குசேலன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மதுரையில் ரஜினியின் புதியப் படங்களை வெளியிடுவதில்லை' என, தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க செயலர்கள் கூறியதாவது: குசேலன் படத்தை வெளியிட, மதுரை மற்றும் புறநகர் பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். குசேலன் படத்தில் 25 நிமிடங்கள் ரஜினி வருகிறார். அதில், அவரது பழைய படங்களின் கிளிப்பிங்ஸ் தான் அதிகம். இதனால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளோம். நாங்கள் அடைந்த நஷ்டத்திற்கு ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம், கவிதாலயா செவன் ஆர்ட்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் ரஜினி தலையிட வேண்டும். நாங்கள் படத்திற்காக கொடுத்த மினிமம் கேரண்டி (எம்.ஜி.,) தொகையை, டெபாசிட்டாக மாற்றம் செய்ய வேண்டும். படம் ஓடிய நாள் வரையிலான சதவீதத்தை மதிப்பீடு செய்து, மீதமுள்ள தொகையை திருப்பித் தரவேண்டும்.
மாநிலத்தில் அனைத்துப் பகுதி தியேட்டர் உரிமையாளர்களும், இந்த முடிவுக்கு வந்துள்ளனர். சென்னையில் 23ம் தேதி, சங்கத்தின் தலைமை அலுவகத்தில் கூடி, முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். நாங்கள் அடைந்த நஷ்டம் தொடர்பாக, ரஜினி மற்றும் படம் வெளியிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதங்கள் திரும்பி வந்துள்ளன.
இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை, மதுரை மாவட்டத்தில், ரஜினியின் புதியப் படங்கள் மற்றும் கவிதாலயா செவன் ஆர்ட்ஸ், ஐங்கரன் இன்டர்நேஷனல், ஜி.பி., விஜயகுமார் நிறுனங்களின் படங்களை வெளியிடுவதில்லை என, முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 comments:
Post a Comment