தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. அதிரடியாக வெளியேற்றம், டெல்லியில் சோனியா, அன்புமணி சந்திப்பு, திருமாவளவன் சமரச முயற்சி... என தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. என்னதான் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி வெளியேற்றப்பட்டது மகிழ்ச்சி என்று சொன்னாலும், எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தூக்கியெறியப்பட்ட கோப ரேகைகள் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் முகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் விரிந்து கிடக்கின்றன.இனி அவருடனான பேட்டி...
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?
``நான் உணர்வது ஒருபுறம் இருக்கட்டும். எங்களது கட்சித் தொண்டர்கள், பொறுப்பாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சிதான். 2006-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் தி.மு.க.வுடன் செய்துகொண்டது தொகுதி உடன்பாடுதான். கூட்டணி அல்ல. கூட்டணி ஏற்பட்டிருந்தால் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாகியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளில் பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள். அதேபோல் நாங்கள் தி.மு.க.வுக்குச் செய்கிறோம் என்று சொன்னோம். அவ்வளவுதான்.
அதைத் தவறுதலாக `தோழமைக் கூட்டணி' என்று சொல்லி விட்டோம். ஆனால், அந்த தோழமை உணர்வை சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் கூட தி.மு.க. எங்களிடம் காட்டவில்லை என்பதுதான் உண்மை.''
பா.ம.க. வெளியேற்றப்பட குருவின் பேச்சு மட்டும்தான் காரணமா?
``இல்லை. அதனை ஒரு காரணமா சொல்றாங்க. குரு எங்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் பேசிய பேச்சு அது. அதற்காக அன்றே அவர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டிருக்காங்களே. அதுதவிர, குரு மீது இரண்டு பொய் வழக்குகளும் போட்டிருக்காங்க. சரி... நான் கேட்கிறேன். இவர்கள் கட்சியினர் பேசாத பேச்சா.
காமராஜரை, கக்கனை கேவலமாகப் பேசவில்லையா? வெற்றிகொண்டான் என்னைப் பற்றி அவதூறாகப் பேசவில்லையா? அதற்காக குரு பேசியதை நான் நியாயப்படுத்தவில்லை.அவரைக் கூப்பிட்டு கண்டித்தேன். அதுசம்பந்தமாக கலைஞருக்கு கடிதம் எழுதினேன். அவரும் குரு மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்குவதாகச் சொன்னார். ஆனால் ஆற்காடு வீராசாமிதான் இடையில் புகுந்து தடுத்துவிட்டார்.''
சரி. குருமீது நிறைய வழக்குகள் இருக்கு. அப்படியிருக்க அவரை நீங்கள் ஏன் கட்சியில் வைத்திருக்கவேண்டும் என்ற பேச்சிருக்கிறதே?
``அப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியிலும் யாரும் இருக்கமுடியாது.''
`டாக்டர் அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு' என்று கலைஞர் அறிவித்த மறுநாள் சோனியாகாந்தியை அன்புமணி சந்தித்தது சரியான அணுகுமுறையா?
``அப்படிச் சொல்லமுடியாது. இங்கே நாங்கள் தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம். ஆனால் மத்தியஅரசில் அமைச்சராக அங்கம் வகிக்கிறோம்.அதனால் எங்களது நிலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருக்குத் தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு இருக்கு. அதனால்தான் அன்புமணி சோனியாவைச் சந்தித்தார்.''
குரு பேச்சைக் கேட்டுக்கொண்டு நீங்கள் செயல்படுவதாகவும் அது ஜி.கே.மணிக்கும் உங்கள் மகன் அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
``இது வடிகட்டிய பொய்.''
தி.மு.க.அரசு கொண்டுவந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், துணைநகரம்... என மக்கள் நலத் திட்டங்களை கடுமையாக எதிர்க்கி றீர்கள். அதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படாதா?
``கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. அரசு ஏழை மக்களின் விளைநிலங்களை பன்னாட்டு நிறு வனங்களிடம் ஒப்படைப்பதில்தான் முனைப்புக் காட்டுகிறது. மாநிலத் தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை. மாறாக இந்த விஷயத்தில் கருணாநிதி, `தரகு' வேலை பார்க்கிறார்.
எத்தனையோ பன்னாட்டு நிறுவனங் களுடன் இந்த அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கு. அதனால் நம்மவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததா? ஐம்பதாயிரம் பேருக்கு வேலை கிடைத்ததாக கருணாநிதி சொல்கிறார். அது சம்பந்தமாக நான் அவரிடம் வெள்ளை அறிக்கை வெளியிடச் சொன்னேன். ஆனால் இன்றுவரை அவர் செய்யவில்லை.''
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் பா.ம.க.அணி மாறுவது வாடிக்கையாகிவிட்டதே?
(சற்றே கோபமாக!) ``இந்தக் கேள்வியே தவறு. துருப்பிடித்த கேள்வியும் கூட. இப்போது நாங்களாக வெளியேறவில்லை. வெளியேற்றப் பட்டிருக்கிறோம். 1967-ல் ராஜாஜியும், அண்ணாவும் கூட்டணி வச்சாங்க. அப்புறம் மூன்றே மாதத்தில் தேனிலவு முடிந்ததுன்னு சொன்னாங்க. தமிழ்நாட்டில் தேர்தலின்போது ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் அடுத்த தேர்தலில் கூட்டணி தொடர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் எங்களை நோக்கி மட்டுமே இந்த `சந்தர்ப்பவாதம்' என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.'' அமைச்சர் பொன்முடி மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அவர் சார்ந்துள்ள கல்வித்துறை மீது நீங்கள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாகச் சொல்கிறார்களே?
``இதில் உண்மையில்லை. ஜெயலலிதா ஆட்சியின்போதும், இந்த ஆட்சியிலும் கல்வித்துறையில் நடந்துவரும் கொள்ளைகளை மட்டும்தான் சுட்டிக்காட்டுகிறோம். தனிநபர் விரோதத்தை பா.ம.க. என்றுமே பாராட்டுவதில்லை.''
தி.மு.க.வுடன் கருத்து வேறுபாடு வரும்போதெல்லாம் இடதுசாரி தலைவர்கள் கலைஞரை நேரில் சந்திப்பதுண்டு. அதேபோல் நீங்களும் செய்திருக்கலாமே?
``சந்தித்து என்ன பயன்? `நீங்கள் என்னிடம் பேச விரும்பினால் தொலை பேசியில் பேசுங்கள்' என்று கருணாநிதி சொல்வார். இப்போது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. அதனால் நான் விரும்பவில்லை.''
கட்சி ஆரம்பித்த நாள் முதல் தனித்துப் போட்டி என்கிறார் விஜய காந்த். ஆனால் நீங்கள் அப்படிச் சொல்லவில்லையே. ஏன்? ``நாங்களும் கட்சி ஆரம்பித்தபோது தனித்து நின்றே போட்டியிட்டோம். பின்னாட்களில் ஒரு கட்சி ஆட்சி போய் கூட்டணி யுகம் வந்துவிட்டது. தனித்துப் போட்டி என்கிற வாதத்தை கட்சிகள் ஏற்றுக்கொண்டால், முதல் கையெழுத்து என்னோடதுதான்.''
திண்டிவனம் நகராட்சி பா.ம.க.தலைவர் தி.மு.க.வுக்குப் போயிருக்கிறாரே?
(டென்ஷனுடன்...) ``அதுதான் தி.மு.க. அவர்களது கடமை... கண்ணியம்... கட்டுப்பாட்டுக்கு விளக்கம் இதுதான். ஒருவாரம்கூட பொறுத்திருக்க மாட்டார்கள்.''
பா.ம.க.வையும்,தி.மு.க.வையும் இணையவைக்க திருமாவளவன் எடுத்துவரும் முயற்சி பற்றி...?
``அவரது முயற்சியை நான் வரவேற்கிறேன். குரு மீதுள்ள பொய் வழக்குகளை கருணாநிதி முதலில் வாபஸ் வாங்கவேண்டும். அதற்கு முன்பே குரு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கருணாநிதி சொல்வதில் அர்த்தமில்லை.கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சுபா.இளவரசனை வெளியில் கொண்டு வருவாங்க. இப்போதுகூட அவனுக்கு வாகன வசதிகளெல்லாம் செய்து கொடுத்தி ருக்காங்க. ஆற்காடு வீராசாமியும் இளவரசனும் சந்திப்பதுண்டு. ஒருவரை அழிப்பது என்றால் இவர்கள் எந்த நாடகத்தையும் அரங்கேற்றத் தயங்கமாட்டார்கள்.''.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க திரைமறைவில் பா.ம.க. முயற்சிப்பதாக சொல்லப்படுகிறதே?
``இப்போது எங்கள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையை நாங்கள் பார்க்கிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இது சரியான நேரமல்ல. தேர்தல் வரும்போது அதுபற்றிப் பேசுவோம். இப்போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை.''
- எஸ்.அன்வர்
குமுதத்தில் ராமதாசின் அதிரடி பேட்டி
Posted by
தமிழ்க்குமரன்
Monday, June 30, 2008
Labels: அரசியல்

0 comments:
Post a Comment