"பா.ம.க வில் ஊழல் எம்.எல்.ஏக்கள்!சாட்டையால் அடிப்பாரா ராமதாஸ்?"
விளாசுகிறார் வீரபாண்டி ஆறுமுகம்
_ குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள செய்தி
தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க.வை வெளியேற்றிய பிறகு டாக்டர் ராமதாஸ் மீதோ, பா.ம.க. மீதோ கடும் விமர்சனங்களை தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் யாரும் சுமத்தாமல் அமைதியே காத்து வந்தனர். ஆனால், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் மதுவிலக்கு பிரச்னைகளில் அரசுக்கு எதிராக மீண்டும் மீண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கைப் போர் தொடுக்க, அவருக்கு எதிராக முதல்முறையாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் இருந்து ஆவேச அம்புகள் அணிவகுத்து வந்துள்ளன.
`வன்னியர் சங்கப் போராட்டத்தின்போது போலீஸ் அடக்குமுறையால் 23 பேர் உயிரிழந்தனர். நாற்பதாயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இருபது சதவிகித ஒதுக்கீட்டிற்கு உத்தரவிட்ட கலைஞர்தான், நாற்பதாயிரம் பேர் மீதான வழக்குகளையும் வாபஸ் பெற வைத்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூபாய் மூன்றாயிரம் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அதற்காக கலைஞருக்கு நன்றிகூடச் சொல்லாதவர் டாக்டர் ராமதாஸ்' என்று வீரபாண்டி ஆறுமுகம் ஆவேசம் காட்டியிருப்பதுதான் பா.ம.க. தரப்பில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
`நன்றியுணர்வு இல்லாதவரா டாக்டர் ராமதாஸ்?' என்ற கேள்விக்கு விடை காண, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தையே நேரில் சந்தித்தோம். நமது கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளித்தார்.
ஒவ்வொரு முறையும் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வை அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகிப்பவர் நீங்கள் என்பார்கள். ஆனால், நீங்களே டாக்டர் ராமதாஸிடம் கொஞ்சம்கூட நன்றியுணர்வு இல்லை என்று விமர்சனம் செய்துள்ளீர்களே?
"1989-ம் ஆண்டு மூன்றாம் முறையாக தலைவர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார். மூன்றாவது நாளிலேயே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த என்னைச் சந்திக்க வன்னியர் சங்க முக்கிய பொறுப்பாளர்கள் பேராசிரியர் தீரன், டெல்டா நாராயணன் ஆகியோரை டாக்டர் ராமதாஸ் அனுப்பி வைத்து, இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரிடம் பேச ஏற்பாடு செய்யுமாறு கேட்டார். நானும் முதல்வரிடம் `அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏழு ஆண்டுக்காலம் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனி இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடத்தி போலீஸ் அடக்குமுறைக்கு 23 பேரை பலிகொடுத்துள்ளனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண டாக்டர் ராமதாஸ் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்றேன். 1989-ம் ஆண்டுத் தேர்தலில் வன்னியர் சங்கத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு, தி.மு.க.வை மிகக் கேவலமாக விமர்சனம் செய்திருந்த போதும், அதைப்பற்றி யோசிக்காமல், டாக்டர் ராமதாஸுடன் பேசச் சம்மதித்தார்.
அதனால், அன்று மாலையே டாக்டர் ராமதாஸை முதல்வரிடம் அழைத்துச் சென்று பேச வைத்தேன். சட்ட வல்லுனர்கள், உயரதிகாரிகள், சமூகநீதி மீது நம்பிக்கையுள்ளவர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த கலைஞர், பின்னர் டாக்டர் ராமதாஸிடம் `தற்போது ஒவ்வொரு சாதிவாரியாக மக்கள்தொகையைக் கணக்கெடுத்து இடஒதுக்கீடு செய்ய இயலாது. அப்படிச் செய்தால் யாராவது நீதிமன்றத்திற்குச் சென்று தடையுத்தரவு வாங்கிவிடும் வாய்ப்பு உண்டு. ஆகவே, உடனடியாகவே வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 20 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று அறிவித்துவிடலாம்' என்று கலைஞர் கூறினார்.
அதற்கான அறிவிப்பு வெளியிடும் நாளில் முதல்வர் கலைஞர் கோட்டையில் இருந்தார். நானும் அவருடன் இருந்தேன். அப்போது டாக்டர் ராமதாஸ் மாத்திரைகள் எழுதும் மருந்துச்சீட்டில் ஒரு தகவலை எழுதி எனக்கு அனுப்பி முதல்வரிடம் காட்டச்சொன்னார். அதைப் பார்த்த முதல்வர், பிறகு இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார்.
அதற்குப் பிறகு, டாக்டர் ராமதாஸ் உள்ளபடியே வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காகப் போராடியிருந்தால், இடஒதுக்கீடு அறிவித்த முதல்வர் கலைஞருக்கு நன்றியும், பாராட்டும் உடனடியாகத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர் தெரிவிக்க முன்வரவில்லை. நான் தீரனிடமும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சா.சுப்பிரமணியத்திடமும், முதல்வருக்கு நன்றியும், பாராட்டையும் ராமதாஸை உடனடியாகத் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்ன பிறகும்கூட, சமுதாய மக்கள் சார்பாக பாராட்டுத் தெரிவிக்காதவர்தான் டாக்டர் ராமதாஸ்.
1990-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடந்தபோது, வன்னிய சமுதாய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே ராமதாஸுக்கு இருந்திருந்தால், அவர் தி.மு.க.வைத்தானே ஆதரித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் தனித்துப் போட்டியிட்டார்.
அடுத்து 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தபோது தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்காக என்னை அழைத்துப் பேசிய ராமதாஸ், முப்பது சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்றார். அதுபற்றி நானும் தலைவர் கலைஞரிடம் சொன்னேன். அவரோ இருபத்தைந்து தொகுதிகள் ஒதுக்கலாம் என்று கூறினார். அந்தத் தகவலைக் கூறி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று ராமதாஸ் தங்கியிருந்த இடத்திற்கே சென்று அழைத்தேன். அவரும் வருவதாகச் சொல்லிவிட்டு சிறிது நேரத்திற்குள்ளாகவே, வாழப்பாடியுடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா வீட்டிற்குச் சென்று கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார் ராமதாஸ்.
சமூக நீதிக்காகப் போராடுகிறேன் என்று கூறும் ராமதாஸ் பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் இன்றைக்கும் உறுதியோடு நின்று சமூக நீதிக்காகப் போராடுகிற கலைஞரோடு தேர்தலைச் சந்திக்காமல், சமூக நீதிக்கு நேர் விரோதியான ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததுதான் ராமதாஸின் சந்தர்ப்பவாதம், சுயநலவாதம் ஆகும்.
அதன்பிறகும்கூட சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்காக என்னை வற்புறுத்தி அழைத்து ராமதாஸ் பேசினார். நானும் தலைவர் கலைஞரைச் சமாதானப்படுத்தி தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்த்துக் கொள்ள வைத்தேன். தேர்தல் முடிந்தவுடன் கூட்டணிக்கு மாறாகப் பேசுவதையே வழக்கமாக வைத்துக் கொள்வதுதான் ராமதாஸ் பழக்கமாக இருக்கிறது..
இன்றைக்கு முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடந்து வருகிறது. நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டங்களைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனங்கள் செய்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற தமிழினத் தலைவர் கலைஞரைப் பற்றி, அவரது மனம் புண்படும்படி பத்திரிகை வாயிலாக விமர்சனம் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
பொதுப் பிரச்னைகளில், மக்கள் பிரச்னைகளில் கலைஞரை நேரில் சந்தித்து ராமதாஸே பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், அதைவிட்டுவிட்டு அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரையும், வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த காடுவெட்டி குரு போன்றோரையும் தூண்டிவிட்டு கீழ்த்தரமாக விமர்சனம் செய்யச் சொல்லி, அதை ரசிக்கக்கூடிய மனப்பான்மை கொண்டவர்தான் ராமதாஸ். நன்றி என்ற இலக்கணத்திற்கு இவர் எந்தவகையிலும் தகுதியில்லாதவர் என்பதைத்தான் வருத்தத்துடன் நான் பேசினேன்.''
`அரசியலில் ராமதாஸைவிட நான்தான் சீனியர்' என்றும், `இருந்தபோதும் கூட்டணித் தலைவர் என்ற முறையில் டாக்டர் ராமதாஸை வரவேற்றும் கார் வரை சென்று வழியனுப்பியும் வைத்திருக்கிறேன்' என்று பேசியுள்ளீர்களே?
"அது உண்மைதானே. 1980_ல் வன்னியர் சங்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சென்னை ராயபுரத்தில் தொழிலதிபர் கோபால நாயக்கர் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் ஒருவராகத்தான் ராமதாஸ் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பத்துப் பேரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. சுப்பிரமணியம், வன்னிய அடிகள், பேராசிரியர் தீரன், பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி என பத்துப்பேர் இருந்தனர். அதில்தான் ராமதாஸும் ஓர் உறுப்பினராக இருந்தார். அதன் தலைவராகக்கூட ராமதாஸ் இல்லை.
பின்னர் பா.ம.க.வை ஆரம்பித்தார் ராமதாஸ். அப்போது அவர்கூட இருந்தவர்கள் இன்று அவரிடம் இல்லை. எல்லோரையும் ஓரம்கட்டி விட்டார். ஒதுக்கிவிட்டார். அவர் குடும்பத்தோடு கட்சியை வைத்துக் கொண்டார்.
ஆனால், நானோ 1956-ல் தி.மு.க.வில் சேர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் வயதில்கூட அவரைவிட மூத்தவன் நான். அதைக்கூட பார்க்காமல், அண்ணா அறிவாலயத்திற்கு கழகத் தலைவரைப் பார்க்க வரும் டாக்டர் ராமதாஸ் போன்ற தலைவர்களை மரியாதையுடன் வரவேற்று அழைத்துச் சென்று அமர வைப்போம். அவர்கள் கலைஞருடன் பேசும்போது நாங்கள் கைகட்டி நிற்பதுதான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் கற்றுக் கொண்ட பண்பாக நாங்கள் கருதுகிறோம். அந்த மரியாதை எல்லாவற்றையும் ராமதாஸ் பயன்படுத்திக் கொண்டு காரியம் சாதிப்பதும், கூட்டணி முடிந்துவிட்டால் கூட்டணிக்கு உதவியவர் களையும், கூட்டணி தலைவர்களையும் கேலியும், கிண்டலுமாகப் பேசுவது அவரது பழக்கமாக இருந்து வருகிறது.
பா.ம.க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும், பினாமிகள் பெயரில் சொத்து குவித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளீர்கள். அமைச்சராக பொறுப்பான பதவி வகிக்கும் நீங்கள் ஆதாரம் இல்லாமல் பேசியிருக்க மாட்டீர்கள்தானே?
"எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. ஆதாரம் இல்லாமல் நான் பேசவில்லை. முதன்முதலாக பா.ம.க. தேர்தலைச் சந்தித்த போது டாக்டர் ராமதாஸ் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ லஞ்சம் வாங்கினால் முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடிப்பேன் என்றார். 1991-ல் இருந்து இன்று வரை அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பதவியில் இருக்கிறார்கள். இவர்கள் யாரும் லஞ்சமே வாங்கவில்லையா?. அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக சேலத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கியதாக எனக்கு புகார்கள் வந்தன. அவற்றை ராமதாஸுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அப்படிப்பட்ட கடிதம் வந்ததாகவோ, நடவடிக்கை எடுக்கிறேன் என்றோ எனக்கு அவர் பதில்கூட போடவில்லை. தொலைபேசியிலும் பேசவில்லை. அப்படியென்றால், ஊழல் நடந்துள்ளது என்று அவருக்குத் தெரிகிறது என்றுதானே அர்த்தமாகிறது.''
சேலம் மாவட்டத்தில் ஹிட்லர் மாதிரி வீரபாண்டி ஆறுமுகம் செயல்படுகிறார் என்று பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சுமத்தியதுகூட டாக்டர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில்தான் என்கிறீர்களா?
"என்னைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்ததுகூட டாக்டர் ராமதாஸ் தூண்டிவிட்டுத்தான் என்று நான் சொல்லி மக்களுக்குத் தெரியத் தேவையில்லை. அந்த எம்.எல்.ஏ.க்கள் என்னைப் பற்றி பேட்டி கொடுத்த மறுநாள் திண்டிவனம் சென்று டாக்டர் ராமதாஸைச் சந்தித்துவிட்டு மறுநாளே சேலம் திரும்பி மீண்டும் நிருபர்களைச் சந்தித்தார்கள். அவர்களிடம் நிருபர்கள், `தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அமைச்சரை விமர்சனம் செய்கிறீர்களே, இதுகுறித்து ராமதாஸிடம் பேசினீர்களா? அவரும் சம்மதம் தெரிவித்தாரா?' என்று கேள்வி கேட்டதற்கு `டாக்டரிடம் சொல்லிவிட்டோம். அவர்தான் பேட்டி கொடுக்கச் சொன்னார் என்று அந்த எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள்.
அப்போதுகூட நான் ஒன்றும் சொல்லவில்லை. கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பொறுமையாகத்தான் இருந்தேன். ஆனால், பா.ம.க.வில் ராமதாஸ் தூண்டுதல் இல்லாமல் காடுவெட்டி குரு மட்டுமல்ல, அந்தக் கட்சியில் கடைக்கோடியில் இருப்பவன்கூட பேச மாட்டான்.''
தி.மு.க. பொருளாளராக இருந்த சாதிக்பாட்சா மறைவிற்குப் பிறகு வீரபாண்டியாருக்குத்தான் பொருளாளர் பதவி கிடைப்பது மாதிரி இருந்தது. ஆனால், அதை ஆற்காட்டார் தட்டிப் பறித்துவிட்டார் என்று காடுவெட்டி குரு கட்டுரை வெளியிட்டதுதான் பிரச்னையாகிவிட்டது என்பது பற்றி?
"எங்கள் கட்சி உள்விவகாரம் குறித்துப் பேச வேறு எந்தக் கட்சிக்கும் உரிமையில்லை. யாருக்கு என்ன பதவி கொடுப்பது என்பது பற்றி தலைவர் கலைஞரும், எங்கள் கட்சி நிர்வாகிகளும்தான் முடிவு செய்வார்கள். அதுபற்றி பா.ம.க.வோ, வன்னியர் சங்கமோ கருத்துச் சொல்லவோ, கவலைப்படவோ தேவையில்லை'' என்று முடித்துக் கொண்டார் வீரபாண்டியார்.
ராமதாசுக்கு வீரபாண்டி ஆறுமுகம் பதிலடி
Posted by
தமிழ்க்குமரன்
Wednesday, July 2, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment