''
`கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உங்களை நீங்கள் முன்னிறுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே?'
``சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.''`அப்படியானால் சுயவிருப்பப்படி நீங்கள் சேர வில்லையா?'
``அப்படியில்லை. அம்மாவின் துணிச்சல், கடவுள் நம்பிக்கை, அவர் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அவரிடமுள்ள உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். கருணாநிதியிடம் இருப்பது பெரும்பான்மையினரைத் துன்புறுத்தி சிறுபான்மையினரை பெருமைப்படுத்தும் மதச்சார்பின்மை.''
`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?'
``கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.''
`கடந்த இரண்டு பொதுக்குழு கூட்டங்களுக்கும் நீங்கள் அழைக்கப்படவில்லை. இதற்கு சசிகலாதான் காரணம் என்கிறார்களே?'
``நான் அப்படி நினைக்கவில்லை. காரணம், நான் கட்சியில் சேர்ந்த பிறகு அவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. ஆதிராஜாராம் மா.செ.வாக இருந்தபோது இருந்த அணுகுமுறை வேறு. இப்போது இருப்பது வேறு. எனது தொகுதியில் எட்டு முறை அ.தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை கூட என்னை அழைக்கவில்லை. போஸ்டர்களிலும் என் பெயரைப் போடவில்லை. இதெல்லாம் கட்சித் தலைமைக்குத் தெரியாமலா இருக்கும்?''
`தொடர்ந்து கட்சியிலிருந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். ஒருவேளை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டால்.....?'
``நான் கவலைப்பட மாட்டேன். வருத்தப்பட மாட்டேன். இதுவரை அம்மாவுக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருந்த காலத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லோருக்கும் `ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும்' என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஐந்து கதவுகள் (5 கட்சிகள்?) திறந்திருக்கின்றன'' என்று கூறி முடித்துக் கொண்டார் சேகர்.

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive